"பாண்டியனே, உன்னுடைய நாட்டில்தான் நல்ல தமிழ் இருக்கிறது" என்று ஒளவைப் பாட்டி ஒருமுறை சொன்னாராம். தமிழ் வாழும் பாண்டிய நாட்டிற்குத் தலைநகராகத் திகழ்ந்த பெருமை மதுரைத் திருநகருக்கு உண்டு. மதுரையில் கேட்கும் ஒலி எல்லாம் தமிழ் ஒலிதான். அங்கே வீசுகின்ற தென்றல் காற்றில் கூடப் பூ மணத்தோடு தமிழ் மணம் வீசும்.
இத்தனை சிறப்புக்கள் பெற்ற மதுரை மாநகருக்கு மேலும் சிறப்பளிப்பது மீனாட்சி அம்மன் கோவில். அற்புதமான சிற்பங்களைக் கொண்ட இந்தக் கோவில் தமிழரின் பக்தியையும், கலைத்திறனையும் உலகுக்கெல்லாம் விளக்கிக்கொண்டு நிற்கிறது.
வானைத்தொடும் வண்ணக்கோபுரம், அதை நிமிர்ந்து பார்த்தால்
கழுத்து வலிக்கும்; உள்ளம் களிக்கும். அந்தக் கோபுரத்தை எத்தனையோ முறை பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்தவன்தான் பழனி. ஆனால், அன்றும் கோவிலுக்குள் நுழைவதற்கு முன் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான் பழனி. அவன் அங்கே தரையிலேதான் நின்றான். ஆனால், அவனுடைய மனம் மட்டும் உயரப் பறந்தது. கோபுரத்தின் உச்சியைத் தொட்டு மகிழ்ந்தது. பழனி அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்தான்.
பழனியுடன் அவனுடைய நண்பன் அழகன் வந்திருந்தான். அவன் பழனியைப் பிடித்து உலுக்கினான். "பழனி உள்ளே போகவேண்டாமா?" என்று கேட்டான். அதன் பிறகே பழனி கோபுரத்தைப் பார்ப்பதை நிறுத்தினான். அழகனுடன் கோவிலுக்குள் நுழைந்தான்.
மதுரையில் பணக்காரர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் மிகவும் புகழ்பெற்றவர் பா.சுந்தரேசர். ‘பாசு’ என்ற இரண்டு எழுத்துக்களை அறியாதவர்கள் அந்த மாவட்டத்திலே யாரும் இருக்கமாட்டார்கள்.
மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ‘பாசு’ ஆலைக்கு அவர்தான் உரிமையாளர். அது மட்டுமா? வேறு பல ஆலைகளிலும் அவர் பங்குதாரர். அவர் பணம் எத்தனையோ துறைகளில் முடங்கியிருந்தது. அவருடைய ஒரே மகன்தான் பழனி.
பணம் இருப்பவர்களுக்குப் படிப்பு ஏறாது என்று சொல்லுவார்களல்லவா? அதைப் பொய்யாக்கவே பிறந்தவன் பழனி. பழனி படிப்பில் கெட்டிக்காரன். அறிவும் திறமையும் ஒருங்கே பெற்றவன். வகுப்பில் என்றும் முதல் மார்க்கு வாங்குவான். எதிலும் முன்னணியில் நிற்பான். விளையாட்டிலும் பழனி வல்லவன். குணத்தில் தங்கம். பணத்திமிர் இல்லாமல் அனைவருடனும் பழகும் நல்ல பண்பு பெற்றவன். அவன் சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தான். சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்து நடத்தி வருபவர், பழனியின் தந்தைதான்.
அன்றுதான் ஆண்டுத் தேர்வு முடிந்தது. பழனியும் அழகனும் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று கிளம்பித்தான் கோவிலுக்குள் நுழைந்தனர்.
கோவில் எவ்வளவு சிறப்பு பொருந்தியதோ அவ்வளவு சிறப்புமிக்கது உள்ளே இருக்கும் பொற்றாமரைக்குளம். அதில் கை கால்களைக் கழுவிக்கொண்டு செல்ல இறங்கினர், பழனியும் அவன் நண்பனும். "பழனி! அதோ பார், நாக மாணிக்கம்" என்று அழகன் சுட்டிக் காட்டினான். பழனி, அழகன் காட்டிய பக்கம் பார்த்தான். நாகமாணிக்கம், தன் நண்பர்களுடன் குளத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
நாகமாணிக்கத்தைப் பழனிக்கு நன்றாகத் தெரியும். பழனி படிக்கும் அதே பள்ளியில், அதே வகுப்பில் அவனும் படித்து வருபவன். அவன் பெரிய பணக்காரன் அல்ல. ஆனால், பணக்காரனைப்போல பாவனை செய்வதில் வல்லவன். நாகமாணிக்கத்தின் அப்பா மதுரையில் உள்ள வேறொரு ஆலையில் சாதாரண குமாஸ்தா வேலை செய்பவர்தான். அவர் பொறுப்பு நூல் பேல்களை பம்பாய் போன்ற நகரங்களுக்கு அனுப்புவது. லாரிகள் மூலம் பேல்கள் அனுப்புவது வழக்கம். நாகனுடைய தந்தை தனக்குக் கமிஷன் கொடுக்கும் லாரிகளில் மட்டும் பேல்கள் அனுப்புவார். சுருக்கமாகச் சொன்னால் லஞ்சம் வாங்கியே அவர் ஒரு மாடி வீடு கட்டிவிட்டார். பாங்கியிலும் போதுமான பணம் வைத்திருந்தார்.
நாகமாணிக்கம் இந்தத் திறமையில் தந்தைக்குச் சளைத்தவனல்ல. தீபாவளிக்குப் பட்டாசு வேண்டுமா? நாகன் அப்பாவைக் கேட்கமாட்டான். அப்பாவின் தயவை எதிர்பார்க்கும் டிரான்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர் ஒருவர்க்கு போன் செய்வான். போனில் ‘பட்டாசு வாங்க வேண்டும். அப்பாவுக்கு நேரமில்லையாம். நீங்கள் வாங்கி வருகிறீர்களா?’ என்று நாசுக்காகச் சொல்வான். உடனே டிரான்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர், தம் சொந்த மகனுக்குப் பட்டாசு வாங்க மறந்தாலும் நாகனுக்குத் தேவையான பட்டாசுகளை வாங்கிக் கொடுப்பார். நாகன் பெரிய கோடீஸ்வரரின் பையனைப்போல அவற்றைச் சுட்டு மகிழ்வான்.
பட்டாசு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். நாகன் தனக்கு எது தேவையென்றாலும் இப்படித்தான் வாங்கிக் கொள்வான். அவன் கையிலே கட்டியிருக்கும் வாட்ச்சு ஒரு லாரிக்காரர் கொடுத்தது. அவன் ஏறிச் சவாரி செய்யும் சைக்கிள் மற்றொரு லாரிக்காரர் வாங்கித் தந்தது. அவன் உட்கார்ந்து படிக்கும் நாற்காலி மேஜையும்கூட இப்படிக் கிடைத்தவையே.
நாகன் இதைப் போன்ற செயல்களில் மட்டும் திறமையானவன் என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிடக்கூடாது. அவன் படிப்பதிலும் கெட்டிக்காரன். ஆசிரியர் எந்தக் கேள்வி கேட்டாலும் தவறு இல்லாமல் பதில் சொல்வான். நடக்கும் தேர்வு ஒவ்வொன்றிலும் நல்ல மார்க்கு வாங்குவான். என்றாலும் அவனுக்குத் திருப்தியில்லை. காரணம் பழனிதான். பழனி ஒவ்வொரு முறையும் நாகமாணிக்கத்தைக் காட்டிலும் பத்து அல்லது பதினைந்து மார்க்குகள் அதிகம் வாங்கி விடுவான். இதுதான் நாகமாணிக்கத்துக்குப் பிடிப்பதில்லை.
நாகன் பணக்காரனாக நடிப்பவன். பழனியோ தன்னைப் பணக்காரனாகவே காட்டிக் கொள்ளாதவன். அதனால் பழனி மாணவர்களிடம் மதிப்புப் பெற்றான். படிப்பாலும் பண்பாலும் ஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுத்தான்.
நாகமாணிக்கம், தனக்கு வரவேண்டிய புகழைப் பழனி பறித்துக்கொள்வதாக நினைத்தான். பழனி மட்டும் அந்தப் பள்ளியில் இல்லை என்றால், முதல்மார்க்கு வாங்குபவன் யார்? நாகமாணிக்கம்தான். சமீபத்தில் நடந்த பேச்சுப் பேட்டியில்கூட நாகனுக்கு இரண்டாம் பரிசுதான். முதல் பரிசைப் பழனி தட்டிக்கொண்டான். பழனியில்லை என்றால் அது நாகனுக்குத்தானே கிடைத்திருக்கும்!
இந்தக் காரணங்களால், தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத பழனியைத் தன் பகைவனாகக் கருதினான் நாகமாணிக்கம். பழனியிடம் நேரேசென்று சண்டையிட்டு அவனை அடித்து விட முடியாது. பழனி பெரிய இடத்துப் பிள்ளை. அதனால் பழனியைத் தூற்றுவதைத் தன் தொழிலாகக் கொண்டான் நாகன்.
"பழனி யாரு? பணக்கார ‘பாசு’வோட மகனாச்சே? இது பேச்சுப் போட்டியின் நீதிபதிகளுக்குத் தெரியாதா? அதனாலே பழனிக்கு முதல் பரிசு கொடுத்தாங்க. இல்லேனா எனக்குத்தானே முதல் பரிசு கிடைத்திருக்கும்" என்று தன்னைப் பாராட்ட வந்தவர்களிடமெல்லாம் கூறினான்.
அதுமட்டுமா?
"நானும் எவ்வளவோ சிரமப்பட்டுத்தான் படிக்கிறேன். ஆனால், ஒரு தரமாவது முதல் மார்க்கு கிடைக்கிறதா? உம், பள்ளி நிர்வாகியின் மகனுக்கு முதல் மார்க்குன்னு ஏதாவது சட்டம் இருக்கும் போலிருக்கிறது" என்று ஏளனமாகப் பேசிவந்தான்.
பழனி இவற்றைக் கேள்விப்பட்டான். பாவம், அவன் என்ன செய்வான்? பணக்காரரின் மகனாகப் பிறந்தது அவன் தவறா? பழனி உண்மையாக உழைத்து முதல் மார்க் பெற்றாலும், முதல் பரிசு வாங்கினாலும் நாகன் திரித்துப் பேசுகிறான். அது அதிசயமல்ல; அதைச் சில மாணவர்களும் ஊரிலிருந்த சிலரும் நம்பினார்கள். அதுதான் அதிசயம்! மற்ற இடங்களில் நடப்பதை அறிந்திருந்த பலரும் நாகன் சொல்வது உண்மை என்றே நம்பினார்கள்.
தலைமை ஆசிரியர் நாகனை அழைத்துக் கண்டித்தார். நாகன் அதற்கெல்லாம் அசையவில்லை. "உண்மையைச் சொன்னால் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு மிரட்டுகிறார். உம், இது பழனியின் பள்ளிக்கூடம். அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி என்னை இந்தப் பள்ளியிலிருந்தே விரட்டினாலும் விரட்டுவான்" என்று தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வந்தான் நாகன்.
பழனி இவற்றை அறிவான். தான் திறமையால் பெற்றவற்றை அப்பாவின் செல்வாக்கால் பெற்றவை என்று சொல்கிறார்களே என்று வருந்துவான். அவ்வளவுதான். தன்னைப்பற்றி ஏதாவது கதை கட்டிக்கொண்டிருக்கும் நாகமாணிக்கத்தைத் தன் பகைவனாக என்றும் நினைக்கவில்லை. அவனும் தன் நண்பன் என்றே நினைத்தான். நண்பனிடம் பழகுவதைப் போலவே பழகினான்.
அதனால்தான் அழகன் நாகனைக் காட்டியதும் பழனி வெறுப்பில்லாமல் அவனைப் பார்த்தான். மேலும் "அழகா! வா, நாகனைப் பார்த்துவிட்டுப் போகலாம்" என்றான். அழகன் தயங்கினான். அவன் அதை விரும்பவில்லை.
"பழனி! நீ நாகனைக் காணும் போதெல்லாம் அவனிடம் பேசுகிறாய். அவனோ அந்த நேரத்தில் உன்னை உன் எதிரிலேயே இழிவாகப் பேசி மகிழ்கிறான். அது மட்டுமா? ‘பார், பழனியிடமே இதைக் கூறினேன். பதில் பேசினானா? பேசத் தைரியம் ஏது’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறான். இது எனக்குப் பிடிக்கவில்லை. ஒன்று அவனை மதித்து அவனிடம் பேசாதே. அல்லது அவனிடம் பேசும்பொழுது அவன் வாலை ஒட்ட நறுக்கு" இப்படிப் படபடவென்று பேசினான் அழகன்.
பழனியின் முகத்தில் புன்னகை தோன்றியது. "அழகா! நாய் மனிதனைக் கடித்தால் மனிதன் திரும்பவும் நாயையா கடிக்கிறான்? என்மீது உள்ள கோபத்தை நாகன் இப்படிச் சொற்களைக் கொட்டித் தீர்த்துக்கொள்கிறான். அதுதான் சரி என்று அவன் நினைத்தால் செய்யட்டும். என்றாவது ஒருநாள் தன் தவற்றை உணர்வான். வா நாம் போவோம்" என்று சொல்லி முன்னே நடந்தான் பழனி. அழகன் பழனியைத் தொடர்ந்து சென்றான்.
பழனி, நாகன் உட்கார்ந்திருந்த படிக்கட்டுக்குச் சென்றான். பழனி நாகனைப் பார்த்தான்; சிரித்துக்கொண்டே அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அழகனும் பழனிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.
"நாகா! தேர்வு நன்றாக எழுதியிருக்கிறயா?" என்று உண்மையான அக்கறையுடன் கேட்டான் பழனி.
"எழுதுவதற்கு என்ன குறைச்சல்! எப்போதும் எழுதுவதைப்போல நன்றாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால், எப்போதும்போல முதல் மார்க்கை நீ வாங்கப் போகிறாய். என்ன பழனி, நான் சொல்வது உண்மைதானே?" என்று கேட்டு ஏளனமாகச் சிரித்தான் நாகமாணிக்கம்.
பழனி உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு "நாகா எப்போதும் நடக்கிற சில செயல்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. உதாரணமாக, காலையில் சூரியன் உதிப்பான் என்கிறோம். மழைக்காலத்தில் சூரியனை நாம் பார்ப்பதில்லை. இயற்கை நிகழ்ச்சியே இப்படி இருக்கும் போது, நான் முதல் மார்க்கு வாங்குவது மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்?" என்று சொன்னான்.
பழனி அவ்வாறு சொன்னதற்கும் ஒரு காரணம் உண்டு. பழனி தன் தந்தையின் செல்வாக்கால் மார்க்கு வாங்குகிறான் என்று நாகன் குறைகூறுவதற்குக் காரணம், அவனுக்கு முதல் மார்க்கு கிடைக்காததுதான். இது பழனிக்குத் தெரியும். ஒருமுறை நாகன் முதல் மார்க்கு வாங்கினால் இந்த எண்ணம் நீங்கலாம் என்று பழனி நினைத்தான். அதனால் அந்தத் தேர்வில் அவன் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒன்று செய்தான். ஒவ்வொரு பரீட்சையின் போதும், ஒரு கேள்விக்கு வேண்டுமென்றே பதில் எழுதாமல் விட்டுவிட்டான். இதனால் அவன் வாங்கும் மார்க்கு குறையும். வழக்கமாக இரண்டாவதாக வரும் நாகமாணிக்கம் முதல் மார்க்கு வாங்கலாம். இதை மனத்தில் வைத்துத்தான் பழனி நாகனிடம் பேசினான்!
நாகன் பழனியின் பேச்சைக் கேட்டுச் சிரித்தான். "பழனி! ஈட்டி எட்டிய வரை பாயும். பணம் பாதாளம் வரை பாயும். பணத்துக்கு முன்னே உண்மை ஊமையாகிவிடும். இந்தப் பழமொழிகளைக் கேட்டதில்லையா? பணம் இயற்கையையே மாற்றிவிடும். அப்படியிருக்கப் பணக்காரனின் மகனான நீ முதல் மார்க்கு வாங்குவதை யார் தடுத்துவிட முடியும்? உன் தந்தையைக் காட்டிலும் பெரிய பணக்காரர் நினைத்தால் ஒருவேளை முடியலாம்" என்று கூறிய நாகன் பழனியின் முகத்தைப் பார்த்தான். தன் பேச்சால் அவன் மனம் புண்பட்டு இருப்பதைப் பார்த்து மகிழவே அவன் பழனியின் முகத்தைப் பார்த்தான்.
பழனி நாகன் சொன்னதைக் கேட்டதாகவே தெரியவில்லை. அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
நாகனுடன் பேசிக்கொண்டிருந்த பழனி எதேச்சையாகப் பொற்றாமரைக் குளத்தைப் பார்த்தான். குளத்தின் கீழ்ப்படியில், நீரில் கால் நனையுமாறு நின்றுகொண்டிருந்த ஒரு துறவி அவனையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தான். அவர் காவி உடை அணிந்திருந்தார். ஒரு கையில் தடி, தடி பிடித்த கையின் தோள்புறத்தில் ஒரு பை. நெற்றியில் பளிச்சென்று தெரியும் திருநீறு. கழுத்தில் உருத்திராட்சமாலை. இந்தக் கோலத்துடன் இருந்த துறவி பழனியையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘அவர் யார்? ஏன் என்னை இப்படிப் பாக்கிறார்?’ என்று எண்ணிக்கொண்டிருந்த பழனி நாகன் சொன்னதைக் கவனிக்கவில்லை. பழனியின் முகத்தைக் கவனித்து, பிறகு அவன் பார்க்கும் திசையைப் பார்த்த நாகனும் கீழ்ப்படியில் நின்ற துறவியைப் பார்த்தான். இதற்குள் துறவி, நின்ற இடத்திலிருந்து நகர்ந்தார். ஒவ்வொரு படியாக ஏறினார். அவர் பழனி உட்கார்ந்திருந்த படிக்கு அடுத்த படியில் பழனிக்கு எதிரே வந்து நின்றார்.
"தம்பீ!" என்று அழைத்தார். அவர் குரலில் அன்பு ததும்பியது. பழனியும் நாகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். துறவி யாரை அழைக்கிறார் என்பது புரியவில்லை.
துறவி பழனியைச் சுட்டிக்காட்டி "உன்னைத்தான் தம்பி" என்றார். பழனி சட்டென்று எழுந்தான். அவரைக் கைகூப்பித் தலை தாழ்த்தி வணங்கினான். வணங்கிய தலை நிமிர்ந்தது. துறவி பழனியின் முகத்தைப் பார்த்தார். இன்னும் சற்று நெருங்கிவந்து பார்த்தார். முகத்தோடு முகம் வைத்துப் பார்த்தார். துறவியின் அருள் ஒழுகும் கண்கள் பழனியின் முகத்தில் எதையோ கண்டு ஆச்சரியத்தால் அகல விரிந்தன.
துறவி பேசினார்:
"தம்பீ! உன் முகத்தில் அறிவொளி வீசுகிறது. இதோ இந்த இரு கண்கள் கருணைக்கே இருப்பிடமான கண்கள். நீ மாறாத அறிவும் குறையாத செல்வமும் பெற்று இறவாத புகழோடு விளங்குவாய்."
துறவியின் சொற்களைக் கேட்ட பழனி நாணமடைந்தான். மீண்டும் துறவியைப் பணிவோடு வணங்கினான். "பெரியவரே! உங்களைப் போன்ற துறவிகளின் வாழ்த்து எல்லா நன்மைகளையும் தரும். உங்கள் வாழ்த்தைப் பெறுவதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று சொன்னான்.
துறவியின் முகம் மலர்ந்தது. மடியிலிருந்து ஒரு சிறு பையை எடுத்தார். அதைப் பிரித்தார். உள்ளே இருந்து திருநீற்றை எடுத்தார். "தம்பீ! திருஞானசம்பந்தனைப் போல அறிவும் புகழும் பெறுவாயாக" என்று கூறிக்கொண்டே அவன் நெற்றியில் திருநீறு பூசினார். பழனியின் உடல் புல்லரித்தது.
அதே நேரத்தில் ‘ஹஹ்ஹா’ என்ற கேலிச்சிரிப்பு கேட்டது. நாகன்தான் அப்படிச் சிரித்தான். துறவி திரும்பிப் பார்த்தார்.
நாகன் உட்கார்ந்த நிலையிலேயே பேசினான்: "ஓய் சாமியாரே! உனக்குக்கூட இவன் செல்வச் சீமான் சுந்தரேசர் மகன் என்பது தெரியும் போலிருக்கிறதே! அதுதான் இவனை வானளாவப் புகழ்கிறாய்; புகழ்ந்த வேலைக்கு என்ன எதிர்பார்க்கிறாய்? பணம் ஐந்தோ பத்தோ வேண்டுமா? கேள்! பழனி பணம் தாராளமாகக் கொடுப்பான்."
நாகன் சொன்னதைக் கேட்டுப் பழனி நடுங்கினான். "நாகா! பெரியவர்களை இப்படியெல்லாம் பழிக்காதே. என்னை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை என் மீது காட்டு. பெரியவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளாதே" என்று சொன்னான் பழனி.
நாகன் மீண்டும் உரக்கச் சிரித்தான். "யார் பெரியவர்? இந்தத் தாடிக்காரச் சாமியாரா? இவர் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டால் என்ன செய்வார்? மரமாய்ப் போ… மண்ணாய்ப் போ என்று சாபம் கொடுப்பாரா? ஏய் பிச்சைச் சோத்துச் சாமி! இவன் ஞானசம்பந்தனைப் போல அறிவும் புகழும் பெறுவான் என்று சொன்னாயே? இவனும் ஞானசம்பந்தனைப்போலப் பதினாறு வயதில் இறந்து விடுவானா? இப்போது இவனுக்குப் பதினாலு வயது. அப்படியென்றால் இன்னும் இரண்டு வருஷத்தில் இவன் க்ளோஸ் அப்படித்தானே!" என்ற நாகன் மீண்டும் சிரித்தான்.
அதுவரை அமைதியாக இருந்த துறவியின் முகம் சிவந்தது. அவர் "சிறுபயலே! என்ன சொன்னாய்?" என்று கூறிக்கொண்டே தம் கையில் பிடித்திருந்த தடியை ஓங்கியவாறு நாகன்மீது பாய்ந்தார்.
நாகன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "ஐயோ அம்மா" என்று அலறிக்கொண்டே படியில் சாய்ந்தான்.
பழனியும் பிறரும் திடுக்கிட்டனர்.
“