நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்
என்கிறார் வள்ளுவர் பெருமான். ஒவ்வொரு நாளும் காலை, நண்பகல், மாலை என ஒன்றுபோல் தோன்றி ஏமாற்றும். உண்மையில் அது நம் வாழ்நாளைச் சிறிது சிறிதாய்க் குறைக்கும் வாள் என்பதுதான் இக்குறளின் பொருள்.
காலம் என்பது நம் கண்முன்னே மெல்ல மெல்லக் கழிகின்றது. கழிந்த பொழுது ஒருபொழுதும் திரும்பி வரப்போவதில்லை. எனவே, "நேரம் என்பதுதான் வாழ்வின் ஆத்மா" என்கிறார் ஒரு பிரபல்யமான ஆங்கிலக் கவிஞர்.
"மனிதன் நேரத்தை அளவிடுகின்றான். நேரமோ மனிதனை அளவிடுகின்றது" என்பது ஓர் இத்தாலியப் பழமொழி.
"காலத்தின் காயங்களைக் காலந்தான் குணப்படுத்துகின்றது" என்பது பிரான்ஸ் நாட்டில் வழமையிலுள்ள ஒரு பழமொழி!
"ஒரு பெரும் கொள்ளைக்காரனை உங்களால் இனங்கண்டு கொள்ளவே முடியாது. சட்டத்தால் இவனைத் தண்டிக்க முடியாது. மனிதர்களுக்கு விலைமதிப்பானதாகக் கருதப்படுவதைத் திருடும் இந்தக் கொள்ளைக்காரன் வேறு யாருமில்லை, நேரந்தான்" – இப்படிச் சொல்லிச் சென்றவர் மாபெரும் வீரர் நெப்போலியன். ஆம்! நேரம் பல பொன்னான வாய்ப்புகளைத் திருடி விடுவது உண்மைதான்!
ஒரு நிமிடம் என்பது எந்த அளவுக்கு நீண்டது எனக் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்ன ஓர் அற்பப் பொழுதான ஒரு நிமிடத்தை எவ்வளவு நீண்டது எனக் கேட்கிறாரே என முணுமுணுக்கிறீர்களா? சற்றே பொறுங்கள்! இயற்கை அழைப்பின் பேரில் கழிப்பறைக் கதவடியில் காத்து நிற்கிறீர்கள் நீங்கள். உள்ளே இருப்பவர் "ஒரு நிமிஷம்…!" எனச் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அந்த இகட்டான நிலையில், அந்தக் காத்திருப்பு நேரம் ஒரு யுகம் போல இருக்கும் இல்லையா? அதாவது, ஒரு நிமிடம் ஒரு யுகம் அளவுக்கு நீண்டது என்கிற பதிலை இங்கே பார்க்கிறோம். ஒத்துக் கொள்கிறீர்களா?
ஆம்! நேரம்… நேரம்… நேரம்! அது மிகவும் முக்கியமானது மாத்திரமில்லை, பொல்லாத ஒன்று என்றும் சொல்லலாம். வாழ்வில் மிக அதிகம் தேவைப்படுவது அதுதான்! ஆனால் நாமோ, அதை மிக மோசமான வழியில்தான் பயன்படுத்தி வருகின்றோம்.
அனைவருக்குமே சமமான வாய்ப்பைக் கொடுப்பது நேரம். எல்லோருக்கும் ஒரே அளவு மணித்தியாலங்களும், நிமிடங்களும்தான் கிடைக்கின்றன. பணக்காரர்களாக இருந்துவிட்டால் எந்த ஒரு நாளிலும் கூடுதலாக ஒரு நிமிடத்தை வாங்கிவிட முடியாது! அறிவியலாளர்களால் புதிதாக ஒரு மணி நேரத்தை உருவாக்கி ஒரு நாளில் இணைக்க முடியாது. இன்று சேமித்து நாளை பயன்படுத்த முடியாதது நேரம். இன்றைய பொழுது நாளை வராத ஒன்று. அப்படியிருந்தும் நேரம் பெருந்தன்மையாகவே நம்மிடம் நடந்து கொள்கின்றது. நாம் கடந்த காலங்களில் நேரத்தை வெறுமனே விரயம் செய்திருந்தாலும், அடுத்தடுத்து, ஒவ்வொரு நாளும் புதிதாக 24 மணித்தியாலங்களைக் கொட்டிக் கொடுத்து அது மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பளிக்கின்றது. இப்படி, நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தும், நாம் ஒவ்வொருவரும் வேறு வேறு வழியில் அதைப் பயன்படுத்துவதைப் பொறுத்துத்தான் விளைவுகள் வேறுபடுகின்றன.
நினைவு வைத்துக் கொள்ளுங்கள்! கடிகாரத்தின் முட்கள் ஒருபொழுதும் பின்னோக்கி ஓடுவதில்லை. நாமும் இப்படியே இருக்க இந்த முட்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. காலம் கடிகார முட்கள் போல வேகமாக முன்னோக்கி ஓட, நினைவுகள் மாத்திரம் நம் உள்ளத்தில் உறைந்து கிடப்பதால்தான் வாழ்வின் பொல்லாத, நல்ல நேரங்களை மீட்டுப் பார்க்க முடிகின்றது.
எனவே நேரத்தை மதிப்போம்! வாழ்வில் உயர்வோம்!!
“