கடற்கரை மணலில்
காலடிச் சுவடுகள்
சிந்தனையுடன் நடைபோட்டேன்…
உள்ளதைச் சொல்லும்
உள்ளங்கால் முத்திரைகள்
அகலமாய், ஆழமாய்ப் பதிந்த சுவடுகள்
வன்மம் பேசின;
கூட்டமாய்ப் பயணித்த சுவடுகள்
உரிமை முழங்கின;
இத்தனை நெரிசலிலும்
நேர்த்தியாய்ப் பதிந்த சுவடுகளில்
சுயநலமும், காரியமும் மறைந்திருந்தன;
இரட்டை இரட்டையாய் இலக்கின்றிச் சென்றவை
மன்மத அம்புகளை மறைத்திருந்தன;
இடையிடையே அரைகுறையாய்ச் சில சுவடுகள்…
ஊனமுற்றவருக்குச் சொந்தமானதா?
பிறர்க்கு உதவிட ஓடியவருக்குச் சொந்தமானதா?
எதுவாயிருப்பினும்
முழுமையாய்த் தன்னை
அடையாளம் காட்டாத
பண்பாடு என்னை ஈர்த்தது;
அது சொன்ன பாடம் புரிந்தது;
நம் சுயநலச் சுவடுகள்
காற்று, மழைக்குக் காணாமல் போகும்
பிறர்க்கு உதவும் செயல்கள் மட்டுமே
முத்திரைச் சுவடுகளாய் – நம்
உயிர் பிரிந்த பின்னும்
உலகைப் பேச வைக்கும்,
சிலீரென்று கடற்காற்று முகத்திலடித்தது;
சிந்தனை கலைந்தது – அனிச்சையாய்
நான் நடந்து வந்த சுவடுகளைத்
திரும்பிப் பார்த்தேன்.
மிகவும் அருமயான கவிதை
மனிதனாய்ப் பிறந்தால் பிறர்க்கு உதவு, உன் சுவடுகள் வரலாற்றுச் சுவடுகளாய் மாறும் என்ற பொன் எழுத்துக்கள் நாம் பின்பற்ற வேண்டியவை. மிக அருமை.
எல்லோரின் வாழ்வுக்கும் ஏற்ற பாடம்… அருமையான படைப்பு… செல்வராணி முத்துவேலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…
கருவெளியிலிருந்து ராச. மகேந்திரன்
அனைவருக்குமான பாடம். மிகவும் அருமை… என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
கருவெளியிலிருந்து ராச. மகேந்திரன்