13. பதிவுகளில்,
ஆற்றின் தடம்..
புத்தகங்கள்..
வர்ணக் கறைகள்..
அனைத்துள்ளும்
ஆகச் சிறந்தது..
காற்று விட்டுச் செல்லும்
வாசனை!
14. எனக்கான அடையாளம்
தொலைத்து
எங்கும் பரவி நிற்கும்
அன்பாய்
காற்றின் கை கோர்த்து
நடக்கிறேன்..
எனக்கு முன்னும் பின்னுமாய்
எத்தனை காலடித்தடங்கள்..
எவர் முகமும்
எனக்குத் தெரியவில்லை.
சகலமும் என் முகமாய்..
காற்றின் அறிமுகமாய்..
ஒவ்வொரு சூறாவளிக்குப் பின்னும்
உயிர்த்தெழும் மானுடம்
காற்று அளித்த வரம்.
15. ஞாபகமாய் கேட்டு விட வேண்டும்
எங்கிருந்து கிளம்புகிறாய் என்று…
அறியப் படாமலே
வாழ்ந்து மறையும்
சக ஜீவன்களைப் போல்
அல்லாமல்
ஜீவனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
காற்றைப் பற்றி.