11. காற்று அலைகிறது
என் தலைமுடிக்குள்
செல்லச் சிணுங்கலுடன்
அதன் ஸ்பரிசம்
உடலெங்கும் பரவி
என் கனவுகளின் ஊடே
பயணம்…
ஞாபகப் பதிவுகளில்
பின்னோக்கியும் முன்னோக்கியுமாய்..
எனக்கான காற்றுடன்.
12. யாருக்காகவும் காத்திராமல்
தொடங்கி விட்டது
கூட்டம்.
காலியான இருக்கைகள்
என்று யாரோ பின்னர்
சொன்னார்களாம்.
கவிதைகளை வாசித்த போது
ஜன்னல் கதவுகளுடன்
அறைக் கதவும் அவ்வப்போது
கரவொலி எழுப்பியது.
அற்புதமான வரிகளை
எவரும் கேட்கவில்லை என
மனம் சிணுங்கி
பேருந்தை மறுத்து
ஆற்றுப்பாலத்தில் நடந்தபோது..
காதருகே சொன்னது..
‘சபாஷ்’
திரும்பிப் பார்த்தேன்.
காற்று!