காற்று – 2

3. என் முதல் மூச்சுக் காற்று
எப்போது துவங்கியது?
கர்ப்பத்தில் சுவாசித்த நாட்கள்…
வெளிப்பட்டு வெளியுலகின்
பிரபஞ்சக் காற்றின் ஸ்பரிசம்…
வாழ்வின் புரிபடாத
பல ரகசியங்களில்
மூச்சுக் காற்றும்..
தெரியாமலே சுவாசிக்கிற
என்னை
தெரியாமலே நேசிக்கிற
ஜீவனாய்
என் மூச்சுக் காற்று…

4. எந்த கனமான வஸ்துவையும்
நகர்த்துமுன்
காற்றைப் பற்றியே யோசிக்கிறேன்.
‘பார்த்து.. பார்த்து’
என்று மற்றவர்கள்
என்னைப் பற்றியே
கவலை கொள்கிறார்கள்.
தவழும் குழந்தையாய்
என்னைச் சுற்றும் காற்று
எந்தப் பக்கம் வருகிறது
என்றே புரிபடாமல்
எல்லாப் பக்கமும்
அதன் சிணுங்கல்.
‘காற்று என் குழந்தையா’
எனில் அதன் முக அடையாளம் சொல்
என்று கேட்பவர்கள்
ஒரே ஒரு நிமிஷம்
அதன் குரலைக் கேட்கட்டும்.
வசப் படுகிறார்களா.. இல்லையா என்று
பார்த்து விடலாம்!

About The Author