காற்று (1)

என் அழுகையின் போது
மடியில் வந்து
தவழ்ந்தது.
கை உயர்த்தி கண்ணீர்
துடைத்தது.
தன் தோளில் என் முகம்
வைத்து
உதறித் திரும்பின பக்கம் எல்லாம்
எனக்கான ஆறுதல் வைத்திருந்தது.
‘என்னை விட்டுப் போயேன்’ என்று
குமுறிய என் கையாலாகாத்தனம் பற்றி
எந்த விமர்சனமும் இன்றி
மென்மையாய் சொன்னது:
‘மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது
போகிறேன்’
என் நட்புகளில்
காற்றை விடச் சிறந்தது
எதுவுமில்லை!

******

நதியின் அடியில்
மூச்சடக்கிக் கிடந்தேன்.
1 2 3 4…
எண்ணிக்கையில் மனம்
லயித்து..
என்னைக் காணாத
அவஸ்தை காற்றுக்கு..
அதன் தவிப்பின் துடிப்பு
எனக்குப் புரிந்தும்
வெளியே வராமல்
57..58..59..60..
மார்பு புடைத்து
முகம் சிவந்து..
‘வந்துரு..’
காற்றின் அலறல்
நீர்த்திவலைகளாய்..
மேலே மோதி
எத்தனை பிரியம் காற்றுக்கு
என்மீது!

******

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    உள்ளும் வெளியும் இழுத்து விடும் காற்று உயிருக்கு உயிராகுமாம்; தெள்ளு தமிழ்போல் தென்றலாய் வரும் காற்று தித்திக்கும் அனைவருக்கும்; உள்ளபடி உயிர்க்காற்றை அடக்கி உயிர் போக்கிடும் உரிமை எவர்க்குமில்லை; உலகோரே என் பிணைப்பை உதறிவிடாதீர் என்றும்!.-காற்று இப்படி உருக்கமாகப் பேசியிருக்கும்.- நல்ல கற்பனை. பாராட்டுகள்! -அரிமா இளங்கண்ணன்

Comments are closed.