கார் வித்த காசு (2)

ந‎ன்றி : ஆனந்த விகடன், 28.04.2002 (காரும் காதலியும்)

பாங்க்ல அந்த லேடி மானேஜர் படா சுறுசுறுப்பு. கார் வாங்கற க்ளையன்ட் இருந்தாச் சொல்லுங்கோன்னு சொல்லி நா வாயைக்கூட சரியா மூடலை. அடுத்த நாளே, மஞ்சுளா மேடம் அனுப்பிச்சாங்கோன்னுட்டு மெக்கானிக் சகிதமா ஒரு கார் புரோக்கர் ஆஜர். எம்பத்தேழு மாடல், ஸெகண்ட் ஓனர், நாப்பத்தஞ்சு ரூவாக்கித்தான் சார் போகும்னான்.

இந்தக் கார் ஸ்டீரியோவே பத்தாயிரம் பெறுமேடா அம்பி. பதினாலாயிரம் குடுத்து (அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் கார்டுல!) போன வருஷந்தான் வாங்கினதுன்னு சொல்லிக் கன்வின்ஸ் பண்ணி, ஒரு வழியா அம்பதுக்கு ஏறி வந்தான். இந்த ஸ்டீரியோவைக் கார்ல ஃபிக்ஸ் பண்ணப் பறந்தான். நேக்குத் தெரிஞ்சது மெட்ராஸ் ரேடியோல ரெண்டு எஃப் எம் சானல் இருக்குன்னுட்டு. அதுல ஒரு சானல் இருபத்தினாலு மணி நேரமும் பாடிண்டே இருக்கும்னுட்டு. மிட்நைட் ஒரு மணிக்கும் மூணு மணிக்கும் அதுல நேக்குப் புடிச்ச பழைய சினிமாப் பாட்டாப் போடுவான்னுட்டு.

கார்த்தால மெரினாவுக்கு டிரைவ் போய்ட்டுத் திரும்பி வரச்ச ஆறரை ட்டு ஏழு என்றும் இனியவைன்னுட்டு சசீலா டி.எம்.எஸ். பாட்டாய்ப் போடுவா. ஆஹா அதைக் கேட்டுண்டே காரோட்டறது தனி சொகம்!

இப்ப, கடையை க்ளோஸ் பண்ணி, சரஸ்வதியும் அமெரிக்கா போனப்புறம், தூக்கம் வராத ராத்திரிகள்ள கராஜத் தொறந்து காருக்குள்ளாற உக்கார்ந்துண்டு மிட்நைட் ஸாங்ஸ் கேட்டுண்டே கவலைகளை சித்த நேரம் மறந்திருந்த என்னோட ராவுகள் நிறைய.

மணி ரெண்டு. நாலு மணிக்கு புரோக்கர் பார்ட்டியக் கூட்டிண்டு வருவான்.

லேட்டா எழுந்துக்கறதுல ஒரு சவுகரியம் உண்டு. டிஃபன் செலவு மிச்சம். ஸ்ட்ரெய்ட்டா லஞ்சுக்குப் போயிடலா மில்லியோ. இன்னிக்கி லஞ்ச்சும் கட். சாப்பிடப் பிடிக்கலை.

இதே போல சாப்பிடப் பிடிக்காத ஒரு சந்தர்ப்பம் ரெண்டு வருஷத்துக்கு முந்தி வந்தது ஞாபகத்துக்கு வர்றது.

அது, உமாட்டயிருந்து, அமெரிக்காலேர்ந்து அந்த முக்கியமான லெட்டர் வந்த தினம். நமஸ்காரம், உபயக்ஷேமம், பல்லவி அனுபல்லவி சம்பரதாய மெல்லாம் முடிஞ்சு, சரணத்துக்கு வந்தா, ஒரு பிரேக்கிங் ந்யூஸ்…

… இப்ப நான் எழுதப் போற விஷயத்தை வாசிச்சு, அப்பா, அம்மா, ப்ளீஸ் ஷாக் ஆயிடாதேங்கோ. ஸஸ்பென்ஸ் வைக்காம நேரா விஷயத்துக்கு வந்துடறேன். அப்பா, அம்மா, நான் கல்யாணம் பண்ணின்டேன். உடனே நான் ஒரு வெள்ளை அமெரிக்கனையோ, கறுப்பு அமெரிக்கனையோ கட்டிண்டேன்னு நினைச்சுண்டுடாதேங்கோ. இவர் இந்தியர்தான். ஷ்யாம். என்னோட ரிஸர்ச் பண்ணிண்டிருக்கிறவர். அப்பா அம்மா இல்லை. சித்தப்பா ஒருத்தர் கல்கத்தால இருக்காராம். பெரிய ஜீனியஸ்ப்பா இவர். சொந்த டாலன்ட்ல ஸ்காலர்ஷிப் வாங்கி ஸ்டேட்ஸ்க்கு வந்தவர். நேக்கு அவர் பெங்காலி கத்துத்தறார். நான் அவருக்கு தமிழ் கத்துத்தறேன். அஃப்கோர்ஸ் இப்ப நாங்க இங்கிலீஷ்லதான் பேசிக்கிறோம். அவர் என்ன காஸ்ட்னு நான் கேட்டுக்கலை. அது அவசியம்னும் தோணலை. நாங்க ரெண்டு பேருமே இண்டியன்ஸ். அது போறுமில்லையோ அப்பா? அப்பா, உங்களை நேக்குத் தெரியும். நீங்க இதைப்பத்தி அலட்டிக்க மாட்டேள். அம்மாதான் இதைப்பத்தி அப்ஸெட் ஆயிருப்பா. எனக்காக அம்மாவை நீங்க சமாதானப் படுத்துங்கோ அப்பா…

சொல்லிக்காமப் பண்ணிண்டாளேங்கற வருத்தம் லேசா இருந்தாலும், உமா சொன்ன மாதிரியே நா ஒண்ணும் அலட்டிக்கலை. இருந்தாலும், என்னமோ ஆத்தோட இருந்த பொண்ணு திடீர்னு போய்ட்ட மாதிரி ஒரு டெம்ப்பரரி தவிப்பு. அதான் அன்னிக்கி சாப்பிடப் பிடிக்கலை. சரஸ்வதி அன்னிக்கி சமையலே செய்யலைங்கறது வேற விஷயம்!

நார்மலானப்புறம் சரஸ்வதி என் காது படச் சொன்னா, "நீங்க செஞ்ச வேலையத்தான உங்க பொண்ணும் செய்வா."

"என்ன சொல்றாய், நாம ஒண்ணும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிரலியே?"

"அந்த இழவை நா செய்யலை. நீங்க செஞ்சேளோல்லியோ? ஒங்க பீபி ஜானோட?"

சுண்டி விட்டுட்டாள். மனசுல அடி மட்டத்துல படிஞ்சிருந்த ஞாபகங்களையெல்லாம் சுண்டி விட்டுட்டாள்.

"சரஸ்வதி ப்ளீஸ். அதையெல்லாம் ஞாபகப்படுத்தி என்னை ஹிம்சிக்கிறதுல நோக்கு என்ன லாபம். நாந்தான் ஃபஸ்ட் நைட்லயே எல்லாத்தையும் கன்ஃபஸ் பண்ணிட்டேனோல்லியோ?"

"நீங்களாக் கன்ஃபஸ் பண்ணப் போய்த்தான், அவொ பேரையே புனைப்பெயரா வச்சிக்க உங்களுக்கு நா பர்மிஷன் குடுத்தேனாக்கும்."

"நீ பர்மிஷன் குடுக்கலைன்னாலும் நா அவொ பேர்லதான் எழுதிண்டிருந்திருப்பேன்."

"எழுதுவேள் எழுதுவேள். நீங்க அப்படிச் செஞ்சிருந்தா நா எப்பவோ எங்க பொறந்தாத்துக்குப் போயிருப்பேன். உமா நமக்குப் பொறந்தேயிருக்க மாட்டா தெரியுமோ?"

"அதை விடேன் சரஸ்வதி, என்னத்துக்கு இப்பப் பழைய பஞ்சாங்கத்தப் போட்டுப் பொரட்டிண்டுருக்க?"

"சரின்னா, பொரட்டலை. பட் ஒன் லாஸ்ட் க்வெஸ்ச்சன் ப்ளீஸ். போயும் போயும் ஒரு முஸ்லிம் பொண்ணையா நீங்க லவ் பண்ணேள்? ஒங்க பர்ஸனாலிட்டிக்கி ஒரு நல்ல ஐயங்கார்ப் பொண்ணு கெடைக்கலியா சார்?"

சரஸ்வதி, நோக்கு என்னடி தெரியும் லவ்வைப் பத்தி.

ஜாதி மதம் பாஷை எல்லாம் பார்த்தா காதல் வரும்!

முஸ்லிம் பொண்ணுதான் கெடைச்சாளான்னு கேக்கறாய்.

பொண்ணா அவொ?

அப்ஸரஸ்!

சிகப்புன்னா சிகப்பு அப்படியரு சிகப்பு.

இந்த உர்து ஸ்பீக்கிங் முஸ்லிம் பொண்ணுங்களே பொதுவா செக்கச் செவேல்னுதான் இருப்பா தெரியுமோ? அதுலயும் என்னோட பீபிஜான் ஒரு ஸ்பெஷல் க்வாலிட்டியாக்கும்!

அவளோட ஒரு கண் பார்வைக்கி அவனவன் ஏங்கிண்டிருக்க, இந்த சாமான்ய சீனிவாசன்ட்ட என்னத்தக் கண்டு அவொ என்னைப் பார்த்து அந்தச் சிரிப்பு சிரிச்சா?

அவொ பேர் நேக்கும், என் பேர் அவளுக்கும் தெரியாத ஆரம்ப காலத்துல, நெரிசலான பஸ்ஸ¤க்குள்ள, கண்டம் விட்டுக் கண்டம் பாயற ஏவுகணை மாதிரி பல தடைகளையும் தாண்டி என்னமாப் பார்வைகளைப் பரிமாறிண்டோம்!
அறிமுகம் ஆனப்புறம், ஜோடியா ஒரு சிவாஜி படம் போனோமே. என்ன படம் அது? ராமன் எத்தனை ராமனடி.
அந்த த்யேட்டர் இருட்டுல கூட. அந்த ஆபத்தான நெருக்கத்துல கூட ஒருத்தரையருத்தர் தொட்டுப் பார்த்துக்கணும்னு தோணலை பார். அதாண்டி சரஸ்வதி எங்கக் காதலோட ஸ்பெஷாலிட்டி.

….என்னவோ நடந்தது நடப்பு

அது ஏதோ நினைவிலும் இருக்கு….

என்னோட கன்ஃபஷன்ஸ்ல இதையெல்லாம் ஒன்ட்ட சொல்லலை சரஸ்வதி. சொல்ல முடியுமோ, சொன்னாத்தான் நோக்குப் புரியுமோ!

ஏதோ நோக்கு விஸ்வாசமாயிருக்கணும்னு தோணித்து. நா விசுவாசமா இருக்கறதா உன்னை நம்ப வைக்கணும்னும் தோணித்து.

கன்ஃபஸ் பண்ணினேன். கன்ஃபஷனுக்கும் ஒரு லிமிட் இருகோல்லியோ!

ஒரு நாள் ராத்திரி பெட்ரூம்ல சம்மந்தா சம்மந்தமில்லாம ஒரு குபீர்ச் சிரிப்பு.

அப்படி என்ன சிரிப்பு சரஸ்வதீன்னு கேட்டதுக்கு அவொ சொல்லுவா, "ஒன்னுமில்லைன்னா, முஸ்லிம்கள்ள ஆண்பிள்ளைக்கு ஸர்க்கம்ஸிஷன்னுட்டு ஒண்ணு பண்ணுவாளாமே, நீங்க அவளைக் கட்டிண்டு முஸ்லிமாயிருந்தேள்ன்னா ஒங்களுக்கும் அதைப் பண்ணி விட்டிருப்பாளோல்லியோ அதை நெனைச்சேன், சிரிப்பு வந்துடுத்து."

அதுக்கும் நா ரெடியாத்தானிருந்தேன்னு சரஸ்வதி கிட்ட சொல்லலை. அந்த தேவதையை நேக்கு சொந்தமாக்கிக்க நா எதுக்கும் ரெடியாயிருந்தேன். ஆனா எங்கேயோ வழுக்கிடுத்து.

எங்கே? எப்படி?

வேணாம் அதைக் கிளறினா வேதனைதான்.

பகவானே, எத்தனை வருஷமாயிடுத்து!

இப்ப எங்கேயிருப்பா? எப்படியிருப்பா?

அவளோட ஞாபகங்கள் அப்பப்ப தலைதூக்கறச்ச மனசுல ஒரு கனமான சுகம். அல்லது ஒரு சுகமான கனம். மத்தபடி அவளைப் பாப்போம்ங்கற நம்பிக்கையெல்லாம் நேக்கு இல்லை.

ஆனா, அவொ நினைச்சிருந்தா என்னை ரீச் பண்ணிண்டிருக்கலாம். அவொ பேர்ல கதையெழுதறவன் நான் தானான்று செக் பண்றது அவளுக்கொண்ணும் சிரமமில்லை. அவொ ட்ரை பண்ணியிருந்தா என்னை ட்ரேஸ் பண்ணியிருக்கலாம்.

ஏன் பண்ணலை? பரவாயில்லை. எங்கேயிருந்தாலும் நன்னாயிருக்கணும்.

மணி மூணு அம்பத்தஞ்சு. ஆர்ஸி புக்கெல்லாம் எடுத்து ரெடியா வச்சுண்டா டைம் ஸேவ் ஆகும்.

வால் க்ளாக் நாலு அடிக்கிறது.

அதோட பஸ்ஸரூம் அடிக்கிறது.

கதவைத் தொறந்து பார்த்தா, அந்த புரோக்கரும், கூட ஒரு மீசைக்கார ஆளும். பார்ட்டி.

"மிஸ்டர் ஸ்ரீநிவாசன், ஐ’ம் லெஃப்டினன்ட் கர்னல் ஹரி. உங்கக் காரைக் கடத்திட்டுப் போக வந்திருக்கேன்." விசாலமான மலையாள மீசைக்குள்ளார ஒரு ராணுவச் சிரிப்பு.

"கரெக்ட்டா நாலு மணிக்கி வந்துட்டீங்க."

"மிலிட்டரி பங்ச்சுவாலிட்டி." திரும்பவும் சிரிப்பு.

ரொம்ப சிக்கனமா சம்பரதாயமெல்லாம் நடந்து முடியறது. கரன்ஸியும் கார் சாவியும் கை மார்றது. அம்பதா யிரத்துக்கும் ஒரே ஐநூறு ரூபாக் கட்டு. ஸ்டீரியோ ஸ்விட்ச் எதுன்னு கேக்கறார். குனிஞ்சு ஸ்விட்ச்சைக் காட்டற சாக்கில யாரும் பாக்க முடியாத மறைவில கார் ஸ்டீரிங்ல உதட்டை வச்சு ஆழமா ஒரு முத்தங் குடுக்கறேன்.

எட்டு வருஷமா நா மட்டுமே உட்காந்த டிரைவர் ஸீட்ல இதோ இன்னொருத்தர் உரிமையோட உக்கார்றார். ஸ்டார்ட் செய்றார், கியர் ச்சேஞ்ச் பண்றார், என்னைப் பார்த்துக் கையசைக்கிறார்.

கார் போயிடுத்து.

சித்த நேரம் அந்த டைரக்ஷனையே பாத்துண்டு நிக்கிறேன்.

அப்புறம் உள்ளார வந்து கவர்லயிருந்து அந்த ஐநூறு ரூபாக் கட்டையெடுத்துப் பாக்கறேன். திரும்பவும் கவர்ல போட்டு ட்யூப் கம் வச்சுக் கவரை ஒட்டறேன். கார்த்தால முதல் வேலையா பாங்குக்குப் போய் இந்தக் கவரைக்குடுத்து மிஸஸ் மஞ்சுளாவைக் குளிரப் பண்ணனும்.

இதென்ன திரும்பவும் பஸ்ஸர் அடிக்கிறது!

வண்டி ஏதும் மக்கர் பண்ணிருச்சா, ஆள் திரும்பி வந்துட்டானா!

கதவைத் திறந்தா, எதிர்க்க புரோக்கரோ, பார்ட்டியோ இல்லை.

ஒரு பொண்ணு.

(மீதி அடுத்த இதழில்) 

About The Author