அருண் அண்ணன் கூறியதைப்போல ஊர்க்காரன் என்றால் மோசம் என்று பொதுப்படுத்தவா முடியும். அம்மாவுக்கு அது புரிவதேயில்லை. நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிவிட்டுப் போனார். அவர் போனபிறகும் அம்மா பழைய மாதிரியே சொல்லிக் கொண்டிருந்தாள். எப்போதுமே எல்லோரையுமே சகட்டு மேனிக்கு விமரிசிப்பது ஏனோ மாலாவுக்குப் பிடிப்பதில்லை. செந்திலை எடுத்துக்கொண்டால், வேலையிலும் எழுத்திலும் சாதிக்க வேண்டும் என்று வேகம் இருந்தது. தன்னை உயர்த்திக்கொள்ளவும் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையவும் ஒரு வித வெறியே இருந்தது. ஒரு இளைஞனுக்கு அதெல்லாம் முக்கியம் தானே என்றெல்லாம் யோசித்தாள்.
கடந்த சிலநாட்களாக மாலா தீவிரமாக யோசித்தாள். செந்திலுக்கு போன் செய்யவும் இல்லை. அவன் மறுபடியும் மறுபடியும் செய்த மிஸ்டு கால்களுக்கும் பதில் தரவில்லை. யோசிக்கத்தான் நிறைய நேரம் எடுத்துக்கொண்டாள். அம்மா ஒரு புறம் கல்யாணம் செய்துகொள் என்றுவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தாள். பழகிய வரை செந்தில் நல்ல நண்பனாகத் தான் இருந்தான். குமார் அளவிற்கு நிதானம் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும் பழக இனிமையானவன் தான். பேசாமல் அவன் கேட்டுக்கொண்டபடி அவனைக் கல்யாணம் செய்துகொண்டால் தான் என்ன?
வெளியழகைக்கண்டு வழியும் மயங்கும் ஆட்களையும் அவர்களின் சிந்தனையோட்டத்தையும் மாலா வெறுப்பவள். இருப்பினும், மாநிறமான தன்னை எப்படி செந்திலுக்குப் பிடித்தது? வெளியழகைப் பொருட்படுத்தாது உள்ளழகையே காண்கிறான் என்பது உறுதியாகிறது என்றே அவளுக்குத் தோன்றியது. பொன்னிறமான பளீரென்ற அழகுடைய அவனுக்கு வேறு மிக எத்தனையோ பெண்கள் கிடைக்கும். அவன் ஏன் தன்னைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் யோசிக்கவே செய்தாள் மாலா.
பலவாறாக இரவு பகலாக யோசித்ததில் பேசாமல் செந்திலைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து விடுவோம் என்று முடிவு செய்தாள். ஆனால், உடனே கல்யாணம் இல்லை என்றும் இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்றும் ஒரே நிபந்தனை மட்டும் போட்டுவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள். அதற்கு அவன் ஒத்துக்கொள்வானா என்ற கவலை ஏற்பட்டது அவளுக்கு.
அவளின் முடிவை அம்மாவிடம் சொல்லவில்லை. முதலில் செந்திலுடன் பேசிவிட்டு, பிறகு அம்மாவிடம் சொல்லிக் கொள்ளலாம். அம்மாவுக்கு அவளின் முடிவு முதலில் பிடிக்காமல் போகலாம். ஆனால், கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் சம்மதிக்க வைத்து விடலாம் என்றே நம்பினாள் மாலா. யாரோ தெரியாத நபரை அம்மா கூட்டி வந்து முன்னிருத்தி அறிமுகப்படுத்துவதைவிட இது எவ்வளவோ மேல் என்று நினைத்துக் கொண்டாள்.
***
செந்திலின் தொலைபேசி எண்ணை அழுத்தினாள். எடுத்ததுமே, "என்ன மாலா, போன் போட்ட எடுக்கறதில்ல முடிவு பண்ணிட்டீங்களா? சரி, இப்பவாவது எடுத்தீங்களே. எனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் உங்ககிட்ட. ஒண்ணில்ல. ரெண்டு. ரெண்டு குட் ந்யூஸ்", என்றான்.
"இல்ல,. நெறைய யோசிச்சிகிட்டிருந்தேன். அதான் நீங்க சொன்ன விஷயத்தைப்பத்தி", என்றாள் மெதுவாக.
"இருங்க நாந்தான் உங்க கூட பேசமுடியாம நாலு நாளா காத்துகிட்டிருக்கேன். நான் சொல்லிடறேன் விஷயத்த மொதல்ல."
"சரி, சொல்லுங்க."
"எனக்கு ஒரு நல்ல வேல கெடச்சிடுச்சு, அதுவும் எஸ் பாஸோட."
"ஆஹா, ஒரு வழியா கெடச்சுடுச்சா? ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்."
"ரெண்டாவது குட் ந்யூஸ் என்ன தெரியுமா? எனக்குக் கல்யாணம். ஒரே வாரத்துல உலகமே மாறிப்போனாப்ல இருக்கு எனக்கு", என்று ஏதேதோ குஷியில் கூவிக்கொண்டிருந்தான்.
இணைப்பைத் துண்டித்துவிடலாமா என்றிருந்தது மாலாவுக்கு. ஒன்றும் பேசமுடியாமல் சில கணங்களுக்கு மௌனமாக இருந்தாள். செந்திலே தொடர்ந்து, "தூரத்து சொந்தம் தான். ப்ரியாவ நான் சின்ன வயசுல பார்த்தது. இப்ப தான் நாலு நாளா போன்ல பேசிக்கிறோம். அப்பாவுக்கு ஒரே சந்தோஷம்", என்றான்.
கேட்க நினைப்பதைக் கேட்டு விடவேண்டும் என்று,"செந்தில் அப்ப நீங்க அன்னிக்கி என்கிட்ட ஏன் ப்ரொப்போஸ் பண்ணீனீங்க?", என்று கேட்டாள் கூர்மையான தொனியில்.
"மாலா, அதுக்கு தான் நீங்க பதிலே சொல்லல்லயே."
"இதுக்கெல்லாம் உடனே பதில் சொல்லிட முடியுமா செந்தில்?"
"சரி, விடுங்க மாலா. மறந்துடுங்க அத."
"நீங்க சீரியஸா இல்லன்னா, ஏன் என்கிட்ட சொல்லணும்? என்னையும் கொழப்பணும்? "
"…."
"சீரியஸா இருந்தா அதுக்குள்ள இப்டி பேசுவீங்களா? உங்க ஆட்டிட்யூட் ரொம்ப ஏமாற்றமா இருக்கு. எனக்கு பிடிக்கல்ல. ப்ரியாவயாவது சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோங்க. அடுத்த வாரம் அவங்கிட்ட இப்படிப்போயி பேசிடாம,.."
"என்ன என்னோட ஆட்டிட்யூட்ல கொறகண்டீங்க? "
"இந்தக் கேள்வியக் கேக்க உங்களுக்கு வெக்கமாயில்ல?"
"மாலா கொஞ்சம் வார்த்தைய அளந்துபேசலாம். எனக்கு அப்போ வேல கெடைக்கல்ல. எஸ் பாஸுக்கும் வழியில்ல. சரி, உள்ளூர் பொண்ணக் கட்டினா, சீக்கிரமே பீ ஆர் கெடச்சுரும்னு,.."
"இவ்ளோ சுயநலவாதியா? உங்க குறுக்கு வழிக்கு நாந்தான் கெடச்சனா? உங்ககூட பழகினதுக்கு நான் வெக்கப்படறேன்."
"இருக்கட்டும். அதுக்கு நாம் பொறுப்பில்ல. ஆனா, ப்ரியாவப் பத்தி நீங்க எனக்கு அட்வைஸ் பண்ண வேணாம். எல்லாம் எனக்குத் தெரியும்."
இணைப்பைத் துண்டித்து விட்டாள்.
அப்படியே உட்கார்ந்திருந்தாள் உறைந்துபோய். தன்னைப் பயன் படுத்திக் கொள்ள நினைத்திருந்தான் என்பதை நினைக்கும் போது கோபம் தலைக்கேறியது. என்ன சுயநலம்? என்ன ஒரு குறுக்கு புத்தி? இதையெல்லாம் அம்மாவிடம் நல்லவேளை சொல்லவில்லை. அம்மா தாங்கவே மாட்டாள்.
அம்மாவின் பயமும் நியாயம் என்பதுபோலத் தானே இருக்கிறது. செந்தில் பலமுறை அழைத்தபோது அவள் எடுக்கவேயில்லை. நல்லவேளை அவனுக்கு வேலைகிடைத்தது. இத்தகையவனின் சுயரூபம் புரிந்தது. இவனுடன் வாழவா? முடியுமா? யோசித்துக் கொண்டே தலையை உதறிக்கொண்டாள்.
தொடரும்
(நெய்தல் -மின்னூலில் இருந்து)
To buy the EBook, Please click here
“