மணிக்கு 56 கி.மீ ஓடக்கூடிய காட்டு மிருகம் எதுவாக இருக்கும்? மான்…? புலி…? சிங்கம்…? உங்கள் ஊகங்கள் அனைத்தும் தவறு.
நன்கு வளர்ந்த ஒரு சராசரி மனிதனின் உயரத்தை விட அதிகமான உயரம் இந்த மிருகத்தின் கால்களுக்கு உண்டு! அதுதான் ஒட்டகச் சிவிங்கி. ஏறத்தாழ 6 அடி உயரக் கால்களுக்குச் சொந்தமான இந்தக் காட்டு விலங்குதான் முலையூட்டிகளில் அதி உயர மிருகமாகத் திகழ்கின்றது. இந்த உயர்ந்தவரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? இன்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?
ஒட்டகச் சிவிங்கிக்குக் கடவுள் கொடுத்துள்ள அதீத உயரம், பல வழிகளில் அதற்குக் கைகொடுத்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். இது விரும்பிச் சாப்பிடும் அக்காசியா மரத்தின் இலைகளை அடைய இதன் உயரம் பெரிதும் உதவுகின்றது. மற்றைய மிருகங்களால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் இந்த இலைகளை, இந்த உயர்ந்த மிருகங்கள் வெகு சுலபமாக எட்டி உண்டு விடுகின்றன. இதனுடைய நாக்கும் மிக நீண்டது. 53 செ.மீ (21 அங்குலம்). அப்படியானால் எவ்வளவு நீளமான நாக்கு என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! உயர்ந்த அக்காசியா மரத்தின் கிளைகளைத் துழாவி, சுவையான இலைகளாகப் பார்த்துச் சாப்பிட்டு விடுகின்றது. தனது நீண்ட கால்களால் மணிக்கு 56 கி.மீ வேகத்தில் ஓடும் ஒட்டகச் சிவிங்கி, நீண்ட தூரம் ஓட வேண்டிய நிலை வந்தாலும், சராசரியாக மணிக்கு 16 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது.
ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் பெண்ணுக்காக மோதலில் இறங்கும்போது தங்கள் நீண்ட கழுத்தையும் தலையையும் முட்டியே மோதிக் கொள்கின்றன. இதனால் ஏனைய மிருகங்களைப் போல மோதல்களில் காயப்படுவதில்லை. இரண்டில் ஒன்று தானாகவே விட்டுக் கொடுத்து விட்டு, அங்கிருந்து அகன்று விடுகின்றது. ஐந்து தொடக்கம் ஆறு மிருகங்கள் ஒன்றாகச் சேர்ந்து, ஆப்பிரிக்காவின் சவன்னா எனும் பரந்த புல் தரைகளில் மேய்ந்து கொண்டிருக்கும்போது வெகுதொலைவில் நிற்கும் எதிரியை இனங்கண்டுகொள்ள இதன் நீண்ட கழுத்து பெரிதும் உதவுகின்றது!
பசுக்களைப் போல அதிகமான நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் ஒட்டகச் சிவிங்கிகள், பசுவைப் போலவே அசைபோடும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான இறாத்தல் எடைக்கு இலைகளை உண்ணும் இந்த மிருகங்கள், உணவுக்காகத் தினமும் பல மைல்கள் தூரம் பயணிக்கும் நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகின்றன.
இதன் உயரம் பலவற்றிற்கு வசதியாக இருக்கின்றதே என்று நாம் ஆச்சரியப்படும் அதே நேரம், இதே உயரத்தால் அது சந்திக்கும் அசௌகரியங்களும் உண்டு. இது விரும்பி உண்ணும் இலைகளில் உள்ள தாராளமான நீர்த் தன்மை, தேவையான நீரைக் கொடுத்துவிடுவதால் ஒட்டகம் போலப் பல நாட்களுக்கு ஒரு தடவைதான் இது நீர் அருந்த வேண்டி வருகிறது. ஆனாலும், அப்படி நீர் அருந்தும் சமயங்களில் இது அபாயத்தைச் சந்திக்கின்றது. அதீத உயரத்தைக் கொண்டிருப்பதால், நீர் நிலைகளில் தாகம் தணித்துக்கொள்ள முயற்சிக்கும் ஓர் ஒட்டகச் சிவிங்கி, தன்னுடைய நான்கு கால்களையும் மிகவும் அகல விரித்து, இக்கட்டான ஒரு நிலையில் நின்றுதான் நீரை அருந்த வேண்டியிருக்கின்றது. இந்த வேளைகளில் சிங்கங்கள் பின்னின்று தாக்க ஏதுவாகி விடுகின்றது.
மேலும், தரையில் உட்கார்ந்து ஈன முடியாததால் நின்ற நிலையிலேயே குட்டியை ஈனுகின்றது. 5 அடி உயரம் உள்ள தாயின் வயிற்றிலிருந்து பூமியில் விழும் குட்டிக்கு, வாழ்வின் ஆரம்பமே கொஞ்சம் கரடுமுரடாகத்தான் ஆரம்பிக்கின்றது. ஆனால், இப்படித் தொப்பென விழும் குட்டி அரை மணி நேரத்தில் தாயோடு இணைந்து ஓடுவதைப் பார்க்கும்போது நம்மைப் பிரமிப்பு ஆட்கொள்கின்றது. இறைவனின் படைப்பே இப்படி ஆயிரமாயிரம் அதிசயங்களைக் கொண்டதுதான் என்று நம்மால் அப்பொழுது உணர்ந்து கொள்ள முடிகின்றது!
வரிக்குதிரைகளைப் போல, மனிதனின் கை ரேகைகள் போல ஒட்டகச் சிவிங்கிகளின் உடம்பிலுள்ள புள்ளிகளும், ஒவ்வொரு மிருகத்திற்கும் தனித்துவம் கொண்டவையாக இருக்கின்றன.
ஓர் ஒட்டகச் சிவிங்கியின் சராசரி உயரம், எழுந்து நிற்கும் போது 16-20 அடி. நன்கு வளர்ந்த ஆண் ஒன்றின் சராசரி எடை 1600 கிலோவும், பெண் மிருகத்தின் எடை 830 கிலோவும் இருக்கும்.
ஆப்பிரிக்கக் காடுகளில்தான் இந்த உயர்ந்த மிருகங்கள் காணப்படுகின்றன. இவை அதிகமாக வேட்டையாடப்படுவது சிங்கங்களால்தான்! இதன் குட்டிகளைச் சிறுத்தைகள், காட்டு நாய்கள் போன்றன வேட்டையாடி உண்டுவிடுகின்றன.
ஒட்டகச் சிவிங்கிக்குக் கால்களும் கழுத்தும் நீண்டிருந்தாலும் அதற்கு ஏற்ப உடலமைப்பு இல்லை. இவற்றின் அதீத நீளத்திற்குப் பொருந்தாத வகையில், இதன் உடம்பு அளவில் சிறிதாக இருக்கின்றது. தலையின் இரு பக்கங்களிலும் வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் இதன் பெரிய கண்கள், உயரத்திலிருந்து மிகத் தெளிவாகச் சுற்றுவட்டாரத்தைப் பார்க்க உதவுகின்றன. நிறங்களைத் தெளிவாகப் பார்க்கும் ஒட்டகச் சிவிங்கிகள், நல்ல செவிப்புலனையும் கொண்டிருப்பதோடு, அபார மோப்ப சக்தியும் உடையனவாக இருக்கின்றன. மணற்புயல் அடித்தால் தன் நாசித்துவாரங்களை மூடிக் கொள்ளும் வசதியும் இவற்றுக்கு உண்டு. அதே போல, எறும்புகள் முகத்தில் மொய்த்தாலும் நாசித் துவாரத்தை மூடிக்கொள்கின்றன.
இதன் நாக்கு ஊதா கலந்த கறுப்பு வர்ணத்தைக் கொண்டது. முன்பே பார்த்தபடி, மிக நீளமான நாக்கு என்பதால் மூக்கைக் கூட நக்கியே சுத்தப்படுத்திக் கொள்கின்றது ஒட்டகச் சிவிங்கி. இதன் சொண்டு1, நாக்கு, வாயின் உட்பகுதி எல்லாம் ஒருவித வேதிப் படலத்தால் போர்த்தப்பட்டுள்ளன. அக்காசியா மரக்கிளைகளின் முள் குத்திக் காயப்படாவண்ணம் இந்தப் படலம் பாதுகாக்கின்றது.
ஒட்டகச் சிவிங்கியுடைய தோலின் நிறம் பொதுவாகச் சாம்பல். தோல் மிகத் தடிப்பாக இருப்பதால், பற்றைகளின்2 ஊடாக நகரும்போது எந்த முள்ளாலும் இதைக் குத்திக் கிழித்து காயப்படுத்த முடிவதில்லை. இதன் தோல் ரோமத்தில் குறைந்த பட்சம் 11 வேறுபட்ட மணம் கொண்ட வேதிக் கலவைகள் உள்ளன. இதனால் இதன் மேலிருந்து ஒரு நெடி எப்பொழுதுமே வீசும். ஆண்களிடம் அதிக நெடி அடிப்பது பாலியல் ரீதியான தொழிற்பாடுகளுக்காக என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். 3.3 அடி நீளமிருக்கும் இதன் வால் முனையில் கற்றையாக முடி இருக்கின்றது. பூச்சிகளை விரட்ட இது உதவுகின்றது.
தலையின் இரு பக்கங்களிலும் துருத்திக் கொண்டிருக்கும் முனைகள் உண்மையில் கொம்புகள் அல்ல. தோலால் மூடப்பட்டவைதான். பெண் மிருகங்களின் தலையில் துருத்திக் கொண்டிருக்கும் இந்தப் பகுதியின் முனையில் முடி இருக்கும். ஆனால், ஆண்களுக்கு இது மொட்டையாக இருக்கும். இதன் மூலம் ஆணா, பெண்ணா என்று மிகச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். வயதேற ஏற இதன் மண்டையோட்டுப் பகுதியில் எடை கூடி, இன்னொரு மிருகத்தோடு மோதும்போது வெற்றிவாகை சூட ஏதுவாக வலுவடைவதுண்டு!
இதன் முன்னங் கால்களும், பின்னங் கால்களும் ஒரே அளவுதான். இதனால் நடக்கவும் முடியும். குதிரையைப் போலத் தாவி ஓடவும் முடியும். நீண்ட தூர ஓட்டத்துக்கு மணிக்கு 50 கி.மீ வேகத்தை இதனால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகின்றது. மடிக்கப்பட்ட தனது கால்களுக்கு மேல் உடம்பை இறக்கி வைத்து ஒட்டகச் சிவிங்கி ஓய்வெடுக்கின்றது. திரும்பவும் எழுவதற்கு, முதலில் முழந்தாளில் உட்கார்ந்து, பின்னங்கால்களை விரித்து வைத்து, பிறகு பின் பக்கத்தை உயர்த்தி, அப்புறம் முன்னங்கால்களை நிமிர்த்துகின்றது.
பிடித்து வைக்கப்பட்டுள்ள ஒட்டகச் சிவிங்கிகள் தினமும் 4-6 மணி நேரம் வரை தூங்குகின்றன. அனேகமாக இரவில்தான் இந்தத் தூக்கம். பொதுவாகத் தரையில் கிடந்தே இவை தூங்குவதுண்டு என்றாலும் நின்றபடித் தூங்குவதையும் கேமராவில் பதிவு செய்திருக்கின்றார்கள்!
தென் ஆப்பிரிக்கப் பழங்குடியினர் தமது நடனங்களுக்குச் சில மிருகங்களின் பெயர்களை வைத்துள்ளனர். இவற்றுள் தலை சம்பந்தமான உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படும் நடனத்துக்குப் பெயர் ‘ஒட்டகச் சிவிங்கி’! ஒட்டகச் சிவிங்கி எப்படி இவ்வளவு உயரத்தைப் பெற்றது என்பதற்கு ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் பல இருக்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்கக் கதையொன்றில், அளவுக்கு அதிகமான மந்திர மூலிகைகளை உண்டதால்தான் இந்த நீண்ட கழுத்தும், காலும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவது சுவையானது.
எகிப்தியர்கள் இந்த மிருகங்களைச் செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்ததோடு, தரைக்கடல் பகுதிக்கு இவற்றைக் கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் வரலாறு தெரிவிக்கின்றது. கிரேக்கர்களுக்கும், ரோமானியர்களுக்கும் இந்த மிருகம் பற்றித் தெரிந்திருக்கின்றது. ஒட்டகமும், சிறுத்தையும் இணைந்து தோன்றிய கலப்பு என்று நம்பி அப்படியொரு பெயரில்தான் இவற்றை அழைத்துள்ளார்கள். கி.மு.46இல் முதல் தடவையாக ஜூலியற் சீஸர் இந்த மிருகத்தை ரோம் நகருக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்குக் காட்டியுள்ளார். ரோம ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஐரோப்பாவில் இந்த வழக்கம் மறைந்தது.
இந்த மிருகத்தின் உடல் பாகங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுவதால், வேட்டைக்காரர்களால் இவை கொல்லப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஐரோப்பியர்கள் வேடிக்கையாக இவற்றை வேட்டையாட ஆரம்பித்து விட்டார்கள். இதன் இறைச்சியை உண்பவர்கள் இருக்கின்றார்கள். இதன் வால் முடியை ஈக்களை விரட்டப் பயன்படுத்துகின்றார்கள். கழுத்தணி, வளையல் போன்றவற்றைச் செய்யவும் இதைப் பயன்படுத்துகின்றார்கள். இதன் தோலால் காலணிகள், இசைக் கருவிகளின் கம்பிகள் போன்றவற்றைத் தயாரிக்கின்றார்கள். மேலும், இந்தத் தோலை எரித்து வரும் புகையை முகர்ந்தால், நாசியூடாக இரத்தக் கசிவு ஏற்படுவது தடைப்படும் என்று மருத்துவமும் பார்க்கின்றார்கள். இப்படியாக இந்த மிருகங்களின் அழிவுக்கு ஆயிரம் காரணங்கள்!
1999இல் 1,40,000 ஒட்டகச் சிவிங்கிகள் காடுகளில் இருப்பதாகக் கணித்தவர்கள், 2010இல் திரும்பவும் கணிப்பீடு செய்தபோது கிடைத்த தொகை வெறும் 80,000தான் என்றால் நீங்களே ஒட்டகச் சிவிங்கிகளின் இன்றைய நிலையை யூகித்துக் கொள்ளுங்கள்.
மனித ஆசை வளர்ந்து கொண்டே இருக்கும் வரை இயற்கை அன்னையின் வளங்கள் ஒருநாளும் வளர்ச்சி காணப்போவதில்லை என்பதே கசப்பான உண்மை!
(1.சொண்டு = உதடு. 2.பற்றை = புதர்.)