முதலில் இயக்குனர் பி.வி.பிரசாத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்- தன் முதல் படத்திலேயே புதிதாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணியதற்கு. முற்றிலும் புதிது என்றும் சொல்லிவிட முடியாது. ஆளவந்தான், குடைக்குள் மழை போன்ற திரைப்படங்கள் சொன்ன சமாச்சாரங்கள்தான். கத்தி மேல் நடக்கும் கதையை முதல் படத்திலேயே உபயோகித்ததற்குத்தான் முதல் சபாஷ்.
சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் “நாக்க முக்க” (அப்படியென்றால் என்னவென்று திரைப்படத்தில் சொல்லவில்லை!) பாடல் அனைவரையும் ஒரு கலக்கு கலக்கி விட்டது. இயக்குனருக்கு தன் கதை மீது அதீத நம்பிக்கை போலும். படத்தின் முதல் காட்சி – யாரோ சிலர் ஒரு காதல் ஜோடியை துரத்துகின்றனர். எத்தனையோ முறை நாம் அனைவரும் பார்த்து அலுத்துவிட்ட ஒரு காட்சிதான். உடனே ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது “நாக்க முக்க” பாட்டில். தன் துருப்புச் சீட்டை முதல் காட்சியிலேயே உபயோகப்படுத்திவிடுகிறார்.
காதல் கதை என்று படத்தின் பெயரிலேயே தெரிந்து விடுகிறது. “எத்தனை காதல் திரைப்படங்கள்தான் அதே கதையை திருப்பித் திருப்பிச் சொல்லப் போகின்றனவோ! ஏதோ ஒரு புது இயக்குனர், பிரபலமாகாத கதாநாயகன், நாயகி. விஜய் ஆண்டனி என்ற பெயர் கொண்ட ஏதோ இசையமைப்பாளர். ஆனந்தம் தரும் அர்த்தமுள்ள அழகான “நாக்க முக்க” வும் முதலிலேயே முடிந்துவிடுகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு போயும் போயும் இந்தப்படத்தில் என்னதான் இருக்கப் போகிறது“ என்று வியக்கும் நிலை! பொறுத்தாரை இயக்குனர் ஏமாற்றவில்லை.
பாய்ஸ் திரைப்படத்தின் ஒரு பாய் நகுல் என்ற நகுலன்தான் கதாநாயகன். தேவயானியின் தம்பி. (எப்படி இப்படி இளைத்தார்?) புதுமுக நாயகி சுனேனா. இருவருக்கும் சபாஷ். சபாபதியாக நகுல் கடினமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து, ஓரளவிற்கு நன்றாகவே செய்துள்ளார். சுனேனாவை ரசிக்கத் தோன்றுகிறது.மீரா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். நன்றாக நடிக்கிறார், அற்புதமாக ஆடுகிறார். “உன் தலை முடி உதிர்வதை” பாடலில் எத்தனை அழகு!! தெலுங்கில் டாப் ஹீரோயினாமே!
விஜய் அண்டனி “நாக்க முக்க” என்ற காலத்தால் அழியாத இசைக் காவியத்தைத் தந்த வளரும் இசையமைப்பாளர். கவனிக்க வேண்டியது, படத்தில் மூன்று மென்மையான மெலடி மெட்டுக்கள். ஏனோ நாம் கானா பாடல்களுக்கு அடிமையாகி, அங்கங்கு சில நல்ல பாடல்களை விட்டு விடுகிறோம். பின்னணி இசையிலும் மனிதர் கலக்கியிருக்கிறார். தேவைப்படும் விறுவிறுப்பை இயக்குனருக்கு அள்ளித் தந்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஆயிரம் முறைக்கு மேல் பார்த்து அலுத்து விட்ட முதல் பாதிகதை. இருந்தும் கையாண்ட விதம் நன்றாகவே இருக்கிறது. முழுக்க முழுக்க மென்மையான யதார்த்தம். ஃப்ளாஷ்பேக் முறையில் அளித்ததால், முதல் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது இவ்வளவு மென்மையான ஒரு கதையில் ஏதோ பயங்கரம் நேரப்போகிறது என்று.
இரண்டாம் பாதியில் மிக நேர்த்தியாக கதையின் போக்கை மாற்றியிருக்கிறார் இயக்குனர். சபாஷ். ஷ்கீஸோஃப்ரீனியா என்றெல்லாம் லெக்சர் அடிக்காது, குரங்கைப் பற்றிய ஒரு கதை சொல்லியே உறவுகளின் உணர்வுகளை உணர்த்துகின்றார். “இது என் மனைவி. இறந்து அஞ்சு வருஷம் ஆச்சு, இப்பவும் காலைல எழுந்தா குட் மார்னிங் சொல்றேன். நான் என்ன அப்நார்மலா?” என்று மருத்துவர் சொல்வது மனதை நெகிழ வைக்கிறது.
இருந்தும் முதற்பாதியில் இருந்த யதார்த்தம் இரண்டாம் பாதியில் காணவில்லை. இயக்குனர் கொஞ்சம் அங்கே கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாகவே வந்திருக்கலாம். ஒரு வேளை முழுக்கதையையும் நகுலிடம் சொல்லாமல் அவரை நடிக்க வைத்திருந்தால், பித்தனைப் போல நடிக்காமல் முதற்பாதியின் யதார்த்தத்துடனே நடித்திருப்பாரோ!
கடைசி அரை மணி நேரம் ரத்தக் களறி. தாளமுடியவில்லை. படத்தின் முடிவையும் யூகித்துவிட்டால், கொஞ்சம் பொறுமை இழக்க நேரிடும். அரிவாள் இல்லாமல் நம் இயக்குனர்களுக்கு திரைப்படம் எடுக்கத் தெரியாது என்று பிரசாத்தும் நிரூபித்துவிட்டார்!
சரி, அப்படி என்னதான் இரண்டாம் பாதியில் நடக்கிறது. நாயகன் விளையாட்டுப் பந்தயம் ஒன்றில் பங்கெடுப்பதற்காக ஊட்டி செல்கிறார். வரும்பொழுது அவருக்காக அதிர்ச்சி காத்திருக்கிறது, மீரா இறந்துவிட்டார் என்று. மருத்துவமனை செல்கிறார். மீராவைக் கண்டுபிடிக்கிறார். அவர் இன்னும் சாகவில்லை என்பதை உணர்கிறார். தன்னால் அவரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில், மருத்துவமனையிலிருந்து கடத்துகிறார். சரி.. இதற்கும், ஷ்கீஸோஃப்ரீனியாவுக்கும், ஆளவந்தானுக்கும் என்ன சம்பந்தம்?! நீங்களே திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெரிதாக எதுவும் எதிர்பார்த்துச் செல்ல வேண்டாம், ஏமாற்றம் அடையலாம். புதிதாக எதிர்பார்த்துச் செல்லுங்கள்.