காணாமல் போய்விடுமா காண்டாமிருகங்கள்?

பெரிய அளவில் வளர்ந்துவிட்டதாக மனிதன் பீற்றிக் கொள்கிறானே? அந்த அளவுக்கு இயற்கையைப் படிப்படியாகத் தான் அழித்து வருவதை அவன் அறிவானா? மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்காக இயற்கை சிதைக்கப்படுகின்றது. மரங்கள், மிருகங்கள், பறவைகள் எனப் படிப்படியாக, இயற்கையை அழகு கொழிக்கச் செய்பவற்றில் பல நாளும் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் பல விலங்கினங்கள், பறவைகள் வெறும் சித்திரங்களாகவே வருங்காலச் சமுதாயத்திற்கு இருக்கப் போகின்றனவோ எனும் அச்சம் நிலவுகிறது.

பூமியில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாகக் கருதப்படும் காண்டாமிருகங்கள் இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என்று பல கண்டங்களிலும் பரந்து வாழ்ந்து வந்த இந்த மிருகங்கள் இன்று மெல்ல மெல்ல அழிந்து, ஆப்பிரிக்கா, ஆசியா வாழ் மிருகங்கள் எனக் குறுகிய வட்டத்தைப் பெற்றுவிட்டன. இந்த மிருகங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிடின், அடுத்த 20 ஆண்டுகளுள் காண்டாமிருகங்கள் வெறும் சித்திரங்களாகி விடும் எனக் கணிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

இன்றைய நிலையில், ஏறத்தாழ 25,000 காண்டாமிருகங்களே காடுகளில் காணப்படுவதாகவும், உயிரியல் பூங்காக்களில் மேலும் 1250 காண்டாமிருகங்கள் காணப்படுவதாகவும் ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. 50 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மிருகங்களில், உலக நாடுகளில் எஞ்சிக் கிடக்கும் இந்தச் சிறிய தொகையைப் பார்க்கும்போது, இவை வெகுவிரைவில் அழிந்துவிடலாம் என்னும் பேரச்சமே தோன்றுகின்றது.

இந்தத் தொகையில், வெள்ளைக் காண்டாமிருகங்களின் தொகை அண்ணளவாக 18,000. கறுத்த காண்டாமிருங்களில் எஞ்சியிருப்பவை 4,240 மட்டுமே!! மிக அரிதான ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகங்களில் இன்று காணப்படுபவை ஏறத்தாழ 2800. சுமத்திரா தீவில் சுமாராக 200 காண்டாமிருகங்களும், ஜாவா தீவில் 40 தொடக்கம்* 50 வரையிலான காண்டாமிருகங்களுமே காணப்படுகின்றன என்பது கவலை தரும் செய்தி.

இப்படியொரு நிலையில், மிக அதிகமான உயிரினங்களைக் கொண்டுள்ள தென்ஆப்பிரிக்காவின் தற்போதைய நிலையைச் சற்றே நோக்குவோம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் 93 விழுக்காடு காண்டாமிருகங்கள் தென் ஆப்பிரிக்காவில்தான் காணப்படுகின்றன. இவற்றின் கொம்புகளுக்காகவே இவை கொல்லப்பட்டு வருவதால், தம் நாட்டிலுள்ள காண்டாமிருகங்கள் எல்லாவற்றினுடைய கொம்புகளையும் அகற்றி விடலாமா என அரசு தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகின்றது.

2011இல் மாத்திரம், செப்டம்பர் வரையிலேயே 279 காண்டாமிருகங்கள் கள்ள வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகின்றது தென்ஆப்பிரிக்க அரசு. 2010இல் 333 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான காண்டாமிருகக் கொம்புகள் கிழக்கு ஆசியாவிற்கே கடத்திச் செல்லப்படுகின்றன. பல மருத்துவப் பயன்பாடுகளுக்காக இந்தக் கொம்புத் தூள் பலராலும் தேடப்படுகின்றது. தங்கத்தை விட விலைமதிப்பான ஒரு பொருளாகக் காண்டாமிருகக் கொம்புகள் உலகச் சந்தையில் வரவேற்கப்படுகின்றன. ஆண்மைக் குறைவை நீக்குதல் தொடக்கம், புற்று நோய் சிகிச்சை வரை இந்தக் கொம்புத் தூள் மருத்துவத் துறையில் தேடப்படுகின்றது. வளைகுடா நாடுகளான யேமனிலும், ஓமானிலும் இடையில் செருகும் குத்துவாளின் கைப்பிடியை இதன் கொம்புகளைப் பயன்படுத்தியே செய்து வருகின்றார்கள்.

இந்தக் கொம்பு, மனிதர்களின் கால் விரல், கைவிரல் நகங்களில் இருப்பதைப் போலவே உள்ளடக்கம் கொண்டிருப்பினும், ஒரு முழுக் கொம்பு 2,50,000 பவுண்ட்ஸ் தொகைக்குக் கள்ளச் சந்தையில் விற்பனையாகி வருகின்றது. இப்படியொரு பெரிய தொகையைச் சம்பாதிக்க முடிவதால் காடுகளிலோ, உயிரியல் பூங்காக்களிலோ காண்டாமிருகங்களைக் கொன்று கொம்பை எடுத்துச் செல்வது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது. சீனாவில் காண்டாமிருகங்களை வளர்க்கும் பண்ணைகளைத் தொடங்கச் சீனர்கள் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

பெரிய வாள்களைக் கொண்டு, திருட்டு வேட்டைக்காரர்கள் காண்டாமிருகங்களின் கொம்புகளை அரிந்து எடுத்துவிட்டு, குருதி கொட்டும் நிலையில் இவற்றை விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். பாவம் அந்த உயிரினம்! அநியாயமாகத் தொடர்ந்து இரத்தம் சிந்தி மரணத்தைத் தழுவிக் கொள்கின்றது.

இந்தப் பரிதாபச் சாவுகளைத் தவிர்க்கவே அரசு, கொம்புகளை அறுத்து விடலாமோ என ஆலோசித்து வருகின்றது. அதே சமயம், கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருக்கும் காண்டாமிருகக் கொம்பு விற்பனைத் தடையை நீக்கவும் அரசு திட்டமிட்டு வருகின்றது. இதன் கொம்புகளுக்குச் சட்டரீதியான ஒரு சந்தையை உருவாக்க முடியுமா என்பது பற்றி அரசு பரிசீலித்து வருகின்றது.

காண்டாமிருகங்களைக் கறுப்பு, வெள்ளை என இரு நிறங்கள் கொண்ட இனங்களாகப் பிரிக்கின்றார்கள். ஆனால் உண்மையில், வெள்ளை நிறத்திலோ, கறுப்பு நிறத்திலோ இந்த உயிரினங்கள் காணப்படுவதில்லை. கறுத்த மண்ணில் புரண்டு, இவற்றின் தோலில் கறுப்புச் சேறு ஒட்டிக் கொள்வதால் இவற்றின் மீது கறுப்பு ஒட்டிக்கொண்டு விட்டது. மரங்களின் இலைகளைச் சாப்பிடுவதற்கும், பற்றைகளில்** தலையை நுழைத்துத் தன் மேய்ச்சலைத் தொடர்வதற்கும் ஏற்றவகையில் இதன் மேற்புறச் சொண்டுகள்*** அமைந்திருக்கின்றன. கிரேக்க மொழியில் di என்பது இரண்டைக் குறிக்கும். ceros என்பது கொம்புகளைக் குறிக்கும் சொல். எனவேதான் இரு கொம்புகளைக் கொண்டுள்ள உயிரினங்கள் எனும் பொருளில் ‘றைனோசெறஸ்’ (Rhinoceros) என்று பெயரிட்டுள்ளார்கள்.

காண்டாமிருக இனங்களில் பெரும் அழிவைக் கண்டிருப்பவை இந்தக் கறுப்புக் காண்டாமிருகங்கள்தான். 1970இல் 65,000 காண்டாமிருகங்கள் இருந்திருக்கின்றன. இன்றோ முன்பு குறிப்பிட்டதுபோல, 4240ஆக இத் தொகை அருகிவிட்டது. 30 தொடக்கம் 35 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை இந்தக் கறுப்புக் காண்டாமிருகங்கள். பிடித்து வளர்த்தால் 40 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்கிறார்கள். 15 தொடக்கம் 16 மாதங்கள் வரை ஒரு தாய்க் காண்டாமிருகம் குட்டியைத் தன் வயிற்றில் சுமக்கின்றது. கருத்தரிப்பது, இரண்டரை தொடக்கம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது. நான்கு தொடக்கம் ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் குட்டி, பாலியல்ரீதியான முதிர்ச்சியைப் பெற்றுவிடுகின்றது. ஆண்கள் ஏழு தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியை அடைந்து விடுகின்றன.

பெண் காண்டாமிருகங்கள் கூடி வாழும் இயல்பைக் கொண்டிருந்தாலும், ஆண் காண்டாமிருகங்கள் தனித்தே வாழுகின்றன. இதன் எடை 800 தொடக்கம் 1350 கிலோ வரையில் இருக்கும். தோள்பட்டை வரையிலான இதன் உயரம் 1.4 தொடக்கம் 1.7 மீற்றராகும். இதன் முற்பகுதியிலுள்ள கொம்பு (0.5 – 1.3 மீ) பிற்பகுதியிலுள்ளதை (55செ.மீ) விட நீண்டதாக இருக்கும்.

வெள்ளைக் காண்டாமிருகங்களின் (White Rhinoceros) பெயர் ஆப்பிரிக்க மொழியிலிருந்து வந்தது என்பது வியப்பான தகவலாகும். இங்கு weit என்ற சொல்லை இதன் வாய் அகலமானது என்பதைக் குறிக்கவே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இங்கு வந்த ஆங்கிலக் குடியேற்றக்காரர்கள், இதை வெள்ளை எனப் பொருள்படும் white என்று மாற்றிவிட்டார்கள்.

யானைக்கு அடுத்ததாக மிகப்பெரிய காட்டுயிர் இந்த வெள்ளைக் காண்டாமிருகங்கள்தான். இவை புல் மேய்ச்சலில் சூரர்கள்! இவற்றின் அகன்ற வாய் அமைப்பு, எளிதாகப் புல் மேய்வதற்கு வசதியாக அமைந்துள்ளது. அகன்ற நீள்சதுர வடிவில் இவற்றின் வாய் அமைந்துள்ளது.

இது அளவில் பெரியதாக இருப்பதால் இதன் எடை 2700 கிலோ வரையில் காணப்படுகின்றது. தோள்பட்டை வரையிலான உயரமும் 1.8 மீற்றர் வரை இருக்கும். முன்னுள்ள கொம்பும், கறுப்புக் காண்டாமிருகங்களின் கொம்புகளை விடச் சற்றே நீண்டவை.

இந்தோனேசியாவிலுள்ள ஜாவா தீவின் காண்டாமிருகங்கள் தனித்துவமானவை. வேறு எங்கும் இவை காண்ப்படுவதில்லை. இவற்றின் தொகை 44 ஆகச் சுருங்கி, இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது இந்தக் காண்டாமிருக இனம். அதிகூடிய எடையாக 2300 கிலோவைக் கொண்டுள்ள இந்த இனக் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பை மாத்திரமே கொண்டனவாக இருப்பது, இவற்றின் தனித்துவம். பெண் காண்டாமிருகங்களுக்குக் கொம்பு சிறிதாக இருக்கும். அல்லது கொம்பற்றதாகவே காணப்படும். இங்குள்ள தேசிய வனவிலங்குப் பாதுகாப்பு நிலையத்தில் இவை பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

வேகமாக அழியும் இன்னோர் இனம் சுமத்திரா தீவின் காண்டாமிருகங்கள். இவற்றின் உடம்பு உரோமத்தால் நிறைந்திருப்பது இதன் சிறப்பான உடலமைப்பாகும். செந்நிறத்தோடு கூடிய மரநிறத்தை இதன் தோல் கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 50 விழுக்காடு தொகையை இழந்திருக்கும் இந்த இனம், மிக வேகமாக அழியும் இன்னொரு காண்டாமிருக இனமாகும். இதன் அதிகூடிய எடை 950 கிலோ மாத்திரந்தான்! இன்றைய நிலையில் மிஞ்சியிருக்கும் இந்த இனக் காண்டாமிருகங்களின் தொகை சுமாராக 200 மாத்திரமே!

தாவரஉண்ணிகளான இந்த விலங்குகளுக்கு அபாரமான செவிப்புலனும், நல்ல மோப்ப சக்தியும் உண்டு. ஆனால், தொலைவிலுள்ளதைத் துல்லியமாகப் பார்க்குமளவிற்கு இவற்றின் கண்கள் அமைந்திருக்கவில்லை. சராசரியாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடிய உயிரினங்களாக இவை இருக்கின்றன. இவற்றின் தோல் மிகவும் தடிப்பானது. 1.5 செ.மீற்றர் தொடக்கம் 5 மீற்றர் அளவு தடிப்பான தோலைக் காண்டாமிருகங்கள் கொண்டிருக்கின்றன.

காண்டாமிருகங்களின் கொம்புகள், உண்மையில் ஏனைய உயிரினங்களின் கொம்புகளை ஒத்தவை அல்ல. மூளைக்கும் இந்தக் கொம்புக்கும் ஆதாரம் ஏதும் இல்லாத நிலையிலும், மூளையிலிருந்து உண்டாகும் கெராற்றின் (Carotin) என அழைக்கப்படும், உரோமப் புரதம் அடங்கியதே இந்தக் கொம்பாகும். 24 தொடக்கம் 34 பற்கள் இவற்றுக்குண்டு.

ஒரு குட்டி பிறக்கும்போது அதன் எடை ஏறத்தாழ 25 கிலோவாக இருக்கும். தாய்க்கு இன்னொரு குட்டி பிறந்ததும், தாயையும் தனது கூட்டத்தையும் விட்டுவிலகும் குட்டி, தன் வயதொத்த காண்டாமிருகங்களுடன் இணைந்து கொள்கின்றது. புதிதாகப் பிறந்த பிள்ளைக்கு அம்மா காட்டும் பாசத்தில் தான் ஏன் பங்குகொள்ள வேண்டும் என முதற் பிள்ளை நினைக்கின்றதோ?! காட்டு விலங்குகளின் வாழ்க்கையே மகா விசித்திரமானதுதான்.

எந்த உயிரினத்தையும் இது கொன்று உண்ணுவதில்லை. இலைகுழைகள், புல் போன்றவைதான் இவற்றின் உணவு. இந்தத் தாவரஉண்ணியைப் பணவெறி பிடித்த மனிதன் ஈவிரக்கமின்றி கொன்றுகொண்டே வருகின்றான். உண்மையில் கொம்பேயில்லாத, கொம்பு போன்ற இந்த விலங்கின் ஒரு பகுதியை அறுத்து எடுப்பதற்காகப் பாவம், மிருகவதை நடக்கின்றது!

அழகான உயிரினங்களுடன் ஆண்டவன் படைத்த அவனியைச் சிதைப்பதிலேயே மனிதர் கூட்டம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்த வெறி தொடர்ந்தால், இறுதியில் காடுகள் எல்லாம் வெறும் மயானங்களாகி விடலாம். வெறிபிடித்த மனிதர்கள்தான் குறுக்கு நெடுக்காக அலைந்து கொண்டிருப்பார்கள்.

தப்பிப் பிழைக்குமா இந்த உயிரினங்கள் தரணியிலே???
__________________________________________________

*தொடக்கம் = முதல்.
**பற்றைகளில் = புதர்களில்
***சொண்டுகள் = தடித்த உதடுகள்.

About The Author