காணாமல் போனவன் (1)

மஞ்சரியின் குரல் காலை நாலு மணியிலிருந்தே கேட்க ஆரம்பித்துவிட்டது.

"எழுந்திருங்க… வேன்ல தூங்கிக்கலாம். இப்பவே மணி ஆயிருச்சு!"

"அம்மா… விடும்மா! நான் வரல" என்று சிணுங்கினாள் ராகவி.

"நானும் வரல" என்றான் பாபு.

‘நானும் வரல" என்றான் கணவன் ரமேஷ்.

"அவங்கதான் குழந்தைன்னா உங்களுக்கென்ன? எழுந்திருங்க!"

போர்வையைப் பிடுங்கினாள்.

"ஐயோ குளுருது!" என்று பாபுவின் போர்வைக்குள் ஒளிந்தான் ரமேஷ்.

பாபு அலறினான். "போப்பா… எங்கிட்டே வராதே! புசு புசுன்னு காதுல மூச்சு விடறே."

"அப்பாதானடா… ஏண்டா விரட்டற?" என்று ராகவி போர்வையை இறுக்கிக் கொண்டு கத்தினாள்.

"அப்போ உன் போர்வைக்குள்ள நீ வச்சுக்கோ!"

"அய்யய்ய… இதென்ன இப்ப எல்லாரும் எழுந்துக்கறீங்களா இல்லியா?"

வாசலில் வேன் ஹார்ன் சத்தம் கேட்டது.

"ஏய்… வேன் வந்தாச்சு!" மஞ்சரிக்குள் பதற்றம் அப்பிக் கொண்டது.

ரமேஷ் "கூல்… கூல்!" என்றான்.

"நான் வேணாம்னேன்… நீங்கதான் எல்லாரும் இன்னிக்குப் போகலாம்னு பிடிவாதம் பிடிச்சு வேன் புக் பண்ணீங்க. இப்ப நான் ரெடி ஆயிட்டேன்… நீங்க பிடிவாதம் பிடிக்கறீங்க!" மஞ்சரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். மூன்றுபேரும் அவள் அருகில் வந்து நின்றார்கள்.

"அம்மா… சும்மா கலாட்டாம்மா. நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்க. நாங்க அப்பவே ரெடி. உங்களை டிஸ்டர்ப் பண்ணாம போய் ரெடி ஆகிட்டு திருப்பி வந்து படுத்துட்டோம். சும்மா ஜாலிக்கு."

"இது உங்க வேலையா?" ரமேஷைப் பார்த்து முறைத்தாள்.

"ஐயோ நான் இல்ல… அவன்தான்" என்று பாபுவைக் காட்டினான்.

"நான் இல்லம்மா அவதான்" என்று அவன் ராகவியைக் காட்டினான்.

எல்லோரும் சிரிப்பில் மூழ்க, மஞ்சரிக்கு இனம் புரியாத ஆனந்தம்.

‘கடவுளே! எங்களை எப்பவும் இதே போல சந்தோஷமா வை!’ என்று மனதில் பிரார்த்தித்துக்கொண்டே ஒவ்வொரு பேக்கேஜாக வேனில் ஏற்ற, ரமேஷ் முன்னால் அமர… மஞ்சரியும் பிள்ளைகளும் பின்னால் அமர்ந்தார்கள்.

"ரொம்ப வருஷம் ஆன மாதிரி இருக்கு, இப்படி டூர் போய்!"

"ஏய்! இப்பதான் கொடைக்கானல் போயிட்டு வந்தோம்."

"அதுக்கு முன்னால பங்களூர் போனோமே… சித்தப்பா கல்யாணத்துக்கு?"

"ம்ம்… அதெல்லாம் நினைப்பிருக்கு. ஆனாலும், என்னவோ வீட்டுலயே அடைஞ்சு கிடக்கற மாதிரி ஒரு அவஸ்தை மனசுல."

"உனக்கு எப்பப் பாரு வெளியே சுத்தணும், அதானே?"

"டிபன் எங்கே சாப்பிடலாம்?"

"அதுக்குள்ள சாப்பிட அவசரம்!"

"மாமாக்கு போன் பண்ணியாச்சா… நாம கிளம்பிட்டோம்னு?"

"இப்ப மணி நாலரை. தூக்கத்துல இருப்பார்."

"ஜில்லுன்னு காத்து!"

சாலை… அவ்வப்போது விர்ரென்று கிராஸ் செய்த லாரி… கார் சத்தங்களினால் அதிர்ந்து அடங்கியது. ரமேஷ் டிரைவரிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான். ராகவி டேப்லட்டில் கேம் விளையாட, பாபு மஞ்சரி மேல் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். ஹ்ம்ம்… மூணு மணி நேரம் போகணும். மஞ்சரிக்கும் லேசாய்த் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.

இந்தப் பயணமே திடீர் ஏற்பாடுதான். அதுவும் ஒரு சின்னக் குழப்பத்தில். ரமேஷை விட ஜூனியர் ஒருவருக்குப் பதவி உயர்வு. அது அவன் மனதை உறுத்த… அதேபோல மஞ்சரிக்கும் ஏதாவது உடல் உபாதைகள்.

ஜோசிய நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். இவர்கள் புலம்பியது கேட்டு ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார்.

"உங்க குல தெய்வம் யாரு?"

சொன்னார்கள்.

"எப்ப கடைசியா போனீங்க?"

"ம்ம்… நாலு வருஷம் இருக்குமா?" ரமேஷ் மஞ்சரியைக் கேட்டான்.

"பானு கல்யாணத்தப்ப போனோமா?"

நண்பர் சொன்னார். "பரவாயில்ல ஞாபகம் வராட்டி. இப்ப போயிட்டு வாங்க! அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அப்போ."

அவர் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போக, இவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அடுத்த வாரம் இரண்டு நாட்கள் லீவு வருதே அப்ப போலாமா என்று பேசி, இதோ இன்று கிளம்பியாச்சு.

கார் குலுங்கி நின்றது. மஞ்சரி திடுக்கிட்டு விழித்தாள்.

"என்ன ஆச்சு?"

ரமேஷ் ‘ஒன்றுமில்லை’ என்பது போலக் கை காட்டினான். டிரைவர் இறங்கிப் போனார். கார் சாலையின் ஓரத்தில் நின்றது. ரமேஷ் இறங்கிச் சோம்பல் முறித்தான். இன்னும் வெளிச்சம் வரவில்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. ரமேஷ் கொஞ்ச தூரம் நடந்தான். மஞ்சரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் தூக்கம் கண்ணைச் சுழற்றியது மஞ்சரிக்கு. ஒரு நிமிடமோ இரு நிமிடமோதான் கண்ணை மூடியிருப்பாள். மறுபடி கண்களைத் திறந்தால்… எதிரே ரமேஷ் இல்லை!…

(தொடரும்)

About The Author