நீர்க்குமிழி வாழ்க்கையிலே
நிற்கும்வழி தெரியவிலே
நேர்வழியோ நீண்டதொரு கோடி – இதில்
நிம்மதி கண் டலைகின்றேன் தேடி
தாக்கும் வழி தான்உணர்ந்தும்
தப்பும்வழி அறியாமல்
தவிக்கும்வழி அர்ச்சுனர்கள் கோடி – எனில்
சாரதியைக் காணவிலை தேடி
போக்குவழி ஞானவழி
புனிதவழி காட்டுதற்குப்
போதிமரத் தோப்புகளோ கோடி – எனில்
புத்தனைத்தான் காணவிலை தேடி
தீர்க்கவழி இன்னதெனச்
செப்பிஉளம் செப்பனிடத்
தேக்குமரச் சிலுவைகளோ கோடி – இதில்
தேவனைத்தான் காணவிலை தேடி
மார்க்கவழி அறிவுரையும்
மாக்கவிதை பேச்சுரையும்
மைக்குவழி சொல்லமடம் கோடி – இனி
மைக்குவழி இல்லைஎங்கும் தேடி
வாழ்க்கைநெறிச் சொல்லரங்கு
வண்ணவண்ணக் கவிஅரங்கு
வார்த்துரைக்கத் துறவிகளோர் கோடி – அதை
மடுப்பவரைக் காணவிலை தேடி
பூக்குமொரு போதனைகள்
பொழுதெல்லாம் இலவசமாய்
போதிக்கும் பேர்கள் ஒரு கோடி – இதில்
பொன்னுளத்தைக் காணவிலை தேடி
நீர்க்குமிழி வாழ்க்கையிலே
நெருக்கல்மிகத் தாளவிலே
நிழல்மறைவில் குறுக்குவழி கோடி – இதில்
நின்று திளைப் பவர்கள்இங்கே கோடி
மரபுக் கவிதைகளைப் படிப்பதே அரிதாக இருக்கும் இந்நாளில். நல்ல சந்தமும் சிந்தனையும் கூடிய இந்தக் கவிதையைப் படிப்பது இனிமையாக இருக்கிறது.
மொழியின் அழகு அதை பயன்படுத்துவதில் தானோ? என்ற நீண்ட நாள் கேள்விக்கு ஒரு பதிலோ இந்த கவிதை… மகுடதீபனுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பயணம் தொடரட்டும்… தமிழ் பயணமும் தொடரட்டும்…
தமிழுக்கு அழகு சேர்க்கும் கவிதை, வாசிப்பதில் இனிமையும் உண்மையும் கலந்துள்ளது……
பார்த்தசாரதியும் புத்தரும் கர்த்தரும் மார்க்க வழிகாட்டியும் மகுடதீபனே நம்முள்ளே இருக்கின்றனர் நன்கு -அதைத் தேடி அடைவதே ஞானம் ! -அரிமா இளங்கண்ணன்
கன்னவில்லை