காட்டுக்குள்ளே திருவிழா (2)

ராஜா திருநெல்வேலிக்குக் குடிபெயர்வது சந்தியாவுக்கும் சந்தோஷமான விஷயம் என்பதால் காரியங்கள் துரிதமாய் நடந்தன. நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸில் போய் அப்பாவோடு திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியதுமே, வரவேற்க வந்திருந்த தாத்தாவிடம் குத்தாலம் குத்தாலம் என்று அனத்த ஆரம்பித்துவிட்டான் ராஜா.

ஸ்கூலில் அட்மிஷன் கிடைத்த பிறகு குற்றாலம் என்று சொல்லப்பட்டது. அட்மிஷன் கிடைத்ததற்கு அடுத்த நாளே திரும்பவும் அனத்தல். குளிப்பதற்கில்லையே குரங்கு பார்க்கத்தானே, அதற்கு மெதுவாய்ப் போகலாம். இப்போது ஸீஸன் டைம், ரொம்பக் கூட்டமாயிருக்கும், குரங்கெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கும் என்பது போன்ற சமாதானங்கள் ராஜாவிடம் எடுபடவில்லை. சனி ஞாயிறு வரை காத்திருக்கக்கூட அவனுக்குப் பொறுமையில்லை.

இந்தத் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தாவான குரங்கு, இந்தப் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியான குரங்கு, மனிதர்களெல்லாருக்குமே அப்பா அம்மாவான குரங்கு, தன்னைக் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போன குரங்கு, எல்லாவற்றையும் பார்க்க வேண்டும், உடனடியாய்ப் பார்க்க வேண்டும்.

வேறே வழில்லாமல், புதன் கிழமை அதிகாலை, தாத்தாவும் பாட்டியும் அவனைக் கூட்டிக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜங்ஷனிலிருந்த தென்காசிக்கு பஸ் ஏறினார்கள். தென்காசியிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக் கொண்டு குற்றாலம்.

ஐந்தருவிக்குப் பக்கத்தில், தாத்தாவுக்குப் பழக்கமான ஒரு பண்ணையாரின் பங்களாவில் காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. டிஃபன் சாப்பிட்டுவிட்டு, பிரயாணக் களைப்புத் தீர தாத்தாவும் பாட்டியும் நீட்டி நிமிர்த்திப் படுத்து விட்டார்கள்.

“வெயில் வந்த பெறவு குளிக்கப் போவலாம். அது வரக்யும் ராசா, நீ வாசல்ல ஒக்காந்து கொரங்கு பாத்துட்டிரு.”

ஆனால் ராஜாவுக்கு வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற மனநிலை இல்லை. திருநெல்வேலியிலிருந்து தாத்தா வாங்கிக் கொண்டு வந்திருந்த பழங்கள், பிஸ்கெட், சாந்தி ஸ்வீட்ஸ் ஹல்வா, பக்கோடா எல்லாவற்றையும் கூடையோடு எடுத்துக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு கேட்டைத் திறந்து கொண்டு வெளியே நடந்தான். இங்கொன்றும் அங்கொன்றுமாய்க் குரங்குகள் தரிசனந் தந்தன.

திருப்தியாயில்லை. நிறைய குரங்குகளை எதிர்கொள்ள வேண்டுமானால் காட்டுப் பாதையில் போக வேண்டும். இந்தப் பதார்த்தங்களையெல்லாம் அவற்றோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஜன நடமாட்டம் நிறைந்த பாதையிலிருந்து விலகி, ஜன நடமாட்டம் அறவே இல்லாத காட்டுப் பாதையில் தாவரங்களுக்குக்கூடே நடந்தான். மரங்களின் கிளைகளிலிருந்து பல ஜோடிக் கண்கள் ஆர்வமாய்ப் பார்க்கிறதை உணர்ந்தான், இவனையும், இவனுடைய கையிலிருந்த பதார்த்தக் கூடையையும். திருப்தியான ஓர் இடத்தில் நாப்கினை விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். கூடையிலிருந்த பதார்த்தங்களை எடுத்துப் பரப்பினான். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அடேங்கப்பா, எவ்ளோ பலகாரம்! எனக்கில்லியா ராஜா!”
காக்கி உடையணிந்த ஒரு காட்டிலாக்காக்காரர் சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
“ஹை! எம்ப் பேர் ஒங்களுக்கு எப்படித் தெரியும் அங்க்கிள்?”
“அட, ஒம்ப் பேர் ராஜாவா? ராஜா மாதிரிதான் இருக்க நீ. அல்வாப் பொட்டலம் வச்சிருக்கியே, அல்வான்னா எனக்கு ரொம்பப் புடிக்குமே!”
“எல்லாம் கொரங்குகளுக்குத்தான் அங்க்கிள். கொரங்கெல்லாம் எனக்கு ஃப்ரண்ஸ். கொரங்கு சாப்ட்டு மிச்சமிருந்தா ஒங்களுக்குத் தர்றேன், ஓக்கே அங்க்கிள்?”
“நிச்சயமா?”
“ப்ராமிஸ்.”

காட்டிலாக்காக்காரர் குனிந்து அவன் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டினார்.
“இதே பாதையில நேரா வந்தா ஃபாரஸ்ட் ஆஃபீஸ் இருக்கு. அங்கதான் நா இருப்பேன். உன் ஃப்ரண்ஸ் மிச்சம் வச்சாங்கன்னா அத எடுத்துட்டு அங்க வர்றியா? அங்க வந்து பரதன் அங்க்கிள்னு கேளு, என்ன?”

“ஓ, வர்றேன் அங்க்கிள்.”

கொரங்காவது மிச்சம் வக்யவாவது என்று திரும்பவும் சிரித்தபடி இவனை செல்லமாய்த் தட்டிக் கொடுத்துவிட்டு அவர் நகர்ந்தார்.

காக்கிச் சட்டை அகன்றதும் மற்ற விருந்தாளிகள் ஒவ்வொருவராய் ப்ரசன்னமானார்கள்.
அழகழகான குரங்குகள்.
அப்பாக் குரங்குகள், அம்மாக் குரங்குகள்,
பிள்ளைக் குரங்குகள், குட்டிக் குரங்குகள்…

அம்மாக் குரங்கொன்று, வயிற்றில் சுமந்த குட்டியோடு வந்திருந்தது. இப்படித்தான் இவனையும் ஒரு அம்மாக் குரங்கு சுமந்து வந்து தொட்டிலில் போட்டுவிட்டுப் போயிருக்கும்!

அந்த இனத்தின் மேலே ராஜாவுக்கு ஒரு பாசம் பிறந்தது. பழங்களையும் பதார்த்தங்களையும் இவன் நீட்ட, அந்தக் குரங்குகள் ஆச்சர்யமான கட்டுப்பாட்டுடன் ஒவ்வொன்றாய் வந்து இவனிடம் பெற்றுச் சென்று தின்றன. இவனுக்கும் அந்த வானர இனத்துக்கும் ஓர் அந்நியோன்னியம் ஏற்பட்டுவிட்ட நிலையில் அவை இவனை இன்னும் நெருங்கி வந்தன.

அந்த நேரத்தில் தான் அந்த அராஜகம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ வந்து விழுந்த வலையொன்று அந்தக் குரங்குக் கும்பலில் ஒரு பத்து பன்னிரண்டு குரங்குகளை லபக் கென்று கவ்விக் கொண்டது. தொடர்ந்து, நாலு முரட்டு உருவங்கள்.

“அள்ளுல பக்கிரி. நம்ம வேல இன்னிக்கி இவ்ளோ ஜல்தியா முடியும்னு நெனக்யவேயில்ல டேய்! இந்தச் சின்னப் பயலுக்குத்தான் டாங்ஸ் சொல்லணும். அள்ளு. அள்ளி, வண்டியில போடு. காக்கிச் சட்டக்காரன் எவனும் வாறதுக்கு முந்தி சிட்டாப் பறந்துரணும்.”

“இந்தக் கொரங்கயெல்லாம் வெளிநாட்ல எண்ண பண்ணுவான் அண்ணாச்சி?”

“கசாப்புப் போடுவான். அதெல்லாம் நமக்கென்னத்துக்கு டேய். ஒரு கொரங்குக்கு சொளையா ஐநூறு ரூவா தாறான். தூக்கு சனியன. பெறாண்டிரப் போவுது, கவனமாத் தூக்கு.”

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ராஜாவுக்குப் புரிந்தபோது உடம்பும் மனசும் பதைபதைத்தன.
சத்தமில்லாமல் ஒரு கடத்தல் ஜீப் வந்து சமீபத்தில் நின்று கொண்டிருந்தது. வலைக்குள்ளே குரங்குகளின் காச் பூச்சென்ற கூச்சல். குட்டியைச் சுமந்து வந்த தாய்க் குரங்குகூட மாட்டிக் கொண்டிருந்தது.

இந்த மிருகங்களிடமிருந்து குரங்குகளைக் காப்பாற்றியாக வேண்டுமென்கிற துடிப்பு ராஜாவிடம் எழுந்தது. ஓர் ஆக்ரோஷத்தோடு அந்த அரக்கர்களின் பாதையை வழிமறித்துக் கொண்டு நின்றான், ரெண்டு கைகளையும் விரித்துக் கொண்டு, கண்களில் கோபத்தோடு, குரலில் வேகத்தோடு.

“இந்தாங்க, இது எல்லாம் என்னோட கொரங்கு, என்னோட ஃப்ரண்ஸ். அத நீங்க புடிச்சிட்டுப் போக முடியாது. நா விடமாட்டேன்.”

மூன்று முரடர்கள் இவனை அலட்சியப்படுத்த, ஒருவன் மட்டும் உறுமினான்.
“இந்தா பார்ல, மருவாதியா இப்படியே ஓடிரு. இல்ல, ஒன்னையுந் தூக்கிட்டுப் போயிருவோம்.”

“இப்படியே ஓடிரு” என்ற மிரட்டல் வார்த்தைகள் ராஜாவுடைய மண்டையில் மின்னலடித்தன.

ஓடினான்.

காக்கிச் சட்டை…. பரதன் அங்க்கிள்….

காட்டிலாகா அலுவலகத்தை அடைந்து மூச்சிறைக்க இவன் நடந்ததைச் சொல்லி வாயை மூடும் முன்னாலேயே காக்கிப் பட்டாளம் பரபரப்படைந்து புறப்பட்டுவிட்டது. பரதன் அங்க்கிள் இவனை வாரியெடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

மரங்களுக்கும் பாறைகளுக்குமிடைய பாதையமைக்கத் திணறிக் கொண்டிருந்த கடத்தல் ஜீப் மடக்கப்பட்டது. குரங்குகள் விடுவிக்கப்பட்டன. விடுதலையடைந்த குரங்குகள் ராஜாவை நன்றியோடு பார்த்துவிட்டு மரங்களுக்குள்ளே மறைந்தன.

“இத்தன நாளா நமக்கு அல்வாக் குடுத்திட்டிருந்த களவாணிப் பயலுவ இந்தச் சின்னப் பையனால இன்னிக்கி மாட்டிக்கிட்டானுவப்பா.” வனத்துறை நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பரதன் அங்க்கிள் ராஜாவை உயரத்தூக்கிக் கன்னத்தில் முத்தம் பதித்தார். அவரிடமிருந்து விடுவித்துக் கொண்ட ராஜா, கீழே கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தையெடுத்து அவரிடம் நீட்டினான்.

“அங்க்கிள் ஒங்களுக்கு ஹல்வா. கொரங்கு மிச்சம் வச்சது.”

“அட, இத்தன நாளா இவனுங்க அல்வா தந்தானுங்க. இப்ப நீ அல்வா தர்றியா!”
எல்லாரும் சிரித்தார்கள்.

அந்த நாலு மிருகங்களைத் தவிர.

(குங்குமம், 04.06.2004)

About The Author

1 Comment

  1. mini

    கதை ஆரம்பித விதமும் முடிந்த விதமும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கு! கதையல சொல்ல வரது என்னனு தெரியல; ஆனாலும் கதை நல்லா இருகு!

Comments are closed.