காவியத்தின் பயன்
பாரத தேசம் வலியுறுத்தும் புருஷார்த்தங்கள் நான்கு: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்.
இலக்கியமோ, இசையோ, நடனமோ எதுவாக இருந்தாலும் சரி, அது இறைவனை அடைய வழி வகை செய்ய வேண்டும்; செய்யும் என்பது அறநூல்கள் நமக்குத் தரும் அறிவுரை, அன்புரை!
அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையின்படி வாழ்ந்து, பொருளை ஈட்டி, இன்பம் துய்த்தால், வீடுபேறு தானே வந்து எய்தும் என்ற அடிப்படையிலேயே திருவள்ளுவர் முப்பாலை வகுத்தார் போலும்!
இறைவனுடன் ஒன்றச் செய்யும் கவிதைகள்
முதல் காவியமான வால்மீகி ராமாயணத்தில், அதைப் படிப்பவர் தீர்க்க ஆயுள், செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் பெற்று முக்தியையும் அடைவர் என்று காவியத்தின் பயனாக இறுதியில் சொல்லப்படுகிறது.
ஒரு லக்ஷம் ஸ்லோகம் அடங்கிய வியாஸர் வகுத்த மஹாபாரதத்தைப் படிக்க முடியாதவர்கள், அதன் இறுதியில் வரும் பாரத ஸாவித்திரியில் உள்ள நான்கு ஸ்லோகங்களைச் சொன்னாலேயே பெரும் பேறு பெற்று பரப்ரஹ்மத்தை அடைவர் என்று வியாஸர் அருளியிருக்கிறார். அப்பர், ஞானசம்பந்தர் உள்ளிட்ட மகான்களின் பாடல்களிலும் கடைசியில், அவற்றைக் கூறுவதால் ஏற்படும் பயன்கள் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லாத அதிசய வேறுபாடு, இப்படிப் பலனைச் சொல்லி நம்மை ஊக்குவிப்பதுதான்! முக்கியமாக, இறைவனை இப்படி இலக்கியம் மூலம் அடைய முடிவதை வலியுறுத்துவதுதான்!
கவிஞனாகத் தகுதிகள்
காவியம் இயற்றப் புகும் ஒரு கவிஞன், சகல கலைகளிலும் வல்லவனாக இருக்க வேண்டும், மனிதனை உன்னதமான உயரத்திற்கு ஏற்ற வல்லவனாக இருக்க வேண்டும், ஒவ்வொரு சொல்லின் முழு அர்த்தத்தையும் அது தரும் பயனையும் அறிந்திருக்க வேண்டும் என்று இப்படி ஏராளமான தகுதிகளை யாப்பு நூல்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட கவிஞன் இயற்றும் காவியங்களை ரஸிப்பதும் ஒரு சிறந்த விஷயமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.
ரஸிகனாகத் தகுதி
ஒரு காவியத்தை அல்லது கவிதையை ரஸிக்க சஹ்ருதயனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. சஹ்ருதயன் என்றால், நல்ல இதயம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே ரஸிக்கவும், விமரிசிக்கவும் முடியும் என்பது அறிஞர்களின் துணிபு.
"அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்"
என்று மகாகவி பாரதியார் கூறுவதில் எத்தனை பொருள் பொதிந்துள்ளது! கவிஞன் எதை வலியுறுத்திக் கூறியுள்ளான் என்று அந்தக் கவியுள்ளத்தை அறிவதே கவிதை அல்லது காவியத்தைப் படிப்பதன் முக்கிய நோக்கம். கவிஞன் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறி விட மாட்டான். பல விஷயங்களை உள்ளடக்கி, சொல் சிக்கனத்தின் மூலம் பெரும் பொருளை உணரவைக்க முயல்வான். அணுவைத் துளைத்து ஏழ் கடலை அதற்குள் நுழைவிப்பான்! அதை அறிந்து ரஸிப்பதே தேர்ந்த ரஸிகனின் வேலை.
வார்த்தை ஜாலங்கள், சொல் அடுக்குகள், உவமைகள், அணி அலங்காரங்கள், ஓசை நயம் இவற்றை எல்லாம் ரஸித்து, அவற்றையும் தாண்டி உண்மைப் பொருளை அறிவது என்பது பெரிய காரியம்தானே!
கவிஞனும் ரஸிகனும்
கவி கரோதி காவ்யானி
ரஸம் ஞானானி பண்டித:
சுதாசுரத சாதுர்யம்
ஜாமாதா வெட்டி நோ பிதா;
என்ற ஸ்லோகம், அற்புதமாகக் கவிஞனையும் ரஸிகனையும் பற்றிக் கூறுகிறது.
இதன் பொருள் :- ஒரு கவிஞன், காவ்யத்தை இயற்றத்தான் முடியும். அதன் ரஸத்தை அறிந்தவனே அதை ரஸிக்க / விமரிசிக்க முடியும். எப்படி ஒரு தந்தை தன் பெண்ணின் சாதுர்யமான லீலைகளை அறிய முடியாதோ, அவளது லீலைகளை எப்படி அவனது மருமகன் மட்டுமே அறிய முடியுமோ அது போலத்தான் கவிஞனும் அவன் ரஸிகனும்!
எப்படி ஒரு அற்புதமான விளக்கத்தை இந்த ஸ்லோகம் தருகிறது, பாருங்கள்! படைப்பவன் கவிஞன். அந்தப் படைப்பை நன்கு அனுபவிப்பவன் ரஸிகன்!
இன்னொரு ஸ்லோகம், மூன்று மாநிலங்களின் பெண்களோடு கவிஞனின் வார்த்தைகள் மற்றும் பொருள் அமைப்பை ஒப்பிடுகிறது.
ஸ்லோகம் இதோ:-
அர்த்தோ கிராமபிதிதா: பிஹிதாஸ்ச கச்சித்
சௌபாக்யமேதி மாராஹட்டவதுகுசாபாஹா;
நோ கேரளிஸ்தன இவாதிதரம் பரகாசோ
நோ கூர்ஜரிஸ்தன இவத்தராம் நிகுதா:
ஒரு யுவதியின் அழகும் கவர்ச்சியும் அவள் மார்பகத்தில் வெளிப்படும், இல்லையா! அதை உவமையாகக் கொண்டு கவிஞனின் படைப்பு அமைய வேண்டிய விதத்தைக் கூற வருகிறார் ஒரு கவி!
ஒரு கவிஞன், வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தத்தில் பாதியையே வெளிப்படுத்துவான். பாதியை மறைத்து வைத்திருப்பான்! அதுவே மிக அழகு! எப்படி மஹராஷ்டிரத்தில் உள்ள பெண்கள் மார்பகங்களைப் பாதி மறைத்துப் பாதி வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்கள், அது அல்லவா அழகு! கேரளத்துப் பெண்கள் மார்பகங்களை முழுவதுமாக வெளிப்படுத்தி விடுகிறார்கள். அது அழகல்ல! அல்லது குஜராத் மங்கையர் முழுவதுமாகக் கச்சை இறுகக் கட்டி மறைக்கிறார்களே, அதுவும் அழகல்ல!
சொல்ல வந்ததை சிருங்கார ரஸம் ததும்பச் சொல்லி விட்டார் இந்தத் தனிப்பாடல் கவிஞர்.
காவியங்களில் சஞ்சரிப்பவள் சரஸ்வதி
கவிகளின் தெய்வமான சரஸ்வதியைப் "புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம்" – புராணங்கள், நாடகங்கள் மற்றும் மஹா காவியங்களில் சஞ்சரிப்பவள் அதாவது உள்ளுறைந்திருப்பவள் என்று சரஸ்வதி தியான ஸ்லோகம் கூறுகிறது.
காவியத்தில், இந்த உள்ளுறை தெய்வத்தை ஒரு சஹ்ருதயனே அறிய முடியும் என்பதே கவிதையை ரஸிக்க வருவோர் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை.
உலகம் போற்றும் ஒரே ஒரு கவிதை
இப்படி ஒரே ஒரு கவிதையை மட்டும் எடுத்து ரஸித்துப் பார்ப்போம் – உதாரணத்திற்காக!
மஹாகவி காளிதாஸன் இயற்றிய குமார சம்பவத்தில், ஐந்தாம் காண்ட த்தில் 24ஆவது செய்யுளாக அமைந்திருப்பது இது!
ஸ்தி²தா: க்ஷணம்’ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா: பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேத சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:
இதன் பொருள் இதுதான்:- மழையின் முதல் துளிகள் அவளது கண் இமைகளில் சிறிது தங்கின. பின்னர், அவள் மார்பகங்களில் சிதறின. பின்னர், இறங்கி அவள் வயிற்றுச் சதை மடிப்பு வரிகளில் தங்கின. வெகு நேரத்திற்குப் பின்னர், அவள் நாபிச் சுழியில் கலந்தன!
இதை, உலகெங்கும் உள்ள அறிஞர்கள் இன்று வரை புகழ்ந்து பாராட்டுகின்றனர். சம்ஸ்கிருதக் கவிதைகளைத் தொகுத்த டேனியல் ஹெச்.ஹெச். இங்கால்ஸ் இதன் புகழைச் சொல்லிச் சொல்லி உருகுகிறார்!
ஏராளமான கருத்துக்களைச் சிறு சிறு வார்த்தைகளின் சங்கமம் பிரவாகமாகக் கொண்டு வந்து தள்ளி நம்மைப் பிரமிக்க வைத்துப் பரவசப்படுத்துகிறது!
முதலில், ஒரு ராஜகுமாரி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாள். செல்வச் செழிப்பில் ஊறிய ஒரு அழகிய யுவதி தியானத்தில் இருப்பது மெல்லிய உணர்வுகளை நம்முள் எழுப்புகிறது. உலகிற்கெல்லாம் தேவி அவள்! அடடா! கீதை கூறும் யோக நிஷ்டையில் அல்லவா அவள் இருக்கிறாள்! நீர்த் திவலைகள் அவள் கண்களில் சிறிது தங்க வேண்டுமென்றால் அது நீண்டு அழகியதாய் வளைந்து இருக்க வேண்டும். துளிகள் மார்பகங்களில் சிதற வேண்டுமென்றால் அவை பெரிதாக இருக்க வேண்டும். அவை இரண்டும் திரண்டு உருண்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்க வேண்டும். (உத்தம அழகிகளின் லட்சணப்படி!) இல்லையேல் மழைத் துளிகள் மார்பகங்களின் இடைவெளி வழியே உருண்டோடி அல்லவா இருக்கும்! திரட்சியான மார்பகங்கள், திடமாக இருப்பவை என்பதை மழைத் துளிகள் தெறித்துச் சிதறியதால் உணர்கிறோம். அவை பின்னர் வயிற்றில், உத்தமப் பெண்களுக்கே அமைந்திருக்கும் மூன்று வயிற்று மடிப்புகளின் வழியாக இடுப்பு என்னும் ஏணியின் வழியே இறங்கி, நாபிக் கமலத்தை அடைந்து அந்தச் சுழியில் சங்கமிக்கின்றன!
என்ன அற்புதமான த்வனி அல்லது suggestion அல்லது ஏராளமான உட்பொருளைக் கொண்டுள்ள ஒரு செய்யுள் இது!
கவிகளுள் மஹாகவி காளிதாஸன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு செய்யுள் உலகளாவிய அளவில் எடுத்துக் காட்டப்பட்டு வருகிறது!
நல்ல கவிதைகளை நாடித் தேடி ரஸிப்போம்
ஒரு சஹ்ருதயனின் ரஸிகத் தன்மை வளர வேண்டுமெனில் இது போன்ற லட்சக்கணக்கான சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ்க் கவிதைகளைத் தேடிப் பாடி ரஸிக்க வேண்டும்.
உன்னதமான உணர்வுகளை மேம்படுத்தி, ரஸிகனை இது பிரபஞ்ச லயத்துடன் ஒன்றுபடுத்திவிடும், இல்லையா?!
“