அபயம் – அபயாம்பாள் எப்படி வந்து சேர்ந்தாள். இந்தப் பழம் பஞ்சாங்கத்திடம் சேர்ந்தது பொருத்தமற்றது. அவளுக்கேற்ற இடம் இதுவல்லவே!. கொஞ்சம் நெடுநெடு வளர்த்தி. இன்னதென்று விவரிக்க முடியாத உடல்வாகு. இதுதான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாத அழகு. நிறம்,, அலையும் கண்கள்…. சற்றே பூசினாற்போன்ற கன்னங்கள். வெறும் புளிச்ச பழையதும் நார்த்தங்காய் ஊறுகாய் அல்லது வத்தல் மிளகாயும்கூட இப்படியொரு வாளிப்பைக் கொண்டு தருமோ. தந்திருக்கிறது. இதுவென்ன விஞ்ஞானம்? இதுவென்ன ரசாயனம்?
காலைக் குளிரில் நனைந்த ஒரு காகம் தன் குரலிழந்து விசித்திரமாய்க் கரைந்தது.
“சவுந்தர்ய உபாச…”
செடிகொடி மரம் ஆகாயம் மிதக்கும் பறவைகள் குடுகுடுவென விரையும் மேகங்கள் எல்லாமே அழகுதான்!. பரவசம்தான்!. அழகு உயிர் தருவது. ஜீவனுக்கு முக்தி தருவது. எல்லாம் தருவது.
அபயம். அவள் அழகு தனி!. பேச்சு தனி – நடை தனி!; லேசாகத் தலையைச் சாய்த்து நோக்கும் நளினம் தனி!. பார்வையும் பரவசமும் சமுத்திரமெனில் சரி. காமம் செப்புகிறேனோ, கள்ளமோ, எதுவானாலும் என்னளவில் சரி என்னளவில் நியாயம். என்னளவில் சத்தியம்; உயிர்ப்பு –
இதுமாதிரி சமயங்களில் காளி மாதிரி உக்கிரப் பார்வையோடு என் கிழவி ஊடுருவிக் கொல்லுவாள். என் தவத்தை இரக்கமின்றி கலைப்பாள். பொறாமையோ… பாலம் என்கின்ற பாலாம்பாள். ‘சொல் கிழவி’.
“தாத்தா உடம்புக்கு என்ன! ஒருமாதிரி இருக்கீங்க. பாட்டி கவனிக்கிறதில்லையா. கோயில் குளம் ஆசாரம் மடி விரதம்னு சுத்திச்சுத்தி என்ன ஆகப்போறது. வியாதிதான் மிச்சம்” பாலாம்பாள் கிழவி காதில் வாங்கிக் கொள்வாளோ, அபயத்தின் சொற்களை – ராகுகால காளி –
‘தாத்தா’ – வெறும் சம்பிரதாய விளிப்புதான். என்னளவில் அர்த்தமற்றது. அதுவும் அபயத்தின் வாயிலிருந்து வரும்போது அர்த்தமற்று சக்கையாய் வருவதுதான் சரி. மரபு – ஆகவே இயல்பானது என்றாலும் அடிக்கடிச் சொல்லி வருத்தாதே. பிடித்தமற்ற சொற்கள் வருத்தம் தருவன. வருத்தாதே –
உப்பில்லாத கேழ்வரகுக் கஞ்சியை சூடு பதத்திற்கு ஆற்றி ஆற்றி அந்தக் கைகளசைவில் தோளசைவில் – தலையிலிருந்து பிரிந்து சட்டென விழும் ஒரு கற்றை மயிர் முகத்தில் நீண்டு விளையாட முழங்கையால் அவசரமாய் ஒதுக்கிவிட்டுக் கொண்டு அல்லது தேர்ந்த சர்க்கஸ்காரி போல் தலையைச் சிலுப்பி பின்னுக்குத்தள்ளி, “கஞ்சி இதமா இருக்கோ. பாவம் வெறும் வயிற்றோட எத்தனை நாழி அல்லாடுவேள், வயசான காலத்தில். கோயிலுக்குப் போனா எத்தனை நாழி பாட்டிக்கு. ரொம்ப பசிச்சுதா.”
“ஆ…ம்…மா…ம்”
அபயம் போன பின்னரும் ஒரு சுகந்தம் அறை முழுதும். முடிந்த வரை நுகர்ந்து மனசுக்குள் ஏற்றி புளகித்து – மோகித்து – வாழ்க்கை ரம்மியமானது. துன்பங்களற்றது. பாரிஜாதம் கமழும் பொழுதுகளைக் கொண்டது.
நாற்பத்தைந்து வருஷம். பிரமாதமா சிலம்பம் சுற்றி தண்டால் பஸ்கி பண்ணி காவிரியில் மணிக்கணக்காய் நீந்தி புஜபலம் ஏற்றி பராக்கிரமம் குறித்து கர்வக் குரலெழுப்பி… எல்லாம் எதற்காக? பாலம் சொல்லுவாள் நறுக்கென்று. நுனி நாக்கில் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் மிகச் சரியாய் சுடுவதற்காக –
“ஆள்வதற்காய் – வாய்ப்பிரதாபத்தை கார்யத்தில் காட்டுவதற்காய். இதெல்லாம் ஒரு தோது. கேவலம், மகா கேவலம்” கண்களால் கொல்லும் வித்தை தெரிந்தவள் பாலம்.
கிழவியிட்ட சாபமோ!. சர்க்கரை பாதத்திலிருந்து தலைவரை ஏறிப்போச்சு. அழுத்தம் உச்சத்தைத் தாண்டியாச்சு. முழங்கால் மூட்டு உடைஞ்சு நொறுங்கினது மாதிரி பிராணன் போகும் வலி. தினம் ஒரு பொட்டுக்கூடை மாத்திரைகளோடு ஜீவிதம்.
– இந்த லட்சணத்தில் இத்தனை ஆட்டம் –
‘எல்லாவற்றையும் விட்டுத் தொலைச்சுடலாமா – இந்த நினைப்பு ஸ்திரப்படுவதற்குள் இன்னும் இருந்தாகணுனும்கற ஆசையைத் தூண்டிவிட ஒண்ணொன்றாய் வந்து சேர்றது அபயம் மாதிரி’.
காமாக்னி அணையாது. ஏதாவதொரு நேரத்தில் அணைந்தாற்போல் தோன்றினாலும் அடுத்த க்ஷணம் பூத்த சாம்பலைக் கிளறினது மாதிரி ஜ்வாலையாய் மேலெழும்பி –
– சரோஜா –
– பாக்யலட்சுமி –
– தனபாக்யம் – என ஒரு நீள் வரிசை. முரண்டு பிடித்தலும் அறம் பேசுதலும் ஆளுமையில் அடங்கிப்போதலும் சகஜமாய் – ஒரு வகையில் இதமும் பலமும் முரட்டுத்தனமும் தேர்ந்தெடுத்த சொற்களும் ஆன ஒருவித கலவையான அனுபவம் வேண்டியிருக்கிறது இதுகளுக்கு. இதில் என் பங்கு குற்றம் என்ன? பாலம் புரிந்து கொள்ள வேண்டும். பணமும் அதிகாரமும் தந்த மிரட்சியில் வாய் மூடி மறைவாக மெல்லிய குரலில் கிசுகிசுப்பவர்களும் புரிந்து கொண்ட நிஜம்தானே இது?
‘பெண்டாட்டி இல்லாதவன் வைதீக காரியங்களைச் செய்து வைக்க சாஸ்திரத்தில் இடமில்லையாம். எதில் சொல்லி யிருக்குன்னு தெரியலே. வயசாயிட்டாலும் வைதீகர்கள் சிலருக்கு இந்த சாஸ்திரம் வசதி. தர்ம நியாயங்களுக்குள் உட்படற சவுகரியம். வரகூர் கனபாடிகளைச் சொல்லி குத்தமில்லே. நாலு வேதம், சாஸ்திரம், அபரக்ரியைகள் மர்ஜன மந்திரங்கள் எல்லாத்திலேயும் அத்துபடி. காஞ்சீபுரம் பெனாரஸ் என்று ஏகப்பட்ட ஊர்கள்ளே வித்வ ஸதஸுக்குப் போய் சன்மானமும் சன்னத்தும் வாங்கிண்டு வந்திருக்கான். ‘ஹிண்டு’விலேகூட போட்டோவோட போட்டிருந்தான். சாஸ்திர சம்பிரதாயங்கள்ளே ஏதேனும் சர்ச்சை, சந்தேகம்னா கூப்பிடு வரகூர் கனபாடிகளைன்னு ஸ்ரீமடத்திலேருந்து அழைப்பு வந்துடும். எல்லாம் விரல் நுனியில் –
இப்ப இன்னும் மவுஸ் கூடிப்போச்சு. ஜனங்கள் பேய் புடிச்ச மாதிரி கோயில் கோயிலா அலைய ஆரம்பிச்சாச்சு. சண்டிஹோமம் ம்ருத்யுஞ்ச ஹோமம் என்று எதைச் சொன்னாலும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லேங்கறா. ரெண்டு வாழைக்காய்க்கும் பிடி துவரம்பருப்புக்கும் கால்படி அரிசிக்கும் அல்லாடற பொழப்பு போய் மழை கொட்டோ கொட்டுனு கொட்றது!. அமாவாசை தர்பணத்திற்கு டூ வீலரில் வரா. கார்லே வரா. டெலிபோன் செல்போன்னு அமர்க்களம். சீமந்தம் கல்யாணம் சிரார்த்தம்னா வியாபாரம் மாதிரி கச்சிதமா ரேட் பேசியாறது. நீர்க்காவி வேஷ்டியும் எண்ணெய்க் கறை உத்ரீயமும் காணாம போச்சு. சாஸ்திரிகள் கிடைக்கிற தேதியிலேதான் நிச்சியதார்த்தம், கல்யாணம், வளைகாப்பு, சீமந்தம் ஷஷ்டிட்யப்த்த பூர்த்தி, சதாபிஷேகம் சாந்தின்னு ஆகிப்போச்சு… வரகூர் கனபாடிகளுக்கு எல்லாமே ஓஹோன்னு வாய்ச்சதிலே ஆச்சரியமில்லே. நல்ல வாசிப்பு. அதற்கான கவுரவம் சரிதான்.
மாயவரம் ராஜகோபாலபுரம் சுப்ரமண்ய சாஸ்திரியிடம் அத்யானம். குருகுல வித்வாம்சம். குருவோட தாத்தா அச்சுதப்பநாயக்கன் காலத்திலே ஏக பிரராபல்யம். கோவிந்த தீட்சதரோட ஆப்த சினேகிதம் வேற. தேதியூர் திருவிசலூர்னு ஏகப்பட்ட கிராமங்களை பிரம்மதேசமா பட்டா போட்டுக் கொடுத்தாராம். பெற்ற வித்தையைப் பெண்டாட்டி போய்விட்டாங்கறதுதக்காக விட்டுட முடியுமோ மறந்துட முடியுமோ?.
நாலு நாள் மாயமா எங்கோ போயிருந்தான். அஞ்சாவது நாள் திரும்பி வந்தான்.
“மாமா இவளை ரெண்டாம்தாரமா கல்யாணம் பண்ப்ணணிண்டேன் எல்லாருக்கும் சொல்லிச் செய்யணுனும்னுதான் நெனச்சேன். லட்ஜையா இருந்துது. இந்த வயசிலே இதெல்லாம் எதுக்குடான்னு கோவிச்சுப்பேளே. ருக்கு மாதிரியே அடக்கம், பதிவிசு – அவளையே உரிச்சு வச்ச மாதிரி….
அபயம் பின்னால் ஒடுங்கிக் கொண்டு – இதற்கு சம்மதம் அல்லது அல்ல என்ற எந்த பதிலும் சமிக்ஞையுமற்று – நீளக் கண்கள் வானம் நோக்கி – எனக்கேன் படபடப்பு – எனக்கேன் பரபரப்பு.
“செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் அப்பும்… களப… அணி திரள…”
– அபயம் –
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையாள்…”
எல்லாமாகி என்னை ஆட்கொண்டனையாள்.
– அபயம் –
கிழவி தலையில் அடித்துக் கொள்கிறாள். நவீன சீத்தலை சாத்தினியோ. “வயசாக வயசாக உங்க புத்தி கோணலாயிண்டே வரது. அப்படியென்ன வக்கிரமாய் பார்வை. மகா கேவலமாயிருக்கு. நாக்கைப் புடுங்கிண்டு சாகலாம் போலிருக்கு…”
– செய்.
“பிரமோதூத ப்ரோஜோத்பத்திய… ஆங்கீரஸ…ஸ்ரீமுக… பவ… யுவ… தாது… வெகுதான்ய… கணக்கு சரியோ… இப்ப தாரண வருஷம். இது முடிஞ்சா எழுபத்தி மூணு… புத்தி மட்டும்.”
“ஆசீர்வாதம் பண்ணுங்கோ…”
“பாட்டி கொஞ்சம் இஞ்சி இருக்குமா. இவருக்கு வயத்திலே உபாதை. அடிக்கடி படுத்தறது. கஷாயம் போடணுனும்.”
“போற இடத்திலே நெய்யை வழிச்சு முழுங்கறது. பாயசத்தை அண்டாவோட குடிக்கறது. வயசான காலத்திலே ஒத்துக்குமோ. நீ சொல்ல வேண்டாமோ. ஏற்கனவே பாரி உடம்பு வேற…”
அபயம் நெளிந்தாள். அவசரமாய் மார்புச் சேலையைச் சரி செய்து கொண்டாள். முகத்தில் கவிழ்ந்த லேசான வெட்கம். அதுவே தனி சோபை – ஜ்வலிப்பு.
கண்களின் வழியாக எதை வாங்கி உட்கொள்கிறேன்.
“ச்சீய்ய்…”
“என்னடி இது. என் வயசென்ன. உன் சந்தேக புத்தி உன்னை விட்டுப் போகாது.”
“உங்களுக்கா. வயசா.”
சுளீரென விசிறும் சாட்டை!.
இடுப்பிலேயே சொருகி வச்சிருப்பாளோ ஏகப்பட்ட சாட்டைகளை. நினைச்ச நேரத்திலே நினைச்ச க்ஷணத்திலே எடுத்து சுளீர் சுளீர்னு வீசி….
ஆரம்பத்திலே ரணமாக ரத்தம் வழிந்து ஆறி முரடு தட்டி… மரத்துப்போய். இப்போ சகஜமானது புரியுமோ?.
எப்போதும் உள்ளுக்குள் அலையும் என் பசியை அறியாதவளா பாலாம்பா… சண்டாளி.
மூத்தவளுக்கு கல்யாணமானபோது பாலத்திற்கு வயசு முப்பத்தி ஒன்பதுகூட இருக்காது. அடுத்த வருஷமே பேத்தி. நாடகத்திலே வேஷம் கலைக்கறது மாதிரி… தலை பின்னிக்கறதை விட்டாச்சு. மூஞ்சி அலம்பறதை விட்டாச்சு. கண்ணாடி பார்க்கும் பழக்கம் மறந்து, புடவையை காமா சோமா வெனக் கட்டிக் கொண்டு ஈரக் கையை தலைப்பில் துடைத்துக் கொண்டு சட்டென்று காலத்திற்கு முந்திய முதுமைக்கு ஆசைப்பட்டு, ஏற்று எட்டிப்பிடித்து –
– என்னளவில் இதைவிடக் கொடுமை வேறென்ன?
நான் ரசக்ஞன் – ரசிகன். காலத்தைப் பின்னுக்கு உதைப்பவன். மிச்ச முடியைக் கருப்பாக்கி ஏதேதோ சாகசங்கள் செய்து முன்பின் வழுக்கைகளை மறைத்து ஜாலம் செய்து –
“ஒருநா சவரம் செய்துக்கலேன்னா உங்க சாயம் வெளுத்துடும். இதென்ன விவஸ்தையில்லாம.”
“பாவமற்ற அப்படியில்லாத – தடைகளில்லாத – தீமைகளற்ற நான்…”
நீங்க சொல்ல வேண்டாம். உங்க வாயிலேருந்து வர ஸ்லோகங்கள் தீட்டுபட்டுவிடும். அசிங்கமாயிடும். உங்க வாய் – மனசு என பஞ்சேந்திரியங்களும் வக்கிரம் பிடிச்சது.
பாலாம்பாள் தலை தோளுக்கு இறங்கி சட்டென ஓர் இடி, நக்கலா – “போய்யா உம்மைத் தெரியும் அறுபது வருஷமா.”
“என்னடி தெரியும்.”
“என்ன நீங்க. ரொம்ப மோசம். எனக்குப் பிடிக்கலே” என ஒவ்வொன்றும் முரண்டு பிடித்தது போல நடந்தாலும் பணிதல் கடமை என புடவை அவிழ்த்து நின்றபோது – வியர்வை வழியப் புரண்ட போது – பீறிடும் பிரவாகமாய் அற்புதமாய் அனைத்தும் சேர்ந்தாற்போல் – வாழ்வின் அர்த்தம் இதுவெனப் புரிகிறது. திகட்டல் இல்லே.
சாதிகளற்ற தடைகளற்ற வர்ணங்களற்ற பேதங்களற்ற எல்லா விஷயமும் அற்புதமே. ஹே… அபயம்…
ஞாபகமிருக்கிறது. மூத்தவளை பிரசவம் பார்த்து தாயும் சேயுமாய் பத்திரமாய் கொண்டு விடப் போன பாலம் சொன்ன நாளுக்கு முன்னே வருவாளோ. அதுவும் உச்சி வெயிலில் மண்டை தகிக்கிற வேளையில் –
– கதவைத் தட்டிய போது –
வாரிச் சுருட்டிக் கொண்டு புடவையை அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு பெரிய குழந்தையாய் கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு ஓடிய ரங்கத்தை கதவிடுக்கு வழியாகப் பார்த்திருக்க வேணும். பார்க்கா விட்டால்தான் என்ன? என்னை, என்னைவிட அவளுக்குத் தெரியும்.
சற்றே இறங்கிய சிவந்த ஸ்தனங்களும் – சரிந்த தோள்களும் சங்குக் கழுத்தும் கடைந்தெடுத்த கால்களும் லேசான வேர்வை கலந்த மல்லிகை வாசனையும் – புருஷன் செத்துப்போன பிறகும் உனக்கெதற்கு இத்தனை அழகு. யாரை அலைக்கழிக்க யாரை ஆற்றுப்படுத்த. “அப்படியே கிடடி சித்த நாழி சித்த நாழி… கெஞ்சுதலிலும் கர்வம்தான்; மேன்மைதான். லயம் கலைக்கலாமோ. மூழ்கியாச்சு முத்தெடுக்க வேண்டாமோ. கிடக்கிறாள் கிழவி. எத்தனை நாட்களாய் அமுங்கிக் கிடந்த ருசி. அறிந்த பின்னும் விலகுதல் பாவம். உண்மையில் இந்தக் கூடல் ஒரு யக்ஞம். பூர்ணம் நோக்கிய பயணம். போகத்திற்கேற்றது எல்லாம்தான். கண்களும் தலையும் அக்குளும் கைகளும் முதுகும் எல்லாம்தான் என்ற என் வேகம் உனக்குப் பிடித்ததோ ரங்கம். பின் யாருக்குப் பயந்து இந்த ஓட்டம். இந்த நேரத்தில் இது ஒன்றுதான் அறம். தர்மம்.
கிழவி பேசாதது எப்போதுமே வதைதான். ரெண்டு நாள் வதை. மூணாம் நாள் கேட்டாள். “விவஸ்தையே இல்லையா உமக்கு. நரகம்தான். நரகத்தின் கதவு திறந்தே கிடக்கு பிராமணா உனக்காக அகலமாக.”
“ட்டீ போடீ – இந்திரனுக்குத் திறந்திருந்தது ஒன்றல்ல இரண்டல்ல. லட்சத்திற்குமேல் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தேதான் இருந்தன. நரகத்திற்குப் போனதாக சாட்சியங்கள் இல்லை.”
அபயம் – ஹிரண்மயீம். பொன்னிறமானவளே, ஸுவர்ணாம். ஹேமமாலினீம்… கர்ணீம்… அபயம் – அபயம் இத்தனை அலட்சியமும் விலகலும் கூட அழகுதான். நெருக்கத்திற்கான ஒரு செயலாகலாம். ஆகணுனும்.
விடியற்காலை நாலு மணிக்கே விழிப்பு வந்துடறது. ஜென்னல் வழியாகப் பார்த்தபோது, இது அனிச்சைச் செயல் அன்றாட கடமை. பனிப்புகைக்குள் பளிச்சிடும் முகம். விழுந்து விழுந்து வாசற்கோலம் போடும் அபயம். வாராத மயிற்கற்றை அடம்பிடிக்கும் குழந்தையாய் தோளில் விழுந்து இம்சிக்க – கலையாத தூக்கக் கிறக்கம்…
“இந்த ஏரியாவிலேயே போதாயனம் பண்ணி வக்கற ஒரே ஆசாமி நான்தான் என அடிக்கடி ஜெம்பமடித்துக் கொள்ளும் வரகூர் கனபாடிகளே – என்றாவது அபயத்திற்கு ஒரு முழப் பூ வாங்கிக் கொடுத்திருப்பாயா. சிருங்காரமாய் நிமிர்ந்து பார்த்திருப்பாயா. அந்த சவுந்தர்யத்தை உபாசனை பண்ணி துளி உண்டு களித்திருப்பாயா… பாபி… பாபி… மகா பாபி…
யாரு பாபி. நீங்கதான்.” பாலாம்பாள் கத்திக் கொண்டிருப்பாள். திட்டித் தீர்ப்பதன் மூலம் எனக்கு வேலியா. முடியுமோ புரியுமோ. ஒரு சவுந்தர்ய உபாசகனுக்கு எது அவசரமாய் வேணும் என்று புரியுமோ. முதுமை வேஷங்கட்ட ஆரம்பித்த பின்னும்கூட மனசின் இறுக்கத்தை உடைத்துக் கொண்டு நெருங்கினால் உடம்பு முழுதும் பெருங்காய வாசனை. மோர் தயிர் எனக் கலவையாய் சாம்பார் வாசனை. உனக்குப் புரியுமோ கிழவி.
அபயம். குளிர் இரவு தகிக்கும் விசித்திரம்.
உஷை தேவியே! இருண்டதும் எங்கும் பரந்தும் எல்லாவற்றையும் மறைக்க வல்லதுமான காரிருள் அணுகியுள்ளது. அது என்னை அணுகாமலிருக்கச் செய். என்னை இருளிலிருந்து விடுவிப்பாய்.
மறுக்கிறது மனசு எந்த நீதியையும் தாண்டியது என் மனசு-
அபயம் – இரவின் தேவி விட்டு விலகும் முன் நமக்கு அருளட்டும். பறவைகள் மரத்திலுள்ள கூடுகளுக்குத் திரும்புவதுபோல் அவளுடைய வரவின் காரணமாக கதன குதூகலம் இழையட்டும்.
– எல்லையற்ற ரம்மியம் முகமன் கூறுவதுபோல இதுவரையறியாத சுகந்தம் பரவி ரக்ஷிக்கட்டும்.
– வெள்ளைச் சிறகுகள் இருட்டைக் கிழித்துக் கொண்டு பறந்தென் தோளில் உட்கார்ந்து உராயும் மென் வருடலில் – எல்லாம் தடையின்றி நடக்கட்டும்.
– மெல்ல நடந்து அருகில் உட்கார்ந்து புடவைத் தலைப்பால் நெற்றி துடைத்து -– ‘பாவம் தவியாய்த் தவிக்கிறேளே’ -– ‘விட்டுடுவேனா’ – என லட்ஜை விலக்கி சிரித்து உடம்பை உடம்போடு இழைத்து – அபயம்.
– எனத் தினமும் காணும் கனாப் பொழுதுகள் நிஜமாகட்டும்.
– இதற்கான சமிக்ஞைகள் தூரத்திலிருந்தாலும் வேளை நிச்சயம் செய்யப்பட்டு விட்டதெனப் புரிகிறது அபயம் –
“பாட்டீ உடம்பு லேசாச் சுடறது. தலை கனக்கிறது. என்னவோ பண்றது. இவர் வேற இல்லே.”
“இல்…லை…யா…!”
காளி மாதிரி பாலம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, நெஞ்சைப் பிளந்து ரத்தம் குடித்து சம்காரம் செய்யும் ஆவேசத்தோடு – கிழவி நீ என்ன பயங்காட்டினாலும் பயப்படுவதாயில்லை. உன் ரவுத்திரம் என்ன செய்யும்! என் நிதானமான அடிகள் எதைச் சென்றடையும் எனத் தெரியாதோ. எல்லாமே வெகு சீக்கிரம் வெகு கிட்டத்தில்.
“போற காலத்தில் கவுரவமாய்ப் போய்ச் சேரணுனும் படுக்கையிலே விழுந்து வருஷக் கணக்கா நாறி அடுத்தவாளை இம்சை பண்ணி… ச்சேன்னு ஆயிடப்படாது…”
இப்படியெல்லாம் எனக்கு நடக்கணுனும்னு ஆசைப்படறே. இதுதான் பதி விரதை தர்மமோ… ஹே… ஹே…. ஹே….
– “வாங்கோ அய்யோ ஓடிவாங்கோ. என்னன்னு தெரியலே. தலையைச் சுத்தறதுன்னா பொத்துனு ஊஞ்சல்லேருந்து விழுந்துட்டா… பேச்சில்லே… மூச்சில்லே… பய…மா… இருக்கே… அபயம் அபயம்….”
வேஷ்டி நழுவ இடுப்புத் துண்டு எட்டிப்போய் விழ வியர்வை ஆறாய் வழிய ஓடி வந்து சேதி சொன்ன கனபாடிகளைத் தள்ளிவிட்டு ஒரே பாய்ச்சலாக உள்ளே போனபோது கூடத்துத் தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தாள் பளிங்குச் சிலை இளைப்பாறுவதைப் போல.
ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு. என்ன விபரீதம்…”
“புரியலையே… அபயம்…. அபயம்… அவயாம்பா…”
“தள்ளு… எல்லோரும் தள்ளி நில்லுங்கோ…”
“அபயம்… என்னாச்சு உனக்கு…”
நெற்றியில் கைவைத்து அழுத்தி – அதன் ஜில்லிப்பு –
கழுத்தில் கைவைத்து –
மார்புச் சேலை விலக்கி அழுத்தி மெல்ல வருடி –
அபயமா – தென்றலா –
மார்பையும் தாண்டி இன்னும் கீழே அவசரமாய்த் தடவி – சிலிர்ப்பு உணர்ந்து –
வயிற்றில் – துடையில் – பாதங்களில் தேய்த்து –
மெல்லப் புரட்டி வாளிப்பான இடுப்பில் அழுத்தமாய்க் கிள்ளிப் பார்த்தபோது ஜில்லிட்டிருந்தாள் –
– அபயம் –
“போயிட்டியே… அபயம்…. அ…வ…யாம்பா…. விட்டுட்டுப் போயிட்டியே….”
கலவையாய் அழுகுரல்கள் –
அபயம் – மீண்டும் கன்னங்களை வருடி. உலுக்கி –
பரபரத்துக் கொண்டிருந்த என் கைகளை மூர்க்கமாய்த் தள்ளிவிடுவது யார். யாரது?
“போங்க அந்தண்டை…”
உக்கிர காளியாய் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ரத்தம் குடிக்கும் ஆவேசத்தோடு – கிழவி – பாலம்.
ஊஞ்சல் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தது.
விரகத்தின் சூட்சுமம் அறிந்த காற்றின் நழுவலில் உயிர்த்துச் சிலிர்த்தபடி வெகுநேரம் ஆடிக் கொண்டிருந்தது ஊஞ்சல்.