மனிதன் இயந்திரம் போல இயங்கிக் கொண்டே இருக்கின்றான். தேவைகள் அதிகமாகிக் கொண்டே போவதால், அவன் மேன்மேலும் சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றான். இந்த நிலையில் இடையிடேயே அவனுக்கு ஓய்வும், களியாட்டமும், கலகலப்பும் தேவைப்படுகின்றன.
வெளிநாட்டுப் பயணங்களை விடப் பன்மடங்கு குதூகலத்தை வழங்கக்கூடிய பல களியாட்ட விழாக்கள் எல்லா நாடுகளிலும் பெருமளவில் உண்டு. குறிப்பாக, கிறித்துவ தபசு காலத்தை ஒட்டிய நாட்களில் உலக நாடுகள் பலவற்றில் களியாட்ட விழாக்கள் (celebrations) நடைபெற்று வருகின்றன.
இந்த விழாக்களில், சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் வருடாவருடம் பிரம்மாண்டமான அளவில் நடந்தேறும் களியாட்ட விழா பற்றி இங்கே முதலில் சொல்ல வேண்டும். காரணம், வருடக் கணக்காக இதை நேரில் பார்ப்பதால், அதைப் பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல முடிகின்றது.
மற்றைய நாடுகளில் அனேகமாகக் களியாட்ட விழாக்கள் முடிந்த பின்புதான் இங்கே இந்த 3 நாள் விழா ஆரம்பிக்கின்றது. விழாவின்போது இங்கே வீசப்படும் கடுதாசித் (Paper) துகள்கள் பல தொன் (ton) எடை கொண்டவையாக இருப்பது சுவாரசியமான விதயம். இந்த வருடம் (2014) மார்ச் 10, 11, 12ஆம் திகதிகளில் இந்த விழா நடைபெற்றது.
கிறித்தவர்களின் தபசு காலத்தில் வரும் விபூதிப் புதனைத் (Ash Wednesday) தொடர்ந்து வரும் திங்களன்று இந்த விழா ஆரம்பமாகின்றது. திங்கள் விடிகாலை, பாசல் நகரின் மையப்புறத்திலுள்ள எல்லாத் தெரு விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கும். கடிகாரம் விடிகாலை நான்கைப் பிடிக்கும்போது குழல் ஊதுபவர்களும் மேளம் அடிப்பவர்களுமாக, முகமூடிகள், வித்தியாசமான ஆடைகள், மரத்தாலான பெரிய காலணிகள் அணிந்தவர்களாக, பல குழுவினர் நகரின் இருட்டான ஒடுக்கமான தெருக்கள் ஊடாகத் தமது அணிவகுப்பை ஆரம்பிப்பார்கள். இந்தக் களியாட்ட விழாவுக்கே உரிய இசை பலமாக ஒலிக்க ஆரம்பிக்கும். நல்ல இருளாக இருப்பதால், ஒவ்வொரு குழுவும் தமது தலைப்பகுதியில் சிறிய விளக்குகளைப் பொருத்திக்கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருவார்கள்.
மூன்று மீற்றருக்கும் அதிகமாக நீண்ட கழிகளில் விளக்குள்ள சதுரப் பெட்டிகளைப் பொருத்தியிருப்பார்கள். இவற்றில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய அரசியல் கேலிச் சித்திரங்களும், சுருக்கமான விவரங்களும் இருக்கும். அரசியல், விளையாட்டு என்று எதுவுமே விதிவிலக்கில்லை. இருண்ட தெருக்களில் இவர்கள் நடந்து செல்லும்போது இவற்றைத் தெளிவாகப் பார்க்க, வாசிக்க முடியும். இங்குள்ள பேச்சு வழக்கில்தான் இவை எழுதப்பட்டிருக்கும் என்பதால் சுலபமாக மற்றையவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
இது காலையில் நடப்பது.
மதிய வேளைக்குப் பின்பு திரளாகக் கூட்டம் அலைமோத, நகரத் தெருக்களில் குழுக் குழுவாக இவர்கள் பவனி வருவார்கள். தொடர்வண்டிச் சேவைகள் பாசல் நகர மையப்புற எல்லையில் நிறுத்தப்பட்டு விடும். பவனியில் குழுக் குழுவாக வரும் எல்லோருமே முகமூடி அணிந்திருப்பார்கள். இவர்கள் இப்படிச் செல்லும்போது வழிநெடுகே பழங்கள், இனிப்பு வகையறாக்கள், பொம்மைகள், பியர் டின்கள் என்று பல்வேறு பொருட்களை வீசிக்கோண்டே செல்வார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் தாம் எடுத்துக்கொண்ட விதயம் பற்றிய அச்சடித்த விவரத்தைப் பார்வையாளர்களுக்கு விநியோகித்துக் கொண்டே செல்வார். இடையிடேயே திரளாகக் கடுதாசித் துகள்களை வழியில் நிற்பவர்கள் தலையில் வாரிக் கொட்டுவார்கள். இந்நாட்களில், பல்வேறு நிறங்களைக் கொண்ட இந்தத் துகள்களை வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் காணலாம். 3 நாள் விழா முடிவில், பாசல் நகரத் தெருக்கள் இந்தத் துகள்களால் நிறைந்து போயிருக்கும். நகரக் குப்பையகற்றும் தொழிலாளிகளுக்கு வியாழன் விடிகாலை தலைவேதனைதான்.
ஒரு புள்ளி விவரத்தின்படி, புதன்கிழமை விடிகாலை வரை சுமாராக 126 தொன் குப்பை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது. வியாழன் விடிகாலை, அதாவது விழா முற்றாக முடிந்த பின்பு சுமாராக 300 தொன் எடையுள்ள குப்பை சேகரிக்கப்பட்டுள்ளதாக முன்னைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 231 தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த ஊர்வலங்களில் தமது குழுக்களுடன் கலந்துகொள்ள அதற்கான அமைப்பில் பெயர்களைப் பதிவு செய்தாக வேண்டும். வேறு சில சுவிஸ் நகரங்களிலும் இந்த விழா நடைபெற்றாலும் பாசல் நகரில்தான் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகின்றது. இந்த 3 நாள் விழாவில் 15,000 தொடக்கம் 20,000 வரையிலான முகமூடி அணிந்தவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. 14ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாக வரலாற்றுத் தகவல்களில் இருந்து அறிய முடிகின்றது.
பிரேசில் தலைநகரான றியோ டி ஜெனிரோவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் களியாட்ட விழாதான் உலகிலேயே மிகப்பெரிய விழாவாகும். இந்த வருடாந்த விழாவை 4.9 மில்லியன் வரையிலானவர்கள் கொண்டாடுவதாக ஒரு தகவல் கூறுகின்றது. ஈஸ்டர் பெருநாளுக்கு 40 நாட்கள் முன்பாக நடக்கும் இந்த விழா 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவாகும்.
அந்த நாட்டின் நகரபிதா களியாட்ட விழாவிற்கான ஒரு மன்னனைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு முடிசூட்டியதும் களியாட்ட விழா சூடுபிடிக்க ஆரம்பிக்கின்றது.
சம்பா இசைக்குப் பிரபல்யமானது இந்த நாடு என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த விழாவில் அரங்கேறும் சம்பா நாட்டியப் போட்டிகளைத் தவறவிடவே கூடாது என்கிறார்கள். 2012இல் 850,000 உல்லாசப் பயணிகள் இந்த விழாவை நேரில் காண இங்கு வந்திருந்தார்களாம். இந்த விழாவில் அழகிகள் அணிவதற்கான பிரத்தியேக வண்ண ஆடைகளை உருவாக்குவதற்கு இங்குள்ள சம்பா நடனக் கல்லூரியே பொறுப்பெடுக்கின்றது. ஒவ்வோர் ஆடையையும் தயாரிக்க இவர்கள் மாதக்கணக்காக உழைக்கின்றார்கள்.
இந்த இரண்டையும் விட, அமெரிக்காவின் லூசியானா மாவட்டத்தின் மிகப்பெரிய துறைமுக நகரமான நியு ஓர்லியன்ஸ் என்னும் இடத்தில் ஒரேயொரு நாள் இடம்பெறும் களியாட்ட விழாவும் உலகில் மிகப் பிரபல்யமானது. கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி நடைபெற்று விட்ட இந்த விழா தபசு காலம் ஆரம்பிக்குமுன்பு நடத்தப்படும் இறுதி விழாவாகும். ‘களியாட்ட நேரம்’ என்று பொருள்பட இங்கு சொல்லப்படும் ‘Mardi Gras’ மிகப்பெரிய அளவிலான திருவிழா. திங்கள் ஆரம்பித்து செவ்வாய் தொடங்கும் நடு இரவில் இந்த விழா முடிவு காண்கின்றது.
விழா முடிந்த அடுத்த நாள் பெரும்பாலும், ‘விபூதித் திருநாள்’ என்று கத்தோலிக்கர்களால் சொல்லப்படும் Ash Wednesday நாளாக இருக்கும். ஆனால், அடுத்த நாள் தெருக்களில் குப்பைகள் நிறைந்திருப்பதால் வேடிக்கையாக மக்கள் இதை ‘Trash Wednesday’ என்று சொல்வதுண்டு!
இந்த விழாக்களை விட, மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ரினிடாட்டில் இடம்பெறும் களியாட்ட விழாவும் உலகப் புகழ் பெற்றது. கரீபியன் தீவுக்கூட்டங்களில் மிகப் பெரிய அளவில் விழா நடப்பது இங்குதான்! இந்த ஆண்டு மார்ச் 3இல் நடைபெற்ற இந்த விழாவில் கலிப்சோ இசைதான் முக்கியத்துவம் வகிக்கிறது. பிரேசில் நாட்டில் சம்பா இசை எப்படியோ அதேபோல கலிப்சோ இசை மேற்கிந்தியத் தீவுகளில் மிகப் பிரபல்யமானது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நடக்கும் களியாட்ட விழா என்றால் ஜேர்மன் நகரான Cologne-இல் நடக்கும் விழாவைத்தான் சொல்ல வேண்டும். ‘பைத்தியக்கார நாட்கள்’ என்று சொல்லப்படும் விழாவின் சில நாட்கள் ஒரு வியாழனன்று ஆரம்பமாகின்றன. மதுபான விடுதிகள் காலக் கெடு இன்றித் திறக்கப்படுகின்றன. பழைய ஒரு பாரம்பரியத்தின்படி, இங்குள்ள பெண்கள் தெருக்களில் கத்தரிக்கோல்களுடன் திரிந்து, ஆண்கள் எவராவது ரை (Tie) கட்டியபடி வந்தால் அதைப் பிடித்துக் கத்தரித்து விடுகின்றார்கள். விபூதிப் புதனுக்கு முன்பு வரும் முதல் திங்களில் பாரிய ஊர்வலமும் உண்டு.
இப்படியாக, களியாட்ட விழாக்கள் மனிதனுக்குக் களைப்பைப் போக்கிக் களிப்பைக் கொடுக்கவென்றே உருவாக்கப்பட்டுள்ளன போலும்! மனிதனுக்கு இன்பம் அளிக்கும் வரை இவை அவசியமானவைதான்!