கல்லும் குளமும் (3)

சுபைதாவின் முகம் பார்த்தான் சுக்கூர். அவள் ஏற்கெனவே இவனை நோக்கிதான் பார்வை வைத்திருந்தாள். விசயம் தெரிய வந்தால் வாப்பாவும் ம்மாவும் என்ன குதி குதிப்பார்களோ என்பதை சுக்கூரும் யோசித்தான்.

மருமகன் தீவிர யோசனையில் இப்பது அஹமது சாயபுவுக்குப் புரிந்தது. எடுத்த எடுப்பிலேயெ அவன் மறுத்துப் பேசாததால் அவருக்கு ஒரு நம்பிக்கையின் கீற்று நெஞ்சில் விழுந்தது. தான் அவனை வழிக்குக் கொண்டு வர இப்போது ஏதேனும் பலன் தருமா அல்லது இப்படியே யோசிக்க விட்டு விட்டால் பலன் தருமா என்று மனசுக்குள் வேகவேகமாய் கணக்குகளைப் போட்டுக்கொண்டு இருந்தார்.

சுபைதாவின் முகம் பார்த்தார் அவர். அவள் வாப்பாவின் மௌனத்தை வேண்டி சமிக்ஞை செய்தாள்.

அறையின் முன் நிழல் அசைந்தது. சின்ன மருமகனின் குரல் அவனின் வருகையை அறிவித்தது. மாமா அவனையும் அழைத்து விட்டிருக்கிறார் என்பது தெரியவும், "யோசிப்போம் மாமா" என்று எழுந்தான்.

பெரிய மருமனை வைத்துக் கொண்டு சின்ன மருமகனிடமும் பேச வேண்டிய இக்கட்டு இல்லாமல் போவதில் அஹமது சாயாபுவுக்கு பெரும் நிம்மதிதான் என்றாலும், முடிவு என்ன என்பதை அறிவிக்காமலேயே சுக்கூர் வெளியேறுவது வதைப்பு தருவதாக இருந்தது சுபைதாவும் சுக்கூருவுடன் அறையை விட்டு வந்தாள். ஹக்கீம் நுழைந்தான். தவணை முடியும் தருணத்தில் தன்னை மாமனார் அழைத்து விட்டதில் சிறிய குழப்பமும் இருந்தது தான் நல்ல செய்தியோடு திரும்பப்போவதில்லை என்று ஆகிவிட்டதால் அடுத்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை திட்டமிடும் எண்ணத்தில் வந்திருந்தான்.

ஹக்கீம் மாமனாரிடம் பேசி முடித்து விட்டு அறையிலிருந்து வெளியேறும் போது முற்றிலும் மாற்றமுள்ளவனாக இருந்தான். அவன் முகத்தில் இருள் பூசப்பட்டிருந்தது சுக்கூரும், சுபைதாவும் இன்னும் வீட்டை விட்டு போகவில்லை. வெளியே வந்த ஹக்கீம் உடனடியாக கடைக்குப் போகமுடியாமல் தவிப்பவனாக இருந்தான். சுக்கூரிடம் என்ன சொன்னார், சுக்கூரு என்ன முடிவில் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள விரும்பிய ஹக்கீம் அவனைக் கையோடு கடைக்கு கூட்டிக்கொண்டு போய்விடலாம் என விரும்பினான். ஆனால், அவன் வெளியே வருவது போலத் தெரியவில்லை. மனமில்லாமல் சைக்கிளில் ஏறினான். அவனுக்குத் தேநீர் கொண்டு வந்த மாமி அவனிருந்த இடம் காலியாக இருப்பது கண்டு திகைத்தாள். "பேச்சைப் பாதி கேட்டவுடயே அவரு வெளியே போயிட்டாரு" என்றார் அஹமது சாய்பு. தேநீர்க் கோப்பையோடு அவரின் மனைவி கலங்கி நின்றார்.

சுக்கூர் தன் வீட்டுக்குத் திரும்பி வந்த சிறிது நேரத்தில் ஹக்கீமும் அவனைத் தேடி வந்தான். நல்ல வேளையாக சுபைதா இன்னமும் வரவில்லை. "என்ன அண்ணே, மாமனாரு இப்படிப் பேசிட்டு இருக்காரு. அவரு எங்க வகையில் மீதமுள்ள நகையப் போட்டு முடிக்க வேண்டிய நேரம். அவரு என்னடான்னா பொண்டாட்டி கழுத்துல போட்ட நகையவும் கழட்டிக் குடுன்னு நிக்குறாரு. நான் அவரு மூஞ்சிய திரும்பியும் பாக்காம கிளம்பி வந்துட்டேன்" என்றான்.

சுக்கூருக்கும் உறுத்தலாகவேதான் இருக்கிறது. அவன் மச்சினன் வேலைக்குப் போய்விட்டால் சரி இல்லையென்றால் அவனால் நகைகள் திரும்பிவருவதை வெறும் கனாவில் மட்டுமே கண்டுகளிக்க முடியும். தானும் உதவாதபட்சத்தில் மச்சினனுக்கு நல்ல வேலை அமைந்து விட்டால் அப்போது அவன் மூலம் தான் ஒரு போதும் பலா பலன்களை அடைய முடியாது போய்விடவும் கூடும். அவன் முடிவு எடுப்பதில் இந்த ஊசலாட்டம் நெடும் போக்காக வளர்ந்தது.

"தம்பி இப்ப உனநிலைமைதான் எனக்கும். நானும் ஒன்னும் சொல்லாமலேயே வந்துட்டேன்."

"ஆனா என்நெலம இன்னும் மோசமாயிடும்ண்ணே. இவரு பாக்கி நகையைக் போட வேண்டிய கட்டம் இது. இப்ப எங்க ம்மாட்டையும் வாப்பாட்டயும் இதப்போய் சொன்னேன்னா ரணகளமாக்கி விட்டுருவாக. அவருக்கு அது புரியாம போட்டதயுங் கழட்டித்தானு கேட்டா கேக்கவே ரெம்ப கரும்மாமல இருக்கு."

"ஆனா நம்ம மச்சினன் தலை நிமிர்ந்தாதான் அவங்களாலயும் இனிக் காலத்தை ஓட்ட முடியும்."

"அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? அவன் சம்பாரிச்சு நம்ம தலையில் வந்து கொட்டுவான்னு எதிர்பாக்க முடியுமா?"

"சே" என்று மனசுக்குள் ரொம்ப சலித்துக் கொண்டான் சுக்கூர்.

ஹக்கீம் முகமெல்லாம் சிவந்து போயிருந்தான். சுபைதா அந்த நெரம் பார்த்து வீட்டுக்கள் வரவம் ஹக்கீம் பேச வந்ததை நிறுத்தி விட்டுப் போய்விட்டான். சுபைதா ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவள் எதையும் கேளாமல் கணவனைக் கடந்தாள்.

தங்கையின் கணவன் என்ன பேசிவிட்டுப் போகிறான் என்று அவள் அறிய விரும்பினாள். சுக்கூரின் முகத்தில் சலிப்பு ரேகைகள் ஓடுகின்றன. வாயைத் திறந்தால் பலாய்தான். இரண்டு மருமகன்களும் கூட்டுச்சியாக எதையாவது பேசி காலை வாரிவிட்டு விட்டால், வீட்டின் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டு விடும்.

வாப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து இரண்டு மாதங்களுக்கு முன் பலத்த செலவாகிவிட்டது. அன்றிலிருந்தே அவர் ஓய்ந்து விட்டார். முன்பு போல எங்கும் எதையும் போய் செய்யக் கூடிய நிலை தூர்ந்து போய்விட்டது. குடும்பமும் தேங்கி நிற்கிறது. தன் கணவனைத் தானே நயமாகப் பேசி எப்படியும் வாப்பாவுக்குத் தோள் கொடுக்கச் செய்ய முடியும் என்று நம்பி வந்தாள். ஆனால் ஹக்கீம் வந்து எதையெல்லாம் பேசினானோ, இவனின் முகமே மாறிப்போய்க் கிடக்கிறது. வீட்டிலிருந்து இரண்டு மக்களாகிய தாங்கள் வெளியேறிய பின்னும் கணிசமான கூட்டம் அங்கே இருக்கிறது. வாப்பா, ம்மா, தங்கை ஒருத்தி, தம்பிகள் இருவர், வாப்பும்மா வேறு. சின்னச் சின்ன அலைகளாக ஓயாமல் வீசும் மருந்து, படிப்புச் செலவுகள், கடன் பாக்கிகள்.

இப்ப ஹக்கீம் வந்து என்னென்ன சொல்லிப் போனாரோ? மனச மாத்தி விட்டுட்டுப் போயிருந்தா, இப்ப நாம எதைப் பேசினாலும் எல்லாம் நாசமாயிரும். இதை இவங்ககிட்ட எப்படிப் பேசி முடிக்கிறது?… என்று சுபைதா கலங்கித் திணறிக் கொண்டிருந்தாள்.

"ஒரு முறை சொன்னாங்க. அதுக்காக நாமளும் டக்குன்னு குனிஞ்சிற முடியாது. இனி இவள வாயத் தொறந்து கேட்டான்னா அப்போ முடிவு எடுக்கலாம். அது வரையிலும் நாமளா வாயத் தொறந்து எந்தப் படியும் கொடுத்துற வேண்டாம்" என்று சுக்கூர் முடிவெடுத்தான்.

இருவரின் இறுக்கமும் தொடர, டி.வி.யில் பிம்பங்கள் குரல் கொடுக்கத் துவங்கின.

(முடிந்தது)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author