கல்லும் குளமும் (1)

"மச்சான், வாப்பா உங்கள மையோட கூப்புட்டு வரச் சொன்னாங்க" என்று நகத்தைப் பல்லில் கடித்தவாறு அப்துல் சுக்கூரிடம் சொல்லிக் கொண்டு நின்றாள் தாஜுன்னிஸா. அவன் கொஞ்ச நேரம் யோசித்தான். மனம் சரியில்லாமல் இருந்தது.

"என்ன விஷயம்ளா?" என்று அவளை அதட்டிக் கேட்டான் சுக்கூர்.

"தெரியல மச்சான்"

"சோறு திங்கத் தெரியுமாளா?" என்று ஒரு அண்டாவை உருவகம் செய்து கையை அகல விரித்துக் காட்டினான்.

"ஏங்க, போக இஷ்டம் இருந்தா போங்க. இல்லேன்னா கம்முன்ன கெடங்க. அதுக்குப் ஏன் அவள்ட்ட வேண்டாத கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? நீங்க சோறு தின்னாமத்தான் வளர்ந்தீங்களோ?" என்று தங்கைக்காக வரிந்து கட்டிக்கொண்ட வந்தாள் சுபைதா.

எப்பா தங்கச்சிய கேட்டதும் தாத்தா (ககா)வுக்கு சுருக்குன்னு வந்துடுது என்று உதட்டைப் பிதுக்கினான் சுக்கூர். தாஜீன்னிஸா சிரித்துக் கொண்டே போய்விட்டாள். ஆனால் அவளுக்கு சம்சயம் உண்டு. நாம அதிகமாத்தான் சாப்புடுறோமோ? அம்மாவும் இதையேதான் சொல்லிச் சொல்லிக் காட்டுறா. அனிமே நம்ம தம்பியவிட கொறைச்சலாத் தான் சாப்புடணும் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.

"ஏட்டி இங்க வா. உங்க வாப்பா எதுக்கு இந்த நேரம் பார்த்துக் கூப்புட்டு விடுறாங்க? என்ன விசயமாம்?" என்று மனைவி சுபைதாவை அழைத்துக் கேட்டான்.

"நானும் உங்களப் போலத்தான் இங்க இருக்கேன். எனக்கு என்னன்னு தெரியும்?"

அவன் தன் தொழில் விஷயமாக அங்குமிங்கும் அலைந்து திரிந்து, அப்போதுதான் மிகவும் களைப்புடன் வந்திருந்தான். டி.வி.யில் அவனுக்குப் பிடித்தமான திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இதற்காகத் தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு டி.வி.யின் மீதே கண் பதித்திருந்தான். நாயகனும் நாயகியும் பல பெண்கள் ஆண்கள் மத்தியில் துரத்தித் துரத்திக் காதலித்தவர்களால் பாட்டுப்பாடி ஆடிக்கொண்டு இருந்தார்கள். "சாயங்காலமா போயி அவரப் பாப்போம்" என்று எண்ணியவனாய், மாமனாரை மறந்துவிட்டு படத்தோடு கவனமானான்.

சாயங்காலமாய் தாஜுன்னிஸா வந்து மீண்டும் வீட்டில் எட்டிப் பார்த்தாள். மச்சானைக் காணவில்லை. வாப்பா மீண்டும் அவளை விரட்டி அடித்திருந்தார். மச்சானைக் கையோடு அழைத்து வரச் சொல்லி கண்டிப்பான உத்தரவு. தாத்தாவிடம் வந்து சொன்னாள்.
"மச்சானை வாப்பா அவசரமா வரச் சொன்னாங்க."

"ஏளா என்ன விஷயம்?" சுபைதா கவலை தோன்றக் கேட்டாள்.

"என்கிட்டே அதெல்லாம் சொல்லலை."

இந்த மனுஷன் போனா போன இடம், வந்தா வந்த இடம். சரி நீ போ, இப்ப வந்துருவாங்க. நான் வரச் சொல்றேன்."

"மறந்துறாம போவச்சொல்லு. இல்லேன்னா என்னத்தான் ம்மாவும் வாப்பாவும் சேர்ந்து திட்டுவாங்க."

"அப்ப எதுக்குப் போயி திட்டு வாங்கப்போற? பேசாம இங்குன இரு. இப்ப வந்துருவாங்க?"

"நான் போவணும். கடைக்கு போயி சின்ன மச்சானையும் கூட்டிட்டு வரணும்."

சுபைதாவுக்குத் திடுக்கென்றது. சின்ன மச்சானையுமா? மனசுக்குள் பூதாகரமான கவலை விரிவு கொண்டது. என்ன விஷயம்? இரண்டு மருமகன்களையும் கூட்டி வச்சு வாப்பா பேசி முடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? காலையில் கூட வீட்டிற்கு ஒருநடை போய்விட்டுத்தான் வந்தாள். அப்போது எதையுமே அவர்கள் சொல்லிக் கொள்ளவில்லையே.

ரொம்பவும் யோசித்தாள். இருப்புக்கொள்ளவில்லை. தாழிட்டுவிட்டு வாப்பா வீட்டை நோக்கிப் போனாள்.

தாஜுன்னிஸா கடையின் முன்போய் நின்றாள். ரொம்ப சுறுசுறுப்பாய் இருந்தான் ஹாக்கீம். கொழுந்தியா வந்து நின்றதும் மனசு ஜில்லிட்டு விட்டது. "ஏய் தாஜ், உள்ள வா" என்றான். போக மாட்டாள். போனால் அவளின் கன்னத்தைக் கிள்ளிப் பதம் பார்ப்பான். மிட்டாயும் எடுத்துத் தருவான்தான். கேலியாகப் பேசிக் கொண்டே இருப்பான், எவ்வளவு நேரமானாலும் மிட்டாய், சிகரெட்டு, சோப்பு என்று ஒரு கை வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தாலும், இன்னொரு கை அவளின் இடுப்புக்கு என்று ஆகியிருக்கும். பள்ளிக்கூடம் போகிற வழியிலும் அவளை வலிய வரவழைத்து ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி, அவளிடம் சிரித்து அவளையும் சிரிக்க வைத்து, தலையில் ஒரு குட்டு போட்டு(செல்லமாகத்தான்) அனுப்பினால்தான் அவனுக்கு உற்சாகமாய் இருக்கும். தாஜுன்னிஸாவுக்கும் ஒரு பொழுது இம்சை, ஒரு பொழுது சந்தோஷம் என்று ஆகிவிட்டது. ஆனால் கடைக்குமுன் ஒரு சமயத்தில் கூட வலிய வந்து நிற்காதவள். மேலும் அவள் சிரித்தவளாக சற்றே சங்கோஜமாய் வந்து நின்றதும் ஹாக்கீமுக்கு நிலைகொள்ளமால் ஆகிவிட்டது. அவன் அவளைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்துவிட்டான்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author