கல்லாமல் பாகம் படும் (3)

ஊரில் நீத்தார் நினைவு நாள் நடத்தும் இல்லங்களிலெல்லாம் சவுண்டிக்குக் கூப்பிட்டார்கள். இதற்கிடையில் பள்ளிப் பேரேட்டிலிருந்து அவன் பெயரை நீக்கி விட்டதாக அவனிடம் சொன்னோம். அதை அவன் கண்டுகொள்ளவேயில்லை. சொல்லியே இருக்க வேண்டாம் என்று தோன்றியது எங்களுக்கு.

எனக்குத் தெரிந்து எட்டாங்கிளாஸ் வரை அவன் வந்ததே பெரிது எனலாம். தூக்கிக் தூக்கி போட்டுத்தான். வேண்டாம் வேண்டாம் என்று உதறியே எட்டு வரை வந்துவிட்டான் அவன்.

அப்பொழுது தெருவில் திருட்டுப் பயம் அதிகமிருந்தது. குடியிருப்புப் பகுதிகளிலும், பஜார் வீதிகளிலும், தெருக்களிலும், பரவலாய் இந்த பயம் நிறைந்திருந்தது. மேல மந்தையில் பொதுக்கூட்டம் நடக்கிறதென்றால் ஊர் ஜனம் முச்சூடும் அங்கு தான் கிடக்கும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு வொயர் இழுத்து தெரு ஆரம்பத்திலுள்ள லைட் கம்பத்தில் குழாய் கட்டியிருப்பார்கள். மந்தைக்கு வந்து கேட்க முடியாத வயதானோர், வாசலில், தெருவோரத்தில் ஈஸி சேரைப் போட்டு ஹாய்யாகச் சாய்ந்து கொண்டு அரசியல்வாதிகளின் பேச்சை ரசிப்பார்கள்.

இப்படியான ஒரு நாளில் தான் மேலத் தெருவில் திருட்டுப் போச்சு… ‘பஜார் எண்ணெய்க் கடைல கல்லாப் பெட்டியக் காணலையாம்… செட்டியார் அரிசி மண்டில அரிசி மூட்டைகளே குறையுதாம்…’ என்று பராபரியாய்ப் பேச்சு வர ஆரம்பித்தது.

எல்லோரும் கூடி ஒரு முடிவெடுத்தோம். இரவு பத்து முதல் ரெண்டு மணி வரை க்ரூப் என்று பிரிந்து கொண்டோம். இந்த வாரம் ஒரு ஷிப்ட் பார்த்த கோஷ்டி அடுத்த வாரம் வேறு ஷிப்ட் என்று ஒப்பந்தம்… முட்டுச் சந்து, முடுக்குச் சந்து, முடக்கு ஆற்றங்கரை, தென்னந்தோப்பு, என்று ஒன்று விடாமல் அலைந்தோம். அதற்குப் பின்தான் இந்தத் திருட்டுப்பயம் ஓய்ந்தது எனலாம். அப்பாடா…‚ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில் அது எங்கள் தெருவிலேயே நடந்து போனது…‚ இந்த அளவிற்கு துணிந்தது யார் என்று யோசித்த போது தான் எங்கள் சந்தேகம் மணியின் மீது பாய்ந்தது.

ரெண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வந்து அசந்து படுத்திருந்த வேளையில் ஒரு வீட்டில் கும்பல் ஒன்று கைவரிசையைக் காண்பித்து விட்டது அன்று. இவர்களையெல்லாம் எப்பொழுது பழகிக் கொண்டான் இவன். அல்லது இவர்களையெல்லாம் எப்பொழுது திருடனாக்கினான் என்று கொள்ளலாம்‚ நடுஹால் போய் அங்கே படுத்திருந்த பொம்பளையின் தலைமாட்டில் இருந்த இரும்புப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு பக்கத்து முடுக்கில் ஓட, "என் பெண்ணைத் தூக்கிட்டு ஓடறான்… ஓடறான்…"‚ என்று அந்தம்மா பயத்தில் உளறி அலற, விரட்டிக் கொண்டு இருட்டில் போனவரை உருட்டுக் கட்டையால் ஓங்கித் தாக்கியது அந்தக் கும்பல். தாலிக்கொடி அறுந்து போயிருந்தது அந்தம்மாளுக்கு‚ விடிகாலையில் தென்னந்தோப்புக்கு அந்தப்புறம், ஆட்டிகள் விரட்டி வந்ததால் எறிவதற்குத் தோதாய் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்குவியலுக்கு நடுவே அந்தப் பெட்டி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது வெறும் பெட்டி தான் உள்ளே இருந்ததில் ஒரு குந்துமணி கூட விட்டு வைக்கவில்லை. அந்தக் கும்பல் பிடிபட்டது கொஞ்ச நாளில். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறம் பதுங்கியிருந்ததாகவும், போலீஸ் கோஷ்டி ஒன்று துப்பு கிடைத்து, கையில் ரைபிளோடு சென்று பிடித்து வந்ததாகவும், கேள்விப்பட நேர்ந்தது. அந்தக் கும்பலுக்கு வழிகாட்டியது திருட்டு மணிதான் என்பது அவர்களை அடித்த அடியில் தெரிய வந்தது. இன்னவீடு, இன்ன இடம், இப்படியிப்படி, என அனைத்து வழிமுறைகளும் சொல்லிக் கொடுத்தவன் அவன் தான் என்றார்கள்.

அந்தத் திருட்டில் அதிகவனமாகக் கைதானான் திருட்டு மணி. காரணம் அந்தக் கும்பலின் முன் குற்றங்கள் தான் என அறிய நேர்ந்தது. அவனை அங்கிருந்து டவுனுக்குக் கொண்டு போனார்கள். பிறகு சென்னைக்குப் போய் விட்டதாகச் சொன்னார்கள். ஒருமுறை மும்பை நகரிலே பெரிய கொள்ளை குறித்த செய்தி வந்திருந்தது தினசரியில். அதன் முக்கியச் சாவியாகச் செயல்பட்டவன் மணிதான் என்பதை தொடர்ந்த தகவல்களின் மூலம் அறிய முடிந்தது. புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தார்கள் அந்தச் செய்தியை. அந்தக் கும்பலின் நடுவே இருந்தான். உருவமே மாறித்தான் போயிருந்தது. இந்த அளவுக்கு விடுவிடுவென்று மேலே போவான் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை. பின்னாளில் நாங்கள் எல்லோருமே அவனை மறந்து போனோம். காலத்தின் கட்டாயமாகிப் போனது அது‚ 

அந்த கோபாலகிருஷ்ணன் என்கிற திருட்டு மணி ஊருக்கு வந்து இப்போது சில மாதங்களாயிற்று. தினமும் காலையில் பத்து மணிக்கு பஸ் ஸ்டாண்டுக்கு எதிரேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் போய் (அன்று அவன் பார்த்த போலீஸ் ஸ்டேஷன் வேறு. இன்று பார்ப்பது வேறு) கையொப்பமிடுகிறான். எப்படி மாறிப் போய்விட்டது அது? உள்ளே போனவன் தான். ஆளே வரவில்லை என்ற அளவிலான படுபயங்கர இரகசியங்கள் குடிகொண்டிருந்தன அங்கே‚ ஒருவேளை இன்று அவன் இருக்கும் நிலைக்குப் பொருத்தமாக இருக்குமோ என்னவோ‚

அன்று தான் அது நடந்தது. மாலை ஆறு முப்பது தாண்டிய பொழுது, கையில் சுற்றிய இரத்தக் கறை படிந்த டவலோடு பிடித்திருந்த ஆக்ஸா பிளேடில் உறைந்தும் வழிந்தும் கொண்டிருந்த குருதியோடு தெரு வழியே இறுகிய முகத்தோடு போய்க் கொண்டிருந்தான் திருட்டு மணி. எங்களையெல்லாம் பார்த்தவாறே வைத்த கண் வாங்காமல் அவன் நிதானமாய் நடந்து சென்ற காட்சி இன்னும் என் கண் முன் அழியாது நிற்கிறது. வீட்டுக்கு வீடு பயம் நிறைந்த பார்வையோடு பலர்.

எல்லோரையும் கடைசியாய் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேனே என்பது போல் போய்க் கொண்டிருந்தான். ஒருவரைக் கூட அவன் தவறவிடவில்லை. அது ஏன் என்றே தெரியவில்லை. விளையாட்டுத்தனமாய் ஒருமுறை எங்கள் வீட்டுக்குள் ஓடிவந்து ஜாடியைத் திறந்து, மாவடு ஊறுகாயை எடுத்துக் கடித்துக் கொண்டே அவன் ஓடியதும், "வாடா இன்னும் ரெண்டு எடுத்துக்கோ…" என்று அம்மா சொன்னதும், "போதும் மாமி" என்றுவிட்டு "கொஞ்சம் சாதீர்த்தம் கொடுங்கோ, அது போதும்" என்று வாங்கி மாவடுவை ஒரு கடி, அதில் ஒரு மடக்கு என்று ருசித்து அவன் கடித்துவிட்டு போனதும்… கண்களில் கண்ணீர் பனிக்க இன்றும் என் நினைவில் அழியாமல் பதிந்து கிடக்கின்றன.

அவன் கால்கள் தயங்கியது கிருஷ்ணசாமி வாத்தியார் வீடு தாண்டிய போது தான்‚ அதற்கு நாலு வீடு தள்ளித்தான் அந்த வீடு இருந்தது.

திருட்டுமணி நகைகளுக்காகத் தன் பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொன்ற குற்றத்தில் போலீஸில் போய் சரண்டர் ஆனான். அவன் அந்தத் தெருவைக் கடந்த வேளையில் அந்த அலறல் சத்தம் தெருவே கிடுகிடுக்கும்படி கேட்டது.

"அய்யோ மணி, என்னைத் தனியா விட்டிட்டுப் போறியே, இவா எல்லோரும் சேர்ந்து என்னைக் கொன்னுடுவாளே… இனிமே நா என்ன செய்வேன்… தெய்வமே…‚ என்னையும் அவனோட கூட்டிக்கோயேன்…"

தெரு முழுக்க அந்தக் குரல் ஒவ்வொருவர் வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். நீள நெடுக விரித்துப் போட்ட தலையோடு அலறியடித்துக் கொண்டு ஓடியது அந்தப் பெண்‚ எங்கள் கணக்கு வாத்தியாரின் மூன்றாவது பெண் சியாமளா தான் என்பதை நீவீர் எல்லோரும் அறிவீராக.

அந்த பேதை கோபாலகிருஷ்ணனின் வாரிசையும் சுமந்து கொண்டிருந்தாள் என்ற கொஞ்சமும் காதில் வாங்க முடியாத கல் மனதும் ஏற்காத கொடுஞ்செய்தியையும் முடியுமானால் ஜீரணிக்க முயல்வீராக.

(முடிந்தது)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author