திருட்டு மணி எங்கள் எல்லாருக்கும் தெரிய முதலில் திருடியது கணக்கு வாத்தியார் கிருஷ்ணசாமி வீட்டில் தான். உதவாக்கரை இதுக்காவது உதவட்டுமே என்று, "தெருக்குழாயிலிருந்து நாலு குடம் தண்ணீர் கொண்டு வாடா, வெட்டி…" என்றார் அவனிடம். அந்த வெட்டி என்ற வார்த்தை உறைத்து விட்டதோ என்னவோ, அன்று பத்துக் குடம் தண்ணீர் கொண்டு வந்து கொட்டி விட்டான் அவர் வீட்டில். மாமியே அதற்குப் பின்தான் குளித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்‚ கிளம்பும் போது தான் அந்த சபலம். அவனென்ன பண்ணுவான்… கை நீண்டுவிட்டது. சாமி படத்திற்கு அருகில் உள்ள பூஜைப் பிறையில் கழற்றி வைத்திருந்த காதுத் தோட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு நழுவினான். இன்னொன்றை வைத்துவிட்டு வந்தது பெரிய புத்திசாலித்தனம் என்ற நினைப்பு அவனுக்கு‚ "இன்னொண்ணு இருக்கில்லியா… இங்கே எங்கேயாவது விழுந்து உருண்டிருக்கா பாரு…" இது தான் கணக்கு சார் முதலில் மாமியிடம் சொன்னது. கொஞ்ச நேரம் கழித்துத் தான் அவர்கள் மூளையே வேலை செய்திருக்கிறது.
"போய் அவனை இழுத்திட்டு வாங்கடா…" என்றார் சார். நாங்கள் திருதிருவென்று முழித்துக் கொண்டு நகர்ந்தோம். எங்கள் முழியே அவருக்கு உறுதிப்பாட்டை வழங்கிவிட்டதோ என்னவோ?
அப்படியும் மாமி வெறுமே அப்படிச் சொல்லவில்லை. எங்கள் எல்லாருக்கும் ஏழு சுத்து நிலா முறுக்கு கொடுத்தாள் மாமி. சமீபத்தில் தான் சார் வீட்டுக்கு புது மாப்பிள்ளை வந்திருந்தார். அவரது மூத்த பெண்ணுக்கு அப்பொழுது தான் கல்யாணம் ஆகியிருந்தது. மொத்தம் மூன்று பெண்டுகளைப் பெற்றுப் போட்டிருந்தார் அவர்‚ சிவாஜி படங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நாங்கள் மணியை லாவகமாக இழுத்துக் கொண்டு வந்துவிட்டோம்.
‘பார்றா, நம்ப தெருவுல போஸ்டரே ஒட்டலை. எப்படிடா விட்டே? தெருக்கடைசி கார் ஷெட்ல வழக்கமா ஒட்டுறதுதானே…?" என்று பேசிக் கொண்டே வர, யாரும் எதுவும் சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தான் மணி. எங்களோடு சர்வ சகஜமாக வந்து கொண்டிருந்தவன், தானாகவே சார் வீட்டு வாசல் வந்ததும் நின்றது தான் எங்கள் எல்லாரையும் அதிசயிக்க வைத்தது. எப்படிக் கண்டுபிடித்தான் இதற்காகத் தான் கூட்டி வந்திருக்கிறோம் என்று?
நின்று நேரே நெடுகக் கண்ணோட்டம் விட்டவன் எதற்கோ எதிர்பார்த்திருப்பது போல் இருந்தது. அவன் சுபாவம் நன்கு அறிந்த எங்களுக்கு எந்த இடத்தில் அவன் என்ன செய்வான் என்பதில் கவனம் இருந்தது.
அந்தக் காலத்திலேயே திருட்டு மணியிடம் விளையாட்டாய் ஒரு பழக்கம். கை நகங்களை எப்பொழுதும் நீட்டமாய், கூர்மையாய் வளர்ப்பான். ஏதாவது ஆபத்து என்றால் கட்டை விரல் நகத்தால் எதிராளி உடம்பில் ஒரு கீறு கீறி விட்டுத் தப்பி ஓடிவிடுவான். இது அவனது திருட்டுப் பழக்கத்திற்கு ரொம்ப உபயோகமாய் இருந்தது. பஸ் ஸ்டாண்டில், பஸ்களில் ப்ளேடு போடுவதைப் போல…‚ அன்றும் அப்படித்தான் தப்பி ஓட முயல்வான் என்று எதிர் பார்த்தோம். அதுதான் இல்லை. எங்கள் கணக்கு தப்பாய் போனது‚
யாரும் எதிர்பார்க்காத அந்தக் கணத்தில் சார் வீட்டுக்குள் நுழைந்து விடுவிடுவென்று போய் அதே பிறையில் அந்தத் தோட்டைத் திரும்ப வைத்து விட்டு வந்துவிட்டான். மாமி அடுப்படிக்குள் மும்மரமாய் இருக்க, புது மாப்பிள்ளை, பொண்ணு மாடியில் ஜாலியாய் சந்தோஷித்திருக்க, கிருஷ்ணசாமி வாத்தியார் அந்நேரம் பார்த்து கொல்லைப் புறம் கக்கூசுக்குள் இருந்து வெளிப்பட்டிருக்கிறார். என்ன ஒரு நேரம் பாருங்கள் அவனுக்கு‚ கோமணத்துணி மாதிரி நீள நெடுகக் கிடக்கும் வீடு அது. நீண்டு கிடக்கும் பட்டாசாலை வழி கூர்ந்து பார்த்து யார் வந்திருப்பது என்று தெரிந்து கொள்வதே பெரிய துர்லபம்.
ஆனாலும் கிருஷ்ணசாமி சார் என்ன அத்தனை லேசுப்பட்டவரா? நேரே விடுவிடுவென்று வாசலுக்கு வந்தவர், வந்த ஜோரில் பளாரென்று விட்டாரே பார்க்கலாம் ஒன்று‚ காது கீங்ங்ங்ஙென்று ரீங்கரிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படியே பொறி கலங்கிப் போனான் திருட்டு மணி.
"நா எடுக்கல சார்… நல்லா தேடிப் பாருங்க… ஆம்மாம்…" என்றான். அந்த நேரத்தில் அவனின் பதில் ஒரு மாதிரியாய் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. எப்பொழுதுமே அவன் இப்படிப் பேசியதில்லையே? என்ன நடக்குமோ என்றிருந்தது எங்களுக்கு.
"அடுத்தாப்ல உனக்குப் போலீஸ் ஸ்டேஷன் தான்…" என்றார் சார்.
அவனை அடித்தது பற்றி அவன் பெற்றோர் ஒன்றுமே சொல்லவில்லை. அவர்கள் தான் தண்ணீர் தெளித்து விட்டாயிற்றே? ஆனாலும் கூட அந்தக் காலத்தில் வாத்தியார் அடித்தால் அது நல்லதுக்குத் தான் என்ற உறுதியிருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகுதான் மணியின் கெட்ட பழக்கங்கள் அதிகரிக்க ஆரம்பித்தது எனலாம்.
இதை என்னவென்று சொல்வது? ஒவ்வொரு வீட்டிலும் சாமான்கள் வாங்க அவனைக் கூப்பிட்டு அனுப்புகையில் அதில் கமிஷன் அடிப்பதிலிருந்து, வீட்டுக்கு வீடு யாருமறியாமல் நுழைந்து ஏதாவது பொருட்களைக் கையில் அகப்பட்டதைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவது அவனின் வழக்கமானது.
பஸ் ஸ்டாண்டுக்குப் பின்புறம் இருந்த காயலாங்கடையில் மணி விற்ற சாமான்களைப் பார்க்கலாம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் ரெகுலர் கஸ்டமர் ஆகிப் போனான்.
பள்ளிக்கூடம் போவது, படிப்பது என்பதைத் தவிர எல்லாமும் செய்தான் மணி. திடீரென்று காலாங்கார்த்தால வீட்டுக்கு வீடு பேப்பர் போட்டுக் கொண்டு வருவான். கொஞ்ச நாளைக்கு அது ஓடும். சரி, திருந்திவிட்டான் போலும் என்று நினைத்தால் மாலையில் சினிமாத் தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொண்டு நிற்பான். சரி, அதுதான் கிடக்கட்டும் என்று விட்டால், பஸ் ஸ்டாண்டில் பஸ் கம்பெனிகளின் ஏஜென்ட் போல் ஆக்ட் பண்ணிக் கொண்டிருப்பான்.
பஸ்கள் வரவர அவற்றை அந்தந்த வரிசையில் ஓரமாய் ஒதுக்குவதும், ஒன்று போனபின் ஒன்றை வரிசையாய் ரைட் கொடுத்துக் கிளப்பி விடுவது, ‘போடி தேவாரம் இடைல பண்ணப் போறோம்…’ என்று கத்திக் கொண்டு அலைவதும், பண்ணைபுரம் என்பதைத் தான் அவன் அப்படிச் சுட்டினான் என்பதே வெகுநாள் கழித்துத் தான் எங்களுக்குத் தெரியவந்தது. கழுத்தில் சுற்றிய துண்டும், வாயில் கடித்த பீடியுமாய் ரொம்பப் பொருத்தமாய் இருந்தது அந்த வேஷம்.
"டேய் மாப்ள, எப்டிறா இருக்க…? அடேங்…ஙோத்தா… எங்கிட்டயே வித்த காட்டுறேல்ல… வா வச்சிக்கிறேன்…" என்று முறைப்பதும்… அவன் பாஷையே மாறிப் போனது சில நாட்களில்‚ இனிமேல் அவன் சுத்தமாய்த் தேறமாட்டான் என்று தோன்றியது.
இன்னும் கொஞ்ச நாளில் அவனது வேலைகள் இதனினும் வித்தியாசப்பட்டன‚ ஊரில் எங்கு பிணம் விழுந்தாலும் அதற்கான காரியங்களைச் செய்வதில் முதலாவதாய் நின்றான் திருட்டு மணி. அந்த நேரத்தில் அதன் அவசியத்தை முன்னிட்டு, வேறு எதுவும் பார்க்காமல் அவனை வைத்து முழுவதையும் முடித்துக் கொண்டார்கள் எல்லோரும். சூறைக்காட்டிலே கொண்டு சுட்டுவிட்டு வரும்வரை கூடவே இருந்து கோவிந்தா போட்டான் மணி.
அப்பொழுது ஆரம்பித்தது தான் அவனின் இந்த வெற்றிலைப் பழக்கம். ஜாதி சம்பிராதயங்கள் வித்தியாசமில்லாமல் எங்கெங்கு காணினும் நான்தாண்டா என்று நீக்கமற நிறைந்தான்.
அவனின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருந்தது என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியது.
(தொடரும்)
(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“