கல்லாமல் பாகம் படும் (1)

‘திருட்டு மணி’ வந்திருக்கிறான் என்று சொன்னார்கள். தெருவில் பராபரியாயப் பேச்சு. இவனெதுக்கு வந்தான் என்று சிலர் வாய்விட்டு முனகினார்கள். யார் அது, என்று கேட்டனர் வேறு சிலர். ஆனால் எங்களுடன் படித்தவனான கோபாலகிருஷ்ணன் என்ற மணி தான் வந்திருக்கிறான் என்று நாங்கள் சட்டெனப் புரிந்து கொண்டோம்.

அவன் ஊரைவிட்டுப் போய் வருஷங்கள் பலவாயிற்று. எங்கு போனான் என்ன ஆனான் எதுவும் தெரியாது யாருக்கும். அவன் அப்பாவைக் கேட்டால் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். என்ன வேலை, என்று நீட்டினால் ஒரு ஹோட்டலில் மானேஜராக இருக்கிறான் என்றும் முதலாளி அவனிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டதாகவும், மொத்த நிர்வாகமும் அவன் கையில் தான் என்பதாகவும் கூறினார். நாங்கள் நம்பவில்லை.

திருட்டு மணி தன் பாட்டியைக் கொலை செய்துவிட்டுப் போலீஸில் போய் சரண்டர் ஆன போது அவனுக்கு வயது 20. அப்பொழுது மணி 6.30. பொழுது மெல்ல இருட்ட ஆரம்பித்த நேரம்.

அது நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த காலம். அப்பாவுக்கு மேலும் கஷ்டம் ஏற்படுத்தக் கூடாது என்று ஒரு ரைஸ்மில்லில் பில் போடும் வேலை பார்த்தேன்.

என்னுடன் படித்த பாலு, கிச்சா, நாகராஜன், சுந்தரம் ஆகியோரெல்லாம் கல்லூரியில் படிக்க நகரத்திற்குப் போய் விட்டார்கள்.

நானும் இன்னும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே ஊரில் தங்கிப் போனோம். அப்பாவுக்கு அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை. ஒரு மில்லில் வேலைக்குப் போகிறேன். அந்த வருமானத்தில் தான் டைப்ரைட்டிங் பயின்றேன். மற்ற நேரங்களில் நூலகத்திற்கும் காசு இருக்கும் போது சினிமாவுக்கும் என்று போய்ப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். வாசிக்கும் பழக்கம் கைவந்தது அப்போது‚

எங்கள் எல்லாருக்குமே திருட்டு மணியை நன்றாகத் தெரியும். அவன் எங்கள் பகுதியில் தான் இருந்தான். அந்தச் சின்ன ஊரிலே ரொம்பவும் பிரபலமானவன் அவன். யாரும் அவனைத் தெரியாது என்று சொல்லிக் கேட்டதில்லை. யாரு, என்று யாரேனும் ஒரு நிமிடம் விளித்தால் கூட, ‘வாய் நிறைய வெத்தலையப் போட்டுக்கிட்டுத் திரிவானே, அவன் தான்…’ என்றால் போதும். புரிந்து கொள்வார்கள்.

வெத்தலைச் சிரிப்பும், கோடிட்ட மீசையும், அம்மைத் தழும்பு தெரியச் சுருட்டி மடக்கிய கையும், கைலியும், கலைந்த தலையுமாக அவன் ஊர் சுற்றுவதைப் பார்த்தால் ‘உருப்படாத பய…’ என்று தான் சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

உண்மைப் பெயர் கோபாலகிருஷ்ணன். அவனுக்கு அப்படியொரு நல்ல பெயர் இருக்கிறது என்று அநேகம் பேருக்குத் தெரியாது. எல்லாரும் அறிந்தது மணி‚ திருட்டு மணி‚ என் பெரிய அண்ணனின் கிளாஸ்மேட்டாகச் சேர்ந்து, என் அடுத்த அண்ணனோடு படித்து, என்னோடும் வகுப்பில் ஒண்டிக் கொண்டவன். புரியும் என்று நினைக்கிறேன். அதாவது நான் ஒன்றொன்றாகத் தாண்டி அவன் வகுப்புக்குப் போய்ச் சேர்ந்தேன். தற்பெருமை என்று கருதினால், மணி அதே வகுப்பில் இருந்தான் என்று எளிதாகக் கூறிக் கொள்ளலாம்.

தத்தித் தத்தி முப்பத்தஞ்சு மார்க் எடுத்தால் போதும். அடுத்த வகுப்பில் தூக்கிப் போட்டு விடுவார்கள். இவன் இங்கிருந்து தொலைந்தால் போதும் என்று தள்ளிவிடுவது தான் மூன்றாவது வருஷத்துப் பாஸ்‚ அப்படித் தாண்டி வந்தவன் தான். படிப்பில் நாட்டம் இல்லை. சுதந்திரமாய்த் திரிவதிலும், ஊரோரக் குன்றுப் பக்கம் சென்று, வாட்டர் டேங்க் பின்னால் மறைந்து, யாருக்கும் தெரியாமல் சிகரெட் அடிப்பதும் தான் வேலை. சினிமாத் தியேட்டர் பக்கம் திரிவதும் ரொம்பவும் பிடித்தமானது. மணி ஒரு சிவாஜி ரசிகன். அந்த அளவுக்கான ரசனை அவனிடம் இருக்கத் தான் செய்தது. அந்த வயதிலேயே அவனைப் புரிந்து கொண்டு அவனுக்கு வேண்டியவர்கள் சினிமாப் பக்கம் அவனைத் தள்ளி விட்டிருந்தால் நன்றாக வந்திருப்பானோ என்னவோ?

அந்த வாரம் வெள்ளிக்கிழமை என்ன படம் மாற்றப் போகிறார்கள் என்று பார்த்து, அது சிவாஜி படமாயிருந்தால், ராத்திரி முழுக்க முக்கியமான இடங்களில் தவறாமல் போஸ்டர் ஒட்டுபவனோடு அலைவான். எந்தவொரு இடங்களிலும் விடுபட்டுப் போய்விடக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பான். குறிப்பாக எங்கள் தெருக்களில் எந்தெந்த இடம் என்று அவன் வரையறுத்து வைத்திருப்பது மாறவே மாறாது.

மறுநாள் தெருக்களில் வண்டி தள்ளிக் கொண்டு வரும் போது கூடவே நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டு வருவதும் அவன் வேலையாயிருக்கும். சிவாஜி ரசிகன் என்ற முறையில் இது தன் தலையாயப் பணி என்று அவனே வரித்துக் கொண்டிருந்தான்.
பெரும்பாலும் தினசரி ரெண்டாம் ஆட்டம் முடியும் வரைக்கும் விழித்திருப்பது அவன் வழக்கமாயிருந்தது. ஜனத்தோடு ஜனமாகப் புறப்பட்டு வந்து ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் விழுந்து உறங்கிவிடுவான்.

"ராத்திரி எங்கேடா போனே?" என்று கேட்டால் "கோவில் திண்ணைல தானே படுத்திருந்தேன்…" என்பான். கடவுளின் காலடியில் தானே படுத்திருக்கிறான்… அப்படியாவது நல்ல புத்தி வரட்டும்… என்பது போல் விட்டுவிடுவார் அவன் தந்தை. அதற்கு மேல் அவனிடம் எதுவும் யாரும் கேட்டுக் கொள்ள முடியாது. ரொம்பவும் கேட்டு, ஒருமுறை தன் அப்பாவையே பிடித்துத் தள்ளிவிட்டு, அவர் மண்டை காயமாகி, தர்மாஸ்பத்திரிக்குச் சென்று கட்டுப் போட்டு, ஏக களேபரமாகிவிட்டது.

"என்ன மணி, எப்படியிருக்கே?" என்பதோடு சரி, அதைக் கூட அவனிடம் கேட்டு ஏன் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று சென்று விடுவர் பலர்.

அவன் தந்தை ஒரு பாவப்பட்ட ஜென்மம். பாகவதர் மாதிரி தலையை வளர்த்துக் கொண்டு யாதா யாதா என்று வாயில் முனகும் ஏதோவொரு ஸ்வர ராகத்தோடு அலைந்து கொண்டிருப்பார். அவர் முனகுவதே அவருக்குக் கேட்காது. காது டமாரச் செவிடு. அதனாலேயே அவரிடமும் யாரும் எதுவும் பேச்சுக் கொடுக்கமாட்டார்கள். தெருவே அலறும்படி சொன்னால் தான் கொஞ்சூண்டு கேட்கும் அவருக்கு.

விரும்பியோ, விரும்பாமலோ, எல்லோருக்கும் நண்பனாக இருந்தான் அவன். நண்பன் என்றால் இவன் எனக்கு நண்பன் என்று மற்றவர்கள் இவனைச் சுட்டிச் சொல்வதில்லை தான். ஒருவனை அறிய அவன் நண்பனைப் பற்றி அறி… என்கிற வரையில் இவனைப் பற்றிச் சொல்ல முடியுமா?

ஆனால் எல்லாரோடும் கலகலப்பாகவும் விடாப்பிடியாகவும் பழகிக் கொண்டிருக்கிறானே? பிறகு வேறெப்படி உதறுவது?

(தொடரும்)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

  1. A. Ravi

    உஷா,
    ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளறி விட்டு விட்டீர்கள். அடுத்த பகுதி எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ரவி.

Comments are closed.