சீனாவிலுள்ள பெண்களின் இராஜ்ஜியம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மோசோ (Mosuo) இனத்தவர்கள் என அறியப்படும் இவர்கள் திபெத்தின் எல்லையை ஒட்டியுள்ள சீனப் பகுதியில் யுனான் (Yunnan), சிச்சுவான் (Sichuan) ஆகிய இரு சீன மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அதுவும் 50,000 மக்கள் வரையில்தான் காணப்படுகின்றார்கள்.
சரி எல்லாம் இருக்கட்டும்! எதற்காக இந்தப் பகுதியைப் ‘பெண்களின் இராஜ்ஜியம்’ என அழைக்கின்றார்கள்? காரணத்தோடுதான்!
இங்கே ஆட்சியாளர்கள் பெண்கள்தான்! இவர்கள் அகராதியில் ‘அப்பா’ எனும் சொல்லே இல்லை. தாயிடமுள்ள சொத்து, அடுத்து மகளுக்குப் போய்ச் சேர்கின்றது. ஆண் பிள்ளைகள் வீட்டில் இருப்பது பெயருக்கு மட்டுந்தான். பெண் பிள்ளைகள் தங்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டதும் ஆண்கள் தொடர்ந்து பெண்ணின் வீட்டிலேயே தங்குவார்கள். பிள்ளைகளும் தாயின் வீட்டிலேயே வாழ்வார்கள். திருமணம் என்கிற பேச்சே இங்கு கிடையாது. காதல்வயப்படும் ஆண், பெண்ணின் வீட்டில் ஒரு நண்பனாகச் சந்தித்துக் கொள்ளலாம். எத்தனை காதலர்களை வேண்டுமானாலும் பெண்கள் வைத்துக் கொள்ளலாம்!
‘அட! இதென்ன வாழ்க்கை முறை’ எனக் கேட்கத் தோன்றுகின்றதா? இது மட்டுமில்லை, இங்கு விவாகரத்து என்பது கிடையாது. ஒரு பெண் தான் விரும்பும் எந்த நேரத்திலும் ஆணுடனான உறவைக் கத்தரித்துக் கொள்ளலாம். ஆணும் பெண்ணும் ஒருபோதும் இணைந்து வாழ்வதில்லை என்பதால், வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருப்பதில்லை. பங்கு போட்டுக்கொண்ட காணிநிலம், பணம், பிள்ளைகளை யார் வளர்ப்பது என்கிற மோதல் போன்ற எந்தப் பிரச்சினையும் இங்கு இல்லை. மேலும், இங்கே பாலியல் தொழிலோ, பாலியல் வன்கொடுமையோ எவருமே கேட்டிராதவை. சீனாவின் மற்றைய பகுதிகளில் இல்லாத ஒன்றாக, பெண் குழந்தை பிறந்தால் பெரிதாக ஆரவாரம் செய்து குழந்தையை வரவேற்கிறார்கள்.
இப்படியான வாழ்க்கை இந்தச் சமூகத்தினருக்கு முழுத் திருப்தியைக் கொடுக்கின்றதா? நிச்சயமாக! சீன அரசு எவ்வளவோ அழுத்தங்கள் கொடுத்தும், இவர்கள் தம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார்கள். இங்குள்ள ஆண்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்வது என்ன தெரியுமா? "நாங்கள் இந்தப் பெண்களை மாத்திரமே திருடுகின்றோம்; அவர்கள் பொருட்களை அல்ல!"
ஒரு பையனுக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டால், அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் மூன்று தடவைகள் தட்டுவான். அந்த இளைஞனை அந்த இளம்பெண்ணும் விரும்பினால் அவளும் பதிலுக்கு மூன்று தடவைகள் அவன் உள்ளங்கையில் தட்டுவாளாம். எப்படி இருக்கின்றது இவர்கள் காதல் பரிமாற்றம்? இப்பொழுதெல்லாம் தங்களிடம் கைப்பேசிகள் புழங்குவதால் தகவல் பரிமாற்றங்கள் மூலம் நமது விருப்பு வெறுப்புகளைப் பரிமாறிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது என்கிறார் இந்தச் சமூகத்தின் 18 வயது அழகி ஒருவர்!
பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் வீடுகளில் மின்சாரம் வந்தது. சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வருவதால் டாலர் புழக்கம் இங்கு தாராளமாகி இருக்கின்றது. இதனால், பல புதிய மின்னியல் சாதனங்களின் வரவு இவர்களிடையே அதிகரித்திருக்கின்றது. பல வீடுகளில் இன்னமும் நீர் விநியோகம் கூட இல்லை; என்றாலும், இணையத் தொடர்புள்ள ஐபாட் வைத்திருக்கின்றார்கள். ஏரிகளிலிருந்து கொணர்ந்த நீரால் நிரப்பப்பட்ட சலவை இயந்திரங்கள் வைத்திருக்கின்றார்கள். நவீன கார்களுக்கும் சொந்தக்காரர்களாகி இருக்கின்றார்கள்.
இங்கு பிரபல்யமாக இருக்கும் லூகு (Lugu) ஏரிக்குப் போய்வருவது முன்பெல்லாம் பெரிய சிக்கலான ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஏரிக்கு மிக அண்மையில் உள்ள நகரிலிருந்து பேருந்தில் பயணித்தால், அது ஏறத்தாழ ஒரு முழு நாள் பயணம். சாலைகள் நன்றாக இல்லாததால், பயணமுடிவில் எலும்புகளை அடித்து நொறுக்கிய உணர்வுதான் ஏற்படும். ஆனால், இப்பொழுதோ சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக இங்கு வந்து போகின்றார்கள். இதனால் சாலைகள் புதுமைப்படுத்தப்பட்டு விட்டன. முன்பெல்லாம் 8 மணி நேரப் பயணமாக இருந்தது ஆறு மணி நேரமாகக் குறைந்திருக்கின்றது. 2011 இல் மாத்திரம் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொகை 5,70,000. 2010 இல் வந்தவர்களை விட இது இருமடங்கு என்கிறார்கள்.
இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வருவது இங்குள்ள பெண்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்ப்பதற்குத்தான்! சொத்துக்களை இங்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் பெண்கள்தான். வீட்டு வேலைகளை அதிகம் செய்பவர்களும் பெண்கள்தான். பிள்ளைகளை வளர்ப்பவர்களும் இவர்கள்தான்!ஆண்கள் தமது சகோதரிகளுக்குப் பிள்ளை வளர்ப்பில் கைகொடுக்கின்றார்கள். பாட்டிமார் தெய்வங்கள் போல மதிக்கப்படுவதோடு அவர்கள் சொல்வதை யாரும் மறுப்பதில்லை.
திருமண பந்தம் என்று எதுவும் இன்றி, ஆண் என்பவன் இரவில் வந்து போகும் ஒருவனாக மட்டுமே இருக்கும் இந்தச் சமூகம் முழு உலகையுமே பிரமிப்படைய வைத்திருக்கின்றது! இரவில் பெண்ணோடு தங்கியிருக்கும் ஆண், விடிவதற்குள் வீட்டை விட்டுப் போய்விடுவான். பெண் கர்ப்பம் தரித்தால் மாத்திரம் ஆணின் விபரம் வெளியே வரும். இந்த ஆண் ஒரு காதலனாக உறவைத் தொடர முடியும். விரும்பிய சமயம் பெண்ணை விட்டுவிட்டுப் போய்விடலாம். இந்த ஏற்பாடெல்லாம், பரம்பரைச் சொத்து பெண்கள் கையை விட்டு நழுவி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் செய்து கொண்டவைதான் என்கிறார்கள்.
இந்த பந்தம் 7ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தச் சமூகத்தில் இருந்து வருகின்றது என்கிறார்கள். குடும்பச் சொத்தைப் பாதுகாக்க எண்ணி அன்றைய காலத்தில் செய்து கொண்ட ஏற்பாடு இன்றும் தொடர்வதாகச் சொல்கின்றார்கள். முன்பே சொன்னது போல், கடந்த 50 ஆண்டுகளாகச் சீன அரசு இங்கு திருமண பந்தத்தைக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இவர்கள்தான் மாறுவதாக இல்லை.
சுற்றுலாப் பயணிகள் இங்கு நிறையப் பேர் வருவதால் பணம் புரள்வது உண்மைதான். நாடு வளர்கின்றது என்பதும் உண்மைதான். ஆனால், அதனால் பக்க விளைவுகளும் உண்டு!
முன்பெல்லாம், ஆளுக்கு ஆள் உதவுவது பரவலாக இருந்து வந்தது. சுற்றுலாப் பயணிகள் வருகைக்குப் பின்னர், அவர்களிடமிருந்து சில கெட்ட பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு இணைந்து செயற்படுதல், பகிர்தல் என்பவற்றையெல்லாம் தம் மக்கள் புறந்தள்ளத் தொடங்கி விட்டார்கள் என்று குறைப்படுகின்றார் இங்குள்ள ஒருவர். கட்டற்ற காதல் எனும் பெயரில் இங்கு பல இளம்பெண்கள் வந்து, இங்குள்ள ஆண்களோடு பாலியல் தொடர்பு வைத்துவிட்டுப் போய்விடுகின்றார்கள். இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு! அது மாத்திரமில்லை, சில பெண்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் உறவு வைத்துக் கொள்கின்றார்கள். "இதற்கு எந்தவிதமான தீர்வும் இல்லை. சுற்றுலாப் பயணிகள் நமக்குப் பணம் கொண்டு வருகிறார்கள் அல்லவா" என மேலும் சலித்துக் கொள்கிறார் இவர்.
இந்தச் சமூகத்தின் 26 வயது இளம்பெண் ஒருத்தி கூறும்போது, "என் விருப்பம் சுற்றுலாப் பயணி ஒருவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வதுதான். இங்குள்ள இளம் ஆண்கள் சோம்பேறிகளாக மாறியிருக்கின்றார்கள். வெளிநாட்டவர்களில் பலரை எனக்குத் தெரியும். அவர்களுக்கு வீட்டு வேலைகளை நன்றாகச் செய்யத் தெரிந்திருக்கின்றது. இப்பொழுது பாருங்களேன், நாம் –பெண்கள்- இரவு உணவு தயாரிப்பதற்காகப் பல வேலைகளை ஓடியாடிச் செய்த வண்ணமாக இருக்கிறோம். ஆனால், இந்த இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்களேன்! பியர் குடித்துக் கொண்டு, சீட்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்" என்கிறார்.
இப்படிச் சில பிற்போக்குகள் இருந்தாலும், இந்தப் பெண்களின் இராஜ்ஜியம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், பெண் குழந்தை பிறந்தால் அதைச் சிசுவாக இருக்கும்போதே கொல்கின்ற வழக்கம் இருக்க, இதே கண்டத்தில் முற்றிலும் பெண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமூகம் பெருமைக்குரியதே! வீட்டு ஆட்சியை முழுக்க முழுக்கத் தம் கையில் எடுத்துக் கொண்டு பல நூற்றாண்டுகளாக இதைத் தொடரும் இந்தச் சீனப் பெண்கள் வியப்புக்குரியவர்கள்! நாங்கள் பலவீனமானவர்கள் இல்லை என அடித்துச் சொல்லும் இவர்கள் வித்தியாசமானவர்கள் மாத்திரமில்லை, ஆண்களை அல்லவா பலவீனர்களாக்கி விட்டார்கள்! பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் எனச் சொல்வது இதனால்தானோ!