நான் எப்பொழுது கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால், எப்பொழுது பார்க்க ஆரம்பித்தேனோ, அப்பொழுது முதல் இன்று வரை கிரிக்கெட் பைத்தியம் பிடித்து அலைகின்றேன். அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு, இந்தியாவில் நடக்கும் விளையாட்டுகளைக் கூட விடிய விடிய தூங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தற்பொழுது நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலியா தொடர் கூட விதிவிலக்கல்ல. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அவற்றை விடாமல் பார்த்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு – சவுரவ் கங்குலியின் ஆட்டத்தை இனிமேல் பார்க்க இயலாது என்பதுதான்!
1999ல் உலகக் கோப்பை முடிந்து சில நாட்களில் தென் ஆப்ரிக்க அணியின் அன்றைய கேப்டன் ஹேன்ஸீ க்ரோன்யே மீது “மேட்ச்-ஃபிக்ஸிங்” புகார்கள் வந்தன. நம் முகமது அசாருதீனும் அதில் மாட்டிக் கொள்ள, வாழ்க்கையில் அவர் இனிமேல் விளையாடக் கூடாதென்று தடை விதிக்கப்பட்டது. அவ்வளவுதான் – இந்திய கிரிக்கெட் படுத்தது. அணியின் தலைவர் என்று யாரை நியமிப்பதென்று தெரியவில்லை. சச்சின் வேலைக்கு ஆகவில்லை. தலைவர் பொறுப்பை அவரே மறுத்துவிடுவார். யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்ற கவலை அனைவருக்கும் இருந்தது.
என் தந்தை என்னிடம் வந்து (நான் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொன்னாரோ என்னவோ!), “பாருடா, எல்லாரும் பெட் கட்டி ஆடறாங்க! இதெல்லாம் ஒரு ஆட்டமா!” என்று சொல்ல, நானும் கிரிக்கெட் பார்ப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன். ஆம், முற்றிலும் உண்மைதான், நிறுத்திவிட்டேன். அந்த இக்கட்டான நிலையில், தைரியத்துடன் தலைமைp பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கங்குலி. ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அணிக்குப் புத்துயிரூட்டினார். ஆங்கிலத்தில் சொல்லப்படும் “aggressiveness” எனும் உணர்வை அணியினரிடம் தந்ததுதான், கங்குலியின் மிகப் பெரிய சாதனை ஆகும்.
வேடிக்கையான விஷயம் என்னவென்றால், “கர்வம் பிடித்தவர்” எனுங்காரணம் காட்டியே அவரின் ஆரம்ப காலத்தை வீணடித்து விட்டார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்றி இரண்டிலேயே கங்குலி நம் அணிக்காக விளையாடினார் என்று சொன்னால் சிலர் ஆச்சரியம்தான் படுவார்கள். ஆமாம், ஒரே ஒரு ஒரு நாள் போட்டியில் மூன்று ஓட்டங்கள் எடுத்தார். “உனக்கு ரொம்பவும் ஆணவம்” என்று சொல்லி, அவரை மீண்டும் ரஞ்சி போட்டிகளில் விளையாட அனுப்பி வைத்து விட்டார்கள். நான்கு வருடங்கள் கழித்து தன் முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடினார் – சதம் அடித்தார். இரண்டாவது போட்டியிலும் சதம். அப்பொழுதே பலருக்கு புரிந்து விட்டது, ஒரு அருமையான விளையாட்டு வீரர் கிடைத்து விட்டார் என்று.
போகப் போக ஒரு நாள் போட்டியிலும் தன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். டெண்டுல்கருடன் இணைந்து புரிந்த சாதனைகள் பல. உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்கள்தான் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 1997ல் சஹாரா கோப்பையின் ஐந்து போட்டிகளில் நான்கு முறை “ஆட்ட நாயகன்”. மனிதர் பாகிஸ்தானை பந்தாடிவிட்டார் – பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூட!! பிறகு டாக்காவில் மீண்டும் பாகிஸ்தானுடன் மோதி, மீண்டும் அபார வெற்றி – உலகிலேயே அதிகப்படியான ஓட்டங்களை துரத்தி ஜெயித்தோம். 1999 உலகக் கோப்பையில் ஸ்ரீலங்காவை ஒரு அடி அடித்தாரே – என் ஃப்ரென்ஞ்சு க்ளாஸ் கட்டடித்து பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
அதன் பிறகுதான் என்ன நடந்தது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே – நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு – கல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை நாம் விளாசும் வரை. தன் அருமையான கேப்டன்சியின் மூலம் கடைசி நாளின் கடைசி இரண்டு மணி நேரத்தில் ஏழு விக்கெட்டுகளை விழ வைத்து இந்திய அணியினரை சாதனை படைக்கச் செய்தார் கங்குலி. என்னை மீண்டும் கிரிக்கெட் பார்க்கச் செய்த பெருமையும் கங்குலியைத்தான் சேர்கிறது.
அவர் வருகைக்கு முன்னர் வரை, கடல் தாண்டி சென்று கிரிக்கெட் விளையாடினால், நாம் கண்டிப்பாக தோற்றுப் போவோம் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. அதை அடியோடு கங்குலி மாற்றினார். நம்மாலும் வெளிநாடுகளில் விளையாட முடியும் என்று நிரூபித்தார். அதன் பிறகுதான், நாம் எல்லா நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஜெயிக்க ஆரம்பித்தோம் – ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் நம்மால் நமது திறமைகளைக் காட்ட முடிந்தது.
இவரது பேட்டிங் திறமைகள் அனைவரும் அறிந்ததே!! ராஹுல் ட்ராவிட் ஒரு முறை அவரைப் பற்றிச் சொன்னார், “ஆஃப் ஸைடில் முதலில் கடவுள் இருக்கின்றார், பின்பு எங்களுக்கு கங்குலிதான்!” அவ்வளவு அழகாகவும் அவ்வளவு துல்லியமாகவும் ஆஃப் ஸைடில் ஆடக்கூடியவர் கங்குலி. எப்படி பந்து வீசினாலும் விளாசிவிடுவார்.
இவரை எப்படியாவது அவுட் ஆக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியினர் ஒரு திட்டம் வகுத்தனர். அனைத்து ஃபீல்டர்களையும் ஆஃப் ஸைடிலேயே நிறுத்தி கங்குலியை அவர்களுக்கு “கேட்ச்” கொடுக்க வைத்து, கங்குலியின் தன்னம்பிக்கையைக் குறைத்தனர். அவர்களின் யுக்தி வேலை செய்தது. இன்னொரு பக்கமாக, “ஷார்ட் பால்” எனப்படும், பிட்சில் குத்தி எகிறும் பந்து கங்குலிக்கு எதிரி என்பதையும் கண்டுபிடித்து, அவரை திணறச் செய்தார்கள்.
கங்குலியின் இறங்குமுகம் ஆரம்பமானது. இருந்தும் அவர் கேப்டன்சியின் திறன் குறையவே இல்லை. 2003ல் ஆஸ்திரேலியாவில், முதல் டெஸ்டை அவர்தான் ட்ரா செய்து கொடுத்தார். இரண்டாம் டெஸ்ட் ஜெயிக்கவும் அவர் கேப்டன்சி உதவியது. (ராஹுல் ட்ராவிட் தான் அந்த வெற்றிக்கு உரிமையாளர் என சொன்னால் அது மிகையாகாது.) ஆனால், அந்த ப்ரிஸ்பேன் சதத்திற்குப் பிறகு கெட்ட நேரம் ஆரம்பித்தது. சில நாட்களில் க்ரெக் சேப்பல் வந்து சேர, அவருடன் பிரச்சினை ஏற்பட அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவ்வளவுதான் கங்குலி என்று நினைத்தோர் பலர். ஏன், நானும் கூடத்தான். “உங்கள் நினைப்பில் மண் விழ..” என்று திரும்பினார் கங்குலி. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக எண்பத்தி மூன்று ஓட்டங்கள் எடுத்து ஜெயித்துத் தந்தார். விளையாட்டுகளில் இதனை மிகச் சிறந்த “கம் பேக்” என்று கருதுவோர் பலர். அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து நன்றாகவே விளையாடினார். தென் ஆப்ரிக்காவிடம் கான்பூரில் விளையாடிய போது, வேறொருவராலும் விளையாட முடியாத பிட்சில் பொறுமையாக விளையாடி வெற்றியைத் தேடி தந்தார். போறாத காலம், ஏனோ ஸ்ரீலங்காவில் மெண்டிஸ்ஸின் கேள்விகளுக்கு இவரிடம் பதில்கள் இல்லை.. ஏன், நம்மில் யாரிடமும் இல்லை. மீண்டும் இரானி ட்ராஃபியில் ட்ராப் செய்யப்பட்டார்.
கடைசியில் “போதுமடா சாமி” என்ற நினைப்புடன் ஆஸ்திரேலியத் தொடருக்கு சற்று முன்னர் தன் ஓய்வைப் பற்றி தெரிவித்தார். நான்கு போட்டிகளிலும் அற்புதமாகவே விளையாடினார். இரண்டாம் போட்டியில் சதம் அடித்தார். நான்காம் போட்டியில் டெண்டுல்கருக்கு பிறகு பிடி கொடுத்து ஆடியது இவர்தான் – எண்பத்தி ஐந்து ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிக்காதது ஏமாற்றம் அளித்தது என்று பின்னர் கருத்து தெரிவித்தார். இரண்டாம் டெஸ்ட் போட்டியிலும் சரி, நான்காம் போட்டியிலும் சரி, நாம் ஜெயித்தது அவருக்கு சந்தோஷத்தை அளித்திருக்க வேண்டும். இரண்டிலும் அவரின் பங்கு பலமான பங்கு.
கடைசி போட்டியின் “ஹைலைட்” கடைசி பத்து நிமிடங்கள்தான். கங்குலியை மகிழ்ச்சியின் உச்சிக்கு எடுத்துச் சென்ற அந்த பத்து நிமிடங்கள். தோனி, தன் பெருந்தன்மையை உலகிற்குக் காட்டிய பத்து நிமிடங்கள். அவருக்குத் தெரியும் – இந்திய கிரிக்கெட்டை உயர்த்திய கேப்டன் கங்குலிதான் என்று. அதனால்தானோ என்னவோ, கிரிக்கெட்டில் கங்குலியின் கடைசி நிமிடங்களில் அவரையே கேப்டனாக இருக்கச் சொன்னார். ஒன்பதாவது விக்கெட் விழுந்தவுடன், அவர் தோளின் மீது கை போட்டு, சிரித்துக் கொண்டே விஷயத்தைத் தெரிவித்தது கண்கொள்ளா காட்சி. சில வருடங்களுக்கு முன் இருந்த கங்குலியைப் பார்ப்பது போல இருந்தது. கைகளைத் தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தி, பந்து வீச்சாளர்களுக்கும் ஃபீல்டர்களுக்கும் ஆணைகள் இட்டு, மீண்டும் கேப்டனான கங்குலியைப் பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கங்குலியும் நெகிழ்ந்திருக்கத்தான் வேண்டும்.
தன் வீட்டிற்குத் திரும்பி வந்து பேட்டி அளித்த கங்குலி சொன்னார், “கிரிக்கெட்டைப் பிரிதல் துயரம் தரவில்லை. ஆனால், அணியினரைப் பிரிதல் துயரமாக உள்ளது!” ஆம், வாழ்க்கையில் ரொம்பவும் பட்டுவிட்டார். இருந்தும், இந்திய கிரிக்கெட் கண்ட தலை சிறந்த கேப்டன் என்ற பெயருடன்தான் கிரிக்கெட்டை விட்டுப் பிரிகிறார். வேறு எந்த கேப்டனும் காணாத இருபத்தியோரு டெஸ்ட் வெற்றிகள்.
ப்ராட்மேனைப்போல இவரும் தன் கடைசி இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். ப்ராட்மேன் அபாரமான ஆட்டக்காரர் தான், அவருக்கும் கங்குலிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதுதான். இருந்தும், இந்திய அணியின் பழைய நிலைமையையும் இன்றைய நிலைமையையும் கணக்கிட்டுப் பார்த்தால், ப்ராட்மேன் ஆஸ்திரேலியாவிற்கு சேர்த்த பெருமையைவிட கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு சேர்த்த பெருமை அதிகம்தான் என்று எண்ணத் தோன்றுகிறது!
மனுஷன் சரியா டைமிங்ல உத்தரவு வாங்கிக்கிட்டாரு..
டிராவிட்டும் கிளம்புறது ரொம்ப நல்லது.
சச்சினும் கூட வெளியேறலாம். சாதிக்கிறதுக்கு நெறய ஆட்கள் காத்துக்கிட்டு இருக்காங்க. சீட்டைத் தேய்க்காதீங்கப்பா.. தமிழ்நாட்டுப் பெருந்தலைகள் போல!!