மழை நேர
தண்ணீர் திவலைகள்…
கரையாதிருக்கும் பெருங்கல்
பிரபஞ்சத்தை வரையும்
தூரிகையோரம்
நனைந்து வழிகிறேன்
அழகானதுன் அமைகை
பாறையடியில் பத்திரமாய்
சிதறல்களின் இரைச்சலை நுகர்ந்தபடி…
எனக்கோ மழைக்கோ பயந்து
யாரென்று உணரும் தயக்கத்தில்
பாதம் வருடி
ஒதுங்கிக்கொள்கிறது
கடல் நத்தை
இயற்கையை, இயல்புகளை
எழுத்தாக்கும் ஓவியன் நானென்று
சொல்ல தவிக்கையில்
உள்ளங்கை தவழ்ந்து
உணர் கொம்புயர்த்தி
இதயமுணர்கிறது நத்தை
முத்தத்து வாசனை இணக்கத்துடன்…
ஓட்டில் தொடர்ந்த ஓவியத்துள்
நீ மட்டுமே நிறைகிறாய்!
வண்ணங்கள் வெற்றிடமாக்கி..
நாளையுனது அறிமுகத்தில்
அங்குலம் அங்குலமாய் பெருகிவிடும்
ஆச்சர்யத்தில் ஜீவிக்கிறது கடல்.
இன்னமும் நான்
கலைகளின் அமிலத்துள்
கரைகின்ற ஓவியனாய்…
எழுத்தோவியம் அழகாக உள்ளது. கலையமிலம் இன்னும் கரைக்கட்டும் உங்களை. அழகான கவிவரிகள்.