அரிதான மானிடப் பிறவியின் கண்களில்
அறிவொளியைப் பாய்ச்சிடுபவள்
அகர முதல எழுத்தென்று போதிப்பவள் கல்வி
அட்டியின்றி யேவழங்குவாள்
புரியாத அறியாத தெரியாத பாதையில்
புத்தொளியாம் ஞானசக்தி
பொன்வைரம் போலெழிலாள் பிரம்மப் பிரியையவள்
புதுவெள்ளைத் தாமரையினாள்
சரியாத கம்பனுயர் சொற்களில் மயங்குவாள்
சகலகலா வல்லியவளே
சாயங்கள் வேண்டாது தூயவெள் ளாடையில்
சந்தோசம் கொள்கின்றவள்
சரஸ்வதி நரசிம்மி சாமுண்டி நவராத்திரி
சமபங்கில் மூன்றானவள்
சர்வமும் வீணையிசை வாணியருள் நாம்பெறவே
சாத்திரங்க ளைப்போற்றுவோம்!
“