மொழி இல்லாமல் மக்களுக்கு கலையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் நடனக் கலைக்குப் பெரிய பங்கு உண்டு. நம் கலாசாரத்தின் வெளிப்பாடாக முதலில் இருப்பது பரதம்தான்.
பரதத்தை கலாசாரத்தின் அடையாளமாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மனிதனிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டிய கலையாகப் பார்க்கிறார் பரத கலைஞர் ராதிகா சுரஜித். திரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின்
இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர் என அவரது பன்முகங்கள் இன்றைய மீடியாவின் எலக்ட்ரானிக் லென்ஸ்களில் பதிந்திருக்கின்றன.
அவருடைய கலை வாழ்க்கையை அவர் வீட்டில் பிரேமிற்குள் அபிநயம் பிடித்து நிற்கும் படங்கள் பறை சாற்றுகின்றன. கல்லூரி மாணவியைப் போல் குதூகலமாய்ப் பேசும் இவரை நாட்டியம் இன்னும் இளமையாக வைத்திருக்கிறது. வாசலின் முன்பு வெள்ளை தேவதையாய் ஒரு ஆளுயர குதிரை தோட்டத்துக்கு நடுவே அழகாக நின்று கொண்டிருக்கிறது. இவரது திறமையின் நினைவுச் சின்னங்களாய் அவர் வீட்டு வரவேற்பறையில் அவர் குவித்த விருதுகள் பேசுகின்றன. செல்ல உபசரிப்போடு நம்மிடம் தன் கலைப் பயணம் பற்றிப் பேசுகிறார்.
உங்க நாட்டியப் பயணம் எங்கு ஆரம்பித்தது?
மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த சராசரி நடுத்தரக் குடும்பம் எங்களுடையது. பெண்ணா மூணு பேரும் பிறந்ததை நினைச்சு எங்க அம்மாவிற்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எங்களை பரதநாட்டியம் கற்றுக் கொள்ள அனுப்பினாங்க. எங்கள் மீது அதிக நம்பிக்கை எங்க அம்மாவிற்கு இருந்தது.
பிரபல நாட்டிய குரு தனஞ்செயன் அவர்களுடைய முதல் மாணவி நாங்க மூவரும். ‘டிரையோ சிஸ்டர்ஸ்’ என்ற பெயரில் நாங்கள் மூவரும் பல ஆயிரக் கணக்கான நிகழ்ச்சிகள் உலகம் முழுதும் பண்ணிட்டோம். அவை அனைத்திற்கும் சிறந்த விமர்சகர் யார் என்றால் எங்கள் அம்மாவைத்தான் சொல்வோம். ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக என் மீடியா பயணம் ஆரம்பித்தது. நான் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். இரண்டு வருஷம் சாப்ட்வேர்ல வேலை பார்த்தேன். ஆனா என் மனசு முழுவதிலும் பரதம்தான் இருந்தது. அதனால் என்னால் அங்கு வேலை பார்க்க முடியல. என் கால்களைக் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. உடனே நடனம்தான் வாழ்க்கைனு தீர்மானிச்சிட்டேன்.
பரதக்கலை சபா ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமானது என்பதை ஒரு பரத கலைஞரா நீங்க ஒத்துக்கறீங்களா?
அந்த நிலையை மாற்றத்தான் என்னுடைய நடனத்தையே ஆயுதமாக வைத்திருக்கிறேன். வெகுஜன மக்களுக்கு கலை மூலம் போய்ச் சேர வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதை நான் ஒவ்வொரு முறையும் செய்து வருகிறேன். என்னுடைய நாட்டியம் மூலம் நிறைய சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளேன். காடு பாதுகாப்பு, எயிட்ஸ் விழிப்புணர்ச்சி, தண்ணீர் சேமித்தல், இப்படி தனி மனிதர்களுடைய பிரச்சினைகள் பொது உடமை ஆக்கப்பட்டிருப்பதைப் பற்றி நாடக நாட்டியங்கள் செய்திருக்கிறேன்.
முதன்முதலில் ஆண்டாள் பிரியதர்ஷனி, வைரமுத்து அவர்களுடைய புதுக்கவிதைகளுக்கு அபிநயம் பிடித்தது நான்தான். அவை எல்லாமே பாமரனுக்கும் போய் சேரக் கூடிய விஷயங்கள்தானே. கண்ணதாசனுடைய பாடல்களுக்கு என் கால்கள் ஜதி பாடியது.
நிறைய பேர் சபாக்களில் திரைப் பாடல்களுக்கு பரதம் ஆடியதைப் பற்றிக் கேட்பார்கள். ஆனால் நான் கேட்ட ஒரே கேள்வி அவர்களிடம், “நடனம் நல்லா இருந்ததா?” உடனே அவர்கள், “ஓ … நல்லா இருந்தது.” அப்படி என்றால் ஏன் இதனை
ஏற்றுக் கொள்ளக் கூடாது? பரத இலக்கியத்தை சிதைத்து நான் எதுவும் செய்யவில்லை. அந்த இலக்கிய வட்டத்துக்குள்தான் என் கால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன.
மேலை நாட்டு நடனங்கள் மீது இன்றைய இளைய தலைமுறைகள் ஆர்வம் காண்பிக்கிறார்களே?
உலக நாடுகளின் மேடைகளில் பரதக்கலைக்கு வைத்திருக்கும் மரியாதையே வேறு. இந்தக் கலையை வெளிநாட்டினர் காதலித்துக் கற்றுக் கொள்கிறார்கள். புரியாத விஷயமாகவே நிறையப் பேர் பரதத்தைப் பார்ப்பதும், கற்றுக்கொள்ள ரொம்ப
கஷ்டமான விஷயம்னு நினைப்பதெல்லாம்தான் இதற்குக் காரணம். பரதம் கத்துக்க இன்று நிறைய பேர் முன் வருகிறார்கள்.
ரொம்ப எளிமையா பரதத்தில சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைக்கலாம். அது மட்டுமில்லாமல் மனசை தேவை இல்லாத விஷயத்தில் தலையிடாமல் கட்டுப்பாட்டோட வைத்திருக்கவும் பரதக் கலை உதவும். இவை எல்லாம் மேலை நாட்டு நடனங்களில் கிடைக்காது. முன்பு பணம் கட்டணுமேனு பயந்தாங்க. அப்படி கஷ்டப்பட்டு கத்துக்கிட்டாலும் அவர்களுக்கு அந்தத் துறையில் ஜொலிப்பது என்பது கைக்கு எட்டாததாகவே இருந்தது. இப்போது நிறைய பிளாட்பார்ம் அவர்களுக்காக காத்துக்
கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் மீடியாவின் உதவியால் புது தடம் கிடைத்துள்ளது. அதற்கு சாட்சி என்னுடைய ஜெயா டிவி நிகழ்ச்சி ‘தகதிமிதா’.
மற்ற சேனல்கள் வெஸ்டர்ன், குத்து பாட்டுனு எகிறும் போது நீங்க எப்படி 250 வாரம் தகதிமிதா பண்ணியிருக்கீங்க?
அதுதான் என்னோட சவால்னு நினைக்கிறேங்க. அதில் ஜெயிச்சிருக்கேனானு பார்க்கும் போது …250 வாரத்திலனு நிர்ணயிப்பதை விட அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு போட்டியாளரும் பெரிய வெற்றியை தொட்டவர்கள்தான். வெற்றி தோல்வி என்பதை விட இதில் பங்கேற்கும் போது அவர்கள் குடும்பம், மற்றும் உறவினர்களுக்கு ஏற்படும் சந்தோஷம் – அதுவே ஒரு வெற்றி தான்.
வெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.
நாட்டிய நங்கையான நீங்கள் சினிமாவில் நடனம் இயக்கிய பாடல்கள் எல்லாம் மென்மையானதாகவே அமைந்திருக்கிறதே?
மனசில நினைக்கிறத உடல் அசைவில் கொண்டு வருவதுதான் நடனம். சினிமாவில் கதைக்கு ஏற்ப அமைக்கணும். நமக்குத் தெரியும் என்பதற்காக நடனத்தைப் புகுத்தினா அது அந்த கதைக்கும், பாட்டுக்கும் இடையே சேராம தனியா நிற்கும். முதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க. நமக்கு சினிமா ஒத்து வருமாங்கிற சந்தேகத்தோடதான் போனேன். அந்த பாட்டைக் கேட்டதும் உடனே சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வரணும்னு தோணினது.
தங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார். அந்த மாதிரி
அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.
‘இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி. எனக்குக் கொடுக்கப்பட்ட கதைக்கேற்ப முழு திருப்தியோட என் வேலையை செய்திருக்கேன் என்ற மன நிறைவு. அதனை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு என் பாட்டுகள் எல்லாவற்றையும் ரசித்துள்ளனர்.
நாம் செய்யும் வேலையில் நமக்கு திருப்தியிருந்தால் மட்டும் தான் மற்றவர்களை திருப்திப்படுத்த முடியும். கலையை நமக்கு அப்பாற்பட்ட விஷயமாகப் பார்க்காமல் நம் வாழ்வில் தினம் பிரதிபலிக்கும் நிகழ்வாகப் பார்க்கணும். வெற்றிகளைத் தலைக்கு
கிரீடமாக்காமல் தோல்விகளை எடுத்துக் கொண்டு போராடும் போது தான் இந்தக் கலையை இன்னும் உயர உயர கொண்டு செல்ல முடியும்.
(நன்றி : தினமலர்)”