"காவிரிக்கரையிலுள்ள ஊஞ்சலூர் புரவிப்பாளையம் கிராமம். ஊர்த் தெய்வம் பகவதிஅம்மன். பக்தையான தேவாயம்மாளின் கனவில் தோன்றிய பகவதி அம்மன், "உன் விருப்பப்படி உன் குடும்பத்தில் பெண் குழந்தையாக நீரில் தோன்றுவேன்.." என்று கூறி மறைந்தாள்.
பதினைந்து வருடம் ஓடியது. தேவாயம்மாளின் ஒரே மகனுக்கும் பத்தொன்பது வயதாகி விட்டது. இனி பெண் குழந்தை பிறப்பது எப்போது?
எனினும் நம்பிக்கையிழக்காமல் அந்தக் குடும்பம் காத்திருக்கிறது!
ஒரு நாள் இரவு நடராசன்-சாந்தி தம்பதியரின் குடும்பத் தோட்டக் கிணற்றில் ஏதோ விழுந்தது போன்ற சப்தம். மஞ்சள் துணியால சுற்றப்பட்டு மூழ்கிக் கொண்டிருந்த அது ஒரு பத்து நாட்களே ஆன பெண் குழந்தை."
பதினைந்து வருடத்திற்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சி தேவாயம்மாளுக்குத் தெரிந்தது எப்படி? அவர் வழிபட்ட பகவதி அம்மன் விக்கிரகம் காரணமாக இருக்குமா? இப்படியான உறுத்தல்களுடன் மேலும் கற்களைப் பற்றித் தேடுவோம்.
6.6.2007 தினமலர் செய்தியைப் பார்ப்போம்.
எழுதப் படிக்கத் தெரியாத 3 வயதுச் சிறுவன். ஒரு நாள் பகவத்கீதை புத்தகத்தைத் திறந்து, தன் தாய் மொழியல்லாத சமஸ்கிருதத்தில் சுலோகம் படிக்க ஆரம்பிக்கிறான். இது எப்படி சாத்தியம்..?
கற்களிலுள்ள(குறிப்பாகக் கருங்கற்கள்) சக்தியைப் பற்றி அறிந்து உணர்வுப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்கள். தங்கள் வழிபாட்டுத் தலங்களில் விக்கிரகங்களாகக் கருங்கற்களைப் பயன்படுத்தினார்கள். ஏன்?
1. கருங்கற்களுக்கு உலோகத்தைவிட வலிமை அதிகம்.
2. அண்டத்திலுள்ள எவ்வித சக்தியையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை
3. பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கியவை ( நிலம்-பாறைச் செடி, நீர்- பாறை ஊற்று, காற்று – காற்று இருப்பதால் கல்லுக்குள் வசிக்கும் தேரை. நெருப்பு- இரண்டு கற்கள் உரசும்போது வெளிப்படுவது. ஆகாயம், அண்டம் போல எவ்வித சப்தத்தையும் உறிஞ்சிக் கொண்டு திருப்பித் தருகிறது)
என்று காரணப்படுத்தியுள்ளார்கள்.
இந்திரனின் கோபத்தால் கோகுலத்தில் கல் மழை பெய்ததாகவும், கண்ணன் அதைத் தண்ணீர் மழையாக மாற்றிக் கருணை புரிந்ததாகவும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடுகிறார்.
"கடுவாய்ச சினவெங்கண் களிற்றினுக்குக்
கவளமெடுத்துக் கொடுப்பவன் போல்
அடி வாயுறக்கையிட்டு எழப்பறித்திட்டு
அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை,
கடல்வாய்ச் சென்று மேகம்
கவிழ்ந்திறங்கிக் கதுவாய்ப்பட
நீர் முகந்தேறி எங்கும்
குடவாய் பட நின்று மழை பொழியும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே"
என்கிறார் பெரியாழ்வார்.
கற்களில் ஆண் கற்கள், பெண் கற்கள் மற்றும் அலிக்கற்கள் இருப்பதாக நமது பெரியவர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள். இவைகளைப் பற்றி விரிவாகப் பிறகு பார்ப்போம்.
மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் தலத்து இறைவனான தோன்றியப்பர் ரேகைகளற்ற (அலிக் கற்களால்) சுயம்புவாக உருவெடுத்துள்ளது வரலாறு.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி-திருக்கோவிலூர் சாலையில் ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு அர்த்த ஜாமத்தில் தேன் அபிஷேகம் செய்யும் போது பாணப் பகுதியில் அம்பிகை உருவம் தோன்றுவதும், தேன் முற்றிலுமாக வடிந்த பிறகு அம்பிகை உருவம் மறைந்து விடுவதும் தினம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசிக்கும் உண்மை.
விழுப்புரம் திருமாத்தூர் அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை அம்மன் திருக்கோயிலுள்ள திருவட்டப் பாறை பற்றி இப்போது பார்ப்போம்.
இத்தலத்திலுள்ள வட்டப் பாறை முன் நின்று பொய் சொல்லியவர்கள் கண் இழந்தும், தலை வெடித்தும், பாம்பு கடித்தும் மாய்ந்து போவார்கள் என்பது பலர் கண்கூடாகப் பார்த்த சரித்திர நிகழ்ச்சிகள்.
ஒரு முறை வட்டப் பாறை முன் பொய் சத்தியம் செய்து விட்டு, "வட்டப் பாறை தேவதை என்னைக் கொத்தி விடுமோ?" என்று கிண்டல் பேசிவிட்டுச் சென்றவனை, 8 மைல் தூரம் துரத்திச் சென்று ஒரு நாகம் தீண்டிக் கொன்றது. தீண்டிய இடத்தில் (விழுப்புரம்-செஞ்சி பாதையில் உள்ள தாங்கல்)-பாம்பின் தலையும், முத்தாம்பிகை அம்மன் காலடியில் பாம்பின் வாலும் கல்லாக மாறி இன்றும் பக்தர்கள் வழிபடும் தலமாக உள்ளது.
(தொடரும்)