அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் நாங்கள் குடியேறி இருபது வருடங்களாகி விட்டன. இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும் கால தேவனின் வேகம் பிரமிப்பை உண்டு பண்ணிற்று.
காஸ் அடுப்பில்வைத்த பருப்பைக் கடைந்து புளியைக் கரைத்து ரசப்பொடியைச் சேர்த்து கொதிக்க வைத்து விட்டு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையைக் கழுவிப் பொடியாக நறுக்கிப் போட்டு இறக்கி வைக்கையில் அழைப்பு மணி ஒலித்தது. காலைக் கட்டிப்பிடித்து ராக ஆலாபனையைத் துவக்கிய கிரணை தூக்கிக்கொண்டு கதவைத் திறந்தேன்.வெளியே ருத்ரப்பா நின்றுக் கொண்டிருந்தான். அவன் கைகளில் ஒரு சிறு தட்டில் வெற்றிலை பாக்கு, மஞ்சள் தடவிய ஒரு திருமண அழைப்பிதழ். உள்ளே வந்து கைப்பையிலிருந்து ஒரு சீப்பு வாழைப் பழத்தை எடுத்து தட்டில் வைத்து என் முன் வைத்து அம்மா, என் ஒரே பெண் மஞ்சுவிற்கு கல்யாணம். பக்கத்து கிராமம். நீங்களும்,ஐயாவும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றான். என் கணவன் முகத்தைப் பார்த்தேன். தன் பர்ஸிலிருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு ஆண்டவா அனைவரையும் நலமாக வையப்பா என்றவாறு வாசற் கதவை தாழிட்டுக் கொண்டு பூஜையறையில் நுழைந்து விளக்குகளை துடைத்து எள்ளெண்ணெய் ஊற்றி, சுவாமி படங்களுக்கு பூ வைத்துவிட்டு ஆரத்தி காட்டி விட்டு வந்தமர்ந்த என் சிந்தனையில் ருத்ரப்பாவைப் பற்றிய நினைவுகள் எழுந்தன.
நாங்கள் அங்கு குடியேறிய புதிதில் கட்டித் தயிர் பிரியனான என் பையனுக்காக அரை லிட்டர் எருமைப்பாலும் , பசும்பாலை ருசித்து சுவைக்கும் என் கணவருக்கும் எனக்காகவுமாக ஒரு லிட்டர் பசும்பாலுமாக வேறு வேறு தூக்குகளில் ஆறரை மணிக்கு டாண் என்று கொண்டு வரும் அவனை கறந்த பாலை நீர் கலக்காது கொணரும் அவனுடைய நல்ல குணத்திற்காகவே பாராட்டத் தோன்றும். அடுத்து அவன் தன் வீட்டில் இரண்டு எருமைகளுடன் , பசு ஒன்றையும் பராமரித்து தேவையானவர்களுக்கு பசும்பாலையோ அல்லது எருமைப்பாலையோ கொண்டு வருவதாக பின்னர் எனக்குத் தெரிந்தது.
சில வருடங்களுக்குப் பிறகு அம்மா, இப்போது இவற்றை பராமரிப்பது கஷ்டம். எனவே பால் வியாபாரத்தை நிறுத்தி விட்டேன் என்றவாறு அடுத்து அவன் மாலி எனப்படும் தோட்டக்காரனாக உருமாறி எங்கள் குடியிருப்பை சுற்றி இருந்த செடி வகையறாக்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.அவனிடம் என் மனதைக் கவர்ந்த ஒன்றென்றால் அவனுடைய தளரா உழைப்பும் , செயல்முறை நேர்த்தியும் தான். கடின உழைப்பாளியான அவன் காம்பௌண்டை சுற்றிப் பெருக்கி சுத்தம் செய்வது முதலாக,மண் தொட்டிகளில் மண்ணையும்,எருவையும் தக்க விகிதத்தில் கலந்து நிரப்பி செடிகளை பச்சைப் பசேலென செழிக்கச் செய்தான். இத்துடன் ஞாயிறு, திங்களில் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் கழுவுவது அவனுக்கு கிம்பளம் கிடைக்க வழி வகுத்தது.
தலையை அசைத்து என்னை சிறைப்படுத்திய பின்னோட்ட சிறையிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டு என் அன்றாட வேலையில் ஈடுபட்டேன்.
மூன்று மாதங்கள் சென்றிருக்கும். மாலை நான்கு மணியளவில் வீட்டு வேலைகளை செய்து முடித்து சற்று சாய்வாக அமர்ந்து திரு.கஸ்தூரியின் சத்யம் – சிவம் – சுந்தரத்தின் மூன்றாம் பகுதியின் முப்பத்து ஐந்தாம் பக்கத்தில் ஆழ்ந்து மனிதனாகப் பிறந்து மகானாகி அவர் ஆற்றிய அற்புதங்களில் என்னை மறந்திருந்தேன்.
அம்மா என்று அழைத்தவாறு வந்தமர்ந்த ருத்ரப்பா தப்பு பண்ணிட்டேன் அம்மா. தீர விசாரித்துப் பார்க்காமல் என் பெண்ணை படு குழியில் தள்ளி விட்டேன். என் மாப்பிள்ளை நல்லவன் இல்லையம்மா என் பெண்ணை கொடுமை படுத்துகிறான். கஞ்சியும் ஊத்தாமல் உடுத்த துணியும் கொடுக்காமல் சாவடிக்கிறான் என்று புலம்பியவாறு வீட்டு வாசலில் அமர்ந்தவனைப் பார்த்து நான் தலையும் புரியாமல் காலும் அறியாமல் விழித்தேன். மருத்துவ வசதியும், சுகாதார அறிவுமற்ற சிற்றூருக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்ற அப்பேதைப்பெண் போதிய பராமரிப்பில்லாததாலும், குடி நீர் குழாயில் கலந்து விட்ட கழிவுநீரின் விளைவாலும் குடல் பாதிக்கப்பட்டு மஞ்சக்காமாலையின் வசமானாள் என்றும் அவளை பெங்களூருக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் பின்னர் அவனுடைய பேச்சிலிருந்து அறிந்து ஆண்டவனே ! இது என்ன சோதனை? என்று மனதை ஆயிரம் எலிகள் பிறாண்டியது போல் உணர்ந்தேன்.
பதினைந்து நாட்கள் சென்றிருக்கும். என் வீட்டிற்கு வந்த உறவினர்களை வழியனுப்பி விட்டு வாசற்கதவைத் தாழிடச்சென்றேன்.வாசலில் அமர்ந்திருந்த ருத்ரப்பா அழுது அரற்றியவாறு அம்மா எல்லாமே முடிந்து விட்டது.என் மஞ்சு எங்களைத் தவிக்க விட்டு கண்ணை மூடி விட்டாளம்மா.இன்று மூன்றாவது நாளம்மா என்று கல்லும் கரைந்துருகுமாறு நெஞ்சில் அறைந்துக்கொண்டு கதறி அழுதவனைக் கண்டு என் விழிகள் இரண்டும் குளமாயின.ஆற்றும் வகையறியாது, தேற்றும் மொழி காணாது திணறினேன்.
அடுத்த மூன்றாம் நாள் காலையில் அவன் அமைதியாக தன் வேலையில் லயித்து தன் வளர்ப்பு குழந்தைகளான செடிகளைக் கொத்திக் களை எடுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து நான் மனதிற்குள் வியந்தேன். ஒரு வேளை அவன் கீதையில் கண்ணன் உபதேசித்த பகவத் கீதையின் வருந்தத் தகாதவற்றிற்கு வருந்திப் பயனில்லை என்ற ஞானத்தைப் பெற்று கர்ம ரகசியத்தைப் புரிந்துக் கொண்டு விட்டானோ அல்லது எவராவது ருத்ரப்பாவிற்கு கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்ற அமர வாக்கினை விளக்கி வாழ்க்கை என்பது வியாபாரம் அதில் ஜனனம் என்பது வரவாகும் மரணம் என்பது செலவாகும்.இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதினால் உயிரை மீண்டும் கொடுப்பானா?என்று விளக்கிச் சொல்லி புரிய வைத்திருப்பார்களோ என்று வியந்து அமைதியானேன்.
“