குட்டித் தலைவரின் சின்ன பங்களா அல்லோகோலப்பட்டது.
சின்ன பங்களா என்றால் சைஸில் சின்னது என்று அர்த்தங் கொள்ளக் கூடாது.
சின்ன வீடு என்கிற மாதிரி இது சின்ன பங்களா. தலைவரின் மேல் பாசங் கொண்ட தீவிரத் தொண்டர்கள், பக்கத்துத் தொகுதிகளிலிருந்து டெய்லி பாட்டாவுக்குத் தருவிக்கப்பட்ட விசேஷ அழைப்பாளர்கள் எல்லோரும் தலைவர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கோழி பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு, அங்கே விநியோகிக்கப்பட்ட டோக்கன்களை மெய்ன்ரோடிலிருந்த, தலைவருக்கே சொந்தமான கடையில் கொடுத்து ஒரு தீர்த்தம் அருந்திவிட்டு வந்து மிதப்பில் குழுமியிருந்தார்கள்.
தொண்டர்களைத் திரட்டுவது ஊர்வலத்தை ஒழுங்கு செய்வது மற்றும் இன்றைக்கு வேட்பு மனு தாக்கல் சம்மந்தமான எல்லா ஏற்பாடுகளுக்கும் இன்சார்ஜ், தலைவரின் இடது கரமான மாடசாமி.
வலது கரமாயிருந்த அறிவழகன் தேர்தல் நேரத்தில் ஒரு ஸ்டன்ட் அடித்து மாற்றுக்கட்சிக்குத் தாவி விட்டான்.
புகைப்படத்தோடு ஒவ்வொரு பத்திரிகை ஆபிசாய் ஏறியிறங்கி செய்தி கொடுத்துவிட்டு வந்தான். மூணுநாள் கழித்து மாலைச்சுடரிலும் தினபூமியிலும் மட்டும் செய்தி போட்டிருந்தார்கள் சின்னதாய். புகைப்படம் பிரசுரமாக வில்லை.
அறிவழகன் அப்ஸெட். மாடசாமிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தேர்தலுக்குப் பிறகு மாடசாமிக்கு வலது கரமாய்ப் பதவி உயர்வு கிடைக்கும். அதன் பிறகு, தன்னுடைய பெயரை தமிழ்மாறன் என்று நெறிப்படுத்திக் கொள்கிற யோசனை இருக்கிறது.
தலைவரே, இந்நேரத்துக்குக் கௌம்பினாத்தான் ஊர்வலம் போய்ச்சேர டயம் சரியாயிருக்கும். கௌம்புவோம் என்று தலைவரைத் துரிதப்படுத்தனான் மாடசாமி.
மத்த கச்சிக்காரனெல்லாம் மனுத்தாக்கல் பண்ணிட் டானாயா, ஏதாவது தெரியுமா? என்று மெல்ல விசாரித்தார் தலைவர்.
அவனுங்களப்பத்தி நமக்கென்ன தலைவரே, அவனுங்கல்லாம் கடேசி நாள் தான் பண்ணுவானுங்க. நாம பஸ்ட்டா வரப்போற கச்சி, மனுத்தாக்கல்லயும் பஸ்ட்டா இருக்கணும். நாம இன்னிக்கிக் காட்டற கூட்டத்தப்பாத்து அவனவனுக்கு வயித்தால போகப் போவுது பாருங்க.
மாடசாமி அட்டகாசமாய்ச் சிரித்தான்.
தலைவர், சிம்மாசனத்திலிருந்து எழுந்து கொண்டார். வேஷ்டியையும் துண்டையும் சரி செய்து கொண்டு, கிராமத்திலிருக்கிற குலதெய்வத்தை ரகசியமாய் மனசுக்குள் தொழுது கொண்டு தலைவர் வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்தபோது, விசுவாசமிக்க தொண்டனொருவன் அவசரமாய் வழி மறித்தான்.
அப்படியேயிருங்க தலைவரே, முன்னேராதீங்க அப்படியேயிருங்க.
டாய் ஜகா வாங்குடா பேமானி. தலைவர் மனுத்தாக்கல் பண்ணப்போற நேரம் அபசகுனமா ராங் பண்றியே, ஒம் மூஞ்சில எங்கைய வக்ய.
இன்னொரு அதிவிசுவாசமான தொண்டன் முன்னவனைப் பிடித்துத் தள்ளினான்.
முன்னவன் முரண்டு பிடித்தான்.
நானா அபசகுனம்? பூனை ஒண்ணு குறுக்கால அபசகுனமா ஓடுது பார்றா சோமாறி. தலைவரே, லேட்டானாலும் பரவாயில்ல தலைவரே, இப்ப வாணாம் தலைவரே.
தலைவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு சமாளித்தார். சகுனமெல்லாம் நாம பாக்கக்கூடாது தம்பி. நம்ம கொள்கைக்கு முரண்பாடானது அது. வழிவிடுங்க. தைரியமாய்ப் புறப்படுவோம். வெற்றி நமக்குத்தான்.
தொண்டன் தலைவரின் கொள்கைக்கு இணங்குவதா யில்லை.
வாணாம் தலைவரே. சாதாப்பூனை இல்ல. அது கருப்புப் பூனை.
கருப்புப் பூனை என்றதும் மாடசாமியின் முகம் கறுத்தது. மெல்ல தலைவரின் காதைக் கடித்தான்.
அவன் சொல்றது வாஸ்தவந்தான் தலைவரே, கருப்புப் பூனை சாகவாசமே கூடாது. போன தேர்தல்ல நாம மனுதாக்கலுக்குப் போனப்பவும் இதே போல ஒரு கருப்புப் பூனை குறுக்கால போச்சி. அப்ப அறிவழகன் பந்தா பண்ணிட்டிருந்தானா, அதால நா கண்டுக்காம வுட்டுட்டேன். நாம் பாத்த கருப்புப் பூனையைப் பத்தி யார் கைலயும் சொல்லல. சனியன் அந்தக் கருப்புப் பூனையாலதான் போனதபா நாம தோத்துப் போய்ட்டோம். இப்ப நாம கௌம்பவாணாந் தலைவரே, காத்தால வச்சிக்குவோம்.
காத்தாலயும் ஒரு கருப்புப் பூனை குறுக்கால போச்சின்னா.?
தலைவர் கிளப்பிய சந்தேகத்துக்கு மாடசாமி அநாயாசமாய் ஒரு ஐடியாவை எடுத்து விட்டான்.
நம்ம ஏரியால இருக்குற கருப்புப் பூனை அல்லாத்தையும் ராவோட ராவா க்ளோஸ் பண்ணிட்டா?
மாடசாமியுடைய மெகா திட்டத்தைக் கேட்டுத் தலைவரே கொஞ்சம் அசந்து விட்டார். மாஸ் மர்டர்! அதுவும் போக, இது சத்தியமா!
மாடசாமி மனவுறுதியோடிருந்தான்.
யோசிக்காதீங்க தலைவரே, நம்ம கைல வுடுங்க. ரெண்டு கால் பிராணிகளையே நைட்டோட நைட்டா எத்தினி க்ளோஸ் பண்ணியிருக்கோம். இது இன்னாத் தலைவரே தம்மாத்துண்டு நாலு கால் பிராணி. கவலையேப் படாதீங்க, விடியறதுக்கு முந்தி அல்லாத்தையும் பிரியாணி பண்ணிருவோம்.
மாடசாமியுடைய புலால் ரசனை தலைவருக்குக் குமட்டலை ஏற்படுத்தினாலும், இந்தக் கொலைமுயற்சிகள் மங்களமாய் நிறைவேற வேண்டுமே என்கிற கவலைதான் இப்போது பெரிதாயிருந்தது.
ஊர்வலமும் மனுத்தாக்கலும் நாளைக்குத்தான் என்று தொண்டர்கள் மத்தியில் அறிவித்து விட்டு உற்சாகமாய் உள்ளே திரும்பிய மாடசாமி, திடீரென்று சிந்தனை வசப் பட்டுத் தலையைச் சொறிந்தது தலைவரைக் கலவரப் படுத்தியது.
என்ன மாடசாமி?
ஒன்ணுமில்ல தலைவரே, ஒரு சின்னச் சிக்கல். நாம கருப்புப் பூனையையெல்லாம் புடிச்சிக் கசாப்புப் போட்டுட்டோம்னா, நம்ம தொகுதியில கருப்பு பூனையே காலாவதியாயிரும்…
ஆமா, நல்லது தானே!
ஒரு வகையில நல்லது தான். ஆனா இன்னொரு வகையில பாத்தா, மாற்றுக்கச்சிக் காரனுக்குக் குறுக்கால போக ஊர்ல கருப்புப் பூனையே இல்லாமப் பூடுமே!
அவனுடைய சந்தேகத்திலிருந்த நியாயம் தலைவரைத் தாக்க, தலைவர் யோசனையிலாழ்ந்தார்.
(ஆனந்த விகடன், 13.05.2001)