எதிரில் நிஷா விசும்பிக் கொண்டிருந்தாள்.
"நெஜம்மா என்னாலே நம்பவே முடியலம்மா. ஆனா, என் கண்ணாலயே பார்த்துட்டேன் அந்தக் கண்றாவியை…"
மரகதம் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று காலை, மிக அவசரமாய் வீட்டிற்குள் பெட்டியுடன் நுழைந்தவளைப் பார்த்து அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சரி, சும்மாதான் வந்திருப்பாள் என்று நினைத்தால்… ஓவென்று அழுகை. பிறகு பேசலாம் என்று சமாதானப்படுத்தி, குளிக்க வைத்து, உணவருந்தச் சொல்லி, இதோ… இப்போது நிதானமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
"முதல்ல அவர் சட்டைப் பையில ரெண்டு சினிமா டிக்கெட் இருந்தப்பவே நான் சந்தேகப்பட்டிருக்கணும். பைத்தியம் மாதிரி அவர் சொன்னதை நம்பினேன்…"
நிஷா தன்னிச்சையாய்ப் புலம்பினாள்.
"வரிசையாய்ப் பொய்கள்… நானே நேர்ல பார்க்கலேன்னா நிச்சயமா இப்பவும் நம்பிக்கிட்டுத்தான் இருந்திருப்பேன். என்னை அவர் கவனிக்கலே. கவனிக்கிற மனநிலையிலும் இல்லே. பக்கத்துல, அவரை ஒட்டி உரசறாப்பல போயிட்டிருந்த பெண்ணோட பேச்சுலதான் முழுக் கவனமும்…"
மறுபடி அழுதாள்.
"நிஷா… உன் பிரச்னை என்னன்னு புரிஞ்சுது. சரி, இனி அழாதே! அப்பா இன்னைக்கு நைட் வந்திருவார். பேசிரலாம்" என்றாள் மரகதம். பெண்ணைத் தனிமையில் விட்டு வெளியில் வந்தாள். பார்த்துத்தான் பிடித்த வரன். சேகர் நல்ல பையன் என்றுதான் நம்பிக்கை.
ஆனால் இன்னொரு பெண் வரை போய்விட்டதே!
தணிகாசலம் இரவு வந்ததும் மரகதமே முழு விவரமும் சொன்னாள்.
"நீ ஒரு முடிவும் எடுக்கலியா?" என்றார் கொஞ்சம் எரிச்சலாக.
"சேகருக்கு போன் பண்ணினேன். நிஷா இங்கேதான் இருக்கா. முடிஞ்சா நாளைக்கு இங்கே வாங்கன்னு சொன்னேன்."
மரகதத்தை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.
"அம்மா இவ்வளவு நிதானம்… புத்திசாதுர்யம்… பெண் இப்படி இருக்காளே!…" என்றார் கிண்டலாக.
"ஒருவேளை… அப்பா குணமோ?" என்றாள் மரகதம் விட்டுக் கொடுக்காமல்.
கைளை மேலே தூக்கினார். "விட்டுரு! உன்னோட மோதி என்னால ஜெயிக்க முடியாது."
நிஷாவிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. அவர் மௌனம் நிஷாவைத் திகைப்புக்குள்ளாக்கியது.
காலையில் சேகர் வந்துவிட்டான். மரகதத்திற்குப் பிடித்த திருநெல்வேலி அல்வாவைக் கொடுத்தான். முகம் இயல்பாகத்தான் இருந்தது. குற்ற உணர்வே இல்லையே!
டிபன் சாப்பிட்டதும் தணிகாசலம் பேசினார்.
"என்ன மாப்பிள்ளை பிரச்னை?"
"நிஷா சொல்லலியா?"
"ம்… சொன்னா. ஆனா உங்க பக்கமும் கேட்க விரும்பறேன்."
"அவ பார்த்தது நிஜம்தான். அந்தப் பெண் என் சிநேகிதிதான். எங்க ரெண்டு பேருக்கும் ஆறு மாசமா நட்புதான்" என்றான் நேராகப் பார்த்து.
"புரியலையே!…" என்றார்.
"என்ன?"
"உங்க ரெண்டு பேர் நட்பால நிஷா ஏன் பாதிக்கப்படணும்?"
"அதை அவகிட்டேதான் நீங்க கேட்கணும்."
"அதே கேள்வியை வேற மாதிரி உங்ககிட்டேயும் கேட்கலாமா?"
சேகர் தயங்காமல் தலையசைத்தான்.
"நிஷாவைப் பாதிக்கிற மாதிரி இன்னொரு பெண் உங்களுக்கு அவசியமா? ஜஸ்ட் எ கொஸ்சின், தப்பா எடுத்துக்காதீங்க!…"
"இதுல தப்பு என்ன? இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால ஒரு சின்ன விளக்கம்… என் நண்பன் கோபால் தினசரி மாலை அலுவலகத்திலேர்ந்து வீட்டுக்குத் திரும்பும்போது, வீட்டுக்குப் பத்தடி முன்னால இருக்கற ஓட்டல்ல டிபன் சாப்பிட்டுட்டுதான் போவான். எனக்கு ஆச்சரியமா இருக்கும். பத்தடி நடந்தா உங்க வீடு. அங்கே போய் டிபன் சாப்பிடக் கூடாதான்னு கேட்டேன். என்ன பதில் சொன்னான் தெரியுமா?"
என்னவோ கதை போலச் சொல்கிறானே என்று உன்னிப்பாய்க் கவனித்தார்.
"அவளால முடியலே. அலுப்பா இருக்காம். மாலை அஞ்சரைக்கு டிபன். உடனே எட்டு மணிக்கு மீல்ஸ்னு சமையல்காரி மாதிரி ஆக்கிட்டீங்கன்னு புலம்புவாளாம். ஸோ, அவனா பிரச்னையை இப்படி ஸால்வ் பண்ணிக்கிட்டான்."
"அது மாதிரி…?"
"நிஷாவைக் குறை சொல்லலே. அவ இயல்பு அது. என்னை ஏதோ பணம் சம்பாதிக்கிற இயந்திரம் போலத்தான் பார்க்கிறாள்னு எனக்குள்ளே ஒரு குமுறல் சமீபகாலமா வந்திருக்கு. வீட்டுக்குத் திரும்பினா, அது இல்லே; இது இல்லேன்னு புலம்பல். அலுத்துப் போய் வீடு திரும்பற எனக்கு வீடும் நரகமாக் காட்சி தந்தா… என்னால தாங்க முடியலே… அப்பதான் அவ எனக்கு சிநேகிதி ஆனா. நாங்க நல்ல நண்பர்கள். எனக்கு என் மனசைக் கொட்டக் கிடைச்ச வடிகால். என் கனவுகளின் தரிசனம்… வேற நீங்க நினைக்கிற மாதிரி விகல்பமான உறவு எங்களுக்குள்ளே இல்லே. இதை நீங்க நம்பணும்னு நான் கட்டாயப்படுத்தலே. இப்போ என்னைப் பொறுத்தவரை, என் மனசுக்கு அமைதி இருக்கு. சந்தோஷம் இருக்கு…" என்றான் நிதானமாக.
தன் பெண்ணின் மறுபக்கம் புரிய, தணிகாசலம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.
‘இவளை எப்படி மாற்றுவது?’