கந்தர்வ வீணைகள் (7)

கடந்த வாரம்தான் ப்ரவீணாவின் செல் நம்பரை இவன் தன் செட்டில் பதிவு செய்து வைத்திருந்தான்.

”குட்மார்னிங்” என்றான்.

”தேங்க் காட்.. ஒரு வேளை செல்லை ஆஃப் செய்து வைத்திருப்பீர்களோ.. அறிவிப்பு மட்டும் வருமோ என்று பயந்தேன்.”

”நோ பிராப்ளம்.. சொல்லுங்க.. இந்தக் காலை நேரத்துல என்ன சமாச்சாரம்..?”

”ஒரு உதவி செய்வீங்களா..?”

”இதென்ன கேள்வி? சொல்லுங்க.. என்ன உதவி..? உதவி இல்லை.. இல்லை.. கட்டளையிடுங்கள்..”

”ஒரு வாரத்துக்கு ப்ரியாவை உங்ககிட்ட வைச்சுக்க முடியுமா? ஸாரி.. ஒரு கட்டை பிரம்மச்சாரிகிட்ட இப்படி கேக்குறது தப்பு..”

”நான் கட்டைப் பிரம்மச்சாரின்னு யார் சொன்னா..? நான் உணர்வுகள் உள்ள மனிதன்.. ஓகே.. இப்போ என்ன திடீர்ன்னு..?”

”இப்போ ப்ரியாவுக்கு லீவு.. அதனால ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டல்ல இருந்து அவளைக் கூட்டிட்டு வந்தேன். ஆனா அர்ஜென்டா ஆபீஸ் வேலையா எனக்கு நாளு நாள் டூர் புரோகிராம் இருக்கு. குழந்தையை யார் பொறுப்புல விட்றதுன்னும் தெரியலை.. கூடவே கூட்டிட்டும் போக முடியாது. திடீர்ன்னு உங்க ஞாபகம் வந்தது. இப்போ தனி பிளாட்டுல இருக்கிறதா சொன்னதும் நினைவுக்கு வந்தது.. உங்க பேரைச் சொன்னதும் ப்ரியா ஓகேன்னுட்டா.. அதான்..”

ப்ரவீணா தயங்கித் தயங்கிப் பேசினாள்..

ரெண்டு நாள் ஆபீஸுக்கு லீவு போட வேண்டி வரும்.. ரெண்டு நாள் லீவு வருது.. இவன் பார்த்தான்..

புது வீட்டுக்குக் குடி வந்த வேளை.. மனைவி வராவிட்டாலும் குழந்தை வருகிறது..

வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய ஒரு மணமகள் வரவில்லை..

ஆனால் மகள் மட்டும் வருகிறாள்.

திருமணமாகலேயே இவன் தாயுமாகி.. தந்தையுமாகி..

”என்ன சத்தத்தையே காணோம்.. நான் சங்கடப்படுத்திட்டேனா..?”

ப்ரவீணா கேட்டாள்..

”நோ.. நோ.. சில சந்தோஷங்கள் ஊமையாக்கும்..”

”அப்போ..?”

”நீங்க தாராளமா ப்ரியாவை இங்கே விட்டு்ட்டுப் போகலாம். எனக்கு எடுப்பு சாப்பாடுதான். பரவாயில்லை.. சாப்பிடும்படி இருக்கும். ப்ரியாவுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சா அதை வாங்கி வைக்கிறேன்..”

”நோ பிராப்ளம்.. அவளுக்கு டிவியிலே போகோ சேனல் பிடிக்கும். ஐஸ்கிரீம் பிடிக்கும்..”

சஞ்சய் பார்த்தான்..

இன்று ஞாயிறு..

ஒரு போர்ட்டபிள் டிவி வாங்க வேண்டும்..

ஒரு மினி பிரிட்ஜ் வாங்க வேண்டும்..

இவன் சம்சாரியாக வேண்டும்..

”ஓகே டன்.. எப்போ கூட்டிட்டு வர்றீங்க..?”

”இன்னிக்கு பூரா ப்ரியாவோட இருந்திட்டு நாளை காலையிலே கூட்டிட்டு வர்றேன்..”

அப்பாடா.. ஒரு நிம்மதி..

நாளை பொழுது விடிவதற்குள் நிறைய வேலை பாக்கி..

இவன் நண்பனின் எலெக்ட்ரானிக் கடை ஒன்று ஞாயிற்றுக்கிழமை கூட திறந்திருக்கும்.போக வேண்டும்..
இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்..இவன் சிந்தினையில் ஆழ்ந்தான்..பை என்று செல்லை ஆஃப் செய்தான்.
இவனுள் பற்பல உணர்வுகள் விழித்துக் கொண்டன.
(தொடரும்)

About The Author