எங்கு பார்த்தாலும் பேனர்கள்.. தொலைந்து போன வானங்கள் பற்றிய விளம்பரங்கள்.சஞ்சய் எல்லாவற்ரையும் பார்த்தபடி முன் வரிசையில் அமர்ந்திருந்தான்.அவனை விழாவிற்கு கட்டாயம் வர வேண்டும் என்று சொல்லியிருந்தார் ப்ரவீணா..
ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட இவன் நோயாளியாக இல்லை..அருகில் ப்ரவீணா உதவியாக இருந்தாள்.ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜாகி வந்த பிறகுதான் இவன் நிஜமாகவே நோயாளியானான்.
இவன் தன் வானத்தை.. ஏன் நிலவை.. நட்சத்திரங்களை எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு சூன்யமாய் நின்றான்.
தொலைந்தது வானம்..
இவன் காலொடிந்த வானம்பாடியாக எங்கோ இலக்கின்றி சுற்றித் திரிந்தான்.ப்ரவீணா பரிசளித்த ஐ பாட் இன்னும் இவனிடமேதான் இருக்கிறது.இவன் திருப்பித் தரவில்லை. திருப்பித் தர மனமில்லை.. அவளும் கேட்கவில்லை.. இவனிடத்திலிருக்கும் அவள் மனதை அவள் திருப்பிக் கேட்டுவிடுவாளோ..?
அந்த மனம் இவளின் மானப் பிரச்சினை..திருப்பித் தந்தால் மனப் பிரச்சினை..
கை தட்டல்கள் சப்தம்.இவன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்..
மேடையில் ப்ரவீணாவிற்கு விழாத் தலைவர் பொன்னாடை போர்த்த வந்தார்.கை கூப்பி பொன்னாடையைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டாள் ப்ரவீணா.
தலைவர் பேசினார்..
”இது வெறும் கவிதை புத்தகம் அல்ல. காவியப் புத்தகம். ஒரு பெண் மனதின் உள் ஆழத்தை யதார்த்தமாய் விவரிக்கும் இலக்கிய வரிகள்..
உன்னை நான் தொலைத்துவிட்டேன் என்று
நினைத்தபோது என் இதயத்தில் எப்படி
இடம் பெற்றாய்..?
எளிமையான யதார்த்த வரிகள்..
காதல் என்பது வரிகளில் இல்லை..
வாழ்க்கையில் இருக்கிறது.
பேனாவில் மையில் இல்லாவிட்டால் என்ன?
என் ரத்தத்தைத் நிரப்பித் தருகிறேன்..
என் ரத்தம் வற்றும்வரை எழுது..
என்ற வரிகளில் இருக்கும் தியாகம்..
ஒரு காதலியின் நாக வரிகள்..
இந்தப் புத்தகத்தை யாரும் தொலைத்து விடக் கூடாது..”
விழாத் தலைவர் பேச்சைக் கேட்டு அனைவரும் கை தட்டினார்கள்.இவனும் இயந்திரமாய்க் கை தட்டினான்.பேனாவில் மை இல்லாவிட்டால் ரத்தத்தைத் தரப் போவது யார்?
இவனா அவளா?
வாழ்வெனும் சரணாலயத்தில் இறகு ஒடிந்த பறவை இவன். இந்த நொண்டிப் பறவைக்கு யார் புகலிடம் தரப் போகிறார்கள்..?
திடீரென்று மேடையில் இவன் பெயரை அறிவித்தார்கள்.இவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
”மிஸ்டர் சஞ்சய்.. என் நண்பர்.. இந்தப் புத்தகத்தி்ன முதல் பிரதியை மேடைக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு அழைக்கிறேன்..”
ப்ரவீணா பேச.. அனைவரும் கை தட்ட..
”அங்கிள் மம்மி உங்களைத்தான் கூப்பிடறாங்க.. போங்க ஸ்டேஜுக்கு போங்க..”
ப்ரியா இவனை உந்தித் தள்ள.. இவன் தடுமாற்றத்துடன் எழுந்தான்.
கை தட்டல் ஒலிகள் தொடர்ந்து கொண்டிருக்க..
இவன் தொலைத்த வானத்திற்கு இத்தனை வரவேற்புகளா..?
இவனின் தோல்விக்கு இத்தனை கை தட்டல்களா..?
இவன் ஏமாற்றங்களுக்கு இத்தனை பாராட்டுக்களா..?
இவன் மேடையேறினான்..
புத்தகத்தின் முதல் பிரதியை இவன் பெற்றுக் கொண்டபோது.. காமிராக்களின் பளிச்சுகள்..
வீடியோக்களின் வெளிச்ச வீசல்கள்..
முதல் பக்கத்தில்..
”என் இனிய நண்பர்..
திரு.சஞ்சய்க்கு அன்புடன் அளிக்கும்
ப்ரவீணா”
என்று அழகாக எழுதி கையெழுத்திட்டிருந்தாள் அவள்.
இது புத்தகம் அல்ல..
இவன் மரண சாசனம்..!
(தொடரும்)