டாட்டா..
சட்டென்று தன் நினைவுகளைக் கலைத்தான் சஞ்சய்..
”என்னங்க.. எத்தனை நேரமா டாட்டா சொல்லிட்டு நிக்கிறேன்..?” ”நான் கிளம்பட்டுமா..?”
ப்ரவீணா கேட்டாள்..
”ஸா.. ஸாரி.. டாட்டா..”
ப்ரவீணா விடைபெற்றுப் போன பின்னும் அந்த அறையில் அவள் மணம் மிச்சமிருந்தது.
அந்த ஒரு வார மருத்துவமனை வாசம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவருக்கு உடம்பு நோவு என்றால், தன் பணம் செலவாகாதவரை அன்பைப் பொழிய அத்தனை பேரும் காத்திருந்தனர்.
”என்ன ஸார் இப்படி? உங்களைப் படுக்கையில் பார்க்க கஷ்டமா இருக்கு?”
”எப்படி பிரிஸ்க்கா இருக்கீங்க? உங்களை பெட்டுல கற்பனை செஞ்சுகூட பார்க்க முடியலை..”
”அந்த லேடி மட்டும் சமயத்துல ஓடி வந்து உங்களுக்கு உதவியிருக்காவிட்டால் திணறிப் போயிருப்பீங்க ஸார்.. யார் அவங்க? உங்களுக்கு ரிலேஷனா..?”
பலப் பல கேள்விகள்.. பலப் பல யூகங்கள்..
தினமும் அந்த முசுடு அக்கெளண்டண்ட்கூட ஏதோ சில பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து இவனைப் பார்க்க வந்தார்.
இவன் ஆபீஸ் கணக்கில் இருந்து ஆஸ்பத்திரிக்கு பணம் செலுத்திவிட்டார்கள்.
மனம் சோர்வுற்றிருக்கும்போது இப்படி சில அன்பு உபசரிப்புகள் உள்ளத்துக்குத் தெம்பூட்டுகிறது..
”இந்தாங்க ஸார்.. படிக்க புஸ்தகம்.. தன்னம்பிக்கை நூல் ஸார்.. ஷிவ்கெரோ எழுதினது.. எனக்காக வாங்கினேன்.. படிக்க நேரமில்லை. ஆங்காங்கே கொஞ்சம் நோட் பண்ணியிருக்கேன். நீங்க படிச்சு முடிங்க ஸார்..”
இவன் அஸிஸ்டெண்ட் மாலா..
ஏக உபச்சாரம்..
இந்த உபசரிப்புக்காகவே அடிக்கடி வந்து ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
வேண்டாம். இவன் நினைத்தால் அது நடந்துவிடுகிறது. எந்த நேரத்தில் விபத்து என்று நினைத்தானோ.. அது நிஜமாகவே நிகழ்ந்துவிட்டது.
இப்போது ஆஸ்பத்திரி வாசம் பற்றிய நினைப்பு. வேண்டாம்..
வேறு நினைப்போம்..
வேறு என்ன வாசம்..? ஆ.. ப்ரவீணா வாசம்.. இரண்டு நாட்களாக ப்ரவீணாவைக் காணவில்லை.
அவள் என்ன இவன் மனைவியா..? தினம், தினம் பிளாஸ்க்கில் காபியுடன் வர..
இந்த அளவுக்கு பரிவு காட்டியதற்கே இவன் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தன் ஐ பாட் ஒன்றை இவனுக்குத் தந்திருந்தாள். இவன் நினைத்தபோது பாட்டு கேட்கலாம். அது என்னவோ வரவர இவனுக்கு சினிமா பாட்டுக்களே பிடிப்பதில்லை.
ப்ரவீணா பாடியிருந்தால் கேட்கலாம்.
சின்னப் பொண்ணு சமைஞ்சுட்டா
சீக்கிரம் வாங்கடி பொண்ணுகளா என்ற வரிகள்..
இப்போது பெண் சமைஞ்சதுதான் முக்கியம்..
உம்.. முன்பு பெண்ணின் சமையலைப் பற்றிப் பேசுவார்கள்..
இப்போது பெண்ணின் விடுதலைக் காலம்..
சமையலில் இருந்து சமைஞ்சதுவரை தாவியிருக்கிறார்கள்.வர வர சினிமாவில் காமெடியும் நாற ஆரம்பித்துவிட்டது. ஒரே யூரின் வாசனை.. பப்ளிக் லேவட்ரியில் நுழைந்த உணர்வு..!
இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, யாரோ கதவைத் தட்டினார்கள்.மணி ஆறு. ப்ரவீணாவாகத்தான் இருக்கும். ஆபீஸ் முடிந்து வீட்டிற்குப் போகும் வழியில் இவனைப் பார்க்க வந்திருப்பாள்.நாளை இவன் டிஸ்சார்ஜ் ஆகும் நாள்.
ப்ரவீணாவிற்கு நிறைய திருப்பித் தர வேண்டிய பாக்கியிருக்கிறது. இவனை ஆஸ்பத்திரியில் சேர்த்த முதல் நாள் செலவு.இந்த ஐ பாட்டை திருப்பித் தர வேண்டும். இவன் திருப்பித் தர விரும்பாமல் வைத்திருக்கும் ஒரே பொருள்..
அவன் இதயம்..
அடி என்னவளே.. அடி என்னவளே.. என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்..
இவனால் டூயட் பாடி பனிப் பிரதேசங்களுக்குப் போக முடியாது. இந்த அறையிலிருந்தபடியேதான் பாட வேண்டும்.திறந்த கதவின் வழியே தெரியப் போகும் ப்ரவீணாவின் முகம் பார்க்கும்படி நிமிர்ந்து நோக்கியபடியிருந்தான்.
”அங்கிள்..”
”அங்கிள்..”
மிக அருகில் ஒரு குழந்தையின் குரல்..
அட.. இவன் படுக்கைக்கு மிக அருகில் ஐந்து வயதுக் குழந்தை ஒன்று இவனைத் தொட்டபடி பேசியது.ப்ரவீணா பிரமித்தபடி பார்த்தபோது..
அறைக்குள் ப்ரவீணா நுழைந்தாள்..
”அங்கிளுக்கு குட்மார்னிங் சொல்லு..”
ப்ரவீணா சொன்னாள்..
”குட்மார்னிங் அங்கிள்.. ஐ ஆம் ப்ரியா..”
ஒரு கணம் திடுக்கிட்டு சுய உணர்வு பெற்றவன், அந்தக் குழந்தை நீட்டிய கரத்தைப் பிடித்தபடி..
”ஐ ஆம் சஞ்சய்.. குட் ஈவ்னிங்.. கிலாட் டூ மீட் யூ..” என்றான்.
ப்ரவீணா சிரித்தாள்.
”பெரிய மனுஷி.. இவகிட்ட அபிஷியலா இன்டர்ட்யூஸ் பண்ணிக்கிறீங்களா? இந்தாங்க..”
”என்னது..?”
”நான் எழுதிய கவிதைகள்..”
”அட.. நீங்க கவிதைகூட எழுதுவீங்களா..?”
”பிரிண்ட்டுக்குக் கொடுத்திருந்தேன். அடுத்த வாரம் புஸ்தகம் ரிலீஸ்.. கண்டிப்பா நீங்க பங்ஷனுக்கு வரணும். இந்த ரெண்டு நாளா ப்ரூப் திருத்தவே சரியாயிருச்சு..”
”குட்..”
புத்தகத்தை எடுத்தான்..
”மம்மி பசிக்குது மம்மி.. வா.. வீட்டுக்குப் போகலாம்..”
குழந்தை பேசினாள்.
இவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
புத்தகம் தவறிக் கீழே விழுந்தது..
குனிந்து எடுத்தாள்.
தொலைந்து போன வானங்கள்..
புத்தகத்தின் தலைப்பு..
(தொடரும்)
I like this story what will come next?