கந்தர்வ வீணைகள் (2)

ப்ரவீணா ஆபீஸ் பைல் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஏதோ நிழலாடிய மாதிரி..

நிமிர்ந்து பார்த்தாள்..

கண்ணாடி கேபினுக்கு வெளியே அவன்.. யாரவன்? சஞ்சய் ராமசாமி..!

ச்சீ.. வெறும் சஞ்சய்.. ஏதோ அபிநயித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே வரச் சொல்லி சைகை காட்டியபோது புயலாக உள்ளே நுழைந்தவன்..

”ஸாரி மேடம்.. பைக்கோட சாவியை உங்க டேபிள்லேயே விட்டுட்டேன்..”
அசடு வழிந்தான்..

ப்ரவீணா சிரித்தாள்..

”முதல்லே ஃபைலை மறந்தீங்க.. இப்போ சாவி.. வேற எதையாவது விட்டுட்டுப் போயிடாதீங்க.. மறுபடியம் வர வேண்டியிருக்கும்..”

சஞ்சய் சாவியை எடுத்துக் கொண்டான்..

”ம்.. கொஞ்சம் பழக்கமாகியிருந்தா, யெஸ் மேடம். என் மனசை விட்டுட்டுப் போறேன்.. கண்டுபிடிச்சு வைங்க.. அப்புறமா நான் வந்து யார் மனசுல யாருன்னு கேள்வி கேட்பேன்..”

நினைத்துக் கொண்டான். ஆனால் பேசவில்லை. பைக்கை வேகமாக கிளப்பினான். கிளம்பும் முன் மறக்காமல் ஒரு துண்டு பேப்பரில் ப்ரவீணாவின் போன் நம்பரை ரிசப்ஷனில் கேட்டுக் குறித்துக் கொண்டான்.

அந்த முசுடு அக்கெளன்டண்ட் லேட்டானதற்காக இவனைத் திட்டப் போகிறது. ஏதாவது பொய் சொல்லி சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்..

என்ன பொய் சொல்வது..?

இவன் யோசித்தபடியே பயணித்தபோது..

இவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் ஒரு ஆட்டோ படுவேகமாக வந்து பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி.. இவன் பைக்கில் மோதி..

சஞ்சய் நட்ட நடு வீதியில் தூக்கியெறியப்பட்டான்.
***

கண்களை ஏதோ வந்து அழுத்தியது. மயக்கமா?குழப்பமா? புரியவில்லை. கண் இமைகளைப் பிரிக்க முடியவில்லை. மிஸ்டர் பீன் மாதிரி கையால் கண் இமைகளைப் பிரிக்க வேண்டும்போல் தோன்றியது.

ஏதோ மென்தால் வாசனை.. கூடவே டெட்டால் வாசனை.. தூரத்தே பேச்சுக் குரல்கள்..

இது சொர்க்கமா? நரகமா?

நரகத்தை டெட்டால் போட்டு சுத்தப்படுத்துவார்களா? அந்நியனில் வருவதுபோல் கிருமி போஜனமா? ஜம்பா கும்பாவா? கும்ப ஜம்பாவா?

குழப்பம்.. லேசாகக் கண்களைத் திறக்க முயன்றபோது..?

ஆஹா.. அழகான இந்தப் பெண்.. நிச்சயம் இது சொர்க்கம்தான்.. நரகத்தில் எல்லாம் அழகிகள் இருக்க மாட்டார்கள்..
ராட்சஸிகள்தான் இருப்பார்கள். கோரைப் பற்களும், தலையில் கொம்புமாய்..!

”மிஸ்டர் சஞ்சய்..”

இவன் பெயரை இவ்வளவு இனிமையாய் கூப்பிடுவது யார்..?

சஞ்சய் கண்களைத் திறந்தான்..

”தேங்க்ஸ் காட்.. கண்ணைத் திறந்துட்டீங்க..”

நான் என்ன பூனைக்குட்டியா..? நாய்க்குட்டியா? கண் திறந்து விட்டதா என்று பார்க்க.. கண்களைத் திறந்து கொண்டுதானே பிறந்தேன். பேச நினைத்தான்.. பேச முடியவில்லை..

கண்களையும் திறக்க முடியவில்லை.. வாயையும் திறக்க முடியவில்லை. வாயைத் திறந்தால் காத்துதான் வருகிறது. இதற்காக இஞ்சி இடுப்பழகியா பாட முடியும்..?

தேவதை மீண்டும் கூப்பிட்டது..

”மிஸ்டர் சஞ்சய் என்னைத் தெரியுதா..? நான்..”

இவனுக்குப் புரிந்தது.. ஆஹா.. இவள் திவ்யா குரூப் ஆஃப் கம்பெனியின் எம்.டி. ப்ரவீணா இல்லை..?
மெல்ல பேசினான்..

”யெஸ் மேம்.. நான் எப்படி இங்கே..? நீங்க எப்படி இங்கே..?”

”சொல்றேன்.. முதல்ல இந்த ஹார்லிக்ஸை குடிங்க..”

கைத்தாங்கலாக இவனை உட்கார வைத்து டம்ளரிருந்து ஹார்லிக்ஸ் எடுத்து ஸ்பூன், ஸ்பூனாகத் தந்தாள். இது ஹார்லிக்ஸா? அமிர்தமா..?

ப்ரவீணா நினைத்துப் பார்த்தாள்.

இவள் டேபிளில் இருந்து இவன் சாவியை எடுத்துக் கொண்டு போய் விபத்தில் சிக்கி நடுவீதியில் வீசியெறியப்பட்டு..
அத்துடன் இவனிடம் இருந்த இவளின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்த சீட்டை யாரோ பார்த்து போன் செய்ய..
இவள் புரிந்து கொண்டாள். உடனே இவள் கிளம்பி அங்கே போவதற்குள் இவனது பைக் நடுவீதியில் நசுங்கிக் கிடந்தது..
இவனை யாரென்றே தெரியாது. காலையில் இரு முறை பார்த்ததோடு சரி..

சேர்ந்துவிட்ட கூட்டத்தில் இருந்து ஒருவர் எட்டிப் பார்த்து திடீரென்று கூவினார்.. ”அட இது நம்ம சஞ்சய்..”
ப்ரவீணா, ”இவரைத் தெரியுமா..?” என்றாள்..

”தெரியும்.. எங்க ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறார்.. நான் அக்கெளண்டண்ட்.. ஸாரி இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு..

ஆபீஸுக்கு அவசரமா போயிட்டு வந்தேன். டிராபிக் ஜாம்.. அதான் எட்டிப் பார்த்தேன்..”

ப்ரவீணாவிற்கு நிம்மதி..!

”ஸார்.. என் கார்ல இவரை முதல்ல ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணலாம். பாக்கிய அப்புறமா பார்த்துக்கலாம்..”

இவன் மீது இடித்த ஆட்டோக்காரர் நிற்காமல் போய்விட்டார். அதன் பின் மளமளவென்று காரியங்கள் நடந்தன. பைக் டிக்கியில் ஆபீஸ் பைல் பத்திரமாக இருந்தது.
(தொடரும்)

About The Author