கந்தர்வ வீணைகள் (17)

குமார் வீட்டில் அரைத் தூக்கத்தில் இருந்தான்.

யாரோ வாசல் கதவைத் தட்டினார்கள்.

இந்த அதிகாலை நேரத்தில் யார்..?

குமாரசாமி என்கிற குமார் கதவைத் திறந்தான்.

வந்தது..

ராமசாமி.. இவன் அண்ணா..!

”வாங்கண்ணா.. ஏது இந்த நேரத்தில.. வா.. வாங்க..”

தடுமாறியபடி ராமசாமியை வரவேற்றான்.

”குமார்.. என்னால.. என்னால.. அந்த வீட்டிலே இருக்க முடியலப்பா.. எங்கே பார்த்தாலும் உன் அண்ணியோட முகம்தான் தெரியுது..”

ராமசாமி அழுதார். குமார் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..

அண்ணன் அரண்டு போயிருக்கிறான். சரியான சமயம். இந்த நேரத்தில் அண்ணனின் வீட்டுப் பத்திரத்தை என் பெயருக்கு மாற்றி எழுதிக் கொள்ளலாம். அண்ணன் ஒரு கையெழுத்துப் போட்டால் போதும்..

”அண்ணே.. அண்ணி போய் கொஞ்ச நாள்தானே ஆகுது.. அப்படித்தான் இருக்கும். எல்லாம் சரியாயிரும்..”

”ஆகுது குமார்.. என் பையன் எங்கயோ காணாமப் போயிருந்தான். திடீர்ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து என் மனைவி, என் குழந்தைங்கறான்.. என்னைச் சுத்தி எல்லாருமே ஏமாத்துக்காரங்க. நான் யாரையும் நம்பத் தயாரா இல்லை. அந்தப் பொண்ணு.. அவ பேர் என்ன..? ப்ரவீணா.. ஆ.. அவளை எனக்குப் பிடிக்கவேயில்லை. கொன்னுடலாம்னுகூட தோணுது.. இனிமே இங்கேதான தங்கப் போறேன். போ.. போய் ஏதாவது நல்ல சரக்கா கொண்டு வா..”

குமாருக்கு ஆச்சரியம்.. அண்ணன் இப்படிப் பேசி அவன் பார்த்ததே இல்லை. ஒரு மரணம் ஒரு மனிதனை எப்படி மாற்றிப் போட்டு விடுகிறது..!

உள்ளே போனான்.. பிரிட்ஜை திறந்து ஒரு பாட்டில் எடுத்தான். ரெண்டு கிளாஸ்களை கழுவினான். ஐஸ்கட்டிகளை எடு்த்தான்.
அண்ணன் இருந்த இடம் தேடி வந்தான்.

”குமார்.. எனக்கு வீட்டுக்குள்ளே ரொம்ப வேர்க்குது.. இப்படி காத்தாட வெளியே நடந்தபடி பேசலாம். வந்து தண்ணி போடலாம்..”

சரி அண்ணே..

அவர்கள் கிளம்பினார்கள்..

கந்தர்வ வீணையின் கடைசிப் பகுதி..

ப்ரவீணா தான் எழுதிய கவிதையைப் படித்தாள்..

இது ஒரு கந்தர்வ வீணை..

சுருதிகள் கலைந்த.. தந்திகள் பிய்ந்த வீணை..
நரம்புகளில் வழியும் ரத்த ஆறு..
இந்த வீணையை மீட்ட..
இதன் நரம்புகளில் வழியும்
ரத்தத்தைத் துடைக்க ஒரு
கந்தர்வன் தேவை இல்லை..
ஒரு இரக்கமுள்ள மனிதன் தேவை..
அவனைத்தான் நான்
தேடிக் கொண்டிருக்கிறேன்..
இந்த வீணை..

இன்னும் ஒரு வரி எழுதிவிட்டால் முற்றும் போட்டுவிடலாம். ப்ரவீணா கிளம்பினாள்.

ப்ரியா கான்வென்ட்டில் போய் சேர்ந்து இவளுக்குத் தகவல் வந்துவிட்டது. இனி இவள் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. கிளம்பினாள்.

”இப்படி.. இப்படி.. இந்தப் பாலத்துல உட்கார்ந்துட்டு பேசலாம் குமார்..”

குமார் பார்த்தான். பாலத்தின் கீழ் காட்டாறு ஓடிக் கொண்டிருந்தது..

இங்கு.. இங்குதான்.. இந்த இடத்தில்தான்..?

”குமார்.. இந்த இடத்திலேதானே என் சுருதி விபத்துல செத்தும் போனா..?”

”ஆமா அண்ணே..”

(”சித்தப்பா.. சித்தப்பா.. என்னைக் காப்பாத்துங்க.. யார் இந்த ஆளு..? ஐயோ வேண்டாம் டேய்.. என் பக்கத்துல வராத. உன்னை என் சித்தப்பா கொன்னுடுவார்.. டேய் யாருடா நீ.. பாவி டேய்.. ஐயோ என் டிரெஸ்ஸை கிழிக்காதே.. டேய்.. யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்.. ஐயோ என் ஸ்கூட்டியை ஏண்டா ஆத்துக்குள்ளே வீசிப் போடுறே..? ஐயோ.. நான் எப்படி வீட்டுக்குப் போவேன்..?”)

சட்டென்று குமாரின் சிந்தனைகள் கலைந்தன.

யாரோ இவன் மென்னியைப் பிடிப்பதுபோல..

குமார் சட்டென பார்த்தான்..

ராமசாமி கையில் அரிவாளுடன்..

”ஆ.. அண்ணே.. என்ன இது..?”

”இதுவா? இதுக்குப் பேரு அருவா.. திருப்பாச்சி அருவா.. துரோகி..! என் சுருதியை என்னடா பண்ணினே..? இந்த இடத்துலதானே அவளைக் கொன்னு ஆத்துல தூக்கிப் போட்ட..? சொல்லு.. சொல்லுடா..!”

ராமசாமியின் கண்களில் இருந்த கொலை வெறி அவனுக்கு அச்சமூட்டியது..

”அண்ணே.. என்னை மன்னிச்சிருங்க.. நான் சொல்லிடறேன்.. எல்லாத்தையும் சொல்லிடறேன்.. என்னை விட்ருங்க.. ஆனா இப்போ நான் நல்லவனா மாறிட்டேன். அண்ணியோட சாவு.. என்னை மாத்திருச்சு.. இனிமே நான் தப்பு பண்றதில்லைன்னு சபதம் எடுத்தி்ட்டேண்ணா..”

”நானும் சபதம் எடுத்திருக்கேண்டா நாயே.. என் சுருதியைக் கொன்னவனைக் கொல்லுவேன்னு சபதம் செஞ்சிருக்கேன்..

சொல்லுடா.. எல்லாம் சொல்லு.. எனக்கும் எல்லாம் தெரியும். அந்த மாலதி யாரு..?”

ஆரம்ப நாட்களிலிருந்து ராமசாமியைத் தான் ஏமாற்றியது. நிலபுலன்களை கவனித்துக் கொள்கிறேன் என்று அண்ணன் கொடுத்த பணத்தையெல்லாம் சூறையாடியது.. அப்படியும் போதாமல் ஒரு சைக்கோ குற்றவாளியுடன் சேர்ந்து பெண்களைக் கடத்தியது.. அப்படி கடத்தியபோது மாலதி என்ற பெண்ணைத் தானே திருமணம் செய்து கொண்டது.. கடைசியில் அவளுடனும் வாழ முடியாமல் அவளை பாதியில் விட்டுச் சென்றது.. கடைசியில் சுருதியைக் கடத்தி.. கடைசியில் அந்த சைக்கோ குற்றவாளி பிடிபட.. எங்கே தன்னை அவன் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்ற பயத்தில் எங்கோ ஓடியது.. எல்லாம் எல்லாமே மரண வாக்குமூலங்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரி தவறுகளைச் செய்தால் பிடிபட்டுவிடுவோம் என்று மாறி மாறி இடம் மாறி செய்த அக்கிரமங்கள்..

ராமசாமி கேட்டுக் கொண்டிருந்தார்..

காலடியில் காளான் வருகிறது என்று தெரியாமல் அதற்கு உரம் போட்ட உத்தமர் அல்லவா இவர்..?

தன் காலடியில் நஞ்சுச்செடி உருவாகிறது என்று புரிந்து கொள்ளாமல் அதற்குத் தண்ணீர் ஊற்றியவராச்சே இவர்..?

”எல்லாம் சொல்லி்ட்டேன் அண்ணே.. என்னை மன்னிச்சு விட்ருங்கண்ணே..”

ராமசாமி சிரித்தார்.

”உன்னையா? மன்னிக்கிறதா? கடைசியா கடவுளை வேண்டிக்கோ.. உன்னை பலி போடப் போறேன்.. உன்..”

குமார் கண்ணை மூடிக் கொண்டு அழுதான்.

திடீரென்று..

யாரோ தன்னை ஆற்றில் வீசி எறிவதைப் போல உணர்ந்தார் ராமசாமி.

அரிவாள் எங்கோ தெறித்து விழுக.. பாலத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராமசாமி தண்ணீருக்குள் கீழே.. கீழே அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தார்.

(தொடரும்)

About The Author