புதிய உலகில் புதிய பாடங்கள். ஏதோ ஒரு கம்பெனியில் கிளார்க் வேலைக்குச் சேர்ந்தான். மாலை கல்லூரியில் படித்து டிகிரி வாங்கினான். பி.காம். அக்கெளண்டண்ட்டாக மாறினான். ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டான். சி.ஏ. எழுதினான்.
முதல் பகுதியில் பாஸாகிவிட்டான். இரண்டாம் பகுதிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்.இதை முடித்தால் இவன் தனியாகவே தன் தொழிலைத் துவங்க முடியும்.சில கம்பெனிகளின் ஆடிட்டிங் ரிப்போர்ட் எழுதினாலே போதும். காலூன்றிவிடலாம்.இந்த நேரத்தில்தான் ப்ரவீணாவின் அறிமுகம். குழந்தை ப்ரியாவுடன் நட்பு.
இப்போதுதான் அப்பாவின் வருகை..
இவன் தன் ஆபீஸ் துவங்கும்போது அம்மாவை அழைத்து வந்து அம்மாவின் கைகளால்தான் ஆபீஸை திறக்கச் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தான்.
ஆனால்.. ஆனால்.. இப்போது அப்பாவின் வருகைக்கு என்ன காரணம்..?
”நல்லாயிருக்கீங்களா..?”
இவன் கேட்டான்..
அப்பா பதில் பேசவில்லை.
அந்த அறையைப் பார்த்தார்.
குழந்தை பிராக், விளையாட்டுச் சாமான்கள், முதல் நாள் ப்ரியாவுடன் விளையாடிய லெகோப்ளாக்கின் அடையாளங்கள்.. பன் ஸ்கூலின் லியோ டாய்ஸின் சிதறல்கள்..
அப்பா மெல்ல ஒவ்வொன்றாகப் பார்த்தார்.
”கல்யாணம் ஆயிருச்சா..?”
அப்பா கேட்ட முதல் கேள்வி.. முதல் கேள்வி..
எப்போதும் இவனைப் பற்றிய தப்பபிப்ராயம் வரும்படியாகத்தான் சம்பவங்கள் நிகழ்கின்றன.
”அ.. அது வந்து..”
இவன் திணறினான்..
”பரவாயில்லை.. ஒய்பையும் கூட்டிட்டு வா.. அம்மா உன்னைப் பார்க்க ஆசைப்படுறா.. மரணப் படுக்கையில் கிடக்கா.. அவளோட கடைசி ஆசையை நிறைவேத்தத்தான் உன்னைத் தேடி வந்திருக்கேன்..”
இன்னும் இவனைப் பற்றி அப்பாவிற்கு அக்கறையில்லை. தாலி கட்டிய மனைவியின் கடைசி ஆசையின் பூர்த்திக்காகத்தான் வந்திருக்கிறார்.அப்பா வேறு எதுவும் பேசவில்லை.
”அம்மா சாகுறதுக்குள்ள வந்து சேர்..”
வழக்கம்போல ஆர்டர் போட்டுவிட்டு அப்பா போய்விட்டார்.
இவன் தனக்குள் அழுதான்..
இவனின் எந்தச் சந்தோஷங்களும் முழுமை அடையாதவை..
ப்ரவீணா வரும் இந்த நாளை இவன் எத்தனை மகிழ்ச்சியாகக் கொண்டாட நினைத்திருந்தான்.
அத்தனையும் வீண்..!
ஆனாலும் இன்று அம்மாவின் ஆசி முக்கியம்.. ஆசி முக்கியம்..
அம்மா.. என் அம்மா.. உன்னைக் காணப் பரிசுகளுடன் வருகிறேன் என்றேனே..? என் முதல் மாதச் சம்பளத்தில் உனக்குப் புடவைகூட வாங்கி வைத்திருக்கேனே அம்மா.. அம்மா எனக்காகக் காத்திரு.. நான் வருகிறேன்.. வருகிறேன்..
அழுதபடி ப்ரவீணாவின் வரவுக்காகக் காத்திருந்தான்.
சஞ்சய் பிரமை பிடித்தாற்போல அமர்ந்திருந்தான். அம்மாவின் கடைசிக் காலம்..!
அவள் கண்களை மூடுவதற்குள் அவளைப் பார்க்க – இல்லை – தரிசிக்க வேண்டும்.
ஒரு சகாப்தத்தின் உதயநிலா, அந்தப் பூரண நிலவு அஸ்தமிக்கப் போகிறதா..?
போஸ்ட்மேன் மாதிரி செய்தி சொன்ன தந்தை காணாமல் போய்விட்டார்.
கோபம்.. உண்மைதான்.. இவன் அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பியது..
இவன் திருமணம் செய்து கொண்டிருப்பதாக அவர் நினைத்தது..
சீக்கிரமே கிளம்ப வேண்டும்..
வாசலில் டாக்சி வந்து நிற்கும் சத்தம்..
கதவு திறந்து பார்த்தான்..
ப்ரவீணாதான் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். கையில் ஒரு கிப்ட் பார்சல்..
இவனுக்கா..?
இவன் எப்பவும் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன்.. பரிசுகள் தேடி வரும் என்று காத்திருந்தால், வேறு ஏதாவதுதான் வரும்.. வரக் கூடிய நல்ல நேரங்களைக் கூட அனுபவிக்க முடியாத ஒரு இயலாமை.
”ஹாய் குட்மார்னிங்.. எப்படி இருக்கீங்க..? ப்ரியா உங்களை பாடாப்படுத்தி வைச்சிருப்பாளே..? இளைச்சுப் போயிருப்பீங்கன்னு நினைச்சேன். இந்தாங்க.. இது என் கிப்ட் பிரிச்சுப் பாருங்க.. ஆ.. அன்னிக்கு சொன்னீங்க இல்லை.. முதன்முதல்லா வந்திருக்கீங்க.. ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகணும்ன்னு சொன்னீங்க. நான்தான் அவசரமா கிளம்பிட்டேன். இப்போ சாவகாசமா வந்திருக்கேன். நீங்க தரப் போற விருந்துக்காக வயித்தைக் காலியா வைச்சிட்டு வந்திருக்கேன். என்ன மெனு..?”
ப்ரவீணா படபடவென்று பேசினாள்.
இவனுக்குப் பதில் சொல்ல நேரம் கொடுக்காமல் பேசினாள்.
இவனால் இன்று எதையுமே கொடு்க்க முடியாது என்கிற உண்மை புரியாமல் யாசிக்கின்ற பிச்சைக்காரியாக இவன் முன் கையேந்தி வந்திருக்கிறாள்.
பரிசுகளுடன் பாய்ந்தோடி வந்திருக்கிறாள்.
இவன் தரப் போவது..?
சொந்தத்தை அல்ல.. சோகத்தை..!
இவன் சொல்லப் போவது..
தத்தளிக்கும் கதையை..
சட்டென்று இவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த ப்ரவீணா திகைத்தாள்.
”என்..? ஏன்னாச்சு..?”
இவன் தந்தை வந்ததையும், தாயின் இறுதிக் கட்ட நிலையையும் கூறி தன் வருகைக்காக அவள் சுவாசத்தை நிறுத்தி வைத்திருப்பதையும் கூறியபோது..
ப்ரவீணா பதறிப் போனாள்..
”மை காட்..” என்றவள்..
உடனே தன் செல்போனில் எங்கோ பேசினாள். யாரிடமோ பேசினாள்.. இவன் பிரமை பிடித்தாற்போல் அமர்ந்திருந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் டாக்சி வந்து நிற்க..!
”கிளம்புங்க சஞ்சய்.. முதல்லே உங்க அம்மாவைப் பார்க்கணும்.. அப்புறம்தான் பாக்கி..”
கண்களில் நீர் தளும்ப..
நன்றி சொல்ல முற்பட்டவனை..
”நோ.. முதலிலே கார்ல ஏறுங்க.. ஐந்து நிமிடத்துலே வர்றேன்..”
”ஆன் தி வே.. உங்களை டிராப் பண்ணிறட்டுமா..?”
”பாதி வழியிலேயே டிராப் பண்ணறதுதான் உங்க பண்பாடா..? ஐ ஆம் ஆல்ஸோ கம்மிங்க்..”
திகைத்தான்..
”ப்ரியா..”
”நீங்க எங்கையோ பார்த்திட்டு உக்காந்திருக்கும்போதே ப்ரியாவை ரெடி பண்ணிட்டேன்.. ஸீ இஸ் ரெடி ஆன்..”
”அங்கிள்…” என்றபடி ப்ரியா தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.
புது ப்ராக்..
”நல்லாயிருக்கா அங்கிள்.. அம்மா வாங்கிட்டு வந்திருக்காங்க. உங்களுக்கு..”
”ஸ்ஸ்.. ப்ரியா.. அதெல்லாம் காரிலே போகும்போது பேசிக்கலாம்..”
”கம் ஆன்.. கெட் அப்.. வீட்டுச் சாவி எங்கேயிருக்கு..? மெயின் டோரை பூட்டினா போதுமா..?”
ப்ரவீணா கேட்டாள்..
இவன் வார்தைதகளின்றி முடங்கிப் போனான்..
நன்றி கூற நாவுக்கு வலிமையின்றி மெளனியானான்..
கார் கிளம்பியது..
(தொடரும்)”
னல்லா இருக்கு பிரவினா பெசுரது,னடை முரைகு ஒதுவருமா…………….மேடம் தான் சொல்லனும்