வாசலில் நின்று கொண்டிருந்தவர்…
இவன் தந்தை..
சஞ்சயின் தந்தை ராமசாமி..
அப்பாவா? இங்கா? இவரைத் தேடியா.. கடவுளே இதென்ன கொடுமை..?
இத்தனை வருடங்களுக்குப் பிறகு இவன் இருக்குமிடம் தேடி வந்திருக்கிறார்.
இன்னும் இவன் அந்த வீட்டைவிட்டு ஓடி வந்த தினம் நினைவில் இருக்கிறது. படிப்பு அரைகுறை.. இண்டர்வியூவிற்குச் சென்ற இடங்களில் எல்லாம் தோல்வி..
பணக் கஷ்டம்.. அப்பா கத்திக் கொண்டிருந்தார்.
”எனக்குக் கொடுப்பினை இல்லை.. நன்றாகப் படிப்பாள். என்னைக் கடைசிவரை காப்பாத்துவாள்ன்னு நினச்ச என் பொண்ணு போயிட்டா.. கடைசில உதவாக்கரைகள்தான் மிச்சம்.. ம்.. ஒண்ணுக்கும் ஆகாத யாருக்கும் பிரயோஜனமில்லாத இவனைப் போன்ற ஆட்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்..?”
அப்பா தனக்குள் முணுமுணுப்பது போல் இரைந்து கத்திக் கொண்டிருந்தார்.
இவனுக்குக் கோபம் வந்தது..
தோல்விகளின் வரிசையான ஆக்கிரமிப்புகள்.. தங்கையின் மரணம் தந்தபோது ஏற்பட்ட குற்றவுணர்வுகள்.. எல்லாமுமாகச் சேர்ந்து இவனுள் ஒரு பூகம்பத்தை தோற்றுவித்தன.
இனி இந்த வீட்டில் ஒரு நிமிடம்கூட தங்கக் கூடாது..
எதிர்காலம்..?
இருண்ட காலமாகக் காட்சி தந்தாலும் வாழ முடியும் என்ற ஏதோ ஒரு ஒளிக்கீற்று இதயத்துள்..
கிளம்பிவிட்டான்…
ஷோல்டர் பேக்கில் தன் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டான்.
அந்த நீலக் கலர் ஜீன்ஸ்..
அம்மா வாங்கித் தந்தது..
இவன் முதல் வகுப்பில் பாஸ் செய்தால் வாங்கித் தருவேன் என்று அப்பா சொன்னது..
வழக்கம்போல இவன் கடைசியில் முதலாவதாக வந்தான்.
அவமானம் கொப்பளிக்க இவன் வீடு திரும்பியபோது அம்மா இவனை ரகசியமாகக் கூப்பிட்டாள். இவன் பார்த்து வைத்திருந்த அந்த ஜீன்ஸ் பேண்ட்டை இவனிடம் தந்தாள்.
”நான்தாண்டா வாங்கினேன்.. பரவாயில்லை. அப்பா கோபமா இருக்கார்.. இந்த வருஷம் இல்லாட்டி அடுத்த வருஷம் நீ பஸ்ட்டா வர மாட்டியா..? இது அட்வான்ஸ் அன்பளிப்பு..!”
அம்மா..
நெகிழ்ந்து போனான்..
தாய்மைதான் எத்தனை வலிமையானது..
இவன் சோர்ந்த போதெல்லாம் இவனுள் புதிய ஜீவ ஊற்றை ஊறச் செய்த அட்சயப் பாத்திரம்..!
இன்று அந்த அமுதசுரபியைவிட்டுப் பிரியப் போகிறான். அதுதான் வருத்தம்..
அம்மாவிடம் நேரில் சொல்லிக் கொண்டால் அனுமதிக்க மாட்டாள்..!
பிறகு இவனும் மாறிவிடுவான்.. வேண்டாம்.. யாரிடமும் சொல்லிக் கொள்ள வேண்டாம்..
கிளம்புமுன் அம்மாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
மகளை ஆண்டவன் எடுத்துக் கொண்டுவிட்டான் என்று அழுது, அழுது சோர்ந்த அந்த தாய், தன் மகனாவது தன் அருகில் இருப்பது நிம்மதி என்கிற உணர்வில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அம்மா, நானும் உன்னைவிட்டுப் பிரியப் போகிறேன். என்றாவது ஒரு நாள் திரும்பி வருவேன். பெரிய மனுஷனாகி.. என் காலில் நிற்கும் தகுதியைப் பெற்ற பின், உன்னைக் காணப் பாசத்துடன் வருவேன். பரிசுகளுடன் வருவேன்..
தாயின் கால்களை மெல்ல கண்களில் ஒற்றிக் கொண்டான். அந்த ஒற்றை ஷோல்டர் பேகுடன் கிளம்பியபோது வாசலில் நிழலாடியது.
திரும்பினாள்.
அம்மா..
”அம்மா தூங்கவில்லையா..?”
அம்மா கையில் ஒரு பெளச்..
”நேத்து அப்பா திட்டினபோதே நினைச்சேன்.. இந்த மாதிரி ஏதாவது முடிவெடுப்பன்னு தெரியும். பரவாயில்லை.. தினம், தினம் உன்னைக் கரிச்சுக் கொட்டிட்டு இருக்கிறவரோட வாழறதைவிட நீ தனியாப் போ.. ஆனா உன்னை நீ நிரூபி.. உன்னால தனித்து வாழ்ந்து நல்லபடியா இந்த சமுதாயத்துல உயர முடியும்னு நிரூபி. கற்ற கல்வியோட அனுபவப் பாடத்தையும் சேர்த்துப் படி. நிச்சயம் உன்னால சாதிக்க முடியும்.. சாதனையாளர்களும், சாதாரண மனிதர்கள்தான். முயற்சியும், பயிற்சியும்தான் தாரக மந்திரங்கள். பத்து விரல்கள் உன் மூலதனம். நீ வெற்றி பெற்று திரும்பி வரும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்..”
அம்மா ஆசி வழங்கினாள்.
அம்மாவால் அந்த வீட்டைவிட்டுக் கிளம்ப முடியவில்லை. ஆனால் இவனுக்கு மட்டும் விடை கொடுத்தாள்.அம்மா கொடுத்த அந்தப் பையில் சில ஆயிரம் ரூபாய்கள்.. அம்மாவின் சில நகைகள்..
”வச்சுக்கோப்பா.. போராட்டம் நிறைஞ்ச இந்த உலகத்துலே முதல்லே நீ உன்னை நிலைப்படுத்திக் கொள்ள அஸ்திவாரம் தேவை. அதுக்குத்தான் இது.. இது ஆரம்பம்.. மேலே, மேலே நீ உயரும்போது இது போல நிறைய பணத்தை உன்னால காட்ட முடியும்..”
அம்மாவின் ஆசிகளோடு இவன் அந்த வீட்டைவிட்டு வெளியே அடியெடுத்து வைத்தான்.
புதிய வாழ்வில் அடியெடுத்து வைத்தான்.
(தொடரும்)