கந்தர்வ வீணைகள் (10)

பொழுது விடிந்தது..

சஞ்சய் எழுந்துவிட்டான்.. அலாரம் வைத்திருந்தும்கூட காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட்டது.

மனதில் ஏதோ உளைச்சல்.. இன்று ப்ரவீணா வரப் போகிறாள் என்ற டென்ஷனா? அல்லது ப்ரியாவைப் பிரியப் போகிறோம் என்ற வேதனையா..?

ப்ரியாவிற்கு கேசரி பிடிக்கும் என்று.. கேசரி எப்படிச் செய்வது என்று புத்தகத்தை வாங்கி பரீட்சைக்கு படிக்கிற மாதிரி படித்தான்..

இவன் தன் நளபாகத்தை ஆரம்பித்தபோது, சர்க்கரையும், ரவையும் நெய்யும் எசன்ஸும் செலவானதே தவிர, கேசரி பாத்திரத்தை விட்டு வெளியே வர மறுத்தது..

கோந்தாகப் பயன்படுத்தலாம். ஸ்வீட் கோந்து. இது சரிப்படாது என்று ரெடிமேட் கேசரி மிக்ஸ் ஒன்றை வாங்கி வந்தான்.
அதை இன்று செய்து பார்த்துவிட வேண்டும். அதிக சிரமமில்லை. அலுமினிய பாயிலில் அந்த மிக்ஸ் இருக்கிறது. அப்படியே அதைக் கவரோடு கொதிக்கிற வெந்நீரியில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்தாலே போதும்..

கேசரி ரெடி..

நல்லவேளை இவனுக்கு வெந்நீர் போடத் தெரியும்..!

இந்த ரெடிமேட் கேசரியைச் செய்துவிட்டு நானே செய்தேன் என்று பெருமை பேசிக் கொள்ளலாம். மறக்காமல் காலி கவரை மட்டும் மறைத்து வைத்துவிட வேண்டும்.

ப்ரவீணா இதைக் கட்டாயம் சாப்பிடுவாள். ஏனெனில் நான் திரும்பி வந்த பிறகு உங்கள் ட்ரீட்டை ஏற்றுக் கொள்கிறேன் என்றாளே..
இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும்படியான ஒரு சிறிய டைனிங் டேபிளை வாங்கிப் போட்டிருந்தான். போல்டிங் மாடல்.. தேவையில்லாத போது மடக்கி சுவரோடு சாய்த்து வைக்கலாம். இஸ்திரி போடக்கூட பயன்படுத்தலாம்.இவன் திரும்பிப் பார்த்தான்.
ப்ரியா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திவிட்டு இவன் எழுந்தான்.

நேற்று ப்ரியாவுடன் ஏதோ கேம் விளையாடியதில் ஹாலில் அந்த கேம் சம்பந்தப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தன.அவற்றை ஒழுங்குபடுத்தினான். வாசலில் பால்பாக்கெட் காத்திருந்தது.. அதையெடுத்தான். பல் துலக்கிவிட்டு இன்ஸ்டண்ட் காப்பி பவுடரை எடுத்தான்.

இவனுக்கு பில்டர் காபி போட வராது. டிகாஷன் எடுக்கும்போது கொதிக்கிற பில்டரை கீழே போட்டு மேடை முழுவதும் சிந்திய பாலும், கொட்டிய டிகாஷனும் கலந்து காபி ஆறு ஓடியதிலிருந்து அவன் பில்டர் காபி போடுவதை நிறுத்திவிட்டான்.
காபியை நக்கியா குடிக்க முடியும்..?

இவன் முகம் கழுவிக் கொண்டு எலெக்ட்ரிக் ஹீட்டரில் வெந்நீர் போட்டான்.ப்ரூ காபி பொடியை எடுத்து விளம்பரங்களில் வருவதுபோல முகர்ந்து பார்த்து மூக்கில் காபி பொடி போனதில் வரிசையாகத் தும்மல் போட்டான்.இரண்டு காபி டபேராக்களை கீழே போட்டான்.

இத்தனை களேபரத்திலும் ப்ரியா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

வாசலில் யாரோ பெல் அடித்தார்கள்.

இந்த நேரத்தில் ப்ரவீணாவாக இருக்காது..

வாசல்படியில் பேப்பர் கிடந்தது..

பேப்பரை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

தலைப்புச் செய்திகளைப் பார்த்தான்.

இனவெறியை மீறி ஷில்பா ஷெட்டி 63 சதவிகித ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற கதையை புகைப்படங்களுடன் முக்கியச்
செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.

பிரிட்டனில் 4-வது சேனல் நடத்தும் ரியாலிட்டி ஷோ. இதில் நடந்த குழப்பத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.. இந்திய பார்லிமெண்ட் உட்பட இதே பேச்சாகிவிட்டது..

ஆச்சி மசாலா போல ஊரெல்லாம் இதே போச்சு..

இந்தப் போட்டியில் அனுதாப அலையில் ஷில்பா ஷெட்டி வென்றிருக்கிறார்.

மகிழ்ச்சி.. ஒரு இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை. பரிசு மூன்று கோடி ரூபாயாம். அதைத் தவிர பணமாக ஒரு கோடியாம்.. அலங்காரப் பொருட்களாம்.. மாடலிங் பொருட்கள்.. இனி ஷில்பா ஷெட்டி சினிமாவில் நடிக்க வேண்டாம். போதும், போதும் என்கிற அளவுக்கு பரிசுகள் கோடி, கோடியாய் பணம்.

இவனுக்குத் தெரிந்ததெல்லாம் தெருக்கோடிதான். இவனையும் யாராவது இப்படி ஒரு தனியறையில் அடைத்துவிட்டால்..?

கூட ப்ரவீணாவும் இருந்தால்..?

எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்கக் கூடிய வாய்ப்பா அது..?

இப்போதைக்கு இவன் குழந்தை ப்ரியாவுடன் இருக்கிறாள். இதுதான் நிஜம்..

ப்ரியாவை எழுப்ப வேண்டும்.

மீண்டும் வாசலில் யாரோ காலிங்பெல்லை உயிர்ப்பித்தார்கள்..

ஒருவேளை ப்ரவீணாவோ?

கதவைத் திறந்தான்.

திறந்தவன் பிரமித்தான்..!
(தொடரும்)

About The Author

1 Comment

  1. மார்கண்டேயன்

    சுவாராஸ்யமாக செல்கிறது தங்களின் தொடர், வாழ்த்துகள், மார்கண்டேயன்

Comments are closed.