கந்தர்வ வீணைகள் (1)

"பெயர்..?"

"சஞ்சய்.."

"சஞ்சய் ராமசாமியா..?"

"இல்லை மேடம்.. புன்செய் ராமசாமி.."

"வாட் யூ மீன்..?"

"எங்கப்பா பேர் ராமசாமிதான். அவர்கிட்ட வானம் பார்த்த பூமி புஞ்சை நிலம்தான் நிறைய.. அதனால அவரை எல்லாருமே புஞ்சை ராமசாமின்னுதான் கூப்பிடுவாங்க..!"

அவளுக்குச் சிரிப்பு வந்தது..

"கஜினி சினிமா வந்தாலும் வந்தது.. என்னை எல்லாருமே சஞ்சய் ராமசாமின்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.."

"ஷார்ட் மெமரி இல்லையே..?"

"நோ மேடம்.. வேலையைக் கொடுத்துப் பாருங்க.. எவ்வளவு பிரில்லியண்ட்டுன்னு தெரியும். நூறு வருஷம் கதைகூட மறக்க மாட்டேன்.."

"நூறு வயசாயிருச்சா? நம்ப முடியவில்லையே..?"

"உம்.. சரித்திரப் பாடம் படிக்கிறவங்க எல்லாம் ஆயிர வருஷக் கதையை நினைவு வைச்சிருக்காங்க.. அப்போ அவங்களுக்கெல்லாம் ஆயிரம் வயசா? ஸாரி.. கொஞ்சம் அதிகப்பிரசங்கம் பண்ணிட்டேனோ..?"

"கொஞ்சம் இல்லை.. ரொம்பவே.. ஓகே.. நீங்க போகலாம்.."

"அப்போ..?"

"இந்தாங்க.. நீங்க இங்கே மறந்து வைச்சுட்டுப் போன உங்க ஆபீஸ் பைல்.. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க.."

"நீங்க கேட்ட கேள்வியையெல்லாம் பார்த்தா இங்கே எனக்கு வேலை தர்றதுக்காக இண்டர்வியூ நடத்தறீங்களோன்னு சந்தேகப்பட்டேன்.."

"உம்.. யூ மே கோ நெள.."

"யெஸ் மேடம்.."

அவன் தன் பைலை வாங்கிக் கொண்டு கண்ணாடி கேபினின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

ப்ரவீணா.. எம்.டி.. திவ்யா குரூப் ஆஃப் கம்பெனீஸ் என்று போட்டிருந்தது..

காலை இங்கு இவன் வந்ததென்னவோ உண்மைதான். தன் நண்பன் ஒருவனைச் சந்திக்க வந்தான். ரிசப்ஷனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிவிட்டான்.. பாதி வழியில் போனதும்தான் கையில் பைல் இல்லாதது தெரிந்தது.. ஆபீஸ் கணக்கு வழக்கு பைல் அக்கெளன்டண்ட் ஒரு முசுடு.. மேலே விழுந்து பிடுங்கும் அவசரமாகத் திரும்பி வந்து ரிசப்ஷனில் பார்த்தால் பைலை காணவில்லை.

ரிசப்ஷனில் கேட்டான்..

"ஓ.. பைல் உங்களதுதானா..? யாரோ மறந்து வைச்சுட்டுப் போயிட்டாங்கன்னு எம்.டி. ரூம்ல கொடுத்திட்டேன்.. இருந்து வாங்கிட்டுப் போயிருங்க.."

இவன் எம்.டி. ரூமை நோக்கிப் போனபோது..

"வெயிட் பண்ணுங்க ஸார்.. க்ளையண்ட்ஸ்கிட்ட எம்.டி. பேசிட்டு இருக்கார்.. நான் சொன்னப்புறமா போங்க.."
எரிச்சலுடன் காத்திருந்தான்..

வேணும்.. எனக்கு நல்லா வேணும்.. என் மறதிக்குச் சரியான தண்டனை..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ரிசப்ஷனிஸ்ட் யூ கேன் கோ என்று சொன்ன பிறகுதான் இவன் எம்.டி.யின் அறைக்குள் நுழைந்தான்.

டை கட்டிய ஒரு வயதான ஆளை எதிர்பார்த்துப் போனவனுக்கு அப்சரஸ் மாதிரி அமர்ந்திருந்த அந்த அழகியைக் கண்டதும் வியப்பாகிவிட்டது..

எம்.டி.யின் பெயரைக் கூட பார்க்காமல் அறைக்குள் நுழைந்த தன் மடத்தனத்தை நினைத்தபடி "குட்மார்னிங் ஸார்.. ஸாரி மேடம்.." என்று ஆரம்பத்திலேயே அபத்த அறிமுகம் செய்து கொண்டான்.

"நீங்க..?"

அதன் பின்தான் ஆரம்ப வாசகங்கள்..

இவன் யோசித்தபடி தன் பைக்கின் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது..

பைக் சாவியை எம்.டி.யின் டேபிளிலேயே விட்டுவிட்டு வந்த உண்மை. மீண்டும் போக வேண்டும். கொஞ்சம் உற்சாகமாகவே மீண்டும் உள்ளே நுழைந்தான்.

(தொடரும்)

About The Author

4 Comments

  1. Suhanya

    ஆரம்பம் ரொம்ப அர்புதம்,எப்பொதும் பொல.

  2. arockia

    ரொம்ப ஜாலியா இருக்கு. இப்படியே கதை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  3. rvishalam

    அன்பு விமலாஜி பைக் சாவியை வேண்டுமென்றெ வைத்து விட்டு வந்தது கதைக்கு நல்ல

    ஆஅரம்பம் . நான் உங்கள் ரசிகை …

Comments are closed.