கடல் மாதிரி வீடு. மூன்று கட்டு. மூன்றாம் கட்டில் நாங்கள் இருந்தால் யாருக்கும் தெரியாது. வீட்டின் நடுவே வானம் பார்க்க வசதியாய் முற்றம். இரும்புக் கம்பியால் சதுரம் சதுரமாய் அடைத்திருந்தார்கள். எத்தனை அறைகள் என்று விரல் விட வேண்டும்.
கொல்லைப்பக்கம் பசு மாடுகளின் மணியோசை. மாட்டுப் பொங்கல் வந்து விட்டாலே குஷிதான். கொம்புகளுக்கு காலையிலிருந்து வர்ணம் பூசிக் கொண்டிருப்பார்கள். பொறுமையாய்க் காட்டிக் கொண்டிருக்கும். அதன் கொம்புகளில் புதுத் துண்டில் பணம் வைத்துக் கட்டி விரட்டி விடுவார்கள். பின்னாலேயே ‘ஹோ’வென்று கத்திக் கொண்டு ஓடுவோம்.
தாமரைக் குளத்தில்தான் தினசரிக் குளியல்.’கொடி சுத்திக்கும்டா.. பார்த்து’ என்று எச்சரிக்கப்பட்டு அனுப்பப்படுவோம். இதனாலேயே தாமரைக் குளத்தில் குளிக்க அத்தனை சுதந்திரம் இல்லை.
கோவில் வாசல் பக்கம் ஒரு குளம். அங்கே மாடுகள்தான் வழக்கமாய் குளிக்கும். அதன்மேல் மொய்க்கும் உண்ணிகள், பரிய ஈக்கள் குளிக்கப் போகும் எங்களையும் பிடுங்கும். அப்போது கற்றுக் கொண்டதுதான் உள் நீச்சல். குளத்தின் இக்கரையிலிருந்து அக்கரை வரை நீச்சல் அடித்து சாதனை புரிந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாய் இருக்கிறது. ஏறக்குறைய ஜில்லிட்டு வீடு திரும்பும்போது பசி அதன் உச்சத்தில் இருக்கும். முதல் நாள் கோவிலில் கிடைத்த புளியோதரை பிரசாதமும் கெட்டித் தயிரும் தாமரை இலையில் வைத்துத் தருவார்கள். இப்போது நினைத்தாலும் அதன் சுவை நாக்கில் நிற்கிறது.
மழை நீர் தேங்கியதாகவோ, கொசுக்கள் பிடுங்கியதாகவோ சரித்திரமே இல்லை. கல்யாணமோ, துக்கமோ ஊரே ஒன்று கூடி விடும். அலமுவின் சிநேகம் கிடைத்தது அந்த மாதிரி ஒரு சமயத்தில்தான்.
கோவில் தீட்சதரின் மகன் கல்யாணம். தாலி கட்டி முடிந்த அரை மணியில் அதுவரை உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி இறுதி மூச்சை விட்டாள்.
‘அலமு.. இனிமேல உனக்கு யார் இருக்கா’ என்கிற அலறல் கேட்டது. ஒரு வாரம் முன்பே கல்யாணத்திற்கு வந்திருந்த பாட்டியும், பேத்தியும் அவ்வளவாய் எங்கள் கவனத்தை அதுவரை ஈர்க்கவில்லை. இப்போது அலறல் கேட்டு அலமுவை முதல் முறையாக உற்றுப் பார்த்தோம். ரெட்டை ஜடையில் ஒரு தேவதை என்று வயசான பின் சொல்லத் தோன்றியது. அப்போது ஒரு ஈர்ப்பு இருந்தது மட்டும் நிஜம்.
‘நீங்கள்ளாம் வரக் கூடாது’ என்று மிரட்டிவிட்டு பா(ட்)டியைக் கொண்டு போனார்கள். குளத்தில் குளிக்க அன்று கூடுதலாய் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சுடச் சுட குழம்பு சாதம், கூட்டு சாப்பிடக் கொடுத்தார்கள். பாட்டி செத்தது கல்யாண சாவு என்று சொல்லி தினசரி ஒரு ஸ்வீட் கிடைத்தது. லட்டு, அப்பம், அதிரசம், மைசூர் பாகு.. எங்கள் கெட்ட புத்தியில் ஊரில் உள்ள மற்ற பாட்டிகள் எல்லாம் எப்ப போவார்கள் என்று சித்ரகுப்தனாய் மாறி ஏடாகூடமாய் யோசிக்க ஆரம்பித்தோம்.
இத்தனை நேரம்’நாங்கள்’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த நாங்கள் யார், யார் என்று உங்களுக்குச் சொல்லவில்லை. நான், கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, பட்டா என்கிற பார்த்தசாரதி, கோவாலு என்கிற கோபால்.
பத்து நாட்கள் முடிகிறவரை ஊருக்குப் போக வேண்டாம் என்று அலமுவை நிறுத்திவிட்டாரகள். கோவிலுக்கு பெரும்பகுதி போக முடியாமல் தீட்டு. சுற்றி வளைத்து எல்லோரும் சொந்தம் என்கிற லாஜிக்கில். தீட்சதர் மட்டும் துக்கத்துடன் போனார். மற்ற நாட்களில் ஒத்தாசைக்கு ஆட்கள் இருப்பார்கள். இப்போது அவரே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. கோவிலை பத்து நாட்கள் மூடி விடலாமா என்கிற அபத்தமான யோசனை ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது.
எங்கள் நால்வரில் நான் தான் வயதில் சின்னவன். மற்ற மூவரும் ஏறக் குறைய ஒரே வயது. அதனால் எந்த வேலைக்கும் என்னைத் தான் ஏவி விடுவார்கள் முன்பு. இப்போது சீன் மாறி விட்டது.’டேய் அலமுக்குக் காபி கொடுத்துட்டு வாடா..’ என்று குரல் கேட்டால் எனக்கு முன் மற்ற மூவரும் ஓடிப் போய் நிற்பார்கள்.’அலமு தனியா குளிக்க போக வேண்டாம்.. நீ போ கூட’ ஒருத்தன் சோப்.. அடுத்தவன் டவல்.. என்று பூனைப் படை ரெடியாகி விடும்.
வெளியில் வர முடியாத அலமுவின் பொழுதுபோக்கிற்கு கேரம் விளையாட நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்தோம். கிச்சா ஃபாலோ வேண்டுமென்றெ போடாமல் விட்டு விடுவான். இந்த யுக்தி புரியாத கோவாலு (ஆட்டமென்று வந்து விட்டால் கொலை வெறியுடன் இருப்பான்) ஃபாலோ காயினைப் போட்டு விட கிச்சா முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு’ஏண்டா தப்பாட்டம் ஆடற’ என்று கேட்பான். கோவாலு சண்டை போட்டுக் கொண்டு வெளி நடப்பு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கிச்சாவின் மனசைப் படிக்க முடிந்ததால் சில நேரங்களில் நானே கோவாலுவின் வெறியைத் தூண்டி விட்டிருக்கிறேன். அலமுவுக்கோ எங்கள் சண்டை அவளின் சுவாரசியத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தது. கோவாலு எழுந்து போனதும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு ‘என்னாலதானே உங்களுக்குள்ள சண்டை’ என்று கேட்பாள்.
‘நீ பேசாம இரு. அவன் போனா என்ன.. நாங்க இருக்கோம்ல’ கிச்சா உணர்ச்சி பூர்வமாய் குமுறுவான். பட்டாவின் கண்கள் சட்டென்று கலங்கி விடும். எனக்கோ மையமாய் முகம். அதிலிருந்து யாருக்கும் எதுவும் புரியாது.
அலமுவின் கண்கள் சில சமயம் பாட்டியை நினைத்து கலங்கும். அல்லது அவள் எதிர்காலம் நினைத்தோ? கிச்சா தன் சேமிப்பு மூன்றரை ரூபாயைக் கண்ணில் காட்டாமல் (வீட்டில் சுட்டது பிளஸ் கடைகண்ணிகளுக்குப் போன கூலி)’நான் உன்னைக் காப்பாத்தறேன்’ என்பான்.
தனிமையில் அவனிடம் கேட்டேன்.
‘என் ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்..ஹெல்ப் பண்றியா’
கிச்சா எப்போதும் இல்லையென்று சொன்னதில்லை.
"பார்க்கலாம்டா’
அப்பாவே ஸ்கூல் ஃபீஸைக் கட்டி விடுவதால் கிச்சாவை நான் சோதிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
அலமுவைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த நாங்கள் இது வெகு காலம் நீடிக்காது என்பதை மறந்து விட்டிருந்தோம்.
கிரேக்கியம் முடிந்து அலமு புதுப் பாவாடை தாவணியில் ஜொலித்தபோது கோவிலுக்குள் எல்லோரும் போனோம். தீட்சதருக்கு சந்தோஷத்தில் அழுகையே வந்து விட்டது. இனி அவருக்கு ஹெல்ப்பர் வந்து விடும்.
பிராகாரத்தில் புறாக்களின் ஹுக்கும்.. ஹுக்கும்.. வவ்வால் வாசனை (!) மடப் பள்ளி நெடி.. அலமு ஊஞ்சல் மண்டபத்தில் உட்கார்ந்தாள். பவழமல்லி செடி அருகே பட்டா. கோவாலு சமீபத்திய கோபத்தில் சற்று தள்ளி நின்று வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தான். கிச்சா கீழ்ப்படியில் அலமுவின் முகம் பார்த்து அமர்ந்து அடுத்த உத்திரவு என்ன என்கிற பாவனையில் இருந்தான்.
"நாளைக்கு ஊருக்குப் போகணுமாம்"
அலமு சொல்லும்போதே பட்டா அழுது விட்டான்.
கிச்சா படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு (மூன்றாம் வகுப்பில் இரண்டாம் வருடம்) அலமுவைக் காப்பாற்ற என்னென்ன யுக்திகளைக் கையாளலாம் என்று மூக்கை விடைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.
"உங்க சித்தப்பா வீட்டுக்குத்தானே போகப் போறே" என்றேன் அப்பாவியாய்.
கிச்சா படக்கென்று எழுந்து வந்தான்.
"அந்த வீட்டுக்கு எப்படிப் போக முடியும்"
"ஏன்.. பஸ்ஸுலதான்"
"உளராதே.. சொந்த அம்மாவை (அலமுவின் செத்துப்போன பாட்டி) வச்சுக்காத மனுசன் அலமுவை வச்சுக் காப்பாத்துவார்னு என்ன நிச்சயம்?"
பட்டா இதை உடனே ஆமோதித்தான். கோவாலு கூட இணக்கமாய் முகம் வைத்துக் கொண்டான்.
"நாம என்ன பண்ண முடியும்" என்றேன் குழப்பமாய்.
"எங்கம்மா கிட்ட பேசி இங்கேயே அவளை இருக்கச் சொல்லிட்டா"
"நீதான் இப்ப உளர்றே.. சான்ஸே இல்ல"
கிச்சா உணர்வின் உச்சத்தில் இருந்தான்.
"அப்ப நானும் அவகூட போறேன்"
‘சித்தப்பா அலமுவையே வச்சுக்க மாட்டார். உன்னை எப்படி வச்சுப்பார்’
கிச்சா என் பார்வையை அந்த மங்கிய ஒளியிலும் படித்து விட்டான்.
அலமு எங்கள் சண்டையைப் பற்றி கவனம் இல்லாமல் கையில் இருந்த காகிதத்தை மடித்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அலமுவுக்கு கை வேலைகளில் ஆர்வம். இந்த பத்து நாட்களில் கவனித்திருக்கிறேன். கையில் எது கிடைத்தாலும் அதை ஏதோ ஒரு அழகுப் பொருளாக உரு மாற்றி விடுவாள்.’தூக்கிப் போடாதே கொண்டா’ என்பதுதான் அவள் தாரக மந்திரம்.
தென்னை ஓலையில் அவள் செய்த கிளியை நான் வீட்டுக் கொண்டு போனபோது அம்மா உள்ளே அனுமதிக்கவில்லை.
"சீச்சீ.. கருமாந்திரம்.. இதை ஏன் உள்ளே கொண்டு வரே"
"அம்மா.. கிளிம்மா"
"இது அதுக்காகக் கொண்டு வந்த ஓலைடா"
பார்வைகள் எப்படி மாறுகின்றன!
"என்னடா பண்றீங்க.. வாங்கடா.." அதட்டல் கேட்டது.
அலமு எழுந்தாள். கடைசி நிமிடங்கள் இந்த ஊரில். இனி திரும்ப வருவாளோ.. மாட்டாளோ.. மூலஸ்தான கலசத்தைப் பார்த்தாள். மதிலை.. ஊஞ்சல் மண்டபத்தை.. வாகனங்களை.. கடைசியாய் எங்களை.
என் கையில் உரு மாற்றியிருந்த காகிதத்தைத் திணித்தாள். கத்திக் கப்பல்!
அவளிடம் பழக ஆரம்பித்தபோது கேட்டது. பேச்சு வாக்கில் சொன்னாள். கத்திக் கப்பல் என்று. கப்பல் தெரியும். அது என்ன கத்திக் கப்பல்?
அடிப்பாகத்தில் ஒரு நீட்டல். கீறிக் கொண்டு போகுமாம். சண்டைக் கப்பல்.
"என் பிரஸண்ட்" என்றாள் லேசாய் சிரித்துக் கொண்டு.
கோவாலு அருகில் வந்து எட்டிப் பார்த்தான். பிறகு என்னிடம் கை நீட்டினான். வாங்கிப் பார்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விட்டான்.
"அலமு.."
அலமு மட்டுமல்ல.. நாங்களுமே திடுக்கிட்டு திரும்பினோம். கோவாலு!
"அலமு.. நீ சாதாரணப் பொண்ணு இல்ல.. உங்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. ஒரு திறமை.. உங்க சித்தப்பா வீட்டுல நீ ஒரு சுமை இல்ல.. சொத்துன்னு புரிய வைக்கிற மாதிரி நடந்துக்க. அப்புறம் அவங்க உன்னைக் கொண்டாடுவாங்க.. ஒரு பொண்ணு தனியா இருக்கறத விட சொந்தங்களோட இருந்தாத்தான் நல்லது.. நீ ரொம்ப நல்லா வருவ"
ஆவேசம் வந்த மாதிரி பேசினான். கிச்சா ஆடிப் போய் விட்டான். பட்டாவுக்குக் கண்கள் கலங்கவில்லை. கோவில் பின்னணியில் கோவாலுவின் குரல்!
அலமு கோவாலுவைக் கட்டிக் கொண்டபோது அந்தப் பரிசு அவனுக்குத் தகும் என்று நாங்கள் அமைதி காத்தோம்.
கிராமத்திலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் நடந்து போய் பஸ் ஏற்றி விட்டுத் திரும்பினோம்.
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு அலமுவைப் பார்த்தபோது டவுனில் அழகுவினைப் பொருட்கள் மற்றும் ட்ரெஸ் மெடீரியல்ஸ் ஓனராக (அலமுஸ்) சந்தித்த போது கோவாலு (சரியாகப் படிக்காமல் உதவி தீட்சதராக கோவில் பணி)வின் கணிப்பு வீண் போகவில்லை என்பது புரிந்தது
——————————————————————————–