கண் பேசும் வார்த்தைகள்

அழகுத் தலைப்புடன் அறிமுக இயக்குநர் ஆர்.பாலாஜி. நாயகனாகத் தொலைக்காட்சி புகழ் செந்தில். இவர் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் என்பது கூடுதல் தகவல். இசை அமைப்பாளர் புதுமுகம் ஷமந்த். கன்னி முயற்சி எப்படியிருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்!

கண்பேசும் வார்த்தைகள்

படத்தின் தீம் பாடல். இது கண்களின் வெவ்வேறு மொழி சொல்கிறது. இசையமைப்பாளர் ஷமந்த்தே இதைப் பாடியிருக்கிறார். நல்ல உற்சாகத்துடன் பாடிக் கேட்போரைத் தன் பக்கம் ஈர்க்கிறார்.

"கண்கள் பேசும் வார்த்தை,
கண்கள் பேசும் மெளனம்
கண்பேசும் பாஷை காதல்" – ஈர்த்த வரிகளில் சில.

ஆறாம் அறிவிலே

போதையேற்றும் ரம்யாவின் குரல் சுண்டியிழுக்கிறது. அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் ஹரிசரணும் பாடியிருக்கிறார். இது காதலர்களின் காதல் தாண்டிய மனநிலை பாடுகிறது. இசை பாடலைக் கவனிக்க வைக்கிறது. இசைக்காகவே கேட்கலாம்.

"மேல் பாயும் நதிகள் இல்லை
கீழ் தாவும் ஒரு தீயும் இல்லை
அவை யாவும் காதல் என்னும் தீவில் நாமும் கண்டோமே!" – கவித்துவ வரிகள்!

கோப்பையில்

பார் (BAR) புகழ் பாடல். வேல்முருகனின் குரலில். கலவையான இசை சன்னமாக ஒலிக்கிறது. ஆங்கில ராப் வேறு. அது இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால், ஏதோ ஒரு பழகிய மெட்டை

அவ்வப்போது நினைவுபடுத்துகிறது.

"போலியா கண்ணமூடி வாழ்க்க வாழாத!
போலீஸா உன்ன நீயே காவல் காக்காத!" – தத்துவ வரிகள்!

பேர் இல்லா மொழ

இதற்கு இரண்டு வடிவங்கள் (versions). முதலாவதை ஸ்ரவ்யா மற்றும் யஷ்வந்த் பாடியிருக்கிறார்கள். காதலின் மகிழ்ச்சித் தருணங்களைச் சொல்லும் பாடல். மற்றொன்று, விஜய் யேசுதாஸ் – ஹரிணி குரலில் ஒலிக்கிறது. தொடக்க இசையே இனம் புரியாத நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மெலிதான இசையுடன் இருவரது குரல்களும் சரியாகக் குழைந்து சுகமான டூயட்டாக ஒலிக்கின்றன. இனி அடிக்கடி அனைவரையும் கேட்க வைக்கும்.

"ஒரு நேரத்தில் நீ பல பார்வைகள் பார்க்கின்ற
பழக்கத்தை எங்கே கற்றாய்?" – சுகமான வரிகள்!

மதிவதனி

"மதிவதனி" என விஜய் பிரகாஷ் பாடத் தொடங்கியதுமே, மனம் மதிவதனியை வரையத் தொடங்கிவிடுகிறது. என்னமாகப் பாடியிருக்கிறார்! ரசித்துப் பாடியிருக்கிறார் போல. இவரது குரல் பாடலுக்கு வெகு பொருத்தம்! முதல் முறையே உங்களையும் கட்டிப்போடும். செல்போன்களின் அழைப்புமணியாக இனி இதை அதிகம் கேட்கலாம். இதைக் கேட்டுவிட்டு எத்தனை பேர் தங்களின் மதிவதனிக்கு இதை டெடிகேட் செய்வார்களோ!

"முதல்முதலாய் முதுகெலும்பில் மின்னல் வெட்டும் சாகசக்காரி"

"அவள் முக தரிசனம் பெறத் தடை இது என்றேதான்
இதயமும் இரவைத் திட்டிடுதே!" – டெடிகேட்டிங் வரிகள்!

மொத்த ஆல்பத்துக்கும் பேனா தூக்கியிருப்பவர் விவேகா. இசை அமைப்பாளரின் வரவு நல்வரவே! மதிவதனி இவருக்கு நல்ல விசிட்டிங் கார்டு.

கண்பேசும் வார்த்தைகள் – காதல் கவிதைகள்.

About The Author