"ஹாய் யமுனா" என்று உரிமையாய் கன்னத்தைத் தடவி தன்னையே லயித்துப் பார்த்த அஞ்சலியை வெறித்துப் பார்த்தாள் யமுனா.
‘ஒரு வேளை… ?’ அந்த சந்தேகம் எழுந்ததும் குரலை கடுமையாக்கிக் கொண்டு, "நீங்க யார்னு சொல்லவேயில்லை" என்றாள்.
"ஒரு காஃபி சாப்பிடலாமா, யமுனா?"
"முதல்ல நீங்க யார்னு சொல்லுங்க"
"அஞ்சலி"
"ரைட்… எனக்கு நீங்க யார்?" கறாராய்க் கேட்டாள் யமுனா.
தான் நினைத்ததை விட யமுனா கடினமாக இருக்க, "ப்ளீஸ், யமுனா. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்" என்றாள் கெஞ்சலாய்.
யமுனா அஞ்சலியைப் பார்வையால் அளந்தாள். கோபுரக் கலசம் போல பார்த்தவுடன் மரியாதை எழும் தோற்றம். முகத்தில் மாறாத புன்னகை. தோற்றத்துக்குப் பொருத்தமான அழகான உடை. தன் தந்தையை மயக்கியவள் என்று அவளைப் பிடிவாதமாய் வெறுக்க முயன்றாலும் முடியாதபடி செய்தது அவள் முகத்திலிருந்த வாஞ்சை. பெற்ற பிள்ளையைப் பார்ப்பது பொல அதென்ன அத்தனை அன்பு அந்தப் பார்வையில்!
"ஓகே" என்றபடி கான்டீனுக்கு நடந்தாள்.
கான்டீனில் அஞ்சலிக்கு மட்டும் காஃபி வாங்கி வந்து அவள் முன்னால் வைத்துவிட்டு, "சொல்லுங்க" என்றாள்.
"நானும் உங்கப்பாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம், யமுனா" சுற்றி வளைக்காமல் நேரடியாய் விஷயத்துக்கு வந்தாள்.
யமுனா, "இதைச் சொல்றதுக்குத்தான் வெக்கமில்லாம இங்கே வந்தீங்களா?" என்றாள் கண்ணில் பொறி பறக்க.
கண்களை அழுத்தமாய் மூடித் திறந்த அஞ்சலி, "எனக்கு உன் கோபம் நல்லாவே புரியுது, யமுனா. ஆனா நீ புத்திசாலி, புரிஞ்சுக்குவேன்னுதான் பேச வந்திருக்கேன்"
"அதான் முடிவு பண்ணிட்டீங்களே, அப்புறம் பேசறதுக்கு என்ன இருக்கு?"
"இருக்கே… உன் சம்மதமில்லாம நான் உங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேனே"
"ஹும்" என்றாள் யமுனா ஏளனமாய்
"விளையாட்டுக்குச் சொல்லலை. சீரியஸ். உங்கப்பா உன் மேல உயிரையே வச்சிருக்கார். உன்னைக் காயப்படுத்திதான் இது நடக்கணும்னா அதுல அவருக்கு மட்டுமில்லை, எனக்கும் இஷ்டமில்லை"
இருவருமாய்ச் சேர்ந்து பழியை இவள் மேல் போடப் பார்க்கிறார்கள் என யமுனாவுக்கு எரிச்சல் வந்தது.
"செய்யறதெல்லாம் செஞ்சிட்டு இப்ப என்ன பெர்¢சா என்னோட சம்மதம் வேண்டிக் கிடக்கு?" கடுகடுவென்று கேட்டாள்.
அவள் கேள்வியின் நியாயம் அஞ்சலியைத் தாக்க சற்று அமைதியானாள். பின், "நியாயம்தான். ஆனா சில விஷயங்களை உங்கிட்ட உங்கப்பாவும் அம்மாவும் வெளிப்படையாய்ப் பேசினால் உனக்குப் புரியும்கறது என்னோட கருத்து. ஆனா அவங்க ரெண்டு பேருமே அதை ஏனோ அவாய்ட் பண்றாங்க. எனக்குன்னு ஒரு எல்லை இருக்கு, யமுனா. என்னால அவங்க சார்பா பேச முடியாது. உன் கோபம் எனக்குப் புரியுது. உன்னோட வலியை என்னால நல்லா உணர்ந்துக்க முடியுது. அதனாலதான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்"
யமுனா அஞ்சலியை உறுத்துப் பார்த்தாள். தன் பெற்றோரிடம் இந்தப் புரிதல் இல்லையோ? இருந்திருந்தால் ஏன் இவ்வளவு தூரம் வந்திருக்கப் போகிறது!
"ஐ’ம் ஸாரி, யமுனா… ஐ ட்ரூலி ஆம்"
அஞ்சலியின் நேர்மையான அந்த மன்னிப்பை நேர்கொள்ள அவள் தயாராக இருந்திருக்கவில்லை. எப்படி அதனை அங்கீகரிப்பதென யமுனாவுக்குத் தெரியவில்லை.
அஞ்சலி அத்னை உணர்ந்தாற் போல, "நான் உன்னைக் கேக்கறதில்லாம் ஜஸ்ட் உன் அப்பா, அம்மாவோட நிலைல இருந்து யோசிச்சுப் பாருங்கறதுதான்," என்றாள்.
சிறிது நேர அசௌகரியமான மௌனத்துக்குப் பின், "இன்னொண்ணு எங்க கல்யாணத்துக்கு உன்னோட சம்மதம் கிடைச்சாலும் அது உடனே நடக்குமான்னு தெரியலை. ஏன்னா எங்க எல்லாருக்குமே உன்னைப் பத்தின கவலை இருக்கு. உன் லைஃப் செட்டிலாகற வரைக்கும் நாங்க பிரிஞ்சுதான் இருக்கணும்னா கண்டிப்பா இருபோம். ஆனா அது தேவையாங்கற குழப்பம் எங்க மூணு பேருக்குமே இருக்கு," என்றாள் அஞ்சலி.
முணுக்கென கோபம் வெளிப்பட்டது யமுனாவிடம். "இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க? நீங்களெல்லாம் தியாகச் செம்மல்கள்னு காட்டிக்கறதுக்கா?"
அஞ்சலிக்கு வலித்தது. ‘தென்றல் கூட இவளைச் சுடுகிறதே!’
"இல்லை, யமுனா. உனக்கு யதார்த்தம் தெரியணும்கறதுக்காக. உன் மேல் எங்க எல்லாருக்கும் அக்கறை இருக்குன்னு உனக்குப் புரியணும்கறதுக்காக" பொறுமையாகவே பதில் சொன்னாள்.
"அக்கறை… பொல்லாத அக்கறை" யமுனா சமாதானமாகவில்லை. சம்பந்தப்பட்ட யாரிடமும் போதுமான அளவு தன் கோபத்தைக் காட்ட முடியாததல் அகப்பட்ட அஞ்சலியிடம் தன் ஏமாற்றத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
"உனக்கு இப்போ நான் என்ன சொன்னாலும் நம்பிக்கை வராது, யமுனா. பொறுமையா யோசிச்சுப் பார்த்தேன்னா விளங்கும். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்" என எழுந்தாள் அஞ்சலி.
கான்டீனை விட்டு வெளியில் வந்த போது, "காரை பக்கத்திலதான் நிறுத்திருக்கேன், வாயேன்" என அழைத்தாள்.
வேண்டா வெறுப்பாய் உடன் நடந்தவள், பார்க்கிங் லாட்டில் தன் தந்தையின் காரைக் கண்டதும் நின்றாள். அவளைப் பார்த்ததும் அவசரமாய் காரிலிருந்து இறங்கிய ரகு வெகுவாய்த் துவண்டிருந்தார். சவரம் செய்யாத முகம், கசங்கிய உடை, கலங்கலான கண்கள்… அவராக இல்லை ரகு.
"யமுனா" அவர் மெல்ல விளித்து அவளை நோக்கி வர முற்பட, யமுனா திரும்பி வேகமாய் நடக்கத் தொடங்கினாள்.
ரகு சோகமானதைக் கண்ட அஞ்சலி, "அவளுக்குக் கொஞ்சம் டைம் கொடு, ரகு. சின்னப் பொண்ணுதானே" என்றாள் பரிவுடன்.
***
யமுனா நடந்ததைச் சுருக்கமாய் விஜியுடன் பகிர்ந்து கொண்டாள்.
"வாவ்! இன்ட்ரஸ்டிங் லேடியா இருப்பாங்க போலிருக்கே" என்றாள் விஜி.
யமுனா மௌனமாய் சிந்தனையில் ஆழ்ந்தாள். அன்று முழுவதும் அமைதியாய் தனக்குள்ளேயே அமிழ்ந்திருந்த யமுனாவை விஜி கலைக்க விரும்பவில்லை. இரவு படுக்கப் போகுமுன், "என் நிலைமைல நீ இருந்தா என்ன செய்வே, விஜி?" என்று யமுனா கேட்ட போது அதற்காகக் காத்திருந்தது போலத் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டாள் விஜி.
"உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்கன்னு சொல்லிடுவேன்"
"ஏன், உங்கப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குக் கோபம் வராதா?"
"வருமா இருக்கும். ஆனா அப்பாவும் அம்மாவும் ஏற்கெனவே மனசளவில பிரிஞ்சிட்டாங்கன்னும்போது, சும்மா பேருக்காக அவங்களை ஒண்ணா வச்சிருக்கற பாவத்தை நான் செய்ய மாட்டேன்"
யமுனாவுக்குச் சுளீரென நெஞ்சில் மின்னலொன்று தாக்கிற்று.
"அப்பாவும் அம்மாவும் சந்தோஷமா சேர்ந்து இருக்கணும்னு நினைக்கறது தப்பா?"
"இல்லவே இல்லை. ஆனா அவங்க சேர்ந்திருக்கும்போது சந்தோஷமா இல்லைன்னா, நீங்க சந்தோஷமா இருந்துதான் ஆகணும்னு கண்டிஷன் போடறதுதான் தப்பு"
"இன்னும் கொஞ்ச நாள்… கொஞ்ச நாள் மட்டும் இருந்திருந்ததுன்னா, அவங்க மாறியிருப்பாங்க தெரியுமா? மூணு மாசத்தில ரெண்டு பேர்கிட்டேயும் எவ்வளவு சேஞ்ச் தெரியுமா? எல்லாம் கெட்டுப் போச்சு" விரக்தியாகச் சொன்னாள்.
"மாறியிருக்கலாம், மாறாமப் போயிருக்கலாம். அதெல்லாம் வெறும் ஊகம்தான் இப்போ. உங்கப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார், அதுக்கு உன்னோட சம்மதம் கேக்கறார்ங்கறதுதான் நிஜம். அதுக்கு நீ என்ன சொல்லப் போறேங்கறதுதான் இப்போ பிரச்சினை"
யமுனா கண்ணை மூடி அமைதியானாள். வெகு நேரம் பதிலில்லாததால் அவள் உறங்கிவிட்டாளோ என்ற சந்தேகம் கூட எழுந்தது விஜிக்கு.
ஆனால் திடீரென விழித்துக் கொண்டவள் போல், "நான் சம்மதம் தந்தாலும் நான் செட்டிலாகற வரைக்கும் வெயிட் பண்ணப் போறாங்களாமே… எல்லாரும் பெரிய தியாகச் சுடர் மாதிரிதான் நடந்துக்கறாங்க" என்று யமுனா சொல்லவும்,
"அப்போ நீ செட்டில் ஆக வேண்டியதுதானே?" எனக் கேட்டாள் விஜி.
"என்ன விளையாடறியா?"
"இல்லைடி. உனக்கு உடனே கல்யாணம் பண்ணணும்னு இல்லையே. என்னைப் போல நிச்சயமாயிடுச்சின்னா அவங்களுக்கு நிம்மதிதானே?"
‘நல்ல யோசனையாகத்தானிருக்கிறது. ஆனால்… ‘ என்று எண்ணிய யமுனா,
"ப்ராக்டிகலா இது நடக்குமாடி?" என்றாள் சந்தேகத்தோடு.
விஜி யோசனையாய், "அரேஞ்ச்ட் மேரேஜ்ல மூணு நாலு வருஷம் வெயிட் பண்றது கஷ்டம்தான்னு நினைக்கிறேன். பேசாம லவ் பண்ணிடேன்!" என சொல்லி முடிக்கும்போது அவள் இதழில் ஒரு குறுநகை வந்திருந்தது.
"போடி… உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான்"
"ச்சீ… இல்லைடி… நெஜம்மாத்தான் சொல்றேன். பேசாம லவ் பண்ண ஆரம்பிச்சிடு"
"ஆமா… அப்படியே க்யூ கட்டி நிக்கறாங்க. நான் சுயம்வர இளவரசி மாதிரி செலக்ட் பண்ண வேண்டியதுதான் பாக்கி"
"ம்ம்… " என்று தயங்கிய விஜி, "நிஜம்மாவே விக்கிக்கு வேற ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இருக்காளாடி?" என்று கேட்டாள்.
"ம்" என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் வ்¢க்ரம் அன்று என்ன பதில் சொல்ல வந்திருப்பான் என்ற ஆர்வமும் ஒருவேளை தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறதோ என்ற சந்தேகமும் அவள் மனதை அரித்துக் கொண்டுதானிருந்தன.
"உன் மேல அவனுக்கு நிறைய அக்கறை இருக்குடி. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காம அவன்கிட்டே பேசிதான் பாரேன்" என்று யோசனை சொன்னாள் விஜி.
"என்னை லவ் பண்ணுன்னு கெஞ்சச் சொல்றியாக்கும்?"
"இல்லைடி. அவன் உன்னை லவ் பண்றானா இல்லையான்னு தெரிஞ்சுக்கச் சொல்றேன்."
"… "
"உனக்கு அவனைப் பிடிக்குமா இல்லையா?"
"என்னைக் குழப்பாதேடி"
"ஏன் எப்பவும் பிரச்சினையைக் கண்டு ஓடறே? உங்க வீட்ல பிரச்சினைன்னா ஓடி வந்துடறே. விக்கி கூட மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா ஓடிப் போறே? அதெல்லாம் வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதுல்ல… தைரியமா ஃபேஸ் பணித்தான் பாரேன்"
"ம்" என்று அரைமனதுடன் சொன்னாலும் ஒரு மணி நேரம் தன் தோழியின் ஆலோசனையை அசை போட்டபின் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் யமுனா.
very nice going on madam. keep writing. Congrats for 500th