கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 25

நகையிலிருந்த குறைக்காக வைர மாளிகையின் மேலாளர், தன் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.

"இதுவரை இப்படி நடந்ததே இல்லைங்க, மேடம். நாளைக்கே சரி பண்ணி வச்சிடறேன். நீங்க ஈவினிங் வந்து வாங்கிக்கங்க" என்றவர் அதோடு நிறுத்தியிருக்கலாம்.

"இன்னொண்ணுல சரியா இருக்குங்களா, மேடம்" என்று தன் தொழில் சிரத்தையைக் காட்டினார்.

"ரெண்டுலயுமே இல்லை" என்றாள் கங்கா இரு பெட்டிகளையும் சுட்டிக்காட்டி.

"ஸார் மூணு வாங்கினாரே. அதான், மூணாவது சரியா இருக்குதான்னு கேட்டேன் மேடம்"

கங்கா திடுக்கிட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "இந்த ரெண்டை சரி பண்ணி வைங்க. நாளைக்கு வந்து வாங்கிக்கறோம்" என்றபடியே எழுந்தாள்.

கண்ணை இடுக்கியபடி அமர்ந்திருந்த யமுனா, "அப்பா மூணு நெக்லஸ் வாங்கினார்னா சொன்னீங்க?" என்றார் மேலாளரிடம்.

அவர் தனது தவறை உணர்ந்து, "சரியா ஞாபகமில்லைம்மா. தப்பா சொல்லிட்டேன் போலிருக்கு" என்றார் தடுமாற்றத்துடன்.

தன் மகளின் கையை அழுத்திய கங்கா, "போலாம், யமுனா" என்றாள் கண்டிப்பான குரலில்.

யமுனாவின் முகம் கோபத்தில் கனன்றிருந்தது. காரில் ஏறும் வரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், "உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமாம்மா?" என்று வெடித்தாள்.

கங்கா தெரியாதெனத் தலையாட்டினாள். அவள் மனதில் வீசிக் கொண்டிருந்த புயலை மகள் உணர்ந்திருக்க நியாயமில்லை. ரகுவின் வாழ்க்கையில் இன்னொரு பெண் என்பதில் தனக்கு இவ்வளவு கோபமும் வருத்தமும் ஏற்படுவது யமுனாவின் வாழ்க்கையை உத்தேசித்து மட்டுமல்ல என்பதுதான் கங்காவுக்கு அதிக வேதனையைத் தந்தது.

"யாரும்மா அவ? ஏம்மா, இப்படி விட்டீங்க?" அழுகையும் கோபமுமாய் மகள் சுட்டுவிரலைத் தன்பால் நீட்டியதும் துவண்டாள் கங்கா.

இதற்குத்தான் பயந்து கொண்டிருந்தாள். இதைத்தான் இத்தனை வருடமாய்த் தவிர்த்து வந்தாள். வளர்ந்த பிள்ளைக்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தைக் காலம் ஏற்படுத்திவிட்டிருந்தாலும் நெஞ்சில் வீசிய புயலில் வார்த்தைகள் காணாமல் போயிருந்தன.

வீடு வந்து சேரும்வரை விடாது கேள்விக் கணைகளை வீசிக் கொண்டிருந்த மகளை, "எனக்கும் அதிர்ச்சியாத்தானிருக்கு. புரிஞ்சிக்க, யமுனா. என்னால உனக்கு இப்போ பதில் சொல்ல முடியாது. எனக்கு டைம் கொடு" என்று அதட்டிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள் கங்கா.

தாய் தன் ஓட்டுக்குள் சுருண்டு கொண்டுவிட்டாலும் யமுனாவின் கோபம் அடங்கவில்லை. இத்தனை சிரமப்பட்டு தன் தாயையும் தந்தையும் இணைக்க தான் எடுத்த அத்தனை முயற்சிகளும் முகம் தெரியாத ஒரு ஏமாற்றுக்காரியால் தவிடு பொடியானதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் தந்தையின் வருகைக்காய்க் குமுறலுடன் காத்திருந்தவள், அவர் உள்ளே நுழைந்த மாத்திரத்தில், "ஏம்பா இப்படிச் செஞ்சீங்க?" என்றாள் கண்களில் வழிந்த நீரைப் புறங்கையால் துடைத்தபடியே.

அந்த மொட்டைக் கேள்வியால் குழம்பிய ரகு, தன் மகளின் முகத்திலிருந்த விசனத்தால் தாக்கப்பட்டு சிலையானார்.

"யாருப்பா அவ? எத்தனை நாளா இது நடக்குது?" தனக்கு பதில் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறதென்ற அதிகாரமிருந்தது அவளிடம்

"யமுனா… " என்றபடி அருகில் வர அவள் பின்னால் நகர்ந்து, "எனக்கு உங்களைப் பாக்கவே பிடிக்கலை. ஏன் இப்படி துரோகம் செய்றீங்கன்னு கேக்கணும்னுதான் வெயிட் பண்ணினேன்" உச்சஸ்தாயியில் ஒலித்தது யமுனாவின் குரல். அறையில் படுத்திருந்த கங்காவின் காதில் அது விழுந்தாலும் அசையாமல் படுத்திருந்தாள் அவள்.

தன் பெண்ணிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான வார்த்தைகளுக்கு ரகு தன்னைத் தயார் படுத்திக் கொண்டிராததால் தலை குனிந்து நின்றார். அதுவரை தன் தந்தை தவறிழைத்திருக்க மாட்டார் என்று மனதின் ஓரத்தில் துரும்பாய் ஒட்டிக் கொண்டிருந்த சிறு நம்பிக்கையும் உதிர்ந்து போக, "எதுக்கு இங்கே வர்றீங்க? எங்கே போறீங்களோ அங்கேயெ இருக்க வேண்டியதுதானே? இனிமே உங்க மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்." ஆவேசமாய் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அறைக்கு வந்த யமுனாவுக்கு யுவனைப் போலத் தானும் அனாதையாக்கப் பட்டுவிட்டாற் போன்ற உணர்வு.

மூவருமே தத்தம் அறைகளில் தூங்க முடியாமல் உழன்று கொண்டிருந்தார்கள். யமுனா மட்டும் விரைவில் எழுந்து நாலைந்து உடைகளை எடுத்துக் கொண்டு விஜியின் வீட்டுக்குக் கிளம்பினாள். ஒரு சிறிய துண்டுக் காகிதத்தில் தகவல் எழுதி கங்காவின் அறைக்குள் தள்ளி விட்டாள். கங்கா அதைக் கவனித்துக் கொண்டிருந்தாலும் எழுந்து மகளிடம் பேசும் திராணி இல்லாமல் முடங்கிப் படுத்திருந்தாள்.

***

ஏழு மணிக்கெல்லாம் வீட்டு வாயிலில் வந்து நின்றவளை வரவேற்றது விக்ரம்தான். "ஹே… " என்று அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவன் அவள் தோளிலிருந்த பையையும் வீங்கியிருந்த முகத்தையும் பார்த்து நிலைமை புரிந்தாற்போல், "கமின்" என்றான்.

"வீட்ல எல்லாரும் திருவேற்காடு போயிருக்காங்க. வந்திடுவாங்க" என்று அவன் சொன்னதும் யமுனா தயங்கி நின்றாள்.

அதை கவனித்தவன், "என்ன?" என்றான் புருவம் உயர்த்தி.

பின், "நானும் உன்கிட்ட நெறைய பேச வேண்டி இருக்கு. தப்பிக்கவே முடியாது. வா" என்றான்.

தன் மனநிலையில் இவனின் லீலைகளில் சிக்கிக் கொள்ள விரும்பாதவள், "இங்கே, பாருங்க. நான் உங்ககிட்டே பேசற மூட்ல இல்லை" என்றாள்

பேச்சில் மரியாதை இருந்ததைப் பார்த்து தன்னைத் தள்ளி நிறுத்த முற்படுகிறாளெனப் புரிந்து கொண்டான்

"பார்த்தாலே, தெரியுது… ஆனா பேசலைன்னா எப்படி சரியாகறது?"

"…"
"சொல்லு. என்னாச்சு?"

"…. "

"சரி, வா… ரெண்டு பேரும் சேர்ந்து காஃபி போட்டுக்கிட்டே பேசலாம்" அவன் அவளின் கையைப் பற்றி இழுக்க முற்பட்ட போது அவசரமாய்ப் பின் வாங்கினாள்.

"இதெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க, ஆமா" சூடாய்ச் சொன்னாள்.

"ஓகே… ஓகே… ஸாரி" என்று விலகி நின்றான்.

"அப்போ நீ போய் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றியா?"

"எனக்குப் பழக்கமில்லை" என்றவளைப் பார்த்து வாய் பொத்திச் சிரித்தான்.

"தலையெழுத்து" என்று முணுமுணுத்துக் கொண்டே காஃபி தயார் செய்து எடுத்து வந்து அவள் கையில் கொடுத்துவிட்டு அருகில் அமர யத்தனித்தவன் அவள் முறைப்பைப் பார்த்துவிட்டு எதிரில் அமர்ந்தான்.

"முதல்ல நம்ம பிரச்சினை… " என்று ஆரம்பித்தவனை மறித்து,

"அதென்ன நம்ம பிரச்சினை? எனக்கும் உங்களுக்கும் என்ன இருக்கு? நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட பேசாதீங்க. எனக்கு இப்ப ஒரே பிரச்சினை எங்கப்பாதான்" இவனிடம் ஏன் இதைச் சொல்லுகிறோமென்று தெரியாமலேயே தன் கோபத்தை அவனிடம் வெளிப்படுத்தினாள்.

அவன் அவளருகில் முழங்காலிட்டு, "என்னாச்சு?" என்றான் அக்கறையாய்.

"ச்சே… உன்னை மாதிரிதான்… அந்தாளும் இன்னொருத்தி பின்னால போறார்" சட்டென ஒருமைக்குத் தாவினாள். ஆத்திரத்தில் யமுனாவுக்கு மூச்சிறைத்தது.

அவள் பேசட்டுமென விக்ரம் பொறுமையாய் இருந்தான்.

"உங்களுக்கெல்லாம் உண்மையாவே இருக்கத் தெரியாதா?" அவன் முகத்தின் முன் கைநீட்டிக் கேட்டாள்.

அவன் அந்தக் கையைப் பற்றிப் பொறுமையாய், "நம்ம கதையை அப்புறம் வச்சுக்கலாம். நீ உங்கப்பாகிட்டே சண்டை போட்டியா?" என்றான்.

கையை வெடுக்கென உதறி, "தொடாதேன்னு சொன்னேனில்லை? ஒரு தடவை சொன்னால் உனக்குப் புரியாது?" என்றாள் கண்களை உருட்டி.

"ஸாரி… சரி, வீட்ல என்ன நடந்திச்சின்னு சொல்லு" அவளைப் பேச வைப்பதில் கவனம் செலுத்தினான்.

"என்ன நடக்கணும்? எனக்கு அந்த ஆள் முகத்தில முழிக்கப் பிடிக்கலைன்னு இங்கே வந்தால் உன் முகத்தில முழிக்க வேண்டியிருக்கு" தலையிலடித்துக் கொண்டாள்.

அவள் விழிகளில் நீர் தழும்பி நின்றதைப் பார்த்த போது அவளை அணைத்து சமாதானப்படுத்தத் தோன்றிய உந்துதலை அடக்கிக் கொண்டான். ‘கோபத்தைக் கொட்டட்டும்’

"உங்கப்பா மேல உனக்கென்ன கோபம், யமுனா?"

"நீயும் அந்த ஆள் மாதிரிதானே… அதான் சப்போர்ட் பண்ண வந்துட்டே."

"நான் சப்போர்ட் பண்ணலை. உனக்கு ஏன் கோபம்னுதான் கேக்கறேன்"

"அந்தாள் எங்கம்மாவுக்கு எனக்கும் பண்ணினது பச்சை துரோகம். நீ பண்ணினதும்தான்" உக்கிரத்தோடு சொன்னாள்.

"உங்கம்மா என்ன சொன்னாங்க?"

"அவங்க என்ன சொல்வாங்க? அவங்க ஒழுங்கா இருந்திருந்தா ஏன் இப்படி நடக்கப் போகுது. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை அநாதையாக்கிட்டாங்க" முழங்காலில் முகம் புதைத்து அவள் கேவிக் கேவி அழுததைப் பார்த்துக் கொண்டிருக்கமுடியாமல் அருகிலமர்ந்து அவள் தோளை அணைத்துக் கொண்டு முதுகை நீவிவிட்டான். சிலிர்த்துக் கொண்டு தட்டி விட்டவள், "இப்படித்தான் பாசமா இருக்கற மாதிரி நடிக்க வேண்டியது. அப்புறம் எவள் பின்னாடியாவது ஓட வேண்டியது. இனி எங்கிட்ட உன் வேலையெல்லாம் காட்ட வேண்டாம், ஆமா" என்று சுட்டுவிரலை நீட்டி எச்சரித்தாள்.

"நான் யார் பின்னாடி ஓடினேன்?"

"நான்தான் அன்னைக்குப் பார்த்தேனே. உன்னைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு ஒருத்தி பில்லியன்ல உக்கார்ந்திருந்தாளே. நீயும்தான் ரசிச்சு ரசிச்சு சிரிச்சிக்கிட்டுப் போனே" குரலில் வெறுப்பிருந்தது.

அழைப்பு மணி சங்கீதம் கேட்க, "நான் வந்து பதில் சொல்றேன். கண்ணைத் துடைச்சிக்க" என்று அகன்றான்.

கதவைத் திறந்ததும் விஜி முந்திக் கொண்டு உள்ளே நுழைந்து, "யமுனாவோட வண்டி நிக்குது. வந்திருக்காளா?" என்றாள்.

"ஆமா, அவங்க ரிலேடிவ் யாரோ இறந்துட்டாங்களாம். அவங்க பேரன்ட்ஸ் அவசரமா ஊருக்குப் போயிருக்காங்க. அதான் இங்கே இருக்கலாம்னு வந்தாளாம்" அவள் சிவந்த கண்களுக்குப் பொருத்தமாய்க் காரணம் சொன்னான் அவளுக்குக் கேட்கும்படியாக.

"ஸாரி, யமுனா. நெருங்கின சொந்தமா?" என்ற மங்கையிடம், "ஆமா, ஆன்டி. எனக்கு மாமா அவங்க. எதிர்பாராம நடந்திட்டுது. எனக்கு நாளைக்கு லேப் எக்ஸாம்னால நான் போகலை" என்று யமுனா சொன்னபோது அவளின் பொய்யை விஜியால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

நாளைக்கு லேப் எக்ஸாம் இல்லை. எனில், ஏதோ பிரச்சினையில்தான் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் அவளை விக்ரம் அழ வைத்திருக்கிறான். விஜி தன் சகோதரனை முறைத்தாள். அவன் சைகையில், "நானில்லை" என்றான்.

அன்று முழுவதும் விஜி யமுனாவை தன் இறக்கைகளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்க, அவன் எவ்வளவு முயன்றும் யமுனாவிடம் தனிமையில் பேச முடியாமல் போயிற்று. அன்று இரவே விடுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட அவர்களின் உரையாடல் முற்றுப் பெறாமலேயே போனது.

About The Author

1 Comment

  1. Suja

    மிக விறுவிறுப்பாக செல்கிறது கதை. நல்ல நடை, அழகிய பாத்திர படைப்பு

Comments are closed.