கடிதம் அனுப்பிய கையோடு அடுத்த வருடத்து இடைநிலை மதிப்பீட்டிற்கான திட்டங்களையும் படிவங்களையும் தயார் செய்து வைத்துத் தன் பணியை முடித்துக்கொள்ள உத்தேசித்திருந்தாள் கங்கா.
அன்று சனிக்கிழமை. அநேகமாய் அதுதான் அவள் ரகுவின் அலுவலகம் வரும் கடைசி நாளாக இருக்கும். யமுனாவையும் உடன் அழைத்து வந்து பொறுமையாய் விளக்கம் தந்து வெங்கட்ராமனிடமும் யமுனாவிடமும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணியை ஒப்படைத்த போது கங்காவுக்கு விளக்க இயலா திருப்தி ஏற்பட்டது. ஆனாலும் இத்தனை செய்தும் ரகுவிடமிருந்து ஒரு ரீயாக்ஷனும் இல்லாதது அவளுக்குக் குறையாகவே பட்டது. இந்த மனுஷனுக்குத் தான் என்றால் ஏன்தான் இத்தனை இறுக்கமோ என்ற கோபம் எழவே செய்தது.
கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த போது, யமுனாவை ரகு அழைப்பதாக செக்ரடரி சொன்னார். யமுனாவே அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்தான். இவ்வளவு செய்த அம்மாவுக்கு அப்பா ஏதேனும் ஒரு சின்ன பாராட்டாவது தெரிவித்திருக்கலாம் என்ற மனக்குறை அவளுக்குமிருந்ததுதான். அம்மா நாலு படி இறங்கியிருக்கும்போது அப்பா ஒரு படியாவது நகர்ந்திருக்கலாமல்லவா?
இந்த மூன்று மாதங்களில் பெற்றோர் இருவரிடமும் ஒரு இளக்கம் தெரிந்தாலும் சின்னச் சின்ன அக்கறை வெளிப்பட்டிருந்தாலும் இருவரும் நேருக்கு நேர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ள வில்லை என்பதில் யமுனாவுக்கு வருத்தம்தான். ஆனால் நல்லவேளை தன் முதல் திட்டம்போலப் பெரிய பின்னடைவு ஒன்றும் ஏற்படவில்லை என்று தேற்றிக் கொண்டாள்.
"ஹாய், யமுனா" ரகு முகமலர வரவேற்றார் ரகு.
யமுனா முகத்தைக் கல்லாக வைத்துக் கொண்டு, "சொல்லுங்கப்பா" என்றாள்.
"கங்கிராட்ஸ். வெரி குட் ஜாப். ஸ்டாஃப் எல்லாத்துக்கும் ரொம்ப சந்தோஷம்னு கேள்விப்பட்டேன்" என்றார்.
"எனக்கு சொல்லி என்னப்பா பிரயோஜனம்? அம்மாதான் முழுசா பண்ணினாங்க" அவள் தன் எண்ணத்தைக் கோடி காட்டினாள்.
ஆனால் அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், "ஒரு சின்ன கிஃப்ட்" என்றவாரே டிராவைத் திறந்து நகைப் பெட்டியொன்றை எடுத்து நீட்டினார்.
அவள் வாங்க மனதில்லாமல் நின்றிருந்ததைப் பார்த்து, "ப்ளீஸ் வாங்கிக்க, யமுனா." என்று வற்புறுத்தினார்.
அரைமனதுடன் வாங்கிக் கொண்டவள் "இது சரியில்லைப்பா. வேலை பண்ணினதெல்லாம் அம்மாதான். நீங்க ஒரு வார்த்தையாவது பாராட்டியிருக்கலாம்" என்று வெளிப்படையாகவே சொன்னாள்
டிராவைத் திறந்து மற்றொரு நகைப் பெட்டியை எடுத்து நீட்டினார். அதன் மேலிருந்த கார்டில், ‘வெல் டன். வொண்டர்ஃபுல் ஜாப். தாங்க்ஸ்’ என்று எழுதியிருந்தது.
"கொடுத்திடு, யமுனா" என்றார்.
கண்ணகலப் பார்த்தவள், "அம்மாவுக்காப்பா?" என்றாள் நம்பிக்கை இல்லா தொனியில்.
"அஃப் கோர்ஸ்"
"பேரொண்ணும் போடலையே" என அவள் சுட்டிக் காட்டியதும் சங்கடமாய் தலையைக் குனிந்து கொண்டவர், பின் தயக்கமாய்ப் பேனாவைத் திறந்து, ‘டு கங்கா’ என எழுதி நீட்டினார்.
யமுனா அதனை வாங்காமல் பார்த்த பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டவராய், "உனக்கு ஆனாலும் ரொம்பப் பிடிவாதம், யமுனா" என்றவாறே கார்டில் கையெழுத்திட்டார்.
"உங்களையும் அம்மாவையும் விடவாப்பா?" அவள் சிரித்துக் கொண்டே கேட்டாலும் ரகுவுக்கு இப்போதெல்லாம் யமுனா பூடகமாய்ப் பேசுவதாகவே தோன்றியது.
"இதை நீங்களே அம்மாகிட்டே கொடுக்கலாமேப்பா" மெல்ல அசைவு தந்திருந்த பாறையை முழு பலத்தோடு தள்ளிப் பார்த்தாள் யமுனா.
ஞானி போல மந்தகாசமாய்ப் புன்னகைத்தவர், "தாங்க்ஸ்டா" என்றபடியே எழுந்து கொண்டார்.
கங்காவுக்குத் தலைமேல் வைரகிரீடம் அமர்ந்திருந்தாற்போல பெருமிதமாய் இருந்தாலும் மகளின் முன் காட்டிக் கொள்ள விருப்பமில்லாமல் பரிசுப் பொட்டலட்தைப் பிரிக்காமலேயே பைக்குள் வைக்க முற்பட்டாள்.
"அம்மா, அம்மா, பிரிச்சுப் பாக்கலாம்மா, ப்ளீஸ்" குழந்தை போலக் கொஞ்சிய மகளுக்காகப் பிரிப்பதாய் பாவனை காட்டிக் கொண்டாலும் தன் மனமும் பரபரத்ததை கங்கா தவிப்போடு உணர்ந்தாள்.
சிவப்பு நிறக் கல்லும் முத்தும் பதித்து வித்தியாசமான வேலைப்பாடுள்ள தங்க நெக்லஸ் ரகுவின் ரசனையை எடுத்துக் காட்டியது.
"வாவ், வொண்டர்ஃபுல். போட்டுக்கோங்கம்மா" என்று யமுனா அவசரப்படுத்த, "போடீ… அவசரக் குடுக்கை. எங்கே உன்னதைப் பிரி பார்ப்போம்" என கங்கா ஆர்வமாய்க் கேட்டபின்தான் தன் பரிசுப் பொட்டலம் இன்னும் பிரிக்கப்படாதது உறைத்தது.
அதே டிஸைன்ல் பச்சை நிறக் கல் பதித்த நெக்லஸ்.
"அட, உன் ட்ரெஸ்ஸுக்கு மேட்சா இருக்கே. போடு பார்க்கலாம்" என கங்கா கூறியதும், அதை எடுத்து அணிந்து கொள்ள முற்பட்டவள் அதிலிருந்த கொக்கி பொருந்தாதது கண்டு, "போட முடியலைம்மா…" என சிணுங்கினாள்.
"என்னதைப் போட்டுப்பாரு" என அவளின் நகையை எடுத்து மகளுக்குப் போட்டுவிட முனைந்தாள். அதிலும் அதே குறைபாடிருக்க, சலித்துக் கொண்டே,
"போற வழிதானே வைர மாளிகை… சரி பண்ணித் தரச்சொல்லிக் குடுத்துட்டுப் போகலாம்" என்றவாறு ஏமாற்றத்தோடு நகையைப் பையில் வைத்தாள் கங்கா.
***
"ரொம்ப அழகா இருக்கு, ரகு. ஆனா எதுக்கு இதை வாங்கினே?" என்றாள் அஞ்சலி தன் கையிலிருந்த நீலக்கல் நெக்லஸை நீவியபடியே.
"சும்மாதான். யமுனாவுக்கும் அவங்கம்மாவுக்கும் வாங்கினேன். உன் ஞாபகம் வந்தது"
"நானும் அவங்களும் ஒண்ணா?"
ரகு அவளையே கண்ணிமைக்காமல் பார்த்ததை ஓரக்கண்ணால் கவனித்தவள், "இது கொஞ்சம் ஓவரா படுது, ரகு" என்றாள் மெல்லிய குரலில்.
"வில் யூ கட் த க்ராப், அஞ்சலி? எத்தனை நாளைக்கு இப்படி மறைச்சு மறைச்சு பூசி மெழுகிப் பேசறது? நேரடியா கேக்கறேன், நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன். என்ன சொல்றே?"
அஞ்சலி திகைக்கவில்லை. அவள் எதிர்பார்த்ததுதான். கடந்த சில மாதங்களாய்த் தொடர்ந்த நட்பு, அந்த வட்டத்தைத் தாண்டும் விளிம்பில் தளும்பிக் கொண்டிருந்ததை மிகப் பிரயத்தனப்பட்டுத் தடுத்து வைத்திருந்தாள் அஞ்சலி. இதோ தடுப்பினை மீறிப் பொங்க ஆரம்பித்துவிட்டது.
அவள் தலை குனிந்தபடியே மௌனமாய் இருந்ததைக் கண்ட ரகு பொறுமையில்லாமல், "என்னைப் பிடிக்கலைன்னு பொய் சொல்லாதே. நீ சொல்லலைன்னா கூட ஐ கேன் ஃபீல் யுவர் லவ். என்ன பிரச்சினைன்னு சொன்னாதானே தெரியும்?" என்று பொரிந்தார்.
"ரகு, உங்க வீட்ல இதை எப்படி எடுத்துப்பாங்க?" அஞ்சலிக்குக் கண்கள் கலங்கி இருந்தன.
"எங்களோட டைவர்ஸ் எப்பவோ முடிவான விஷயம். யமுனாவுக்காகத்தான் இத்தனை நாள் பொறுத்திருந்தது. ஆனா என்னோட பொறுமைக்கும் எல்லை இருக்கு. யமுனா வளர்ந்தாச்சு. ஷி கேன் ஹாண்டில் இட்" நிர்தாட்சண்யமாய்ச் சொன்னார்.
"அவளோட கல்யாணம் இதனால பாதிக்காதா?"
ரகுவுக்குக் கோபம் முட்டிக் கொண்டு வந்தது. "இதைச் சொல்லித்தான் கங்காவும் தள்ளிப் போட்டுட்டே இருக்கா. இப்போ மகளோட கல்யாணம்னுவாங்க, அப்புறம் பேத்தி கல்யாணம்னுவாங்க. அடுத்தவங்க சொல்றாங்கன்னு வாழ்ந்து வாழ்ந்து எனக்கு அலுத்துப் போச்சு. எனக்கு நீ வேணும் அஞ்சலி." என்றார் அவள் கைகளைப் அழுந்தப் பற்றியவாறு.
"இத்தனை நாள் பொறுத்திருந்திட்டு இப்போ இப்படி உடைச்சிட்டு வர்றேனா அதுக்கு நான்தான் காரணம்னு எனக்கு உறுத்தலா இருக்கு, ரகு"
"நீதானே உனக்காக வாழணும்னு ஆசைப்பட்டே? இப்போ என்னாச்சு உனக்கு? அப்படியே பாத்திட்டிருந்தோம்னா இதுக்கு முடிவே இல்லை. லெட் அஸ் கோ அஹெட். யமுனா கல்யாணம் வரும்போது பாத்துக்கலாம்"
"இன்னும் மூணு நாலு வருஷத்தில யமுனா செட்டில் ஆயிடுவா இல்லே? அதுவரைக்குப் பொறுத்துக்கக் கூடாது?"
"என்னால முடியாது, அஞ்சலி. ப்ளீஸ் புரிஞ்சுக்க" பற்றியிருந்த அவள் கைய்¢ல் மெல்ல முத்தமிட்டார்
அஞ்சலி தடுக்கவில்லை.
"கிளம்பு, ரகு. நேரமாச்சு" என நினைவுபடுத்தினாள்.
ரகு வேண்டா வெறுப்பாய் எழுந்தார். "நான் கங்காகிட்டே பேசிட்டு பேப்பர்ஸ் ரெடி பண்றேன். ம்யூச்சுவல்ங்கறதுனால சீக்கிரம் டைவர்ஸ் கிடைச்சிரும்னு நினைக்கிறேன். நீ தேதி பாரு. சிம்பிளா ரெஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கலாம்" என்றார் கண்களில் கனவுகளோடு.
(தொடரும்)