ஒரு மாதமாய் அடக்கியே வாசித்து வந்தாள் யமுனா. பெற்றோரிடம் பாசமாய் இருந்தாள். ஆனால் தேவையில்லாமல் அவர்களிடம் பேசுவதைத் தவிர்த்தாள். இடையில் வந்த யுவனின் பிறந்த நாளுக்கு கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களைப் பரிசளித்தாள். விக்ரம் தொடர்பு கொள்ள முயலாததில் குழம்பித் தவித்தாள். விஜியின் நட்பு மட்டும்தான் ஒரே ஆறுதலாய் இருந்தது.
அன்றைய சம்பவத்திற்குப் பின் ரகு வீட்டிலிருப்பதைத் தவிர்த்து வந்தார். கங்காவையும் யமுனாவையும் எதிர்கொள்ளவே அவருக்கு அவமானமாய் இருந்தது. யமுனா வழக்கத்துக்கு அதிகமாக பாசத்தைக் கொட்டியது அவரது சங்கடத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தது. பெரும்பாலான நேரத்தைத் தன் பிஸினஸிலும் கிடைத்த ஓய்வு நேரத்தை க்ளப்பிலுமாய்க் கழிக்க ஆரம்பித்தார்.
நாற்பத்தைந்து வயதில் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில் ஏமாற்றமாய் இருந்தது. யமுனாதான் அவர் வாழ்க்கையின் வரமும் சாபமும். அவளால்தான் அவரின் வறண்ட வாழ்க்கையில் அவ்வப்போது வசந்தமும் வந்து போகிறது. ஆனால் அவள் இல்லையென்றால் எப்போதோ அவருக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பார். மனமும் உடலும் ஒரு உகந்த துணைக்காய் இப்படிப் பசித்திருக்க வேண்டிய தேவை வந்திருக்காது. வாலிபத்தில் வைத்திருந்த தன் வாழ்க்கைத் துணை குறித்த கனவுகளை அசைபோடும் போதெல்லாம் மனதில் கசப்பு நிரம்பி வழியும். அது கங்காவைப் பார்க்கும் போதெல்லாம் ஆத்திரமாய் வெளிப்படும்.
பார்க்க வேண்டிய கோப்புகள் பெருமளவிலிருந்தாலும் மூளை களைத்துப் போனதால் ஆறு மணிக்கெல்லாம் கிளம்ப ஆயத்தமானார். இன்டர்காம் அழைத்தது.
அவரின் செகரட்டரி சந்தியா, "ஸர், அஞ்சலி சுப்ரமணியம் என்பவர் இணைப்பிலிருக்கிறார்" என்றார் சுத்தமான ஆங்கிலத்தில்
பளிச்சென்று தலைக்குள் பொறி கிளம்பிற்று ரகுவுக்கு. ‘அஞ்சலியா? அதே அஞ்சலியா?’
ரிசீவரைக் கையிலெடுத்தார்
"ரகு?" கொஞ்சிக் குழைந்தது குரல்.
"அஞ்சலியா? நம்பவே முடியலை" ரகுவிடம் உற்சாகம் பீரிட்டது
"யெஸ்… யெஸ்… எத்தனை வருஷமாச்சு. லைஃப் எப்படி இருக்கு உனக்கு?"
"ஐ’ம் ஃபைன். நீ எங்கேருந்து பேசறே?" பரபரப்பாய்க் கேட்டார் ரகு.
"யு.எஸ்லருந்து திரும்ப வந்திட்டேன், ரகு. திரும்பப் போகப் போறதில்லை"
அந்த செய்தி அவரது உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. "வெல்கம் வெல்கம். ஃபேமிலில எல்லாரும் நலம்தானா?"
"ம்ம்ம்… இப்போ நான் சிங்கிள்"
ரகு திகைப்பிலிருக்க கலகலவென்று சிரித்தாள் அஞ்சலி, "என்னாச்சு? இப்படி அதிர்ச்சியாயிட்டே? சிங்கிள்னுதானே சொன்னேன். செத்துப் போயிட்டேன்னு சொல்லலையே"
அஞ்சலி இலகுவாய்ச் சொன்னாலும் ரகுவுக்கு விஷயம் கனமாய்த்தான் இருந்தது.
"என்னாச்சு?"
"ப்ச்சு. ஒத்து வரலை. பிள்ளைப் பூச்சியை மடில கட்டிக்கிட்டிருந்த மாதிரி அவஸ்தையா இருந்திச்சு. விட்டுட்டு வந்திட்டேன்."
அவளுக்கிருக்கும் தைரியம் தனக்கில்லாமல் போனதற்காய்த் தன்னை நொந்து கொள்கிறார்.
"பசங்க?"
"பொண்ணுங்க ரெண்டு பேரும் யு.எஸ்ல படிச்சிட்டிருக்காங்க"
"கல்யாணம் ஆயிருச்சா?"
"நீ வேறே… அவ்வளவு சீக்கிரம் எனக்குப் பாட்டியாக விருப்பமில்லைப்பா" வெண்கல மணிகளை உருட்டிவிட்டாற் போல் கிணுகிணுக்கும் சிரிப்பு.
அதற்கு மேல் அவளது குடும்பம் குறித்து விசாரணை செய்தால் நாகரீகமாய் இராது என எண்ணிய ரகு, "இப்போ எங்கே இருக்கே? ஃப்ரீயா இருக்கும்போது மீட் பண்ணலாமே?" என்றார் ஆர்வமாய்.
"அதேதான் நானும் நினைச்சேன். இப்போ ஃப்ரீதான். நீ வேலயை மூட்டை கட்டி வச்சுட்டு வாயேன். மீட் பண்ணலாம்" உரிமையாய்ச் சொன்னாள்.
அவளின் வேகம் அவருக்குப் பிடித்திருந்தது.
அடையாறில இருக்கும் அஞ்சலியின் வீட்டில் அவர்கள் சந்திப்பதாய் முடிவு செய்தபோது யமுனா தன் வீட்டில் தன் பெற்றோருக்குள் பரஸ்பர மரியாதையை எப்படி ஏற்படுத்துவது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
****
இருபது வருடங்கள் கழித்தும் அஞ்சலி அதே வசீகரத்துடனிருந்தாள். எதிராளியின் நெஞ்சைக் குடைகிற பார்வை, சிற்பம் போன்ற துல்லியமான உடலமைப்பு. பளிச்சென்று உடுத்தியிருந்தாள். கோவில் சிலை போல அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
"தனியாவா இருக்கே, இங்கே?" ரகு பேச்சை ஆரம்பித்தார்.
"ஆமா" என்ற பதிலில் ‘இதென்ன கேள்வி’ என்ற தொனி இருந்ததைக் கவனித்த ரகு, "பேரன்ட்ஸ் கூட இல்லியா?" என்றார் பச்சாதாபத்துடன்.
"கரடி வாயிலருந்து தப்பிச்சு புலி வாயில விழச் சொல்றியா?" என்றாள் சிரித்தபடியே. அந்த பாசாங்கில்லாத பேச்சு அவரை வெகுவாய்க் கவர்ந்தது.
அவளே தொடர்ந்து, "டைவர்ஸ் பண்ணினது வீட்ல பிடிக்கலை. எங்கிட்ட பேசறதில்லை யாரும். நான் நானா இருக்கணும்னு ஆசைப்படறேன், ரகு. அப்பா அம்மாவுக்காக, ஹஸ்பெண்டுக்காக, பொண்ணுங்களுக்காகன்னு வாழ்ந்து அலுத்துப் போச்சு. இனி மனசு போன போக்கில வாழப்போறேனாக்கும்." என்றாள் ஏதோ ஒரு மாயச் சிறையிலிருந்து அப்போதுதான் வெளிப்பட்டவள் போல.
"எனக்கும் உன்னைப் போல ஒரு வேட்கை இருக்கு…" ரகுவின் ரகசியக் கனவு ஏற்ற வெளி கிடைக்கவும் மெல்லக் கசியத் தொடங்கியது.
அவள் புரிந்து கொண்டாற்போல "வீட்டுக்கு வீடு வாசப்படிதான், இல்லே?" என்றாள் ஆறுதலாய்.
முகத்தில் வந்து விழுந்த முடியை சுட்டுவிரலால் அவள் விலக்கிய அழகை ரசித்தபடியே, "இருபது வருஷம் கழிச்சுப் பார்க்கறோம். நீ இன்னும் ட்ரீம் கேர்ள் போலத்தான் இருக்கே" என்றார்.
"வாவ்! வாட் எ காம்ப்ளிமென்ட்! சரி, யாரோட ட்ரீம் கேர்ள் நான்?"
"என்ன இப்படிக் கேட்டுட்டே, அஞ்சலி? யு வேர் வெரி பாப்புலர். நம்ம ஏரியாப் பசங்கள்ல எத்தனை பேர் தன் குழந்தைகளுக்கு உன் பேர் வைச்சிருக்காங்களோ தெரியலை" இளமைக் காலத்தை அசை போட்டதில் உற்சாகம் பிறந்தது ரகுவுக்கு.
"நீ உன் குழந்தைக்கு என் பேர் வச்சியா, ரகு?" அவள் சிரிக்காமல் கேட்டதும் சட்டென்று ஒரு இறுக்கம் நிலவியது.
பின் ரகு உதட்டைப் பிதுக்கி, "நீ எனக்கு எட்ட முடியாத உயரத்தில இருந்தே, அஞ்சலி" என்றபோது சோகம் தலை நீட்டியது.
"நீயா அப்படி நினைச்சிக்கிட்டே, ரகு." என்றாள் அஞ்சலி அவரை நேராகப் பார்த்து.
ரகுவுக்குப் பேச முடியாமல் தடுமாறிற்று.
"எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்" என்ற அஞ்சலி, "பெருமூச்சுடன், "இட்ஸ் டூ லேட் நௌ. நான் இப்போ சொல்றதை அப்போ சொல்லிருக்கலாம்." என்று நிறுத்தினாள்.
நொடி நேர இடைவெளிக்குப் பின் தானே தொடர்ந்து, "என்னடா, கூப்பிட்டு வச்சு என்னவெல்லாமோ பேசறாளேன்னு பயந்திடாதே. ஏதோ, மனசில இருக்கிறதெல்லாம் வெளில கொட்டணும்னு துடிப்பா இருக்கு" என்று தன் செயலுக்குக் காரணமும் சொன்னாள்.
அவள் மனதின் ரணம் ஆழமாய் இருக்க வேண்டும் என்று நினைத்த ரகுவுக்கு அந்தக் காயத்தை ஆற்ற ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற வெறி எழும்பிற்று. பின்னே! தன் ஆதர்ச மனைவி இவளில் பாதி இருந்தால் கூடப் போதும் என்றல்லவா ஆசைப்பட்டிருக்கிறார்! இளமையில் இவளிடம் எத்தனை பக்தி வைத்திருந்தாரென்று அவருக்கு மட்டும்தானே தெரியும்!
"வந்ததிலிருந்து ரொம்ப சீரியஸா பேசிட்டிருக்கோம். சொல்லு, உனக்கு எத்தனை பசங்க?" என்று வழமைக்கு மாறினாள்.
"ஒரே பொண்ணு. பேரு யமுனா. இஞ்சினியரிங் ஃபர்ஸ்ட் இயர் படிக்கறா" பெருமிதம் வழிந்தது.
"வொஃய்ப்?"
"ஒரு மல்டி நேஷனல் சாஃப்ட்வேர் கம்பெனில ஹெச்.ஆர் மேனேஜரா இருக்கா" அவர் சுருதி இறங்கியதைக் கவனித்து உரையாடலை அத்திசையில் செலுத்த அவள் விரும்பவில்லை.
"வீடு?"
"கீழ்ப்பாக்"
"நல்ல தூரம்தான்… வீட்ல டின்னருக்குக் காத்துட்டிருப்பாங்க, இல்லை?"
கடிகாரம் 7.45 என்றது. ‘கிளம்பு என்கிறாளோ?’
அவர் நேரடியாக பதில் சொல்லாமல், "பக்கத்தில எங்கேயாவது ரெஸ்டாரண்டுக்குப் போகலாமா?" என்றார்.
"ஏன்? உனக்கு டைம் இருக்குன்னா அரை மணி நேரத்தில சிம்பிளா இங்கேயே சமைச்சிருவேன். வீட்ல சொல்லிட்டியா?" தன்னால் ஏதும் தொல்லை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அவளிடம் இருந்தது.
உதடுகளை இறுக்கி, "என்னை யாரும் தேடமாட்டாங்க, அஞ்சலி" என்று ரகு சொன்னபோது அஞ்சலிக்கு அவர் மேல் அனுதாபம் பிறந்தது.
கிச்சன் படு சுத்தமாய் இருந்தது. "சமைப்பியா மாட்டியா? இவ்வளவு நீட்டா இருக்கு?" என்றார் குறும்பாய்.
"ஏய்…" என்று கத்தியால் குத்துவதாய் பாவனை பண்ணிவிட்டுக் காரியத்திலிறங்கினாள் அஞ்சலி.
என்ன சுறுசுறுப்பு! என்ன வேகம்! செய்கிற ஒவ்வொரு செயலிலும் எத்தனை நளினம்! சமையலறை நாற்காலியில் அமர்ந்து அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவளை ரசித்துக் கொண்டிருந்தார். ‘விதி சதி செய்திருக்காவிட்டால் இதுவே என் அன்றாட வாழ்க்கையாக இருந்திருக்கும்!’ என்ற சுயபச்சாதாபம் எழுந்தது.