மிகவும் வற்புறுத்தி தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தாள் யமுனா. அதிகம் கேள்வி கேட்டு அவளை மேலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாமல் வீடு வந்து சேர்ந்த பின்னும் அமைதியாகவே இருந்தாள் மகள். அதீத அக்கறையுடனும் பொறுப்புடனும் தன் அறைக்கே உணவு எடுத்துவந்த மகளைச் சற்று ஆச்சரியத்துடன் பார்த்தாள் கங்கா.
"ஸாரிம்மா… ஃபோன் என் பையிலேயேதான் இருந்திருக்கு. ஒழுங்கா தேடாம உங்களைக் கஷ்டப்படுத்திட்டேன்" தாயிடம் தன் மன நிறைவுக்காக மன்னிப்புக் கேட்டாள் யமுனா.
"சீ… பைத்தியம். நாந்தான் கவனமா இருந்திருக்கணும்" என்று சமாதானம் சொன்னாள் தாய்
ஹால் சோஃபாவில் தந்தைக்காகக் காத்திருந்தாள் யமுனா. அவரையும் பார்த்து மன்னிப்புக் கேட்டால் உறுத்தல் கொஞ்சம் குறையும் என நினைத்தாள். இரவு ஒன்பது மணியாகியும் தந்தை வராததால் அவரது அலைபேசியைத் தொடர்பு கொண்டாள். ஒலித்துக் கொண்டே இருந்தது. முக்கால் மணி நேரமாய்த் திரும்பத் திரும்ப பலமுறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காமல் போக கவலை கவ்விக் கொண்டது யமுனாவை.
கங்காவின் அறைக்குச் சென்று, "அப்பாவை இன்னும் காணும்மா" என்றாள்.
என்றைக்குமில்லாமல் மகள் தந்தைக்காகக் கலங்குவதைக் கண்ட கங்கா, "வந்திருவாருடா. க்ளப்ல இருப்பாரா இருக்கும்"
"ஃபோனை எடுக்கவே மாட்டேங்கறாரும்மா. அதான் கவலையா இருக்கு"
"பேசற நிலையில இல்லையோ என்னவோ" வெறுப்பு தொனிக்கச் சொன்ன தாயை உறுத்துப் பார்த்தாள் யமுனா.
"அப்பா அளவுக்கு மீறிக் குடிக்கறவர் இல்லையேம்மா"
‘அதுவும் சரிதான்’ என்று நினைத்த கங்கா அதனை மகளிடம் சொல்லவில்லை.
"யாரையாவது க்ளப்ல பார்த்துட்டு வரச் சொல்லலாம்மா" கெஞ்சலாய் மகள் சொன்ன யோசனையை பரிசீலித்த கங்கா,
"இந்த நேரத்துக்கு யாரைப் போய் ஹெல்ப் கேக்க முடியும், யமுனா?"
"உங்களுக்குக் கொஞ்சம் கூட கவலையில்லைம்மா?" மனதில் இருந்ததைக் கேட்டே விட்டாள் யமுனா.
தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.
"அதில்லை, செல்லம்… அவரைத் தேவையில்லாமல் ஏன் தொந்தரவு செய்யணும்னு பார்த்தேன். வேறொண்ணுமில்லை. இளங்கோ அங்கிள் கூட இருக்க வாய்ப்பிருக்கு. அவங்க வீட்ல பேசிப் பாரேன்"
இளங்கோவின் வீட்டுக்குத் தொடர்பு கொண்டாள் யமுனா. அவரே எடுத்தார்
"அங்கிள், அப்பா இன்னும் வீட்டுக்கு வரலை. செல்லையும் எடுக்க மாட்டேங்கறார்…" நடுங்கும் குரலில் அவள் சொன்னதும்,
"இன்னும் வரலையாம்மா? ரகுவும் அப்பவே கிளாம்பறேன்னுதானே சொன்னான். கொஞ்சம் அப்செட் ஆனது போல இருந்தது…" என்றார் தயங்கியவாறே
"ரொம்பக் குடிச்சிருந்தாரா, அங்கிள்?" காற்றும் வார்த்தையுமாய் சிக்கிச் சிதறி வெளிவந்தன.
இளங்கோ சின்னப் பெண்ணிடம் இதைப் பற்றிப் பேசுவது குறித்துத் தயங்கினார். "அம்மா இல்லையாம்மா?"
"அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அங்கிள்."
உதட்டை மடக்கி யோசித்தார். "சரிம்மா… நீ பயப்படாதே. நான் போய் அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன். டோண்ட் வொர்ரி. ஓகே?" என்று சமாதானம் சொன்னார்.
மகள் தவிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கங்காவுக்கு ரகுவின் மீதுதான் கோபம் வந்தது. ‘பொறுப்பில்லாத மனிதன். இந்தக் குழந்தையை எப்படித் தவிக்கவிடுகிறார்!’
அவளோடு வந்து சோஃபாவில் அமர்ந்தாள் கங்கா. ஆனால் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
பதினொன்றரைவாக்கில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டவுடன் அவசரமாய்க் கதவைத் திறந்தாள் யமுனா. கங்கா சோஃபாவிலிருந்து நகராமல் வாசலை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள்.
மயங்கிய நிலையில் இருந்த ரகுவை இளங்கோ சிரமத்துடன் கைத்தாங்கலாகப் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.
"பெட்ரூம், மேலேதானே?" கேட்ட இளங்கோவிடம், "இங்கேயே படுக்கவைச்சிருங்க" என்று அவசரமாகச் சொன்னாள் கங்கா.
கலைந்த தலையும், கசங்கிய சட்டையும், மது வாடையுமாய் தன் தந்தையின் நிலையைப் பார்த்த யமுனாவுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவள் அழுவதைக் கண்ட இளங்கோ, "ஒண்ணுமில்லை, யமுனா. காலையில சரியாயிடுவான்." என்று தோளில் தட்டி ஆறுதல் சொன்னார். அவரது பார்வை கங்காவின் கைக்கட்டில் ஒரு விநாடி பதிந்து மீண்டது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் ரகுவின் ஷுவைக் கழற்றி வைத்துவிட்டு யமுனாவைத் தலையணை எடுத்துவர அனுப்பினார்.
அவள் மாடிப்படி ஏறுகையில் அவளுக்குக் கேட்கக் கூடாது என அவர் குரலைத் தழைத்து கங்காவிடம் பேசினாலும் யமுனாவுக்கு அவரின் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவே கேட்டது.
"இருபத்தி அஞ்சு வருஷமா எனக்கு ரகுவைத் தெரியும். ஒரு முறை கூட அவன் இப்படிக் குடிச்சுப் பார்த்ததில்லை. இன்னைக்கு ரொம்ப அப்செட்டா இருந்தான். இது உங்க குடும்ப விஷயம். நான் தலையிடக் கூடாதுதான். ஆனா சொல்லணும்னு தோணுச். எல்லை தாண்டி இருந்தா, மன்னிச்சிருங்க" என்றார்
கங்கா மையமாய்த் தலையை அசைத்து, "தாங்க்யூ" என்றாள்.
மிக அசௌகரியமாக உணர்ந்தவளை யமுனாவின் வருகை காப்பாற்றியது. அவள் எடுத்து வந்த தலையணையை ரகுவுக்கு வசதியாய் வைத்துவிட்டு இளங்கோ விடை பெற்றதும் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்த யமுனாவிடன், "நீ போய்ப் படுத்துக்கப்பா. காலையிலே பேசிக்கலாம்" என்றாள் கங்கா.
யமுனா அரைமனதுடன் அறைக்கு நடந்த போது மனம் மிகவும் பாரமாய் இருந்தது. தனது திட்டம் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.