கண்ணில் தெரியுதொரு தோற்றம் -12

விஜியின் வீட்டுக்குள் நுழைந்ததும், "விஜி, எனக்கு ஏதாவது ஃபோன் வந்துதா?" என்ற யமுனாவை இடுப்பில் இரு கைகளையும் வைத்து வெறித்து,

"யார்கிட்டேருந்துடி, ஃபோன்? ரொம்ப கெட்டுப் போயிட்டே நீ" என்றாள் பொய்யான அதிகாரத்துடன்.

யமுனா அவள் நையாண்டியை ரசிக்காமல், "அம்மா கூப்பிடலை?"

"இல்லையே! உன் செல் என்னாச்சு? நான் கூட ட்ரை பண்ணினேன்"

‘ஆஹா… என்னமோ நடக்குது அங்கே… இல்லைன்னா ஃபோன் பண்ணியிருப்பாங்களே!’ குபுக்கென மகிழ்ச்சி கொப்பளித்தது.

"அது ஒரு பெரிய கதை… முதல்ல படம்… அப்புறம் என் கதை. ஓகே? இதோ நீ கேட்ட பாப்கார்ன். அடிஷனலா… டடா" என்று இசைத்தவாறு பாஸந்தி பாக்கெட்டை நீட்டினாள்.

வாங்கிக் கொண்ட விஜி, "என் சமத்துக் கண்ணே" என்று அவளுக்கு நெட்டி முறித்தாள்.

"ஆமா, என்ன அம்மா இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்காங்க?" என்றாள் விஜி தோழியை அளவிட்டபடி

"பின்னே… எங்கப்பா அம்மாவை சேத்து வைக்க அழகா ப்ளான் போட்டு செயல்படுத்திட்டு வந்திருக்கேன்" இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாள்

"ஓ… பெரிய ஆளுப்பா நீ… சொல்லு சொல்லு… என்ன செய்தேன்னு சொல்லு" ஆர்வமாய்க் கேட்டாள் விஜி

"போடி… முதல்ல படம்" குழந்தை போலச் சிணுங்கினாள் யமுனா.

ப்ளேயரில் டிவிடியைப் போட்டுவிட்டு, ஹோம் சினிமா சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு பாஸந்தியை வாகாய் எடுத்து ஸ்பூன் போட்டு வைத்துவிட்டு, "ஒரு நிமிஷம் இருடி. வேலை செய்ற ஆளுங்ககிட்ட ஏதாவது தேவையான்னு கேட்டுட்டு வந்திடறேன். இல்லைன்னா நொய் நொய்னு தொந்தரவு பண்ணிக்கிட்டிருப்பாங்க" என்று விஜி வீட்டின் பின்புறம் போன போது அழைப்பு மணி ஒலித்தது.

"டீ யமுனா. கதவைத் திறந்து யார்னு பாரு" விஜி பின்கட்டிலிருந்து இரைந்தாள்.

கதவைத் திறந்த யமுனா வெளிறினாள். வெளியில் நின்று கொண்டிருந்த விக்ரமும் அவளை அங்கு எதிர்பார்க்காததில் திகைத்து நிற்க, "யாருடீ?" என்று வந்த விஜிக்கு வெறுத்துப் போனது. ‘அது எப்படி, என்னதான் முயன்றாலும் விதி இவர்களிருவரையும் தொடர்ந்து சந்திக்க வைக்கிறது?’

"என்னடா, பெருசா வரவே முடியாதுன்னு அலட்டிக்கிட்டே. இப்போ எதுக்கு வந்தே?"

அவன் வீட்டினுள் நுழைந்து ஷுவைக் கழற்றியவாறு, "செமினார் கேன்சலாச்சு. ஐயோ பாவம், வெளில போகணும்னு கெஞ்சினியே, ரிலீவ் பண்ணலாம்னு வந்தேன்" என்றான் யமுனா இருப்பதை முற்றிலும் உதாசீனப்படுத்தியபடி.

"என்ன செட்டப் எல்லாம் பலமா இருக்கு… என்ன படம்?"

விஜி பெயர் சொன்னாள்.

"வாவ்! நான் பாக்கணும்னு நினைச்சதுதான். பொறு… டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடறேன்" என்று படியில் அவசரமாய்த் தாவி ஏறினான்.

"இருடி. இந்தக் கடங்காரனை நாலு மொத்து மொத்திட்டு வர்றேன்" என்று பின்னாலேயே போனாள் விஜி.

அவள் அவன் அறைக் கதவைத் தட்டி அவன் திறந்தபோது, ஷார்ட்ஸுக்கு மாறி இருந்தான். டிஷர்ட்டைக் கையிலெடுத்தவாறே அறையைவிட்டு வெளியில் வந்தான். "அதான் வர்றேன்ல, அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?" என்றவாறு டிஷர்ட்டினுள் தலையையும் கையையும் திணித்தான்

"ஏண்டா இப்படிப் படுத்தறே… யமுனாவைப் பார்த்தா ஓடிப் போயிருன்னு சொன்னேந்தானே?"

"ஹ.." என்று இளக்காரமாய்ச் சிரித்தவன், "நான் எதுக்குடி ஓடணும்? நம்ம பெர்ஸனாலிடில உன் ஃப்ரண்ட் விழுந்துருவான்னு உனக்கு பயமா இருந்தா அவளைப் போகச் சொல்லு. இது நம்ம வீடும்மா. என் இஷ்டப்படிதான் நானிருப்பேன்" என்று சொல்லிவிட்டு படியிறங்க ஆரம்பித்தான்.

அவன் டிஷர்ட்டைக் கொத்தாய்ப் பற்றிப் பின்புறமிருந்து இழுத்தவள், "திமிர் பண்ணாதேடா. அவ இன்னிக்குத்தான் ரொம்ப நாளைக்கப்புறம் சந்தோஷமா இருக்கா… கெடுத்துறாதே"

"சந்தோஷமா இருக்கான்னா ஏதோ கிறுக்குத்தனம் பண்ணிட்டு வந்திருக்கான்னு அர்த்தம். நானொண்ணும் பண்ண வேண்டாம். அவ பண்ணினதே திரும்பி வரும் பாரு"

அவனைக் கட்டுப்படுத்த இயலாமல் போனதில், "இங்க பாரு, அப்ப பேசாம படம் பார்த்தமா, வந்தமான்னு இருக்கணும். அவகிட்ட பேச்சுக் கொடுக்கக்கூடாது. சரியா?" என்று இறங்கி வந்தாள்

"பாக்கலாம்" என்றபடியே விரைவாய்ப் படி இறங்கி யமுனா அமர்ந்திருந்த ஒற்றை சோஃபவை ஒட்டியிருந்த இரட்டை சோஃபாவில் அவள் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

யமுனாவின் முகம் வெளிறுவதைக் கவனித்த விஜி, "நீ இந்தப் பக்கம் வா" என்று இடம் மாற்றிக் கொள்ள விழைந்தாள்.

"ஸாரி… இதுதான் எனக்கு வசதியா இருக்கு." என்றபடியே டிவிடி ப்ளேயரை ஆன் செய்தான் விக்ரம்.

செயற்கை இருட்டு உதவியாய் இருக்க, யமுனாவுக்குத் தெரியாமல் விக்ரமின் கையில் பலமாகக் கிள்ளினாள் விஜி.

அவளது கண்டிப்பை அலட்சியப் படுத்திய விக்ரம் படம் ஆரம்பித்த சற்று நேரத்தில் யமுனாவின் கையை இறுக்கமாய்ப் பற்றினான். அவனுக்குத் தன் மேல் கோபமில்லை என்பதே அவளைப் பனி போல் உருகவைத்தது. அவளிடமிருந்த பயம், கோபமெல்லாம் மாயமாகி அவன் பிடியில் பனி மூடிய புஷ்பம் போல மலர்ந்தாள். அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன் போல் தன் பிடியை இன்னும் இறுக்கிக் கொண்டான் விக்ரம். ஏதோ அவனுடன் ஒன்றாய்க் கலந்து விட்டாற்போன்ற மயக்கத்தில் யமுனா இருந்தபோது தொலைபேச்¢ அழைத்தது.

விஜி எட்டி கார்ட்லெஸை எடுக்க, மெல்லத் தன் பிடியைத் தளர்த்தி கையை விலக்கிக் கொண்டான் விக்ரம்.

"யமுனா, அம்மாடீ" என்று கார்ட்லெஸை யமுனாவிடம் நீட்டினாள் விஜி

"ஃபோன் இங்கே இல்லைடா" சொன்ன கங்காவின் குரலில் சுரத்தே இல்லை.

தன்னிலைக்கு வரத் தடுமாறிக் கொண்டிருந்த யமுனா, "பரவாயில்லைம்மா. நான் வந்து தேடிக்கறேன்" என்றவள் தன் தாயின் குரலிலிருந்த சோர்வை உணர்ந்தவள் போல், "என்னாச்சும்மா, குரல் டல்லா இருக்கு?" என்றாள்

"ஒண்ணும் இல்லைடா" என்று வார்த்தைகளால் சொன்னாலும் அம்மா தன்னிடம் எதையோ மறைப்பதை உணர முடிந்ததால், "என்னம்மா? எனி ப்ராப்ளம்?"

விக்ரமும் விஜியும் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக் கொண்டார்கள்.

"ஒண்ணுமில்லை, டம்ளர் உடைஞ்சு கையில கண்ணாடி குத்திடிச்சி. அதான் லேசா வலி"

"எப்படிம்மா?"

"உன் ஃபோனைத் தேடும்போது கைபட்டு கீழே விழுந்திருச்சி"

"அப்பா ரூமிலேயா?"

"ம்"

யமுனாவுக்கு இது கைதவறி நடந்திருக்கும் என்று தோன்றவில்லை. தன் திட்டம் ஏதோ குளறுபடியை உருவாக்கிவிட்டதென்றே தோன்றியது.

"ஹாஸ்பிடல் போனீங்களாம்மா? அப்பா எங்கே இப்போ?" சூழலை கணிப்பதற்காகக் கேள்விகளை வீசினாள்.

"பெரிய காயம் ஒண்ணுமில்லை. கட்டுப் போட்டிருக்கேன்" அப்பாவைப் பற்றி பதிலொன்றும் சொல்லாததை கவனித்து, "ஃபோனை அப்பாகிட்டே கொடுக்கமுடியுமாம்மா?" என்றாள்

கொப்பளித்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "இல்லைடா… நீ வேணா அவர் மொபல்ல கூப்பிட்டுப் பேசிக்கோ. பை" என்று இணைப்பைத் துண்டித்தாள் கங்கா.

ஏதோ பிரச்சினை நடந்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது யமுனாவுக்கு.

"அப்பாகிட்டே பேசிட்டு வந்திடறேன்… ஸாரி" என்று விஜியிடம் சொல்லியவாறு அவரது அலைபேசி எண்ணை ஒற்றினாள்.

"டிரைவ் பண்ணிக்கிட்டிருக்கேன், யமுனா" என்ற ரகுவின் குரலில் விரக்தி இருந்தது

"எப்போப்பா கிளம்பினீங்க?"

"இப்பதான் ஒரு அஞ்சு நிமிஷமிருக்கும். ஏன்?"

"அம்மா கையில கண்ணாடி குத்திருச்சாமேப்பா. தெரியுமா உங்களுக்கு?"

அவள் கேட்ட கேள்வியிலிருந்து அவளுக்கு நடந்ததன் முழு விபரம் தெரியாது என்பதை கிரகித்துக் கொண்ட ரகு, "ஹாஸ்பிடலுக்குக் கூப்பிட்டேன், யமுனா. வரலை. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலைடா" அப்பாவின் குரலிலிருந்த வேதனை அவளுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்திற்று.

"பெரிய காயமாப்பா?"

"ஆமா… " தன் மனதைக் கொட்ட முடியாத சிக்கலில் திணறினார் ரகு.

யமுனாவுக்குக் கண் கலங்கியது.

"சரிப்பா. நான் வீட்டுக்குப் போயி அம்மாவைக் ஹாஸ்பிடல் அழைச்சுட்டுப் போறேன்"

தொலைபேச்¢யை வைத்துவிட்டு, "வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம். நான் கிளம்பறேன், விஜி" என்று கைப்பையை எடுத்தாள்

"நான் வேணா கூட வரவா?" என்றான் விக்ரம் விஜி முறைப்பதைப் பார்த்துக் கொண்டே.

தலை குனிந்தபடி வேண்டாமெனத் தலையசைத்த யமுனா, பதற்றத்துடன் கதவை நோக்கி நடந்தாள்.

About The Author