300 பக்க ஆங்கிலப் புத்தகத்தை ஒரு வாரத்தில் அவசர அவசரமாகப் படித்து குறிப்பெடுத்திருந்தாள். உபயோகமாக இருந்தாலும் பெரும்பாலும் புத்தகம் மேலை நாட்டுத் தம்பதியருக்கு ஏற்றாற்போலிருந்ததால் கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்தது.
உறவுகளின் விரிசலுக்கு முக்கியக் காரணமென அவள் அறிந்து கொண்டதில் முதல் மூன்றினைப் பட்டியலிட்டாள்:
1. மனம் விட்டுப் பேசாமலிருப்பது.
2. ஒருவரை ஒருவர் மதிக்காமலிருப்பது.
3. ஒத்துப் போகும் விஷயங்களை ஒதுக்கிவிட்டு வேறுபாடுகளைப் பெரிது படுத்துவது.
முதலாவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்த சில நாட்கள் எப்படித் தன் பெற்றோரை மனம் விட்டுப் பேச வைப்பதென்ற யோசனையை சுமந்து கொண்டே திரிந்தாள் யமுனா. அடுத்த வார இறுதியில் மனதில் தோன்றிய உத்திகளை எல்லாம் கடைந்து அமுதம் போலத் தேறிய சிலவற்றை மட்டும் தன் டயரியில் எழுதிக் கொண்டாள்.
தன் திட்டத்தில் முழுமையாய் இறங்குமுன் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தாள் யமுனா. காய்களை கவனமாக நகர்த்த வேண்டும், அவசரப்பட்டு இருப்பதையும் கெடுத்துவிடக் கூடாது. அயர்ச்சியாயும் மலைப்பாயும் இருந்தது. மலையைத் தூக்க முயற்சிக்குமுன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து விஜியை அழைத்து,
"ஹாய்டி… போரடிக்குது. வெளில போலாமா?" என்றாள்.
"அச்சச்சோ… வீட்ல கொஞ்சம் கார்பென்டரி வேலை நடக்குதே. நான் மட்டும்தானிருக்கேன். அப்பாவும் அம்மாவும் வழக்கம் போல ஹாஸ்பிடல்ல" என்றவள், தோழி ஏமாற்றமடைவதைப் பொறுக்க மாட்டாமல், "வீட்டுக்கு வர்றியா… லேட்டஸ்ட் டிவிடி வந்திருக்கு" என்றாள்.
யமுனா யோசித்தாள். விக்ரம் வீட்டிலிருந்தால் வேறு வினையே வேண்டாம். இருக்கிற சக்தியும் போய்விடும்.
"என்னடி யோசிக்கிறே?"
"இல்லை… எதுக்கு உனக்குத் தொந்தரவுன்னு"
விஜிக்கு அவள் தயக்கத்தின் காரணம் புலப்பட்டதும், "ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடறேண்டி. கீழே என்னைக் கூப்பிடறாங்க" என்று இணைப்பைத் துண்டித்தாள்
விக்ரமை அழைத்து, "ஐயா, இன்னைக்கு என்ன செய்றாரு?" எனக் கேட்டாள்
"ஒரு செமினார் போறேன். ஏன்? ஏதாவது வேலையை என் தலையில கட்டலாம்னு பாத்தியா?" என்றான் சகோதரன்.
"கரெக்டா சொன்னேப்பா… வீட்ல வேலை நடக்குது. என்னை காவலுக்கு வச்சிட்டு எல்லாரும் ஜுட். உன் தலையில கட்டலாமான்னு பாத்தேன்"
"க்ரேட் எஸ்கேப்" என்றவன் ஏதோ கேட்கத் தயங்கியது தெரிந்ததும், "ஓகே… போய் உன் செமினாரில் நல்லா அறுபடு. வீட்டுப் பக்கம் எட்டிப் பாத்திராதே" என்று அவசரமாய்ச் சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.
விக்ரம் வீட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று உறுதியாய்த் தெர்¢ந்ததும் யமுனாவை அழைத்து, "விக்ரம் தலைல கட்டிட்டு தப்பிக்க முயற்சி செஞ்சேண்டி. முடியலை. அவனுக்கு ஏதோ முக்கியமான செமினாராம். வரச் சான்ஸே இல்லைன்னுட்டான். நீதான் வரணும். வரும்போது மறக்காம கேரமல் பாப்கார்ன் வாங்கிட்டு வா. படம் பார்க்க ஒரு மூடு கொண்டு வரணுமில்லை" என்றாள் விஜி சிரித்துக் கொண்டே.
பேசி முடித்து வைத்த போதுதான் அதிசயமாய் கங்காவும் ரகுவும் சனிக்கிழமை மதியம் வீட்டிலிருந்தது உறைத்தது. ‘ஆஹா… சந்தர்ப்பம் தானாய் வலையில் வந்து விழுகிறதே!’
மனது குதூகலமானது. பிடித்த ட்யூனை விசிலடித்துக் கொண்டே ஜீன்ஸையும் பாந்தினி டாப்பையும் எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டுக் குளிக்கப் போனாள். ஷாம்பூ போட்டு முடியை அலசிவிட்டு கண்டிஷனரைப் பூசி இரண்டு நிமிடம் ஊற வைத்தபின் தலையை ஷவருக்கடியில் விட்டபோது மனதில் குஷி கரை புரண்டோடியது.
பாத்ரூமிலிருந்து உள்ளாடைகளோடு வெளியில் வந்தவள் ஹேர் டிரையரில் முடியைக் காயவைத்து மெலிதான ஒப்பனையில் திருப்தியாகி, ஜீன்ஸையும் டாப்பையும் மாட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தபோது ஏதோ ஒன்று குறைவதாய்ப் பட்டது.
லாக்கரைத் திறந்து அப்பா வாங்கித் தந்த ப்ளாட்டின நெக்லஸை எடுத்துப் போட்டுக் கொண்டாள். ‘செல்லம்… உனக்கும் என் ப்ளானில் ஒரு ரோலிருக்கு’ என்று அதனை தடவிக் கொடுத்தாள்.
அலைபேசியை மர்மப் புன்னகையுடன் அணைத்து கைப்பையினுள்ளிருந்த ரகசிய அறைக்குள் ஒளித்து வைத்தாள். பர்ஸைத் திறந்து தேவையான பணம் இருக்கிறதாவெனப் பார்த்துவிட்டு, விசிலடித்தபடியே பர்ஃப்யூமை பாய்ச்சிக் கொண்டு அறையை சாத்திவிட்டுக் கிளம்புமுன், மறக்காமல் புதிதாய் வாங்கிய புத்தகத்தையும் தன் டயரியையும் படுக்கைக்கு அடியில் ஒளித்துவைத்தாள்.
நேராய் அப்பாவின் அறைக்குச் சென்றவள் மெலிதாய்க் கதவைத் தட்டிவிட்டு அனுமதிக்காகக் காத்திருந்தாள். "கமின்"
"ஹாய்ப்பா…" என்ற தன் மகளைப் பெருமிதமாய்ப் பார்த்தார் ரகு.
"ஹாய், ஸ்வீட்டி… இப்படி ஜம்முன்னு எங்கே கிளம்பிட்டே?"
"விஜி வீட்டுக்குப்பா. டிவிடி பாக்கப் போறோம்" என்றுவிட்டு,
"இங்க பாத்தீங்களா, நீங்க வாங்கித் தந்த நெக்லஸ்" என்று ரகுவின் அருகில் சென்று காட்டினாள்.
"நல்லா இருக்குடா"
முதல் முறையாய் அறையைப் பார்ப்பவள் போல பாசாங்கு செய்து, "ரூமை நல்லா நீட்டா வச்சிருக்கீங்கப்பா"
"தாங்க் யூ. எனக்கு எல்லாத்திலேயும் ஒரு டிஸிப்ளின், க்ளாஸ் இருக்கணும், யமுனா" என்றார் சற்று கர்வமான புன்னகையோடு
"எப்பவும் பிஸியாவே இருக்கீங்க… இன்னைக்கு வெளியே எங்கேயும் போகாம ரெஸ்ட் எடுங்கப்பா" என்று பெரிய மனுஷத்தனமாய்ச் சொன்ன மகளின் சொல்லைத் தட்ட விரும்பாமல், புன்னகையோடு தலையசைத்தார்.
கங்கா அறையைத் தட்டி விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய யமுனா பாதி வழியில் வண்டியை நிறுத்தி ஒரு பொதுத் தொலைபேசியிலிருந்து வீட்டை அழைத்தாள்.
‘அம்மா எடுக்கணும்… அம்மா எடுக்கணும்’ அவள் பிரார்த்தனை பலித்தது.
"அம்மா, அவசரமா ஒரு ஹெல்ப். என் செல்லைக் காணோம். வரும்போது அப்பா ரூமுக்குப் போனேன். அங்கே வச்சிட்டேனோ என்னவோ. கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், ப்ளீஸ்"
கங்கா தயங்கினாள். "அவர் செல்லில கூப்பிட்டு அவர்கிட்டேயே கேளேன், யமுனா"
"பப்ளிக் பூத்லருந்து பேசறேன். சேஞ்ச் இல்லைம்மா… மாமா வாங்கித் தந்த ஃபோன்மா. ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க. நான் வச்சிடறேன். நீங்க விஜிக்கு ஃபோன் பண்ணி சொல்லிருங்க. நான் கேட்டுக்கறேன். ஃபோன் இல்லைன்னா ரொம்ப அப்செட் ஆயிருவேன்மா. கொஞ்சம் நல்லா தேடிப்பாருங்க" பொய்யான சோகத்தை வரவழைத்துக் கொண்டு அன்னையிடம் கெஞ்சினாள் யமுனா
கங்கா கையிலிருந்த கார்ட்லெஸ்ஸை வெகுநேரம் முறைத்துக் கொண்டிருந்துவிட்டு ரகுவின் அறையை நோக்கி நடந்தாள். அவரது அறைக்குள் நுழைந்து பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். எதுவானாலும் மகள் மூலமோ வேலைக்காரர்கள் மூலமோதான். தன்னை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்ட மகளின் மீது செல்லமாய்க் கோபம் வந்தது.
தன் அறைக் கதவு தட்டப்பட்டதில் ரகுவுக்கு வியப்பு. கங்காவைத் தவிர வீட்டில் யாருமில்லாததால் சிந்தனையோடு கதவைப் பாதி மட்டும் திறந்தார். பார்வையை அவருக்குப் பின்னால் எங்கோ சுவரில் இருத்தி, "யமுனா செல்லை வைச்சிட்டுப் போயிட்டாளாம்"
"இங்கேயா?"
"ம்"
பாதி சாத்திய கதவை அப்படியே விட்டுவிட்டுத் தன் அறையில் சுற்று முற்றும் பார்த்தார்.
"இங்கே இல்லையே"
அவர் சரியாகத் தேடவில்லை என கங்காவுக்கு எரிச்சல். "குழந்தை ரொம்ப அப்செட்டா இருக்கா. சரியா தேடிப் பார்க்கலாமே!"
குற்றம் சாட்டிய அவளை ஒரு கணம் முறைத்தவர், "என் ரூம் பளிங்கு மாதிரி. ஒரு தூசி விழுந்திருந்தா கூட அது எனக்குத் தெரியும்" என்றார் காட்டமாய்.
அவர் தன் அறையின் ஒழுங்கின்மையைச் சுட்டிக்காட்டுகிறார் எனக் கடுப்பானது கங்காவுக்கு.
"ஆனா அடுத்தவங்க மனசில என்ன இருக்குன்னுதான் தெரியாது" முணுமுணுத்தாள்.
"என்ன முணுமுணுக்கறே? சண்டை போடத்தான் வந்திருக்கியா? மனசு… மனசு… உன் ஒருத்திக்குத்தான் மனசு இருக்கா?எங்களுக்கெல்லாம் இல்லையா?"
"நான் இங்கே என்னைப் பற்றியோ உங்களைப் பற்றியோ பேச வரலை. குழந்தை மனசு வருத்தப்படும்னுதான் சொல்ல வந்தேன்"
மூச்சை உள்ளிளுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட பின், "என் மேல நம்பிக்கை இல்லைன்னா நீயே வந்து பார்"
ஒரு பேச்சுக்குச் சொல்லி கதவை அகலத் திறந்து விட்டார். முதலில் தயங்கினாலும் பின் மகளுக்காக என தன்னை சமாதானம் செய்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள். அதே சுத்தம், அதே நேர்த்தி, அதே மணம். ‘அறை மாறவில்லை. மனிதரைப் போலவே’
ரகு சொன்னது போல ஒரு பார்வையிலேயே செல்ஃபோன் அங்கில்லை என்று தெரியவந்தாலும் வீம்புக்காக குனிந்து நிமிர்ந்து தேடினாள் கங்கா. மேஜை டிராவை இழுத்துத் திறக்க முயன்றபோது,
"என்ன, யமுனா பேரைச் சொல்லி வேவு பாக்க வந்தியா?" கடுமையாகக் கேட்டார் ரகு.
"ச்சீ… புத்தி போகுது பாருங்க… நீங்க எனக்கு யார்? உங்களை எதுக்கு நான் வேவு பாக்கணும்?" ஆக்ரோஷமாய் வார்த்தைகளால் தாக்கினாள் கங்கா
"யாருமில்லைன்னா போக வேண்டியதுதானே? எதுக்கு இந்த வீட்டில இருக்கணும்?" குரல் உயர்ந்தது
"என் தலையெழுத்து. பொண்ணைப் பெத்துட்டேனே… அவளுக்காகத்தான் பல்லைக் கடிச்சிக்கிட்டிருக்கேன். உங்களுக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. உடம்பில ரத்தத்துக்கு பதிலா சுயநலம்தான் ஓடுது" பதிலுக்குக் கத்தினாள் கங்கா.
சாமுராய் போல ஆக்ரோஷமாய்த் தாக்குபவளை ஒன்றும் செய்ய இயலாத ரகுவின் இயலாமை மேஜை மேலிருந்த கண்ணாடி டம்ளரின் மேல் பாய்ந்தது. சுவரில் மோதி உடைந்து சிதறிய அந்த டம்ளரின் ஒரு துண்டு கங்காவின் கையில் பாய்ந்ததில் ரத்தம் பீரிட்டது.
"ஸ்ஸ்ஸ்… ஆ" அவள் அலறிக் கையை உதற இரத்தம் சுவரில் தெரித்து சுவடை உண்டாக்கிற்று. இரத்தத்தைக் கண்டதும் ரகு பதறினார்.
"ஸாரி… கங்கா… ஐ’ம் ஸாரி. தெரியாம நடந்திடுச்சு" அவள் கையைப் பிடிக்க முயன்றபோது சிறுத்தையைப் போல சீறினாள்:
"டோன்’ட்… இந்த மாதிரி மிருகத்துக்கிட்டே ஒரு பிள்ளை பெத்துக்கிட்டேனேன்னு அவமானமா இருக்கு… ச்சே" அவள் விடுவிடுவென வெளியேற ரகு பித்துப் பிடித்தது போல அவள் பின்னால் சென்றார்.
"கங்கா, ப்ளீஸ்… ஹாஸ்பிடல் போலாம், வா"
கங்கா பதிலுக்கு அவர் முகத்தில் கதவை அறைந்து சாத்தினாள்.
கதவில் முகம் பதித்து சற்று நேரம் நின்று கொண்டிருந்துவிட்டு தளர் நடையில் தன் அறை திரும்பிய ரகு, அலமாரியிலிருந்து ஸ்காட்ச் எடுத்து நேரடியாக வாயில் ஊற்றிக் கொண்டார்.